சனி, ஜூன் 10, 2017

திடீர் புளியோதரை பவுடர் அல்லது திடீர் ‘அரசியல்வாதி’களும் திடீர் ‘அரசியல்’ கட்சிகளும்


ஒரு நாட்டின் இயற்கை வளங்களும் அந்நாட்டின் உழைக்கும் மக்களின் உழைப்பும் அவற்றின் பலனாக உயர்த்தப்பட்ட அந்நாட்டின் பவுதீக சொத்துக்களும் அரசியல் அதிகாரமும் உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் இருக்க வேண்டுமா அல்லது அம்மக்களின் உழைப்பைச் சுரண்டுகின்ற, சுரண்டுவதன் மூலம் சொத்துக்களையும் அரசியல் அதிகாரத்தையும் அடக்குமுறை மூலம் ஒருசேர தமது கைகளில் கைப்பற்றிக்கொள்கின்ற  முதலாளிவர்க்கத்தின் கைகளில் இருக்க வேண்டுமா என்பதுதான் அரசியல்-பொருளாதார தத்துவத்தின் சுருக்கம் எனலாம். இவ்விரண்டும் எதிரெதிர் முனைகளில் இருக்கின்ற இருவேறு அரசியல் தத்துவங்கள்.

இத்தேசம் தேசவிடுதலைக்குப்பின் பல பத்தாண்டுகள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் கீழும் ஒரு சில ஆண்டுகள் காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசுகளின் கீழும் இருந்தன. வலதுசாரி அதிதீவிர இந்துத்துவா அரசியல்வாதிகளின் கைப்பிடியில் ஒரு சில ஆண்டுகள் இருந்தது, இப்போதும் இருக்கின்றது. எதிரெதிர் முனைகளில் இருக்கின்ற இருவேறு அரசியல் தத்துவங்களில் எது ஒன்றை 1947க்குப் பின் வந்த வெவ்வேறு அரசுகள்/கட்சிகள் தம் கொள்கையாக வரித்துக்கொண்டு இத்தேசத்தை ஆண்டன, ஆண்டுகொண்டு இருக்கின்றன என்பதை விளக்கிச் சொல்ல அவசியம் இல்லை. 70 வருடங்களுக்குப் பின்பும் பல பத்துக்கோடி மக்கள் ஒருவேளை உணவோடு உறங்கச்செல்கின்றார்கள் என்பதும், தெருக்களிலும் சாக்கடை ஓரங்களிலும் பல கோடி மக்கள்
வசிக்கின்றார்கள் என்பதும் ஆண்ட அல்லது ஆள்கின்ற அரசுகள்/கட்சிகளின் தத்துவச்சார்பை தெளிவாகச் சொல்லும்.

தத்துவ அரசியல் என்பதும் கட்சி அரசியல் என்பதும் வெவ்வேறானவை. அதாவது மேலே சொல்லப்பட்ட இரண்டு அரசியல் தத்துவங்களில் முதலாவது தத்துவத்தை தனது அல்லது தமது கொள்கையாக வரித்துக்கொண்ட கட்சிகள் இடதுசாரி அரசியல் கட்சிகள் எனப்பொதுவாகச் சொல்லப்படுகின்றன. இரண்டாவது அரசியல் தத்துவத்தை தமது கொள்கையாக வரித்துக்கொண்ட கட்சிகள் வலதுசாரி அரசியல் அல்லது முதலாளித்துவ கட்சிகள் எனப்பொதுவாகச் சொல்லப்படுகின்றன. இப்போது நாம் பார்க்கின்ற எந்த ஒரு அரசியல் கட்சியும் இல்லாத காலத்திலும் இந்த இரண்டு எதிரெதிர் அரசியல் தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது, அதாவது ‘கட்சிகள்என்ற இயக்கங்கள் இல்லாதிருந்த காலத்திலும். இப்போது இருக்கின்ற கட்சிகள் எல்லாமும் இல்லாமற்போனாலும் அல்லது பல காரணங்களால் காணாமற்போனாலும் இந்த இரண்டு எதிரெதிர் அரசியல் தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இடையறாத இப்போராட்டம், தேர்தல் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் மக்கள் பிரதிநிதிகளால் ஆட்சி ஆளப்படும் முறை உள்ள நாடுகளிலும், தேர்தல் முறையே இல்லாமல் ஏதாவது ஒரு வடிவத்தில் ஆட்சி செலுத்தப்படும் நாடுகளிலும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றது. இந்தியா போன்ற நாடுகளில் ஆளும் வலதுசாரி அரசுகள் (கட்சி வேறுபாடின்றி) + பெருமுதலாளிகள் கூட்டணியானது சாதாரணமாக தொடர்ந்து மென்மையான வடிவங்களிலும் சில நேரங்களில்  வெளிப்படையாகவும் வன்முறையைப் பிரயோகித்தும் (தமக்கு வாக்களித்த விவசாயிகள், தொழிலாளர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நட்த்தி கொலை செய்வது,  நவம்பர் 8 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தது, நான் உண்ணாத உணவை நீயும் உண்ணாதே போன்றவை சிறந்த உதாரணங்கள்) உழைக்கும் மக்களின் மீதான தாக்குதலை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றன. உழைக்கும் மக்களைத் தமது பக்கம் திரட்டிக்கொள்ளவே பெரும் முயற்சிகளைச் செய்து கொள்ள வேண்டிய பலஹீனமான நிலையில் உள்ள இந்திய இடதுசாரிக்கட்சிகள் தொடர்ந்து தமது மாற்று அரசியலை மக்கள் மத்தியில் விதைப்பதில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவாக வெற்றிபெற்றுவிடவில்லை என்பது உண்மை.  காரணங்கள் பல. இடதுசாரி அரசியல் மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற்று விடாமல் இருக்கவும் விதையூன்றிவிடாமல் இருக்கவும் ஆன அத்தனை திசைதிருப்பல் வேலைகளிலும் முதலாளித்துவக்கட்சிகள் + பெருமுதலாளிகளின் பிரச்சாரக்கருவிகளான செய்தித்தாட்கள் (நாளேடு, வார ஏடு, மாத ஏடு, வருச ஏடு போன்றவை மட்டுமின்றி சுத்தமானஅல்லது ‘நடுநிலையான அரசியல், துப்பறியும் ஏடு, பக்தி, இலக்கியம், தீவிர இலக்கியம், கம்ப்யூட்டர், வேளாண்மை, மருத்துவம், பசுமை, ஜோதிடம், விளையாட்டு, சிறார் இதழ்கள், பெண்களுக்கான இதழ்கள்.. என பல்வேறு செக்‌ஷன்களுக்கான ஏடுகளும் இதில் அடக்கம்),  டிவி, வானொலி போன்றவை மட்டுமின்றி, இணையங்களிலும் இப்பிரச்சாரம் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது.

இதுகாறும் தமக்கு அறிமுகமான அரசியல்கட்சிகளின் ஆட்சியதிகாரம் தமது வாழ்க்கையை எந்த வகையிலும் முன்னேற்றிவிடவில்லை  என்று மக்கள் சலிப்புறும்போதெல்லாம் மக்களின் நாடித்துடிப்பைத் தொடர்ந்து கண்காணித்துவரும் இந்த முதலாளித்துவ சக்திகள் உடனடியாக உப்புப்பெறாத விசயங்களை காட்டுத்தீயாக திட்டமிட்ட வகையில் பரப்புவார்கள்; மயிர்பிளக்கும் வாதப் பிரதிவாதங்களில் திட்டமிட்டு இறங்கி நாடகம் ஆடுவார்கள்; ஒருவருக்கு ஒருவர் சேறுவாரி இறைக்கும் திட்டமிட்ட அநாகரீக பெருங்கூச்சலைப் பரப்புவார்கள்; மிகப்பெரும் சாதி அல்லது மத அல்லது இனக்கலவரங்களைத் தூண்டிவிடுவார்கள். சமூகத்தில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் பரப்புவார்கள். போலி தேசபக்தி, தேசியவாதம், பெரும்பான்மை – சிறுபான்மை மோதல்களைத் தூண்டிவிடுவார்கள் (இது சாதி, மதம், இனம், மொழி என எந்த அடிப்படையிலும் இருக்கலாம்). அண்டை நாடுகள் மேல் போர் தொடுத்து தேசம் அபாயக்கட்டத்தில் இருப்பதாக மக்களின் கவனத்தை ஒரே குவிமையத்தில் குவிப்பார்கள்.  இந்தியா போன்ற நாடுகளில் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களையும் திசைதிருப்பல் கருவியாகப் பயன்படுத்துகின்றார்கள். ‘அரசியலே சாக்கடையப்பா! ஒரே நாத்தம், சுத்த ஃப்ராடு!என மக்களை சலிப்படைய வைப்பதன் மூலம் தமது வலதுசாரிஅரசியலைத் தக்கவைப்பதிலும் மக்களின் கவனம் இடதுசாரிகளின் பக்கம் திரும்பிவிடாமலும் இருப்பதை உறுதி செய்வார்கள்.   இது ஆட்சியதிகாரத்தில் நீடிப்பதற்கான கட்சி அரசியல் தந்திரமே அன்றி தத்துவ அரசியல் போர் அல்ல என்பதைப் புரிந்துகொள்வதில் மக்களுக்கு எப்போதுமே சிக்கல் இருந்து வருகின்றது. மக்கள் சலிப்புற்றுள்ள இதுபோன்ற சூழலில் யாரோ ஒருவர் – ஒரு தேவதூதன் - ‘அரசியலுக்குவருவார், அப்போது இவரால் எல்லாம் சரியாகிவிடும்என்பது போன்ற பிரச்சாரத்தை அனைத்து வடிவிலான ஊடகங்களும் சொல்லிவைத்தாற்போல் செய்கின்றன.

உண்மை என்னவெனில் யாரும் அரசியலுக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. இரண்டுபட்ட வர்க்க சமுதாயத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் விதிவிலக்கு ஏதும் இன்றி அரசியலில் எப்போதும், இந்த நொடியும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டேதான் இருக்கின்றன, ஆனால் இது ‘கட்சிஅரசியல் அல்ல என்பதைப் புரிந்துகொள்வதில்தான் சிக்கல் உள்ளது. ஒரு அரசியல் தத்துவத்தை உலகுக்கு அளிப்பதன் மூலமோ ஏற்கனவே சமூகத்தின் விவாதத்திற்குரிய ஒரு அரசியல் தத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள ஒரு இயக்கத்தில் (கட்சியும் ஒரு இயக்கமே, கட்சி மட்டுமே இயக்கம் அல்ல) தன்னை இணைத்துக் கொள்வதன் மூலமோ எந்த ஒரு தனிமனிதனின் செயல்பாடுகள் பொதுவெளியில் தெரிகின்றன. (தேர்தல் அரசியலில் வாக்களிப்பது ஒரு அரசியல்வேலை எனில் ஏதோ ஒரு காரணத்தால்  வாக்களிக்க மறுப்பதும் தேர்தல் அரசியலே மோசடிதான் என்று வாக்களிக்காமல் இருப்பதும் கூட ஒரு அரசியல் செயல்பாடுதான்.) இந்த இரண்டிலும் சேராத ‘அரசியலுக்கு வருவார்அல்லது  வருவேன்போன்ற பூச்சாண்டி வேலைகள் எல்லாம் ஏற்கனவே வேரூன்றி உள்ள வலதுசாரி அரசியலைப் பாதுகாக்கின்ற, இடதுசாரி அரசியல்பால் மக்கள் கவனம் திரும்பிவிடாமல் இருப்பதற்கான சாதுரியமான திசைதிருப்பலே அன்றி வேறு எதுவும் இல்லை.

தென் ஆப்பிரிக்காவில் நேட்டாலின் தலைநகர் மார்ட்ஸ்பர்க் நகரில் கறுப்புமனிதனாக இருந்த ஒரே காரணத்திற்காக வெள்ளைநிறப்போலீஸ் அதிகாரியால் பட்ட அவமானமும், பார்டே கோப் என்ற இடத்தில் கோச் வண்டிப்பயணத்தின்போது ஒரு வெள்ளைநிற அதிகாரியின் கைகளால் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி வாங்கிய அறைகளும், நேரில் கண்ட நிறவெறிக்கொடுமைகளும்தான் வக்கீல் தொழில்செய்வதற்காக மட்டுமே அங்கே சென்றிருந்த பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அதே நாட்டில் ஆசிய மக்களுக்கான அரசியல் இயக்கங்களை நிறுவுவதற்கான தீப்பொறிகளாக அமைந்தன; 1914இல் இந்தியா திரும்பியபின் தேசிய இயக்கத்தில் தன்னைப் பிணைத்துக்கொள்வதற்கான பலமான பலத்த அஸ்திவாரத்தை தென்னாப்பிரிக்க வாழ்க்கையில்தான் அவர் கட்டிக்கொண்டார். அவரது தென்னாப்பிரிக்க வாழ்விலும் இந்திய வாழ்விலும் சாய்மான அரசியல் இல்லாமல் இல்லை.

லாகூர் நகரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ரவுலட் சட்டங்களை எதிர்த்து மக்கள் நடத்திய மிகப்பெரிய மூன்று மைல் நீள ஊர்வலமும் அதனைத்தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நீடித்த மகத்தான ஹர்த்தால் போராட்டமும் பன்னிரெண்டு வயதேயான மாணவன் பகத்சிங்சின் மனதில் போராட்ட விதையை விதைத்தது. அடுத்த இரண்டு வருடங்களில் ஒத்துழையாமை இயக்கத்தில் இணையச் செய்தது. பின்னாட்களில் அவராலும் அவரது சகாக்களாலும் கட்டியமைக்கப்பட்ட ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுப்படை (Hindustan Socialist Republic Army) என்பது வெறும் சமூகசேவை மன்றம் அல்ல, அது அரசியல் இயக்கம்.

1919ஆம் ஆண்டில் ஜல்லியன்வாலாபாக்கில் வெள்ளைப்போலீஸ் அதிகாரியான டயரால் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் செத்துக்கொண்டே இருந்த பஞ்சாப் மக்களுக்கு வாயில் நீரை ஊற்றத்தூண்டிய உணர்ச்சிகரமான கணங்கள்தான் உதாம்சிங் என்ற அந்தச் சிறுவனை பின்னொரு காலத்தில் பஞ்சாப் கவர்னராக இருந்த மைக்கேல் ஓடயரை லண்டன் காக்ஸ்டன் அரங்கில் கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொல்லத்தூண்டியது. இந்த ஒரே லட்சியத்தின் பொருட்டு - ஒரே ஒரு துப்பாக்கி வாங்கும் பொருட்டு - கப்பல் ஏறி லண்டனின் ஓட்டல்களில் தட்டுக்களைக்கழுவியும்  பிற இடங்களில்  கூலிவேலைகள் செய்தும் மாட்டுத்தொழுவங்களிலும் பன்றித்தொழுவங்களிலும் தங்கி உயிரைப்பேணி அந்தக் கணத்திற்காக காத்திருக்கச் செய்தது.
  
மஹார் சாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக ஊர்க்குளத்தில் தண்ணீர் அருந்தும்போது உயர்சாதிக்காரன் தொடுத்த கொடுந்தாக்குதல்தான் பீமாராவின் உள்ளத்தில் எதிர்ப்புணர்வு விதையை விதைத்தது. எதிர்காலத்தில் கோடானுகோடி தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஆன அரசியல் தலைவரானார், அவருக்கான தத்துவஅரசியல் இருந்தது.  விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல் சட்டத்தை வடிவமைக்கும் பெரும் பொறுப்பு அவரை வந்து அடைந்தது நாம் வாசிப்பதுபோல் அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை. ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் இருந்து அவராகவே விலகிவிடுவதற்கான மறைமுகமான எண்ணற்ற நிர்ப்பந்தங்களையும் நெருக்கடிகளையும் நாடறிந்த ‘நல்ல அரசியல் தலைவர்கள்தான் அவருக்குக் கொடுத்துக்கொண்டே இருந்தனர், அவர்களுக்கான தத்துவஅரசியல் இருந்தது.    

வட இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் பிறந்த அமீர் ஹைதர்கானை, தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான பொருத்தமான ஆளுமையாக கட்சி தேர்வு செய்து அனுப்பியபோது எவ்விதத்தயக்கமும் இன்றி அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததெனில் சமூகத்தின்பால் அவர் கொண்ட பற்று மட்டுமே காரணம் அல்ல,  அவர் வரித்துக்கொண்ட அரசியல் தத்துவம் அவரைப் பக்குவப்படுத்தியிருந்தது.

பல நூறுஏக்கர் வயல்வெளிகளுக்குச் சொந்தமான உயர்சாதி நம்பூதிரி நிலப்பிரபுக்கு மகனாகப் பிறந்தவர் ஈ.எம்.சங்கரன் நம்பூதிரிப்பாடு. அதே நம்பூதிரி சமூகம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த கொடுமைகளை தனக்குத்தானே விருப்புவெறுப்பற்ற விமர்சனத்துக்கு உட்படுத்திக்கொண்டதாலும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களின்  கட்சிகளின் அரசியல் இயக்கப்போக்குகளை பிரிட்டிஷ் இந்தியாவின் விடுதலைப்போராட்ட இயக்கத்தின் பின்னணியில் வர்க்க அரசியல் தத்துவ வெளிச்சத்தில் ஒப்பீடு  செய்யத்தக்க அளவுக்கு தனது அறிவுத்திறனை மேம்படுத்திக்கொண்டதாலும் ஒரு கட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசியல்தான் இத்தேசமக்களை அனைத்துவிதமான சமூக ஒடுக்குமுறைகளில் இருந்தும் விடுதலை பெறச்செய்யும் என்ற தீர்க்கமான முடிவுக்கு அவரை இட்டுச்சென்றது, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக அவரை விளங்கச்செய்தது. பின்னர் விடுதலை பெற்ற இந்தியாவின் ஒரு மாநிலத்தில் முதல் கம்யூனிஸ்ட்  அமைச்சரவைக்குத் தலைமை ஏற்கவும் அவருக்கு வாய்த்ததெனில் அது தனிநபர் திறமை மட்டுமே சார்ந்த ஒன்றல்ல, அவர் வரித்துக்கொண்ட அரசியல் தத்துவச்சார்பும் அதேதத்துவத்தை தனது  கொள்கையாக ஏற்றுக்கொண்ட இடதுசாரி கம்யூனிஸ்ட்  இயக்கமும் தலையாய காரணங்கள்.

தஞ்சை மாவட்ட்த்தில் நாகரிக மனிதன் கற்பனையும் செய்ய முடியாத அளவுக்கு தலைவிரித்தாடிய பண்ணை அடிமை முறையையும் சாணிப்பால் கொடுமைகளையும் ஒழித்துக்கட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் முடிவுசெய்தபோது கர்நாடகாவில் பிராமண வகுப்பில் பிறந்த பி.சீனிவாசராவ் கட்சியின் கட்டளையை ஏற்று   தஞ்சைக்கு வந்து தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் வீடுகளில் தங்கி அவர்களுடன் உண்டு உறங்கி வாழ்ந்து பணி செய்ய முடிந்த்தெனில் அதற்கு உரமாக இருந்த்து அவர் வரித்துக்கொண்ட அரசியல் த்த்துவமும் அதன்பால் அவர் கொண்ட உறுதியும் அன்றி வேறென்ன?

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இலையாவூர் கிராமத்தில் பரம்பரைச் சொத்தும் கல்வி வசதியும் ஏராளமாக இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்த சிண்டன் என்ற செல்லப்பிள்ளை பிற்பாடு வளர்ந்து வாலிபனாக நின்றபோது தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிப்பணியேற்று, தன் வாழ்நாளில் பதின்மூன்று வருடங்கள் சிறையில் கழித்தான் என்றால் அதற்கு உரமாக இருந்தது அவன் ஏற்றுக்கொண்ட அரசியல் தத்துவமே. வி.பி.சிந்தன் என்று சொன்னால் அனைவரும் அறிவர்.

1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது: ‘நான் ஒரு க்யூபன்; நான் ஒரு அர்ஜெண்டைன்; நான் யாருக்கும் குறைவில்லாத லத்தீன் அமெரிக்க தேசபக்தன்’. அர்ஜெண்டினாவில் பிறந்தவன், பிற்காலத்தில் புரட்சிகர க்யூபாவின் தேசிய வங்கியின் இயக்குநர்; பின்னர் தொழிற்துறை அமைச்சர். இந்தப்பதவிகளை எல்லாம் பதவிகளாகக் கருதாமல் இயக்கம் தனக்கு அளித்த பொறுப்புக்களில் ஒரு பகுதியென மட்டுமே எடுத்துக்கொண்டு தனது உற்ற தோழன் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் வயதுமுதிர்ந்த பெற்றோருக்கும் அன்புமகள் ஹிடில்டாவுக்கும் சில கடிதங்களை மட்டும் எழுதிவைத்து விட்டு 1965 ஏப்ரலில் க்யூபாவை விட்டு வெளியேறி பொலிவியாவிலும் காங்கோவிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பொருட்டு பிள்ளைப்பிராயம் தொட்டே தன்னை வாட்டிவதைத்துக்கொண்டிருந்த கொடும் ஆஸ்த்துமாவுடன் தனது போராட்டத்தைத் தொடரவும் ஒரு சர்வதேசக்குடிமகனாகவும் தன்னை உருப்படுத்திக்கொள்ளவும் முறையாக மருத்துவர் பட்டம் பெற்ற சே குவேராவால் முடிந்திருக்கின்றதெனில் அது தனது சகமக்கள் மீது அவன் செலுத்திய அன்பால் மட்டும் விளைந்தது அல்ல; எத்தகைய அரசியல் தத்துவ சார்பும் அற்ற  ஒருவரும் கூட தனது சக மனிதர்கள் மீது  அன்பையும் பாசத்தையும் பொழிந்துவிட முடியும். அத்தகைய அன்பும் பாசமும் அதற்கான தனிமனித எல்லையுடன் நின்றுவிடும்; மாறாக சர்வதேச மக்கள் சமூகத்தின் மீதான அன்பும் உழைக்கும் மக்கள் மீதான பாசமும் அவர்களின் விடுதலைக்கான போராட்டமும் இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசியல் கொள்கை சார்ந்தது, அதுவே சே குவேரா போன்ற மாவீர்ர்களும் போராளிகளும் வரித்துக்கொண்டது.  

இப்படி வாழ்ந்து மறைந்த பல தியாகச்செம்மல்களும் இன்னும் நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கும்  சுயநலமற்ற தியாகவாழ்க்கைக்கு உதாரணமாகத் திகழும் தத்துவ ஞானவிளக்குகளும் திடீரென்று ஒரு நாள் மண்ணைப்பிளந்து தோன்றியவர்கள் அல்லர்; கூட்டத்தைக் காட்டி காசு பண்ணும் வித்தைக்காரர்களும் அல்லர்; மாறாக இவர்களைத் தனியாகவும் அவர்களது அரசியல் தத்துவக்கொள்கையைத் தனியாகவும் இனம்பிரித்து அறியமுடியாத அளவில் அவர்களே தத்துவங்களாகவும் தத்துவங்களே அவர்களாகவும் விளக்கும் ஒளியும் போல வாழ்ந்து காட்டுகின்றார்கள்.

‘புயலில் 10 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை இழந்து நொடித்துப்போன எங்களின் கம்பெனி க்ளியரன்ஸ் சேல்ஸ் விற்பனையை
பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்பது போல ஏதோ ஒரு திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நேரம் முடிவு செய்துகொண்டு ஒருநாள் காலையில் வாழைமரத்தையும் கொடியையும் கட்டி தேர்தல் கமிசனில் பதிவு செய்வதற்காகவும், தனக்குப்பின்னால் உள்ள கூட்டத்தைக் காட்டி தேச அளவிலோ மாநில அளவிலோ இருக்கின்ற இரண்டு+இரண்டு பெரிய கட்சிகளுக்கும் தண்ணி காட்டி நான்கில் இரண்டு கட்சிகளுடன் திரைமறைவு பேரம் பேசி சீரழிவு அரசியலுக்குத் தடம்போடுகின்ற சீரழிவு திடீர் அரசியல்வாதிகளுக்கும் மேலே நாம் குறிப்பிட்டுள்ள தியாகச்செம்மல்களுக்கும் ஒப்பீட்டளவில் எள்முனையளவு கூட எதுவும் இல்லை. சர்வதேச + உள்நாட்டு பெரும் கார்பொரேட்டுக்களோடு கூட்டணி அமைத்துக்கொண்டும் பெயரளவில் மக்கள் பார்வையில் படும்படியாக தமக்குள் போலிச்சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக்கொண்டும் உள்ள இத்தேசத்தின் வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளும், கட்சியல்லாத இயக்கங்களும், சாமானிய மக்களின் கடும் உழைப்பால் மட்டுமே உயர்ந்துள்ள இந்திய தேசத்தை சகலவிதங்களிலும் இயன்றவரையில் எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்றன. மக்கள்விரோத வலதுசாரிகளுக்கும் மக்களுக்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கும்  இடையே ஆன வர்க்கப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.  இப்போராட்டத்தில் இதுபோன்ற வலதுசாரி சீரழிவுசக்திகளுக்குத் துணைநிற்கவும் அச்சக்திகளிடம் விலைபோகவும் திடீர் புளியோதரை, திடீர் லெமன்ரைஸ் போல திடீர் அரசியல் தலைவர்கள் உருவாக்கப்படுவார்கள்; திடீர் அரசியல்கட்சிகள் உருவாக்கப்படும். அதற்கான முகங்களாக கெடுவாய்ப்பாக இத்தேசத்தில் சினிமா நடிகர்களை வலதுசாரி சக்திகள் பயன்படுத்திக்கொண்டே வந்துள்ளன.

இத்தேசமும் உலகமும் முன்னர் சொன்ன தியாகசீலர்களின் அரசியல் தத்துவத்தின் மீது பலமாக மட்டுமே நிற்க முடியும். அவர்களது அரசியல் ஞானஒளியில்தான் நம் இளைஞர்களின் எதிர்காலப்பாதை தெளிவாகப் புலப்படுகின்றது. வலதுசாரி சீரழிவு சக்திகளின் கைப்பாவைகளான திடீர் ‘அரசியல்வாதிகளையும் திடீர் ‘அரசியல்கட்சிகளையும் இத்தேசத்தின் இளைஞர்கள் புறக்கணிப்பார்கள்.
***********

(’சமரசம்’ (16-31 ஆகஸ்ட் 2017) இதழில் வெளியானது)

கருத்துகள் இல்லை: