ஞாயிறு, நவம்பர் 28, 2021

சலீல் சவுத்ரி: எல்லை கடந்த இசை மேதை

சலீல் தா என்று அன்புடன் அழைக்கப்படும் சலீல் சவுத்ரி 1922 நவம்பர் மாதம் 19ஆம் நாள் வங்கத்தில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் காஜிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

அவரது தந்தையார் அசாம் தேயிலைத்தோட்டத்தில் மருத்துவர் ஆக இருந்தவர். பெரும் இசை ரசிகர், இசை ஞானம் மிக்கவர். பீத்தோவன், மொசார்ட் உள்ளிட்ட பெரும் இசை மேதைகளின் இசைத்தொகுப்புக்கள், மேற்கத்திய இசை, அசாம், வங்க நாட்டுப்புற பாடல்கள் உட்பட  பெரிய சேகரிப்பை வைத்திருந்தார். பிள்ளைப்பருவம் தொட்டே சலீல் இவற்றை கேட்டு வளர்ந்தவர். எட்டாவது வயதிலேயே புல்லாங்குழல் இசைப்பதில் வல்லமை பெற்றார். 

தந்தையார் மிகுந்த தேசப்பற்று மிக்கவர். பிரிட்டிஷ் அரசையும் அதன் அடக்குமுறைகளையும் விமர்சிப்பவர். ஒரு முறை பிரிட்டிஷ் மானேஜர் ஒருவன் "அழுக்குப்பிடித்த கருப்பனே" என்று அவரை திட்ட, அவனை அடித்து மூன்று பற்களையும் உடைத்தார் அவர்.  

தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் படும் துயரங்களை நேரில் கண்டு வளர்ந்தார் சலீல். அவரது அண்ணனும் இசைக்கலைஞர், பிற்காலத்தில் இசைக்குழு ஒன்றை நடத்தியவர்.

ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் வங்க இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றார் சலீல். அவர் கல்லூரியில் பயின்ற காலம் தேச விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். இரண்டாம் உலகப்போர், போருக்குப்பின்னான இந்திய அரசியல் சூழலில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சந்தித்த நெருக்கடி, பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட1942 வங்கப் பஞ்சம் ஆகியவற்றை நேரில் கண்டு தன் அனுபவங்களால் தன்னை கூர்மைப் படுத்திக்கொண்டார் சலீல். 

1945இல் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விவசாயிகளுடன் களத்தில் போராடினார். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவரை கைது செய்ய முயன்றபோது தலைமறைவாக சென்றார். 

இந்தியாவின் முன்னோடி இலக்கிய அமைப்புக்கள் எனில், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கல்கத்தாவில் இயங்கிய இளைஞர் கலாச்சார நிறுவனம், பெங்களூரில் அமைந்த மக்கள் நாடக மேடை ஆகியவை. இந்திய அளவில் இயங்கிய இலக்கியவாதிகளும் கலைஞர்களும் முனைந்து நிறுவிய இந்திய மக்கள் நாடக மன்றத்தின் (இப்டா) நிறுவனர்களில் சலீலும் ஒருவர். இப்டாவின் முன்னோடிகளில் பிருத்வி ராஜ் கபூர், பிஜோன் பட்டாச்சார்யா, பால்ராஜ் சாஹ்னி, ரித்விக் கட்டக், உத்பல் தத், காஜா அகமது அப்பாஸ், பண்டிட் ரவிசங்கர், இந்திரா மொய்த்ரா ஆகியோர் இருந்தார்கள்.

குறிப்பாக வங்கம், மராட்டியம் என இரண்டு மாநிலங்களிலும் இப்டாவை நிறுவியர்களில் மிக முக்கியமானவர் சலீல். பம்பாயில் பாம்பே இளைஞர் சேர்ந்திசைக்குழுவை நிறுவினார். மன்னா டே, முகேஷ், லதா மங்கேஸ்கர், கனு கோஷ், ரூமா கங்குலி, பிரேம் தாவன், சைலேந்திரா ஆகியோர் இக்குழுவில் இயங்கியவர்கள்.

காலனிய ஆட்சிக்கும் ஏகாதிபத்திய அரசியலுக்கும் எதிரான உணர்வு கொண்ட எழுத்தாளர்களும் கலைஞர்களும்  கலைக்குழுக்கள், நாடக குழுக்கள், இசைக்குழுக்கள் என நாடெங்கிலும் தொடங்கி இயங்கினர். கொள்கை அடிப்படையில் இக்குழுக்கள் யாவும் இடதுசாரிகளாக இருந்தன, அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பி சி ஜோஷி, முற்போக்கு எழுத்தாளர்சங்க செயலாளர் சாஜத் ஜஹீர் ஆகியோரால் உற்சாகம் பெற்றன. தமிழகத்தில் இந்த அமைப்புகள் விதை விடாமல் போனதை எண்ணி மறைந்த மக்களிசை மேதை எம் பி சீனிவாசன் வருந்தினார் என்பதையும் தமிழ்நாடு தாண்டி இந்த கலைஞர்களுடன் இயக்க ரீதியாகவே நெருங்கிய  நட்புடன் அவர் இருந்தார், இயங்கினார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

வங்க மொழியிலும் இந்தி மொழியிலும் உணர்வு பொங்கும் தேச பக்தி பாடல்களை சலீல் எழுதினார். முக்கியமாக விவசாயிகள், தொழிலாளர்கள், சாமானிய ஏழை மக்களின் பாடுகளை அவர் பாடல்களில் எழுதினார், இசையமைத்தார், மக்களுடன் மக்களாக போராட்ட இயக்கங்களில் நின்றார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் சலீல்.

சலீல் மிகப்பெரிய இசைமேதை. 1949இல் பொரிபோர்தன் என்ற வங்கப்படத்துக்கு இசையமைத்து தன் திரையுலக வாழ்க்கையை தொடங்குகின்றார். இசையில் புதிய பரிமாணங்களையும் எல்லைகளையும் கண்டவர், அவர் பாடல்களில் இது தெளிவாக வெளிப்படுகின்றன. ரிக்சாக்காரன் என்ற சிறுகதையை அவர் எழுதிய பின் அதனை இந்தியில் படமாக்க  விரும்பிய பிமல் ராய் சலீலையே வசனம் எழுத சொல்கின்றார். பின்னர் படத்துக்கு இசையமைக்கவும் வேண்டிக்கொள்ள, இந்தியில் இசையமைப்பாளர் ஆகும் வாய்ப்பு தேடி வருகிறது. தோ பிகா ஜமீன் என்பதே அப்படம், புகழ்பெற்ற படம்.

இந்தியில் 75, வங்கத்தில் 45, மலையாளத்தில் 27 படங்களுக்கு சலீல் இசையமைத்தார். அரசின் திரைப்பட துறை தயாரித்த படங்கள், ஆவணப்படங்கள், டிவி தொடர்கள், டிவி ஆவணப்படங்கள், படங்கள் என மிகப்பரந்த அளவில் அவர் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, அசாமி, ஒரிய மொழிப்படங்களுக்கும் இசையமைத்தார். மிகப்பல படங்களுக்கு பின்னணி இசை மட்டுமே அமைத்துள்ளார், பாடல்கள் இல்லாத படங்கள் அவை.

மலையாளத்தில் அவர் இசையமைத்த செம்மீன் (1965) பெரும்புகழ் பெற்ற படம். 

என் பள்ளி நாட்களில், சிலப்பதிகாரத்தின் 'திங்கள் மாலை வெண்குடையான்' என்ற பாடல் இலங்கை வானொலியில் நான் கேட்காத நாள் இல்லை. யேசுதாஸ் பாடினார், அதே பாடலை பி சுசீலாவும் பாடினார். கரும்பு என்ற படம், வெளிவரவே இல்லை. செம்மீன் இயக்கிய ராமு காரியத் இயக்கினார், செம்மீனுக்கு இசையமைத்த சலீல்தான் இதற்கும் இசையமைத்தார். இணையத்தில் பாடல் கிடைக்கின்றது. தமிழின் இளங்கோவடிகள், வங்கத்தின் சலீல், கேரளத்தின் ராமு காரியத், யேசுதாஸ்! எல்லோரையும் இசை இணைத்தது. 

பருவமழை என்ற தமிழ்ப்படத்துக்கு அவர் இசையமைத்தார். யேசுதாஸ் பாடிய மாடப்புறாவே வா என்ற பாடல் புகழ் பெற்றது.

உள்ளமெல்லாம் தள்ளாடுதே என்று தூரத்து இடிமுழக்கத்தில் ஒரு பாட்டு. என்ன ஒரு நவீனமான கற்பனை கொண்ட இசைக்கோர்வை! பாடலின் தொடக்கம் ஒரு பறவை மெதுவாக மேலெழும்புவது போன்றது, அதன் பின் வானத்தில் வட்டமிடுகின்றது, வெட்டவெளி எங்கும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றது, கேளுங்கள்.

வங்கத்திலும் இந்தியிலும் கிசோரும் லதாவும் பாடிய ஒரு டூயட் பாடல், பின்னர் மலையாளத்தில் யேசுதாஸ் மட்டும் பாடும் பாடலானது (ஏதோ ஒரு சொப்னம் 1978),  தமிழில் ஜெயச்சந்திரனும் சுசீலாவும் பாடினார்கள். பூவண்ணம் போல நெஞ்சம் என்றால் உங்களுக்கு தெரியும். ஒரே மெட்டில் ஆன பாடல் வங்கத்தில் தொடங்கும் போது எப்படி இருந்தது, இந்தியில் எப்படி சற்றே வடிவம் மாறியது, யேசுதாசின் குரலுக்கும் பாடலின் சூழலுக்கும் ஏற்றவாறு மலையாளத்தில் எப்படி வடிவம் பெற்றது, அழியாத கோலங்களில் ஒரு இளைஞனுக்கும் அவனது தோழிக்கும் ஆன ஒரு பாடலாக பாலு மஹேந்திராவுக்காக  எப்படி அமர்க்களமாக உருமாற்றம் ஆனது என்பதை அனுபவியுங்கள்.

"நான் என் இசைத்தொழிலை தொடங்கியபோது, இசையுலகம் என்பது நான் ஏறி விட முடியாத அளவுக்கு மிக மிக உயர்ந்த கோபுரம் என்றுதான் கற்பனையில் இருந்தேன். நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு இப்போது நான் பார்க்கும்போது அந்தக் கோபுரம் அப்போது எத்தனை உயரமாக இருந்ததோ அப்படியே இருப்பதை பார்க்கின்றேன்" என்று 1993இல் ஒரு நேர்காணலில் சொன்னார் சலீல்.

சலீலும் எம் பி சீனிவாசனும் மக்களிடம் இருந்து இசையை கற்றுக்கொண்டு மக்களுடன் இருந்தவர்கள். இசை கடவுள் கொடுத்த வரம், உங்களுக்கு இசை கொடுக்க கடவுள் என்னை அனுப்பியிருக்கிறான் என்றெல்லாம் ஒருபோதும் புலம்பியது இல்லை. இவர்கள் மக்களிசைக் கலைஞர்கள்.

(சலீல் சவுத்ரி 19.11.1922 - 5.9.1995)

திங்கள், நவம்பர் 15, 2021

மரணம் கொண்டாடப்பட வேண்டியது, எப்போது? (2)

 

கொரோனா இரண்டாவது அலை இந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆடிய கொடூரப் பேயாட்டம் உண்மையில் எவரும் எதிர்பாராதது. எத்தனை உறவுகள், எத்தனை நட்புக்கள்! பேய் அரசாண்டதால் கொரோனா எல்லோரையும் தின்றது, பெருந்துயரம் அப்படி ஒரு அரசை தமிழ் மக்கள் பெற்றிருந்த கொடுங்காலம். கடந்த வாரம் நாம் கடந்து வந்த பெருவெள்ளமும் அல்லிராணி சாம்ராஜ்யத்தில் நள்ளிரவு செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பை தவிர்க்க இயலாமல் நினைவுக்கு கொண்டுவந்தது உண்மை உண்மை. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதும் உண்மைதான்.

மரணம் மீதான நினைப்பே கூட ஒரு சிலிர்ப்பையும் மீண்டும் அது பற்றி எண்ணுவதை தவிர்க்க வேண்டும் என்ற சாத்தியமில்லாத உறுதியையும் ஏற்படுத்துவது உண்மைதான். பிறக்கும் போதே இறப்பு என்பது உறுதி, எனில் இடைப்பட்ட நாளில் என்ன செய்தோம் என்பதுதான் வாழ்க்கை. உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழ வேண்டும் என்பது வெறும் திரைப்படப்பாடல்தானா?

அகிரா குரோசாவாவின் the dreams குறும்படத்தொகுப்பில் village of the watermills நீராலைக்கிராமம் என்றொரு படம். மரணத்தைக் கொண்டாடும் குறும்படம். இதன் பொருள் என்ன? வாழ்க்கையை கொண்டாடும் மனிதனால்தான் மரணத்தைக் கொண்டாட முடியும்! அக்கிராமத்தில் மனிதர்கள் வாழ்க்கையை கொண்டாடுகின்றார்கள், வாழ்கின்றார்கள். அது குறித்து ஒரு பதிவு எழுதினேன். அச்சில் கொண்டுவர திட்டமிட்டுள்ள என் நூலுக்காக அப்பதிவை மீண்டும் வாசிக்கும்போது புதிய பார்வையுடன் பார்க்கின்றேன். மாறிக்கொண்டே இருப்பதுதானே எல்லாமும், நாம் எழுதியது உட்பட!

... ..... ....

பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!

காலா உன்னைச்சிறு புல்லென மதிக்கிறேன்! - என்றன்

காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்!

 

சாவுக்கு எதிராக பாரதி விடுத்த சவால்கள் இவை!

 

கறந்தபால் முலைப்புகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா,

உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,

விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும் போய் மரம்புகா,

இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை இல்லை இல்லையே!

இவர் சிவவாக்கியர்! மறுபிறவி என்று ஒண்ணும் இல்லை, இப்பிறவியில் சமூகத்துக்கு ஏதாச்சும் பிரயோசனமா செய்துட்டு போ என்னும் கட்டளை தெரிகின்றது.

 

யாதும் ஊரே யாவருங்கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நோதலும் தணிதலும் அற்றோரன்ன

சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னாதென்றலும் இலமே, மின்னோடு...

இவர் கணியன் பூங்குன்றனார் (புறநானூறு, 192).

 

முதல் இரண்டு வரிகள் உலகப்புகழ் பெற்றவைதான். அடுத்த இரண்டு வரிகளில் மரணம் பற்றி அவர் பேசியுள்ளார் என்பதுதான் முக்கியமாகப் படுகின்றது.

 

"சாதல் என்பது புதியது இல்லை, வாழ்தல் இனிமையானது என்று மகிழ்ந்ததும் இல்லை. உலகின் மீதான வெறுப்பால் வாழ்வு இனியது அல்ல என்று கூறுவதும் இல்லை. வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு எல்லாவற்றையும் ஒரே சீராகப் பார்க்கும் மனப்பக்குவம் மனிதர்களுக்கு வேண்டும். இறப்பில் என்ன அதிசயம்?" பூங்குன்றனார் சொல்ல வந்தது இதுதான். எல்லா மக்களும் என் மக்கள், எல்லா ஊரும் என் ஊரே என்று உலகம் தழுவிய பார்வை கொண்டவர் அவர், 'சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா...' என்று வெறுத்துப்போய் எழுதிடவில்லை, வாழ்க்கையை அனுபவிக்க சொல்கின்றார்.

.... .... .....

நீராலைக்கிராமத்துக்கு புதிதாக வருபவன் நம் கதைசொல்லி. எப்போதும் வற்றாத நதியின் கரையில் ஒரு முதியவர் உட்கார்ந்துகொண்டு பழைய நீராலைசக்கரத்தை பழுது பார்த்துக்கொண்டு இருக்கின்றார். அவனுக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடல்தான் படம்.

அக்கிராமத்தில் மின்சாரம் இல்லை. நவீன கால சாதனங்கள் எதுவும் இல்லை. மரங்களிலிருந்து விழும் விறகையும் சாணத்தையும் எரிபொருளாக பயன்படுத்துகின்றார்கள். "மனிதன் எப்படி (முன்பு) வாழ்ந்தானோ அப்படியே வாழ நாங்கள் முயன்றுகொண்டு இருக்கின்றோம். அதுதான் இயற்கையுடன் இசைந்த வாழ்வு. இயற்கையின் ஒரு பாகமே மனிதன் என்ற உண்மையை மனிதனே மறந்துவிட்டான்..." இப்படிப்போகின்றது உரையாடல்.

தொலைவில் ஒரு பெருங்கூட்டம் பலத்த ஆரவாரத்துடன் இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு வருகின்றது. திருவிழாவா என்று இவன் கேட்கின்றான். "இல்லை, அது இறுதி ஊர்வலம். மகிழ்ச்சியான இறுதி ஊர்வலம். கடுமையாக உழை, நீண்டகாலம் வாழ். இறந்துவிட்ட பெண்ணுக்கு வயது 99. ...இவள்தான் என் முதல் காதலி, வேறு ஒருத்தனை திருமணம் செய்துகொண்டு போய்விட்டாள்" என்று சொல்லியவாறே, வீட்டுக்குள் சென்று சிவப்பு மேலாடை அணிந்து கையில் ஜல் ஜல் என ஒலிக்கும் இசைக்கருவியுடன் வருகின்றார், வரும் ஊர்வலத்தில் அவரும் இசைத்துக்கொண்டே சங்கமிக்கின்றார்.

அப்படியெனில் உங்கள் வயது? 103 என்று அவர் சொல்கின்றார்.

... .... ....

9.10.1967. பொலிவியாவில் வாலேகிராண்டே. அமெரிக்க சி ஐ ஏவால் சே கைது செய்யப்படுகின்றான். ஒரு கிராமப் பள்ளிக்கூடம் ஒன்றில் சேயை சுட்டுக்கொல்கின்றது. இறுதி வரையிலும் தன் எதிரிகளின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவாறு சே அனாவசியமாக இருக்க, சுட வந்த எதிரிகள்தான் பீதி அடைகின்றார்கள். சுடு என்கிறான் சே, எதிரி ஓடுகின்றான்.

தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இறுதியான ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தான், தன் பொலிவியப் பயணத்தில் எந்த ஒரு நொடியிலும் மரணத்தை எதிர்நோக்கியே இருந்த அவன். 

"என் அன்புக்குரிய ஹில்டிடா, அலெய்டிடா, காமிலோ, செலியா, எர்னஸ்டோ,

இந்தக்கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உங்களையும் இந்த உலகத்தையும் விட்டு முழுமையாக பிரிந்திருப்பேன். போராளிகளின் இறப்புக்காக யாரும் கண்ணீர் சிந்தக் கூடாது. உங்கள் தந்தை அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு உண்மையாக வாழ்ந்தார் என்று பெருமை கொள்ளுங்கள்..... உங்கள் கண் முன் ஒரு அநீதி நடக்கும்போது நீங்கள் அதை முழு வலிமையுடன் எதிர்க்க வேண்டும்.

என் அன்புச்செல்வங்களே,

மீண்டும் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன்,

பெரிய அழுத்தமான முத்தங்களுடன்

என்றும் உங்களுடைய

உங்கள் அப்பா"

... .... ....

39 வயதில் சே மரணத்தை ஏந்திக்கொள்கின்றான், அவன் ஏந்திச்சென்ற கொள்கையை அதன் வெப்பம் தணியாமல் அவன் குழந்தைகளுக்கும் என் குழந்தைகளுக்கும் கை மாற்றியபடி, பொலிவியா காடுகளில் மட்டுமின்றி உலகெங்கும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் தொடர்வார்கள்.

 

திங்கள், நவம்பர் 08, 2021

1905: 1917 அக்டோபர் புரட்சிக்கான ஒத்திகை


1905 ஒத்திகை இல்லாமல் போயிருந்தால் 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றி சாத்தியமாகி இருக்காது - லெனின்

.......

எதிர்கால வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய பல நிகழ்வுகளுடன்தான் 1905ஆம் வருடம் பிறந்தது. செய்ன்ட் பீட்டர்ஸ்பார்க் நகரின் புத்திலோவ் Putilov தொழிற்சாலையின் 13,000 தொழிலாளர்கள் ஜனவரி 3ஆம் நாள் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். நகரில் இருந்த பிற தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் புத்திலோவ் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளித்தார்கள். 7ஆம் நாள் இந்த வேலைநிறுத்தம் பொது வேலைநிறுத்தமாக மாறியது.

உழைக்கும்வர்க்கத்தின் போராட்ட இயக்கத்தை முறியடிக்க தன் கையில் இருந்த அனைத்து அதிகாரங்களையும் ஜார் அரசு பயன்படுத்தியது. போலீசும் ராணுவமும் இணைந்த 40,000க்கும் மேற்பட்ட படை தலைநகரில் குவிக்கப்பட்டது. போராட்டம் மேலும் பரவாமல் தடுக்க தொழிலாளர்கள் மீது வன்முறையை ஏவி பெரும் ரத்தக்களரியை உருவாக்குவதே அரசின் நோக்கம். கூடவே அதிகார வர்க்கம் தனது தந்திரத்தை செய்தது - போலீசின் துணையுடன் போலியான தொழிலாளர்கள் அமைப்பை (Zubatov அமைப்புகள்) உருவாக்கி, அரசியல் நடவடிக்கைகள், புரட்சிகர போராட்டங்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களை திசைதிருப்புவது, பாட்டாளிவர்க்க போராட்ட இயக்கத்தை சீர்திருத்தவாத பாதையில் தள்ளுவது. 

குறிப்பாக, பீட்டர்ஸ்பர்க் நகரின் ரஷிய ஆலைத்தொழிலாளர்கள் சபை (Assembly of Russian Factory Workers) என்ற அமைப்பில் ஏறத்தாழ 9,000 உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த அமைப்பின் தலைவர் கபோன் என்ற கிறித்துவ பாதிரியார். உண்மையில் இவர் ரகசிய போலீஸ் ஏஜென்ட். கோரிக்கை மனுவை எழுதி ஊர்வலமாக சென்று ஜார் மன்னரிடம் சமர்ப்பித்தால் அவர் மனம் இரங்குவாரென்பது கபோனின் திட்டம். இதனை தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டனர். கருணை மனுவால் ஒரு பயனும் கிட்டாது என்று போல்ஷெவிக்குகள்  எச்சரித்தார்கள். ஆனால் பாதிரியார் திரட்டும் ஊர்வலத்தை தடுக்க முடியாது என்று உணர்ந்த அவர்கள், தொழிலாளர்களுடன் ஊர்வலத்தில் பங்கு கொள்வது என்று முடிவுசெய்தார்கள். 

ஜனவரி 9 ஞாயிற்றுக்கிழமை அன்று பீட்டரஸ்பர்க் நகரின் தொழிலாளர்கள், தேவாலய பதாகைகள், சொரூபங்கள், ஜார் மன்னரின் உருவப்படங்களை கையில் ஏந்திய படி மன்னனின் குளிர்கால அரண்மனையை நோக்கி ஊர்வலமாக சென்றார்கள். பலர், தம் மனைவியர், குழந்தைகள், முதியவர்கள் என தம் குடும்பங்களையும் ஊர்வலத்தில் பங்குபெறச்செய்தார்கள். 1,40,000க்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக சென்றார்கள். ஏற்கனவே முடிவு செய்தபடி, ஆயுதங்கள் ஏதும்  இல்லாத அந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள், ஏறத்தாழ 5,000 பேர் காயமுற்றார்கள். "ஆயுதங்கள் இன்றி அமைதியாக சென்ற மக்கள் மீது கொடூரமாக நடத்தப்பட்ட ரத்தத்தை உறைய செய்யும் படுகொலைஇது".

இத்தகைய படுகொலைகள் மூலம் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தி அவர்களின் போராட்ட உணர்வை ஒடுக்கிவிடலாம்,  பணிந்துபோக செய்துவிடலாம் என ஜார் அரசு கணக்குப்போட்டது. ஆனால் அரசின் கணக்கு தவறாக முடிந்தது. ஆயுதம் ஏதும் தாங்காத, கோரிக்கை பதாகைகளை மட்டுமே ஏந்தி அமைதியாக சென்ற தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டு, ஜார் மன்னர் அன்பும் கருணையும் நிறைந்தவர் என்று கண்மூடித்தனமாக இதுவரை நம்பிக்கொண்டு இருந்த மக்கள் அதிர்ச்சியுற்றனர். தானுண்டு தன் வேலையுண்டு என்று போராட்டங்களில்இருந்து ஒதுங்கி வாழும் கடைக்கோடி தொழிலாளியும் கூட இப்போது ஒரு உண்மையை உணர்ந்தான், அரசிடம் கெஞ்சி கேட்பதாலோ கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதாலோ மட்டுமே கசக்கிப்பிழியப்படும் இன்றைய கேடுகெட்ட பணிச்சூழலில் இருந்து தாங்கள் வெளியே வந்துவிட முடியாது. கையில் ஆயுதங்களை ஏந்தினால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்ற உண்மையை உணர்ந்தான். புரட்சிகரப்பாதையில் இருந்து பாட்டாளிவர்க்க இயக்கத்தை தடம் மாற்ற ஜார் அரசு எடுத்த இப்படி பரிதாபகரமான தோல்வியில் முடிந்தது. அன்று மாலைக்குள் பீட்டர்ஸ்பர்கின் தொழிலாளர்கள் நிரம்பிய வீதிகளில் போலீசாரால் நிறுவப்பட்டு இருந்த தடைகள் யாவும் தூக்கி எறியப்பட்டன. ஜார் மன்னனுக்கு எதிரான போரில் மக்கள் திரளத்தொடங்கினர்.

ஜனவரி 9 படுகொலையை கண்டித்து மறுநாள்10ஆம் தேதி லெனின் மிகவும் உணர்ச்சிமிக்க விதத்தில் தன் எதிர்வினையை ஆற்றினார்.

நடந்து முடிந்த படுகொலைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் ஆவேசமிக்க போராட்டத்தை ரஷ்யாவில் புரட்சியின் தொடக்கம் என்று லெனின் கணித்தார். 'ரஷ்யாவில் புரட்சி' Revolution in Russia என்ற கட்டுரையை அன்றே எழுதினார். புரட்சியின் மூச்சுக்காற்றின் வெப்பம் தகிக்கும் அக்கட்டுரை, பீட்டர்ஸ்பர்க்  பாட்டாளிவர்க்கத்தின் ஜனவரி 9 வீரஞ்செறிந்த போராட்டத்தை தெளிவாகவும் விரிவாகவும் சித்தரித்தது. "தாக்குதலுக்கு எதிராக தாக்குதல். வீதிகளில் ஆவேசமிக்க சண்டைகள் நடக்கின்றன, தடுப்புக்கள் தூக்கி வீசப்படுகின்றன, துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்கள் சீரும் ஓசையும் பீரங்கிகளின் கர்ஜனையும் கேட்கின்றன. வீதிகளில் ரத்த ஆறு ஓடுகின்றது, விடுதலைக்கான மக்கள் போராட்டம் சூடு பிடிக்கின்றது. மாஸ்கோவும் தெற்கும், காக்கசாசும் போலந்தும் பீட்டர்ஸ்பர்க்கின் பாட்டாளிவர்க்கத்துடன் கைகோர்க்க ஆயத்தமாகி விட்டன. பாட்டாளி மக்களின் முழக்கம் இப்போது இதுதான்:மரணம் அல்லது விடுதலை!" லெனின் பிரகடனம் செய்தார், "புரட்சி நீடுழி வாழ்க! புரட்சியை முன்னெடுத்துள்ள பாட்டாளிவர்க்கம் நீடுழி வாழ்க!"

1905 ஜனவரி 5 அன்று நடத்திய வெகுமக்கள் போராட்டம், ரஷிய பாட்டாளிவர்க்கத்துக்கு உறுதியான பாடத்தை கற்றுக்கொடுத்தது; மிகப்பல நீண்ட வருடங்களாக அனுபவிக்கும் இழிந்த, சலிப்பான, கேடுகெட்ட இந்த வாழ்க்கை கற்றுத்தராத புரட்சிகரப்பாடத்தை இந்த ஒரே நாளில் கற்றுக்கொண்ட பாட்டாளிவர்க்கம் அவர்களை மேலும் முன்னேறத் தூண்டியது. 

அரசியல் புலம்பெயர்ந்தவராக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த லெனின், ரஷ்யாவில் நடந்து வந்த நிகழ்வுகளுடன் தன்னை நெருக்கமாக பிணைத்துக்கொண்டார், ஒவ்வொரு புதிய நடவடிக்கையையும் நெருங்கிப்பார்த்து ஆய்வு செய்து அது பற்றி விளக்கினார். புரட்சி வெடிப்பதற்கு நீண்ட காலம் முன்பாகவே அப்படியான ஒரு புரட்சி தவிர்க்க இயலாதது என்பதையும் அப்புரட்சியில் ரஷிய மக்கள் அனைவரும் பங்கு பெறுவார்கள் என்பதையும் சரியாக கணித்து சொன்னார். எதிர்காலத்தில் வெடிக்கப்போகும் மக்கள்போராட்டக்களத்திற்கு ஆயத்தமாகும் வகையில் கட்சியை உயிர்ப்புடன் வைக்க ஓய்வு ஒழிச்சல் இன்றி பணியாற்றினார், இப்போருக்கு பாட்டாளிவர்க்கமே தலைமை ஏற்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

ரஷிய பாட்டாளிவர்க்கத்தின் வீரஞ்செறிந்த இப்புரட்சி உலகளாவிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின்மீது ஏற்படுத்த உள்ள உறுதியான தாக்கத்தை லெனின் தீர்மானமாக வலியுறுத்தினார். "உலகப்  பாட்டாளிவர்க்கம், ரஷிய பாட்டாளிவர்க்கம் என்ன செய்யப்போகின்றது என்று பேரார்வத்துடன் எதிர்பார்க்கின்றது" என்று எழுதினார். ரஷ்ய பாட்டாளிவர்க்கம் உறுதியுடன் முன்னெடுத்து ரஷ்யாவின் ஜார் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்போது அந்த நிகழ்வு உலக நாடுகளின் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின், அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களின், உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள உழைக்கும் மக்களின் போராட்ட நடவடிக்கைகளை அது பற்றச் செய்யும்". 

போல்ஷெவிக் செய்திஏடுகளிலும் கட்சி அமைப்புகளுக்கு அவர் எழுதிய கணக்கற்ற கடிதங்களும் ரஷ்யாவில் அவரை சந்தித்து உரையாடி வெளிநாடுகளுக்கு திரும்பும் அவரது தோழர்கள் சொல்லும் செய்திகளும் புரட்சியை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சிக்கு உதவின, வழிகாட்டின.

முதலாம் ரஷ்யப்புரட்சியின் குணாம்சத்தையும் அதன் வரலாற்று அம்சங்களையும் விளக்கி கூறியுள்ளார். அதன் குணாம்சத்திலும் இலட்சியத்திலும் இப்புரட்சி ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிதான்; ஜார் மன்னனின் அரசாட்சியை தகர்ப்பதும் தனியார் நிலவுடைமையையும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களையும் ஒழித்துக்கட்டுவதும் ஒரு ஜனநாயகக்குடியரசை நிறுவுவதும் இப்புரட்சியின் இலட்சியம். அது முதலாளித்துவ ஜனநாயக குணாசம்சத்தை கொண்ட புரட்சிதான், ஆனால் அப்புரட்சிக்கு தலைமை ஏற்றதும் வழி நடத்தியதில் முன்னால் நின்றதும் பாட்டாளிவர்க்கமே.  விவசாயி வர்க்கமும் அவர்களின் நண்பர்களும், ரஷிய தேசிய இனம் அல்லாத எல்லைப்புற பிரதேசங்களின் பிற தேசிய இனங்களின் பாட்டாளிகளும் புரட்சிக்கு ஆதரவளித்தனர், இப்பெரும்  மக்கள் திரள் இப்புரட்சியில் தங்களை இணைத்துக்கொண்டது. 

லெனின் பின்னாட்களில் கூறியதுபோல் உண்மையில் சில அம்சங்களின் அடிப்படையில் அப்புரட்சி ஒரு பாட்டாளிவர்க்கப்புரட்சயே; எவ்வாறு? புரட்சிக்கு தலைமை ஏற்றது பாட்டாளிவர்க்க சக்தியே, புரட்சியை நடத்திய விதமும் பாட்டாளிவர்க்க அணுகுமுறையுடன்தான் இருந்தது, முக்கியமாக வேலைநிறுத்தங்கள், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி ஆகியவற்றை சொல்ல வேண்டும். பாட்டாளிவர்க்கம் தன் கொள்கை அளவிலும் நடைமுறையிலும் புரட்சிகரமானது, மன்னாராட்சிக்கு எதிரான தன் அணுகுமுறையில் மிக மிக உறுதியானது, சமரசம் செய்து கொள்ளாதது. அத்தகைய உறுதி கொண்ட பாட்டாளிவர்க்கமே ஜார் அரசை தூக்கி எறிந்து முழுமையான புரட்சியை நடத்திட முடியும்; அந்த வெற்றியை அடைய எனில் பாட்டாளிவர்க்கத்தின் பின்னால் விவசாயவர்க்கம் அணிதிரள வேண்டும், இரண்டு வர்க்கங்களும் கைகோர்த்து இணைந்து புரட்சியை நடத்த வேண்டும்.

மேற்கத்திய நாடுகளில் இதற்கு முன் நடந்த முதலாளித்துவ புரட்சிகளில் இருந்து ரஷ்யப்புரட்சி குறிப்பிடத்தக்க விதத்தில் எங்கே வேறுபடுகின்றது என லெனின் குறிப்பாக சொல்கின்றார். முதலாளித்துவம் ஏற்கனவே ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாக நிலைபெற்றுவிட்ட, ஜார் ஆட்சிக்கு எதிராக ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய வலிமையான தனிப்பட்ட அரசியல் சக்தியாக பாட்டாளிவர்க்கம் வளர்ந்துவிட்ட புதிய வரலாற்று சூழலில் முதல் மக்கள் புரட்சி இப்புரட்சி. 

புரட்சியின் தொடக்க கட்டத்தில், பாட்டாளி வர்க்கத்தின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் இலக்குகளை லெனின் நிர்ணயித்தார். புரட்சியானது புதிய சூழ்நிலைகளில் கட்சியின் நடவடிக்கைகளை வரையறுக்க செய்தது, மக்களுக்கு புதிய வழிகளில் சமூகத்தைப் பற்றி கற்பிக்க வேண்டியிருந்தது. கட்சி அணிகளை பரந்த அளவில் திரட்டுவதற்கும், புரட்சிகர நடவடிக்கைகளை தொடங்குவதை ஊக்குவிப்பதற்கும், இளம் தலைமுறையினரை தயக்கமின்றி முன்னே கொண்டு வருவதற்கும் கட்சி அணிகள் பாடுபட வேண்டும். பாட்டாளிவர்க்கத்தின் முன்னணிப்படை என்னும் பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டும் எனில், இன்று பிறந்துள்ள புதிய, புரட்சிகர சூழலின் பின்னணியில் கட்சியின் வேலைகளையும் வெகுமக்களின் தலைமைப்பாத்திர அணுகுமுறைகளையும் மறு ஒழுங்கமைவு செய்ய வேண்டும். "எந்த அளவுக்கு வெகுமக்களின் இயக்கம் பரவுகின்றதோ அந்த அளவுக்கு பல்வேறுபட்ட வர்க்கங்களின் உண்மையான குணாம்சம் வெளியே தெரியும், பாட்டாளிவர்க்கத்தை அணி திரட்டி தலைமை தாங்கும் பொறுப்புள்ள அமைப்பு என்ற அடிப்படையில் கட்சியின் பொறுப்பு என்னும் சுமை அதிகரிக்கும்" என்று லெனின் எழுதுகின்றார். உழைப்பாளர்களின் கட்சி என்ற அடிப்படையில் கட்சி செய்ய வேண்டிய அடிப்படை வேலையும் கடமையும் எவை என்று லெனின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுவது என்ன? பாட்டாளிவர்க்க சக்திகளை அணித்திரட்டுவது, ஒருங்கிணைப்பது, வெளிப்படையான வெகுமக்கள் போராட்டத்திற்கு, சர்வாதிகாரம் பொருந்திய அரசை தகர்க்கும் பொருட்டு  ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு அவர்களை ஆயத்தம் செய்வது.

மக்களை அணித்திரட்டும் மகத்தான பணியில் போல்ஷெவிக் செய்தி நிறுவனமும், மிக முக்கியமாக லெனினை ஆசிரியராக கொண்ட விப்பர்யோத் Vperyod செய்தியேடும் பாராட்டத்தக்க பங்கை ஆற்றியுள்ளன. லெனின் எழுதிய அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் அறிக்கைகளும் தொழிலாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. புரட்சியில் போல்ஷெவிக்குகளின் நடைமுறைத்தந்திரத்தை வரையறுக்கும் பணியில், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு திட்டமிடுவது, நடத்தி முடிப்பது ஆகியவற்றுக்கான தலைமைப் பாத்திரத்தை கட்சியே ஏற்க வேண்டியதன் அவசியத்தை லெனின் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

இந்த அவசியமான பணியில் ஈடுபட்டபோது, கோட்பாடு, உலகைப்பற்றிய அறிவியல் பூர்வமான பார்வை ஆகியவற்றில் கட்சியின் தலையாய கொள்கைகள், உறுதிப்பாடு ஆகியவற்றின் மீது லெனின் தனிப்பட்ட கவனம் செலுத்தினார். 1905 ஏப்ரல் மாதம் அவர் எழுதினார்: "புரட்சியின் இன்றைய சகாப்தத்தில், கோட்பாடு குறித்த கேள்விகளை சந்திக்காமல் நழுவுவதும் அல்லது அரை குறை அறிவுடன் இருப்பதும் கோட்பாடு விசயத்தில் மிக மோசமாக வெறுங்கையுடன் இருப்பதையே குறிக்கும்; ஒரு சோசலிஸ்ட் ஆனவனுக்கு இதற்கு முன் எப்போதும் தேவைப்படாத அளவுக்கு தெளிவான சிந்தனையும் உலகம் குறித்த பார்வையும் அவசியமாகின்றது, அத்தகைய தகுதி இருந்தால் மட்டுமே சூழ்நிலைகளை அவரால் கட்டுப்படுத்த முடியும், சூழ்நிலைகள் அவரை கட்டுப்படுத்தக்கூடாது.

புரட்சிக்காலத்தில், வெகுமக்களின் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி, கிளர்ச்சியை முறையாக ஒருங்கமைத்து நடத்துவது ஆகிய கேள்விகளின் மீது தனிக்கவனம் செலுத்தினார். க்ரூப்ஸ்காயா எழுதினார்: "மார்க்ஸும் எங்கெல்சும் புரட்சி, கிளர்ச்சி ஆகியன குறித்து எழுதிய அனைத்தையும் இலியிச் மீண்டும் வாசித்தார், ஊன்றி வாசித்தார், ஆழ்ந்து சிந்தித்தார், மட்டுமின்றி போர்க்கலை குறித்து எழுதப்பட்ட பல நூல்களை வாசித்தார், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியின் நுட்பங்கள், அதை ஒருங்கிணைப்பது ஆகியன குறித்து ஆழமாக வாசித்தார். மற்றவர்கள் ஊகிப்பதை விடவும் இந்த தளங்களில் அவர் மிக ஆழமான கவனம் செலுத்தினார்."

பாரிஸ் கம்யூன் அனுபவம் லெனினை மிகவும் ஈர்த்த ஒன்று. இது குறித்த அறிவை சமூக ஜனநாயகவாதிகளுக்கும் முன்னணி பாட்டாளிகளுக்கும் புகட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார். பாரிஸ் கம்யூனில் பங்கு வகித்த ஜெனரல் க்ளூசேரட் Cluseret பாரிஸ் கம்யூன் அனுபவங்கள் பற்றி எழுதிய தெருச்சண்டை Street Fighting என்ற நூலில், கம்யூன் வீரர்கள் அரசுப்படைகளுடன் தெருவில் நடத்திய சண்டைகள் குறித்து பொதுவாகவும் திரட்சியாகவும் எழுதியிருந்தார். இந்த நினைவுக்குறிப்புக்களின் ரஷிய மொழியாக்கத்தை அவர் தொகுத்தார், விப்பர்யோத்தில் வெளியானது. மட்டுமின்றி, கம்யூனின் புகழ்பெற்ற ஜெனரல் க்ளுசேரட்டின் நினைவுக்குறிப்புக்கள், சுருக்கமான வரலாறு ஆகியவற்றுக்கு ஒரு முன்னுரையும் எழுதினார். 1905 மார்ச் 5 (18) அன்று, ஜெனீவாவில் இருந்த ரஷ்ய அரசியல் குடிபெயர்ந்தோர் காலனியில் நடந்த ஒரு கூட்டத்தில், பாரிஸ் கம்யூன் பற்றி ஒரு குறிப்பை வாசித்தார். "இன்றைய கணத்தில் நாம் அனைவரும் கம்யூனின் தோள்களின் மீது நிற்கின்றோம்" என்று செவிமடுத்த அனைவருக்கும் நினைவூட்டினார்.

மூலம்: Lenin: a biography, அத்தியாயம் 5, The first assault on the Tsarist autocracy, Progress Publishers, நான்காம் பதிப்பு, 1986.

தமிழில்: மு இக்பால் அகமது