திங்கள், ஜூன் 05, 2017

போர்க்கப்பல் பொடெம்கின் (Battleship Potemkin)

1
1905ஆம் ஆண்டு. ஜார் இரண்டாம் நிகோலஸ்ஸின் ரஷ்யா. பீட்டர்ஸ்பர்க்கின் புதீலவ் தொழிற்சாலையின் மூன்று தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படுகின்றார்கள்; தொடர்ந்து தொழிலாளர்கள் போராடுகின்றார்கள். ஓரிரண்டு நாட்களில் போராட்டம் உச்சகட்டத்தை அடைகின்றது. 360 ஆலைகளிலும் வேலைநிறுத்தம் நடக்கின்றது, எந்திரங்களின் ஓட்டம் நிற்கின்றது.

முதலாளிகளும் மேஸ்திரிகளும் மோசமானவர்கள்; தங்களைக்காக்கும் ஜார் மன்னரிடம் இந்த மோசமானவர்களைப்பற்றி முறையிட்டல் நீதி கிடைக்கும் என்ற முடிவுடன் புனிதமான ஞாயிற்றுக்கிழமையான ஜனவரி 9 அன்று தமது கைகளில் புனித தேவமாதா, பிதா, தேவாலயங்களின் உருவம் பொறித்த சரிகைப்பதாகைகளை ஏந்தியபடி ஜார் மன்னரின் கருணை வேண்டி மன்னரின் குளிர்கால அரண்மணை நோக்கி அப்பாவி மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். தமது முறையீடுகளை செவிமடுத்து நீதி வழங்குவார் என்று யாரை நம்பினரோ அந்த ஜார் தனது படைகளுக்கு உத்தரவிட்டான், நம்பிவந்த மக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பீட்டர்ஸ்பர்க்கின் சாலைகளில் உறைந்திருந்த ஜனவரிமாத வெண்பனி தொழிலாளிகளின் செங்குருதியால் மின்னியது. துரோகத்தால் வீழ்ந்துபட்ட அப்பாவிகளின் உடல்களை கொட்டும் பனி சத்தமின்றிப் புதைத்தது. அந்த ஞாயிறு கறுப்பு ஞாயிறானது.
ஜாரின் உண்மைமுகம் எதுவெனத்தெரிந்துகொண்ட ரஷ்ய மக்கள் கிளர்ச்சியில் இறங்கினார்கள். அதே நேரம் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டிருத்தது. கொரியக்கடற்பகுதியில் ரஷ்யக்கப்பற்படை அணி ஒன்று முற்றிலும் நாசமாக்கப்பட்டது.
ரஷ்யாவின் போர்க்கப்பலான பொடெம்கின் (பத்யோம்கின் என்பது ரஷ்ய உச்சரிப்பு) செவஸ்தோப்பல் துறைமுகத்தில் இருந்தது. மிகப்பெரிய பீரங்கிகளைக் கொண்ட கப்பல் அது. எழுநூற்று நாற்பது மாலுமிகள் இருந்தார்கள். கரையில் புரண்டோடும் கிளர்ச்சி கடலில் புகுந்து கப்பலுக்குள்ளும் தொற்றிக்கொள்ளுமோ என்று பயந்த கப்பலின் கமாண்டர், துறைமுகத்தை விட்டு தூரமாகச் செல்வதே நல்லது என்று முடிவு செய்து கடலுக்குள் கப்பலைச்செலுத்தினான்.

2
பொடெம்கின். வழக்கமான அதிகாலை மணியோசை கேட்டு உறக்கம் கலைந்தார்கள் மாலுமிகள். ஆனால் என்ன இது? மிக மோசமான ஒரு துர்நாற்றம் வீசுகின்றதே? கப்பலின் மேல்தளத்தில் இருந்தே வருகின்றது இந்த நாற்றம். மேலே ஏறிப்பார்த்த மாலுமிகள் அதிர்ந்து போகின்றார்கள். கொக்கிகளில் மாட்டப்பட்டிருந்த இறைச்சிகளில் நன்கு கொழுத்த புழுக்கள் நெளிகின்றன, இறைச்சியே வெளியே தெரியாத அளவுக்கு புழுக்கள் மொய்த்துக்கொண்டிருக்கும் மிக அருவருப்பான காட்சி. ’நமக்கு அடுத்த வேளை உணவாக இதைத்தான் தரப் போகின்றார்களா?’.

மதிய உணவுநேரத்திற்கான மணி அடிக்கின்றது. மாலுமிகள் உணவு அறையை அடைகின்றார்கள். பரிமாரப்படும் காரட் சூப்பில் புழுக்கள் நெளிகின்றன. கோபம் கொண்ட மாலுமிகள்’ சாப்பிடமாட்டோம்’ என்று குரல் உயர்த்துகின்றார்கள். ஜார் மன்ன்னின் போர்க்கப்பலில் கலகக்குரலா? கமாண்டருக்கு செய்தி பறக்கின்றது. மாலுமிகளை கப்பலின் மேல்த்தளத்தில் அணிவகுத்து நிற்குமாறு உத்தரவிடுகின்றான்.
பளிச்சிடும் நீலவானம் சூழ்ந்த மேல்த்தளம். ’போர்க்கப்பலில் கலகமா? இப்போதே முடிவு செய்கின்றேன். உங்களைத்தூண்டிவிட்டது யார்?’
பதில் இல்லை. ‘தார்ப்பாய் கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவு இடுகின்றான். யாரையாவது கொல்லவேண்டுமெனில் விசாரணை ஏதும் இன்றி தார்ப்பாய் போர்த்தி சுட்டு வீழ்த்திவிடுவார்கள்.

இப்போது அநியாயமாகச் சாகப்போவது யார் என்ற ஒற்றைக்கேள்வி காற்றில் தொங்குகின்றது. விநாடிகள் நகர்கின்றன. அப்போதுதான் அது நடக்கின்றது. திடீரென அணிவகுப்பைப் பிளந்துகொண்டு ஒரு மாலுமி பாய்ந்து வெளியே வருகின்றான். ‘சகோதரர்களே! பொறுத்தது போதும்! ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள்! கொடுங்கோலன் ஜார் ஒழிக! விடுதலை ஓங்குக!’ என்று கடல் அதிர முழங்குகின்றான். இக்கணத்திற்காகவே நெடுங்காலம் காத்திருந்ததுபோல் அணிவரிசை உடனடியாகக் கலைகின்றது. அடுத்த நொடிகளில் துப்பாக்கிகளைக் கைப்பற்றுகின்றார்கள் மாலுமிகள். அந்த முதல் கலகக்குரலுக்குச் சொந்தக்காரன் மாலுமி மத்யுஷென்கோ. அவன் ஒரு போல்ஸ்விக் வீரன். உஷாரான கமாண்டர் சற்றே பின்வாங்கி துப்பாக்கியை இயக்க மற்றொரு மாலுமியான வாகுலின் சுக் வீழ்கின்றான். அவனும் ஒரு போல்ஸ்விக்.

அடுத்தடுத்த விநாடிகளில் மாயாஜாலம்போல் நடக்கும் இக்காட்சிகளைக்கண்ட மாலுமிகளின் ஆவேசம் அதிகரிக்க தங்களை இதுவரை நாயினும் கேடாக நட்த்திவந்த அதிகாரிகளைச் சுட்டு வீழ்த்தி கடலில் எறிகின்றார்கள். கமாண்டருக்கும் இதே கதிதான்.
இப்போது கப்பல் முழுமையாகப் புரட்சியாளர்கள் வசம் வந்துவிட்ட்து. ஆனால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? உடனடியாக ஒரு நிர்வாகக்குழு தேர்வு செய்யப்படுகின்றது. அஃபனாஸீ மத்யுஷென்கோ இக்குழுவின் தலைவர். பொடெம்கினை ஒதெஸ்ஸா துறைமுகத்துக்குச் செலுத்துவதென முடிவுசெய்யப்படுகின்றது; 1905 ஜூன் 14 அன்று கப்பலில் ஜார்மன்னனின் கொடி இறக்கப்பட்டு செங்கொடி ஏற்றப்படுகின்றது.
நீலநிற நீள்கடலில் செங்கொடி கம்பீரமாகப் பறக்க கப்பல் ஒதெஸ்ஸா துறைமுகத்தை வந்தடைகின்றது. கொல்லப்பட்ட வாகுலினின் உடல் கரைக்கு எடுத்துவரப்படுகின்றது. ஜாரின் கொடுங்கோல் ஆட்சி மீது ஏற்கனவே வெறுப்புற்றிருந்த மக்களின் கோபாவேச நெருப்புக்கு வாகுலினின் இறுதி மரியாதைச்சடங்கு எண்ணெய் வார்க்கின்றது. பொடெம்கின்னின் வீரர்களுக்கு உணவையும் மற்ற உதவிகளையும் மக்கள் வழங்குகின்றார்கள். ஆனால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியாமல் பொடெம்கின் ஒதெஸ்ஸாவில் நின்றுகொண்டிருக்கின்றது.

3
ஜார் இரண்டாம் நிக்கோலஸ் பொடெம்கின் கிளர்ச்சியை நசுக்க உத்தரவிடுகின்றான். பொடெம்கின்னுக்கு எதிராக செவஸ்தோப்பல் கடற்படைப்பிரிவு ஒன்று ஒதெஸ்ஸா புறப்படுகின்றது.
நான்காம் நாள் காலை. செங்கொடி பறக்கும் பொடெம்கினைச் சூழ்ந்துகொண்டு ஜாரின் பதின்மூன்று கப்பல்கள் நிற்கின்றன. தனது மாலுமிகளை போருக்கு ஆயத்தமாகுமாறு தலைவன் மத்யுஷென்கோ உத்தரவிடுகின்றான். சூழ்ந்து நிற்கும் கப்பலின் மாலுமிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றான்: ‘கடற்படைப்பிரிவின் சக பீரங்கி வீரர்களே! பொடெம்கின்னின் மாலுமிகளாகிய நாங்கள் எங்களைச் சுட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்!’. இந்த வேண்டுகோளை ஏற்கும் வண்ணம் பதின்மூன்று கப்பல்களில் இருந்தும் உற்சாகமான ஆரவாரம் எழுகின்றது. ‘வெற்றிவீரன் ஜார்ஜ்’ என்னும் கப்பல் பொடெம்கின்னுடன் புரட்சியில் இணைவதாக அறிவிக்கின்றது.

கட்டுப்பாடுமிக்க கடற்படையில் இது எதிர்பாராத ஒன்று. இச்சிறுபொறி பெருந்தீயாகப்பரவிவிடும் பேரபாயம் உள்ளது. கடற்படையின் தளபதி மிரள்கின்றான். நிலைமை கைமீறிப்போகின்றது. ‘கடற்படைப்பிரிவு முற்றிலுமாக செவஸ்தோப்பலுக்குத் திரும்ப வேண்டும்’ என உத்தரவிடுகின்றான்.
பொடெம்கின், வெற்றிவீரன் ஜார்ஜ் இரண்டும் இப்போது ஒதெஸ்ஸா துறைமுகத்தில். கரையில் இருக்கும் ஜாரின் அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தவில்லை, ஒதெஸ்ஸா துறைமுகத்தையும் கைப்பற்றவில்லை. அடுத்து என்ன செய்வது? உணவும் எரிபொருளும் தீரும் நிலை. இறுதியாக ஒரு முடிவு எடுக்கப்படுகின்றது. ‘கப்பலை எங்கள் நாட்டுக்குக் கொண்டுவாருங்கள், அடைக்கலம் தருகின்றோம், ஜாரிடம் காட்டிக்கொடுக்க மாட்டோம்’ என்று ருமேனிய அரசு அளித்த உறுதிமொழியின் மீது நம்பிக்கை கொண்டு ருமேனியாவை நோக்கிப் பயணித்தார்கள்.
பதினொரு நாட்கள். ஜார் இரண்டாம் நிக்கோலஸ்ஸையும் ரஷ்யாவின் மேட்டுக்குடி நிலப்பிரபுக்களையும் கொடுங்கோல் அதிகாரிகளையும் திணறடித்த பொடெம்கின் ருமேனியாவை அடைகின்றது.

4
பொடெம்கின் வெறும் கப்பல் அல்ல. பல நூற்றாண்டுகாலமாகக் கரடுதட்டிக் கெட்டியான நிலப்பிரபுத்துவத்தின் மன்னராட்சியின் அடக்குமுறைக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிரான மக்களின் ஆவேச சின்னம், புரட்சியின் அடையாளம், நீரில் மிதந்த நெருப்புக்கோளம். அடுத்த பன்னிரெண்டு வருடங்களில் ரஷ்ய நிலப்பிரபுத்துவமும் ஜார் பேரரசும் அழியப்போவதைச் சொன்ன மணியோசையின் அடையாளம்.

1905இல் நடைபெற்றது இக்கிளர்ச்சி. 1917இல் மாபெரும் அக்டோபர் புரட்சி வெடிக்கின்றது; விளாடிமிர் இலியிச் உல்யானோவ் என்ற லெனினின் தலைமையில் சோவியத் ஒன்றியம் உதயமானது. 1925இல் சோவியத் மக்களரசு பொடெம்கின் கிளர்ச்சியை வரல்லற்றுப்பதிவாக்குவதென முடிவுசெய்து, அதனைத் திரைப்படமாக்கும் பெரும் பொறுப்பை புகழ்பெற்ற இயக்குநர் செர்ஜி ஈசன்ஸ்டைன் வசம் ஒப்புவித்தது. சோவியத் கடற்படையின் உதவியுடன் படம் உருவானது.
படத்தின் மிக முக்கியமான காட்சியாக ஒதெஸ்ஸா படிக்கட்டுத்தாக்குதல் இன்றளவும் பேசப்படுகின்றது. அப்பாவிமக்கள் மீது ஜார் படை நடத்திய இரக்கமற்ற தாக்குதல் காண்போரை உணர்ச்சிவசப்படச் செய்கின்றது. ஒவ்வொரு காட்சியும் இரண்டு விநாடிகளுக்கு மேல் இல்லை. இதுபோன்ற சில நூறுக்காட்சிகள் அடுத்தடுத்துக் காட்டப்படும்போது காண்போர் நெஞ்சம் பதைபதைக்கின்றது.
குறிப்பாக கைக்குழந்தையை அதற்கான வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டுவந்த ஒரு தாய் படிக்கட்டுக்களில் ஏறி சுடுவதை நிறுத்துமாறு படையினரை வேண்டும் காட்சியை படிக்கட்டுக்களின் உயரே இருந்து படமாக்கியதால் படம் பார்ப்போரிடம் நேரடியாக உரையாடுவதைப்போல் உள்ளது. ஆனால் நடந்தது என்ன? அந்தப்பெண்ணை சுட்டு வீழ்த்துகின்றார்கள். குழந்தையோ வண்டியோடு உயரமான படிக்கட்டுக்களில் உருண்டு உருண்டு... பார்வையாளரை உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஆழ்த்தி ஆவேசப்படச்செய்யும் மகத்தான திரைக்காட்சியாக இக்காட்சி இன்றும் நீடிக்கின்றது. எடிட்டிங் உத்தியை திறம்படப் பயன்படுத்தினால் பார்வையாளரை பட்த்துடன் ஒன்றச்செய்ய முடியும் என்பதற்கு இக்காட்சி உதாரணம். படத்தை எடிட் செய்தவரும் ஈசன்ஸ்டைனே.
உலகத்தின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக நூறு வருடங்களுக்குப் பிறகும் பாட்டில்ஷிப் பொடெம்கின் கொடிகட்டிப் பறக்கின்றது. தன்னை மிகவும் கவர்ந்த படம் என சார்லி சாப்ளின் குறிப்பிடுகின்றார்.
5
ருமேனியாவைச் சென்றடைந்த மத்யுஷென்கோ என்ன செய்தார்? தகவல் உள்ளது. அப்போது (1905) மக்கள் தலைவர் லெனின் தனது மனைவி நதேழ்தா கான்ஸ்தான்தீனவ்னாவுடன் ஜெனிவாவில் இருந்தார். கோடைக்கால இறுதியில் ஒருநாள் அவரது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கின்றது. வீட்டுக்கு வந்த விருந்தாளி மத்யுஷென்கோ. அவர் பொடெம்கின் புரட்சி குறித்து போல்ஸ்விக் தலைவர் லெனினுக்கு விரிவாகச் சொல்லவே வந்துள்ளார்.

1905க்கு பொடெம்கின் எனில் 1917 மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு அரோரா. 1917 அக்டோபர் 26 இரவு. நெவா ஆற்றில் அமைதியாக நின்று கொண்டிருந்த போர்க்கப்பல் அரோராவின் பீரங்கியில் இருந்து அமைதியைக் கலைத்தவாறும் இருளைக்கிழித்தவாறும் வீசப்பட்ட குண்டுகள், “ஜார் மன்ன்னின் குளிர்கால அரண்மணை மீது தாக்குதலைத் தொடங்குங்கள்!” என்று போரைத்தொடங்கிவிட்டதற்கான சமிக்ஞையை செஞ்சேனை வீரர்களுக்கு அறிவித்தன. நள்ளிரவு கடந்தபின் ராணுவப்புரட்சிக்கமிட்டியின் தலைவர் பத்வோய்ஸ்க், தோழர் லெனினைச் சந்தித்து அறிவிக்கின்றார்: ‘தோழர் லெனின், குளிர்கால அரண்மணை நம் வசம் வந்துவிட்டது!’.
மன்னராட்சிக்கும் நிலப்பிரபுத்துவக்கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த, உலகம் அதுவரை கண்டிராத புதுமையான முப்பதுகோடி ஜனங்களுக்கும் ஒரு பொதுவுடைமை சமுதாயம் படைத்திட்ட மாபெரும் அக்டோபர் புரட்சியைத் தொடங்கி வைத்த அரோரா போர்க்கப்பல் சோவியத் மக்களரசால் பெருமையுடன் போற்றிப்பாதுகாக்கப்பட்டது.
‘இந்தியாவில் இனிமேலும் நம்மால் காலம் தள்ள முடியாது’ என அன்றைய பிரிட்டிஷ் பிரதமராக இருந்த அட்லியை ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கச்செய்த மகத்தான 1942 பம்பாய் கப்பற்படைப்புரட்சியை தொடங்கிவைத்த பெருமைமிகு தல்வார் போர்க்கப்பல் 1947க்குப்பிறகு எங்கே போனது? பொடெம்கின்னில் பறந்த ஜார்மன்னனின் கொடி இறக்கப்பட்டு செங்கொடி ஏற்றப்பட்டதெனில், பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கி மூவர்ணக்கொடியையும் முஸ்லிம்லீக்கின் பச்சைவண்ணக்கொடியையும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியல் பொறித்த செங்கொடியையும் ஏற்றி பட்டொளிவீசிப்பறக்கச் செய்த தல்வாரின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய மாலுமிகளின் தியாக வரலாறு எங்கே?

கருத்துகள் இல்லை: