வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

உச்சநீதிமன்றத்தீர்ப்பும் காங்கிரஸ் + பிஜேபியின் கோரமுகமும்


இருண்ட காலங்களிலும் கவிதைகள் பாடப்படுமா?
ஆம், கவிதைகள் பாடப்படும், 
இருளைப்பற்றி பாடப்படும் 
– பெர்டோல்ட் ப்ரெக்ட்

1) விடுதலை பெற்ற இந்தியாவின் ஆகப்பெரும் இருண்டகாலமான காங்கிரசின் இந்திராகாந்தி காலத்தில்தான் அவசரநிலை காலத்தில்தான் அனைத்து ஜனநாயக-தனிமனித உரிமைகளும் முற்றாக நசுக்கப்பட்டன. அன்றைய நிலையில் எந்த ஒரு மனிதனையும் எங்கேயும் கைது செய்து கண்காணாத இடத்தில் அடைத்துவிடவோ அல்லது கொலை செய்துவிடவோ காவல்துறைக்கு முற்றாக அதிகாரம் இருந்தது. தனது உறவினர் அல்லது நண்பரைக் காணவில்லை, அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றோ தனது தன்னலன் பொருட்டோ எந்த ஒரு மனிதரும் நீதிமன்றத்தை அணுகி முறையிடும் habeas corpus மனுக்கள் நீதிமன்றங்களில் குவிந்தன.

குறிப்பாக 9 உயர்நீதிமன்றங்கள் ‘எமர்ஜென்சி காலத்திலும் கூட இது போன்ற ஹேபியஸ் கார்பஸ் மனுக்களை அனுமதிக்க இயலும் என்று தீர்ப்பளித்தன. தனது ஃபாசிச ஆட்சியின்போதும் இந்த உரிமை இருப்பதா என்று வெறுப்புற்ற இந்திராகாந்தி கீழமை நீதிமன்றங்களின் இத்தீர்ப்புக்களுக்கு எதிராக உச்ச்நீதிமன்றத்தில் முறையிட்டார், தொடர்ந்து 5 நீதிபதிகள் (அன்றைய உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி ஏ.என்.ரே, எம்.எச்.பெக், ஒய்.வி.சந்திரசூட், பி.என்.பகவதி, எச்.ஆர்.கன்னா) அடங்கிய அரசியல் சாசன அமர்வில் திரு.கன்னா தவிர மற்ற நால்வரும் “எமெர்ஜென்சி காலத்தில் அடிப்படை உரிமைகளான உயிர்வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமான வாழ்வுக்கான உரிமை ஆகியன மறுக்கப்படுகின்றனஎன தீர்ப்பளித்தனர், அதாவது இந்திராகாந்தியோடு உடன்பட்டனர். திரு.கன்னா மட்டுமே தனிமனிதன் உயிர்வாழ்வதற்கான உரிமையும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையும் ஒரு அரசு ஆணை மூலம் வெட்டிச்சுருக்கப்படுவதற்கான அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கவில்லைஎன மாறுபட்ட கருத்தை பதிவு செய்தார். ஆக நால்வர் பெரும்பான்மையுடன் இந்திராகாந்தியின் ஃபாசிச பேயாட்டத்துக்கு அனுமதி கிடைத்தது. இது ADM ஜபல்பூர் வழக்கு என வரலாற்றில் அறியப்படுகின்றது. இதன்பின் கன்னா அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்தவர் என்றாலும் அவரைப் புறக்கணித்து இளையவரான பெக்கை அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்தார் இந்திராகாந்தி. தொடர்ந்து கன்னா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1982ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் வேட்பாளரான ஜெய்ல்சிங்கிற்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கன்னா அவர்கள் நிறுத்தப்பட்டார் என்பது வரலாறு.

2) நேற்று வழங்கப்பட்ட தீர்ப்புக்குள் ஒரு விசித்திர முரண் அடங்கியுள்ளது, அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1977இல் மனித உரிமைகளுக்கு எதிராக தீர்ப்பளித்த நால்வரில் ஒருவரின் மகனான டி.ஒய்.சந்திரசூட் நேற்றைய தனது தீர்ப்பில் இப்படிக்கூறுகின்றார்: ‘தனிமனித அந்தரங்கம் என்பது மனிதகண்ணியத்தின் மையமான கரு. மனிதகண்ணியத்தை முழுமை பெறச்செய்வதே தனிமனித அந்தரங்க சுதந்திரம்தான்’.  40 வருடங்களுக்கு முன் தந்தை செய்த தவற்றை மகன் இப்போது நேர் செய்துள்ளதை பாராட்டியாக வேண்டும். மேலும் 1976இல் ADM ஜபல்பூர் வழக்கின் தீர்ப்பை இன்றைய தலைமைநீதிபதி நேற்றைய தீர்ப்பில் அதிகாரப்பூர்வமாக கண்டனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தீர்ப்பு 543 பக்கங்கள் கொண்டது. ஒன்பது நீதிபதிகளும் தனித்தனியே தமது ஆழமான கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளதை ஓரளவு வாசித்தேன். இந்த அமர்வின் மையமான விசயமே தனிமனிதர்களின் அந்தரங்க சுதந்திரம் பற்றியது, இது ஆதாரை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த்து என நீதிபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  நேற்றைய தீர்ப்பின் வெளிச்சத்தில் ஆதார் அடாவடிகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்பது தெளிவாகப்பேசப்படுகின்றது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.புட்டஸ்வாமி ஆதார் விசயத்தில் அரசியல் அமைப்புச்சட்டத்தின் சரத்து 23 மீறப்படுகின்றது என்று கூறி தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல தீர்ப்புக்களில் இறுதியாக வந்ததே நேற்றைய அரசியல்சாசன அமர்வின் மிக முக்கியமான தீர்ப்பு.

3) தனிமனிதர்களின் கைரேகை, கண்மணி ஆகியவற்றை அரசின் உதவித்திட்டங்களுக்கு மட்டுமின்றி இத்தேசத்தில் உயிர்வாழ்வதற்கும் செத்த பிறகு புதைப்பதற்கும் எரிப்பதற்கும் கூட அவசியமானதாக்கியுள்ளது ஆர் எஸ் எஸ் மோடியின் அரசு. இதனை தொடங்கிவைத்தது காங்கிரஸ் என்பதை எக்காலத்திலும் நாம் மறக்கக்கூடாது. நாடாளுமன்றத்தின் அனுமதி பெறாத UIDIA அமைப்பை ஒரு அரசு ஆணையின் மூலம் ஏற்படுத்தி இந்திய மக்களுக்கும் அரசுக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத முன்னாள் Infosys அதிகாரியான நந்தன்நீலகேணி என்ற நபருக்கு ஏகப்பட்ட அதிகாரங்களை வழங்கி UIDIA அமைப்பின் கீழ் அரசுக்கு எந்த வித்த்திலும் பதில்சொல்லக்கடமைப்பட்டிராத பல்லாயிரம் காண்ட்ராக்ட் தொழிலாளிகளை பணியில் அமர்த்தி இந்தியாவில் குடியிருக்கும் (இந்தியக்குடிமக்கள் அல்ல என்பதை வலியுறுத்துகின்றேன்) அனைவருடைய கைரேகை, கண்மணி ஆகியவற்றை பதிவுசெய்து எடுத்துக்கொண்டதன் மூலம் தனிமனிதர்களின் உடல்மீது தமது ஆட்சியதிகாரத்தை ஏவி சர்வாதிகரம் செய்ததிலும் செய்வதிலும் காங்கிரஸ் பிஜேபி இரண்டும் கெட்டியாக்க் கைகோர்த்துள்ளதை வரலாறு பதிவு செய்கின்றது.  பிஜேபி கட்சியைச்சேர்ந்த யஸ்வந்த் சின்கா தலைமையிலான நாடாளுமன்றக்குழுவே கூட ஆதார் போன்ற ஒரு அடையாள அட்டையை அறிமுகம் செய்வதற்கும் UIDIA போன்ற அமைப்பை நிறுவுவதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை மிக்கவனமாக ஊடகங்கள் மட்டுமின்றி காங்கிரசும் பிஜேபியும் கூட வெளியே பேசுவதில்லை. இந்த நந்தன்நீலகேணி பிற்பாடு கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்; இன்றைய செய்திப்படி மீண்டும் அவர் Infosys நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

4) நேற்றைய தீர்ப்புக்குப்பிறகு காங்கிரசும் பிஜேபியும் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளன. வடிவேலுவின் தங்கை மீது ஆசைப்பட்டு பெண்கேட்க வரும் கவுண்டமணியும் செந்திலும் தங்களது முடிச்சவிழ்க்கி மொள்ளமாரித்தனங்களை நடுவீதியில் மாறிமாறிப் பட்டியல் இடுவது போல் இச்சண்டை ஒரே நேரத்தில் சுவாரசியமாகவும் அருவருப்பாகவும் இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி ‘தனிமனிதர்களின் சுதந்திரங்களில் மூர்க்கத்தனமாக தலையிடும் இந்த (பிஜேபி) அரசாங்கத்திற்கு இத்தீர்ப்பு ஒரு அடியைக்கொடுத்துள்ளதுஎன்று சொல்ல, அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பில் –அதாவது அரசாங்க கூட்டத்தில்- பிஜேபி மந்த்ரி ரவிஷங்கர்ப்ரஷாத்  தனிமனித சுதந்திரத்தைப்பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் தெரியாதா? எமெர்ஜென்சி (காங்கிரஸ்) காலத்தில் அவர்களது அட்டர்னி-ஜென்ரல் ‘ஒரு மனிதன் ஜெயிலில் கொல்லப்பட்டால் என்ன செய்வது, கதை முடிந்தது, அவ்வளவுதான்என நீதிமன்றத்தில் வாதிட்டாரே, தெரியாதா?என்று கொட்டியுள்ளார்.

5) நேற்றைய தீர்ப்பினை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்; எமர்ஜென்சி புகழ் காங்கிரசும் வரவேற்றுள்ளது. எப்படி? பெருமுதலாளிகளின் ஏஜெண்டும் காங்கிரசின் ‘சிந்தனைச்சிற்பிகளில் ஒருத்தருமான ப.சிதம்பரம் ‘எங்கள் UPA சர்க்கார் கொண்டுவந்த ஆதார் திட்டம் தனிமனிதர்களின் அந்தரங்க சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கவில்லைஎன்று பீற்றுகின்றார். கூரையில் நாங்கள் கொள்ளியை வைக்கும்போது இத்தனை ஆபத்தாக இருக்கவில்லை என்று சிதம்பரம் சொல்கின்றார்.   

6) ஆறு வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மந்திரியாக இருந்த கபில்சிபல் “இணையதளங்கள், சமூக தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் மோசமான’ ‘பாலியல்’ சார்ந்த விசயங்களை ஏகப்பட்டபேர் எழுதுவதால் இந்திய சமூகம் கெட்டுகுட்டிச்சுவர் ஆகி விடுவதாககண்ணீர், மூக்கு போன்றவற்றை சிந்தி வருத்தப்பட்டிருந்தார் என்பதை நினைவு படுத்திப்பாருங்கள்.
அன்றைய தேதிகளில் டுனீசியாவில் தொடங்கி எகிப்து,சிரியா,லிபியா போன்ற கட்டுப்பெட்டியான அரபு தேசங்களிலும் மக்கள் எழுச்சி வீறுகொண்டு எழுந்து காலகாலமாக குடும்ப சர்வாதிகார ஆட்சி செய்த நபர்களை துரத்தியடித்த நிகழ்வானது சாதாரணமான ஒரு செய்தி அல்ல. இப்போராட்டம் அரபு பிராந்தியம் எங்கும் தீ போலப்பரவ சமூக இணையதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை மிகப்பெரும் பங்காற்றின என்பது அத்தளங்களின் சொந்தக்காரர்களுக்கும் கட்டுப்பாட்டாளர்களுக்கும் கூட எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு நிற்கவில்லை.

7) ஜனநாயகம் என்ற பெயரில் இந்தியாவில் குடும்ப ஆட்சியை ஸ்தாபித்து கருத்துரிமையை, பேச்சுரிமையை குழிதோண்டிப்புதைக்கும்போதும், அமெரிக்கா போன்ற நாடுகளின்,  பெரும் சர்வதேச+இந்திய கார்பொரேட் நலன்கருதியும் ஆதார் போன்ற மனிதமாண்புகளுக்கு அப்பாற்பட்ட அதிகார துஷ்பியோகங்களை நாட்டுமக்கள் மீது ஏவும்போதும் சாமான்யமக்களும் தமது கருத்துக்களைப் பதிவிடுகின்ற எதிர்ப்பை பதிவு செய்கின்ற ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றின் மீது கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று கபில்சிபல் போன்றோர் கடுப்பெடுத்துப் புலம்பியது ஏதோ போகின்ற போக்கில் புலம்புவது அல்ல! காங்கிரசின் அசிங்கமான வரலாறு ரத்தக்கறை படிந்தது என்ற பின்னணியில்தான் இதை பார்க்க வேண்டும்.  விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பெரும் ஊழலைத்தொடங்கிவைத்த பெருமை காங்கிரசியே சேரும். தேசம் விடுதலை பெற்ற அடுத்த வருடமே காஸ்மீரில் ராணுவத்தேவைகளுக்காக ஜீப் வாங்கியதில் ஊழலை தொடங்கி 2ஜி வரையிலும் சாதனை செய்தார்கள்.

8) இப்படியாக காங்கிரஸ் கட்சியின் ஊழல்களையும், கடந்த காலத்தில் பிஜேபி+ஆர் எஸ் எஸ் நட்த்திய குஜராத் கலவரங்கள் உள்ளிட்ட பலவற்றையும், கடந்த மூன்று வருடங்களில் உனா, தாத்ரி, முசாஃபர்நகர் கலவரங்கள், யமுனை ஆற்றை நாசப்படுத்திய ஆர் எஸ் எஸ் சாமியாரான ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு பசுமைத்தீர்ப்பாயம் தண்டனை விதித்தது, மத்யப்ரதேஷ் பிஜேபியின் வியாபம் ஊழல், உத்ரப்ரதேஷில் இப்போது 70க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு என பல கேடுகளையும் வெளிக்கொண்டு வந்ததில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.  இன்றைய பிஜேபி+ஆர் எஸ் எஸ் அரசும் ஊடகங்கள் மீது எத்தகைய அணுகுமுறையை கொண்டுள்ளது என்பதும் ஊரறிந்த ஒன்றே. ஊடகங்களையும் தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களையும் தன் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரவேண்டும் என்பது ஆர் எஸ் எஸ்-சின் தணியாத தாகம். அதற்கான முயற்சிகளை எடுக்கும்போதெல்லாம் உரத்தகுரலில் எதிர்ப்பு கிளம்புவதால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் பின் வாங்குகின்றது. பிஜேபி+ஆர் எஸ் எஸ்-சின் ஆர்ப்பாட்டமான அசிங்கமான ஊதுகுழலான அர்ணாப்கோஸ்வாமி
தொடக்கத்தில் பணியாற்றிய NDTV மீது 24 மணி நேர ஒளிபரப்பு தடைவிதித்தன் மூலம் கருத்துச்சுதந்திரத்தின் மீது தனக்குள்ள அக்கறையை அம்பலப்படுத்திக்கொண்டது பிஜேபி+ஆர் எஸ் எஸ். தேவைப்படும்போது மீண்டும் ஒரு 1975ஐ கொண்டுவரவும் பிஜேபி+ஆர் எஸ் எஸ் தயங்காது என்பதை அதன் ஒவ்வொரு அசைவும் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது.



கருத்துகள் இல்லை: