ஞாயிறு, ஜூன் 25, 2017

பாபா சைக்கிள் பஞ்சர் கடையும் தமிழக அல்லது இந்திய அரசியல் சைக்கிள்டயரில் விழுந்த ஓட்டையும்

தமிழக அல்லது இந்திய அரசியலில் ஆகப்பெரிய பஞ்சர் அல்லது விரிசல் அல்லது கேப் அல்லது வெற்றிடம் அல்லது பள்ளம் விழுந்துவிட்டதாகவும் இதை பஞ்சர் ஒட்டி சரி பண்ணும் டெக்னிக் தெரிந்த ஒரே மெக்கானிக் பாபா சைக்கிள் பஞ்சர் கடை ஓனர் மட்டுமே என்பதாகவும் நாடாளுமன்றத்தேர்தலுக்கு சரியாக இரண்டு வருசம் இருக்கும் நிலையில் ‘நடுநிலை’ அல்லது ’உள்ளதை உள்ளபடி’ அல்லது ‘செய்தியை முந்தித்தரும்’ சொல்லும் டிவி சானல்களும் பத்திரிக்கைகளும் திட்டமிட்டபடி ஊதிப்பெருக்கத் தொடங்கிவிட்டன.
பேருந்து நடத்துனர் தொழிலைக் கைவிட்டுவிட்டு ஏறத்தாழ 42 வருசங்களுக்கு முன் அவர் நடிப்புத்தொழிலில் இறங்குகின்றார். அதாவது கார் மெக்கானிக், கட்டிடத்தொழிலாளி, எலக்ட்ரீஷியன், பேருந்து ஓட்டுநர், காய்கறி வியாபாரி, நெசவுத்தொழிலாளி, விவசாயி போன்ற பல தொழிலாளரைப்போல அவர் நடிப்புத்தொழிலில் இறங்குகின்றார். அவர் நடிப்புத்தொழிலில் இறங்கும் காலம் இந்தியாவின் ஜனநாயகம் நசுக்கப்பட்டு பல்லாயிரம் பேர் சிறைகளில் அடைக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட எமெர்ஜென்சி காலம். அதன் பின்னர் 1977இல் மத்தியில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு பதவி ஏற்கின்ற்து.
இந்தியாவில் அரசியல் வரலாறு என்பதை காங்கிரஸ் என்ற ஒரே பெருமுதலாளிகளின் கட்சியை மையமாக வைத்தே எழுதப்பட்ட காலம் 1977 உடன் முடிவுக்கு வந்தது. இடதுசாரி கம்யூனிஸ்ட்டுக்களும் (அவர்கள் ஆட்சியில் அமைச்சர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதில்லை, என்றாலும் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திரஜித் குப்தா அமைச்சராக இருந்தார் என்பது விதிவிலக்கு) அடங்கிய கூட்டணிக்கட்சிகள் அணிசேர்ந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சிகளை மத்தியில் அமைத்தன – வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான அரசுகள், தேசவிடுதலைக்குப்பின் செல்வாக்குச் சரிந்த நிலையில் கம்யூனிஸ்ட்டுக்களின் ஆதரவுடன் அமைந்த காங்கிரஸ் அரசுகள் அமைந்தன.  வலதுசாரி அதிதீவிர இந்துதுவா அமைப்பான ஆர் எஸ் எஸ்-சின் கட்சி அமைப்பான  பாரதீய ஜனதா கட்சியும் பிற கட்சிகளின் ஆதரவுடன்  ஒரு முறை ஆட்சியமைத்தது (தமிழகத்தின் இருபெரும் திராவிடக்கட்சிகளான திமுகவும் அதிமுகவும் வெவ்வேறு காலகட்டங்களில் அதிதீவிர வலதுசாரி இந்துதுவா கட்சியான பிஜேபிக்கு ஆதரவளித்தன); மற்றொரு முறை ஆட்சியமைக்க ஆசைப்பட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் கீழே இறங்கியது; 2014இல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 
1990க்குப் பிறகு இத்தேசம் நரசிம்மராவ் அரசின் கீழும் அதன் பின்னர் அமைந்த மன்மோகன்சிங் அரசின் கீழும் புதியதொரு அழிவுப்பாதையில் பயணித்தது. இத்தேசத்தில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே செல்ல, இணையாக குடியிருக்க வீடில்லாத, ஒரு வேளை உணவும் உண்ணக்கிடைக்காத மக்களின் எண்ணிக்கை பல பத்துக்கோடிகள் உயர்ந்து கொண்டே சென்றது.
2014க்கு முன்பு இருமுறை ஆட்சியமைத்தபோதும், 2014இல் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைப் பெற்று ஆட்சியமைத்த போதும் ஆர் எஸ் எஸ்-சின் அரசியல் கட்சிப்பிரிவான பிஜேபியும் இந்திய – சர்வதேச பெருமுதலாளிகளுக்கு ஆதரவான காங்கிரசின் அதே பொருளாதாரக்கொள்கைகளை ஓரெழுத்தும் மாறாமல் அப்படியே பின்பற்றிச்செல்கின்றது, சரியாகச் சொன்னால் 2014க்குப் பிறகு காங்கிரசை விடவும் மிக வேகமாகச் செல்கின்றது; அது  மட்டுமின்றி உள்நாட்டு+வெளிநாட்டுப் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான தனது அரசியல் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில்  1947க்கு பிறகு இத்தேசத்தில் பெரும்பான்மை இந்து சமய மக்களுக்கும் சிறுபான்மையினரான இஸ்லாமிய கிறித்துவ மக்களுக்கும் இடையே திட்டமிட்ட பிரிவினையை ஏற்படுத்தி மிகப்பெரும் மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டு கொத்துக்கொத்தாக இந்தியமக்கள் சாவதற்கான பெரும் காரணியாக உள்ளது.

கூடவே இந்துசமய ஒற்றுமையை பேசிக்கொண்டே இந்து சமயத்திலேயே இருக்கின்ற பட்டியல் சாதி மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் எதிரான அனைத்து சதிவேலைகளையும் செய்துகொண்டே இருக்கின்றது. பெருமுதலாளிகளின் நலன் பொருட்டு பழங்குடிமக்களின் வாழிடங்களில் இருந்து அவர்களை போலீஸ் மற்றும் ராணுவ அடக்குமுறைகள் மூலம் வெளியேற்றுகின்ற்து. தனிமனிதர்களின் – குறிப்பாக சிறுபான்மை மதத்தவர்கள் மற்றும் தலித் மக்களின் உணவுப்பழக்கங்களில், பண்பாட்டு வழக்கங்களில் தலையிடும் இந்துத்துவா அமைப்புக்களின் அஜெண்டாவை அரசு ஆணைகள் வடிவில் தடாலடியாக வெளியிட்டு பிஜேபி அரசு நிறைவேற்றிக்காட்டுகின்றது. இதன் விளைவாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் இந்து சமயத்திலேயே இருக்கின்ற தலித் மக்களும், இஸ்லாமிய மக்களும் படுகொலை செய்யப்படுவது தொடர் நிகழ்வாக நடந்துகொண்டே இருக்கின்றது.

தமிழகஅரசுக்காக மாடுகளை வாங்கச்சென்ற அதிகாரிகள் அதாவது அரசு ஊழியர்களும் வாகன ஓட்டுநர்களும் பிஜேபி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துமதவெறிக்கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டதைப் பார்க்க முடிந்தது. மாட்டுக்கறி தொடர்பான மத்திய ஆர் எஸ் எஸ் அரசின் சர்வாதிகார உத்தரவை நிராகரிப்போம் என்று உடனடியாக தனது எதிர்ப்பை வெளியிட்ட கேரள் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வரின் அணுகுமுறை எங்கே, ஆணையை இன்னும் படித்துப்பார்க்கவில்லை என்று சொல்கின்ற, தனது அரசின் அதிகாரிகள் தாக்கப்பட்டதைக்கூட குறைந்த பட்சம் மென்மையான சொற்களால் கூடக் கண்டிக்க முன்வராத தமிழக அரசின் முதல்வர் எங்கே?
இத்தகு மோசமான சூழலில் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்ற மாநிலக்கட்சிகளில் – இவற்றில் அடையாள அரசியல் நடத்தும் கட்சிகளும் உண்டு – சில அல்லது பல பிஜேபியுடன் கைகோர்த்துள்ளதையும் பிற கட்சிகள் பிஜேபியின் எதிரணியில் காங்கிரசுடனோ இட்துசாரிகளுடனோ நின்று போராடுவதையும் பார்க்கின்றோம்.
தமிழகத்தில் டிசம்பர் மாதம் ஜெயலலிதா  மரணம் அடைந்த பின்னர், தத்துவ அரசியல் கோட்பாடு ஏதுமில்லாத ஆனால் தனிநபர் செல்வாக்கினால் மட்டுமே ஊதிப்பெரிதாகிய ஒரு முதலாளித்துவ இயக்கம் அந்நபர் மரணம் அடையும்போது சந்திக்க நேர்கின்ற சரிவை அதிமுக என்னும் அரசியல் கட்சி சந்தித்த்து, அந்த இயக்கம் உடைந்தது அல்லது உடைக்கப்பட்டது. கெடுவாய்ப்பாக திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல்-பொருளாதாரக் கொள்கைகோட்பாடற்ற, ஊழலும் லஞ்சலாவண்யமும் மலிந்து கிடக்கின்ற, இதே காரணங்களுக்காக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பொதுச்செயலாளரைக் கொண்டுள்ள அந்த இயக்கத்தை மத்தியில் ஆள்கின்ற வலதுசாரி இந்துத்துவா பிஜேபி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்ட்தைக் காண முடிகின்றது; உடைந்துபோனாலும் உடைந்துபோன குழுக்களும் பிஜேபியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன என்பதை தமிழகமக்கள் அறிவார்கள்.
தமிழகத்தின் கட்சி அரசியல் சூழல் இப்படித் தெளிவாகத்தெரிகின்ற அள்வில்தான் சீர்குலைந்துபோய் கிடக்கின்றதே அன்றி நடப்பது எதுவும் மக்களுக்குப் புரியாமலோ புலப்படாமலோ இல்லை என்பது உண்மை. இரண்டாவது பெரிய கட்சியான திமுக மக்கள் மத்தியில் இப்போதும் செல்வாக்கை இழந்துவிடவில்லை என்பது உண்மை; இந்திய அளவிலும் தமிழகத்திலும் அப்பழுக்கற்ற தமது அரசியல் நடவடிக்கைகளை இடதுசாரி கம்யூனிஸ்ட்டுக்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. இவை யாவும் எத்தனை உண்மையோ அதே அளவுக்கு வலதுசாரி இந்துத்துவா சக்தியான பிஜேபி தமிழக மக்கள் மத்தியில் அத்தனை எளிதாக காலூன்றிவிட முடியாது என்பதும் உண்மை. மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத நிலையில் அதிமுக அல்லது திமுகவுடன் பிஜேபி கூட்டணி அமைத்தால் ஓரிரண்டு எம் எல் ஏ அல்லது எம்.பி. சீட்டுக்களை வேண்டுமானால் வெல்லமுடியும். ஆனால் பெருமுதலாளிகளால் நடத்தப்படுகின்ற டிவி சானல்களும் பத்திரிக்கைகளும் தமிழக அரசியலில் பெரிய பஞ்சர் விழுந்து விட்டதாகவும் அதை ஒட்டி சரிபார்க்கும் டெக்னிக் தெரிந்த ஒரே பஞ்சர் மெக்கானிக் நடிப்புத்தொழிலில் கடந்து 42 வருடங்களாக ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த் என்பதாகவும் கடந்த சில மாதங்களாக திட்டமிட்ட பெரும்பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
மத்திய மாநில ஆட்சியாளர்களின் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளினால் கடந்த 42 வருடங்களில் இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் பாதிக்கப்பட்டு ஏதோ ஒரு ஜனநாயக இயக்கத்தின் அல்லது அரசியல் கட்சியின் பின்னால் அணிதிரண்டு வீதிகளில் இறங்கிப்போராடுகின்ற, போலீசின் அடக்குமுறைகள் அடிதடிகள் அனைத்தையும் நேர்கொண்டு இப்போதும் தமது போராட்டத்தைத் தொடர்கின்ற சாமானிய இந்தியத்தொழிலாளிக்கும் விவசாயிக்கும் தமிழகத்தொழிலாளிக்கும் விவசாயிக்கும் இருக்கின்ற ஆட்சியாளர்களுக்கு எதிரான குறைந்தபட்ச கோபாவேசமும் குறைந்த பட்ச அரசியலறிவும் கூட இல்லாத, எந்த வித அரசியல் தத்துவச்சார்பையும் இதுகாறும் வெளிக்காட்டாத ஆனால் தேசத்தின் மக்கள் பிரச்னைகளில் சிக்கி அல்லலுறுகின்ற மிக மோசமான நேரங்களிலும் (உதாரணமாக நவம்பர் 8 பணமதிப்புக்குறைப்பு, மதக்கலவரங்கள், மாட்டுக்கறி தொடர்பான கொலைபாதகங்கள்) தனது கனத்த மவுனத்தின் வாயிலாக வலதுசாரி ஆட்சியாளர்களுக்கு ஆதரவான தனது அணுகுமுறையை தவறாது வெளிப்படுத்தி வந்திருக்கின்ற, சாமானிய மக்கள் கண்ணுற்றும் அனுபவித்தும் வருகின்ற துன்பதுயரங்கள் குறித்து ஒற்றை முணுமுணுப்பையும் கூட கடந்த 42 வருடங்களில் வெளிக்காட்டாமல் திட்டமிட்டு தொடர்ந்து தனது சுயநல அடிப்படையிலான ஆனால் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான மவுனத்தை மட்டுமே கடைப்பிடித்து வருகின்ற, தனது திரைப்படங்கள் ஓட வேண்டும் என்ற ஒற்றைநோக்கோடு மட்டுமே அவ்வப்போது காரை விட்டு வெளியே இறங்கி கல்யாண மண்டபங்களில் கூட்டம்கூட்டுகின்ற ரஜினிகாந்த் என்ற நடிகரை வலதுசாரி இந்துத்துவா சக்திகள் தமது திட்டமிட்ட நலன் கருதி இன்றைய தமிழகச் சூழலில் முன்னிறுத்தி திசைதிருப்பல் வேலையில் இறங்கியுள்ளன என்பதும் இவ்வலதுசாரி சக்திகளுக்கு தமிழகத்தின் பெருமுதலாளிகள் தமது நலன் கருதி தமது  டிவி சானல்கள், பத்திரிக்கைகள் உள்ளிட்ட ஊடகங்களை பிரச்சாரக்கருவிகளாக களத்தில்  இறக்கிவிட்டுள்ளார்கள் என்பதும் உண்மை.
வலதுசாரி இந்துத்துவா சக்திகளின் திட்டமிட்ட இப்பிரச்சாரத்தை தமிழகத்தின் ஜனநாயக சக்திகளும் இட்துசாரி சக்திகளும் ஒன்றிணைந்து அம்பலப்படுத்த வேண்டும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சி ’எதிர்காலத்தில் இந்த நடிகர் தமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவக்கூடும்’ என்ற நப்பாசையில் வேடிக்கை பார்த்தாலோ மவுனம் காத்தாலோ இதே நடிகரைப்பயன்படுத்தி இந்துத்துவா சக்திகள் இரண்டாவது பெரிய கட்சியையும் சின்னாபின்னப்படுத்துவார்கள் என்பது உறுதி. உலகவரலாறு நெடுகிலும் அடக்குமுறைகளையும் உயிர்ப்பலிகளையும் சந்தித்து வந்துள்ள இடதுசாரிசக்திகள் இச்சவாலையும் எவ்விதத்தயக்கமும் இன்றிச் சந்திப்பார்கள்.

சனி, ஜூன் 10, 2017

திடீர் புளியோதரை பவுடர் அல்லது திடீர் ‘அரசியல்வாதி’களும் திடீர் ‘அரசியல்’ கட்சிகளும்


ஒரு நாட்டின் இயற்கை வளங்களும் அந்நாட்டின் உழைக்கும் மக்களின் உழைப்பும் அவற்றின் பலனாக உயர்த்தப்பட்ட அந்நாட்டின் பவுதீக சொத்துக்களும் அரசியல் அதிகாரமும் உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் இருக்க வேண்டுமா அல்லது அம்மக்களின் உழைப்பைச் சுரண்டுகின்ற, சுரண்டுவதன் மூலம் சொத்துக்களையும் அரசியல் அதிகாரத்தையும் அடக்குமுறை மூலம் ஒருசேர தமது கைகளில் கைப்பற்றிக்கொள்கின்ற  முதலாளிவர்க்கத்தின் கைகளில் இருக்க வேண்டுமா என்பதுதான் அரசியல்-பொருளாதார தத்துவத்தின் சுருக்கம் எனலாம். இவ்விரண்டும் எதிரெதிர் முனைகளில் இருக்கின்ற இருவேறு அரசியல் தத்துவங்கள்.

இத்தேசம் தேசவிடுதலைக்குப்பின் பல பத்தாண்டுகள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் கீழும் ஒரு சில ஆண்டுகள் காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசுகளின் கீழும் இருந்தன. வலதுசாரி அதிதீவிர இந்துத்துவா அரசியல்வாதிகளின் கைப்பிடியில் ஒரு சில ஆண்டுகள் இருந்தது, இப்போதும் இருக்கின்றது. எதிரெதிர் முனைகளில் இருக்கின்ற இருவேறு அரசியல் தத்துவங்களில் எது ஒன்றை 1947க்குப் பின் வந்த வெவ்வேறு அரசுகள்/கட்சிகள் தம் கொள்கையாக வரித்துக்கொண்டு இத்தேசத்தை ஆண்டன, ஆண்டுகொண்டு இருக்கின்றன என்பதை விளக்கிச் சொல்ல அவசியம் இல்லை. 70 வருடங்களுக்குப் பின்பும் பல பத்துக்கோடி மக்கள் ஒருவேளை உணவோடு உறங்கச்செல்கின்றார்கள் என்பதும், தெருக்களிலும் சாக்கடை ஓரங்களிலும் பல கோடி மக்கள்
வசிக்கின்றார்கள் என்பதும் ஆண்ட அல்லது ஆள்கின்ற அரசுகள்/கட்சிகளின் தத்துவச்சார்பை தெளிவாகச் சொல்லும்.

தத்துவ அரசியல் என்பதும் கட்சி அரசியல் என்பதும் வெவ்வேறானவை. அதாவது மேலே சொல்லப்பட்ட இரண்டு அரசியல் தத்துவங்களில் முதலாவது தத்துவத்தை தனது அல்லது தமது கொள்கையாக வரித்துக்கொண்ட கட்சிகள் இடதுசாரி அரசியல் கட்சிகள் எனப்பொதுவாகச் சொல்லப்படுகின்றன. இரண்டாவது அரசியல் தத்துவத்தை தமது கொள்கையாக வரித்துக்கொண்ட கட்சிகள் வலதுசாரி அரசியல் அல்லது முதலாளித்துவ கட்சிகள் எனப்பொதுவாகச் சொல்லப்படுகின்றன. இப்போது நாம் பார்க்கின்ற எந்த ஒரு அரசியல் கட்சியும் இல்லாத காலத்திலும் இந்த இரண்டு எதிரெதிர் அரசியல் தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது, அதாவது ‘கட்சிகள்என்ற இயக்கங்கள் இல்லாதிருந்த காலத்திலும். இப்போது இருக்கின்ற கட்சிகள் எல்லாமும் இல்லாமற்போனாலும் அல்லது பல காரணங்களால் காணாமற்போனாலும் இந்த இரண்டு எதிரெதிர் அரசியல் தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இடையறாத இப்போராட்டம், தேர்தல் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் மக்கள் பிரதிநிதிகளால் ஆட்சி ஆளப்படும் முறை உள்ள நாடுகளிலும், தேர்தல் முறையே இல்லாமல் ஏதாவது ஒரு வடிவத்தில் ஆட்சி செலுத்தப்படும் நாடுகளிலும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றது. இந்தியா போன்ற நாடுகளில் ஆளும் வலதுசாரி அரசுகள் (கட்சி வேறுபாடின்றி) + பெருமுதலாளிகள் கூட்டணியானது சாதாரணமாக தொடர்ந்து மென்மையான வடிவங்களிலும் சில நேரங்களில்  வெளிப்படையாகவும் வன்முறையைப் பிரயோகித்தும் (தமக்கு வாக்களித்த விவசாயிகள், தொழிலாளர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நட்த்தி கொலை செய்வது,  நவம்பர் 8 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தது, நான் உண்ணாத உணவை நீயும் உண்ணாதே போன்றவை சிறந்த உதாரணங்கள்) உழைக்கும் மக்களின் மீதான தாக்குதலை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றன. உழைக்கும் மக்களைத் தமது பக்கம் திரட்டிக்கொள்ளவே பெரும் முயற்சிகளைச் செய்து கொள்ள வேண்டிய பலஹீனமான நிலையில் உள்ள இந்திய இடதுசாரிக்கட்சிகள் தொடர்ந்து தமது மாற்று அரசியலை மக்கள் மத்தியில் விதைப்பதில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவாக வெற்றிபெற்றுவிடவில்லை என்பது உண்மை.  காரணங்கள் பல. இடதுசாரி அரசியல் மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற்று விடாமல் இருக்கவும் விதையூன்றிவிடாமல் இருக்கவும் ஆன அத்தனை திசைதிருப்பல் வேலைகளிலும் முதலாளித்துவக்கட்சிகள் + பெருமுதலாளிகளின் பிரச்சாரக்கருவிகளான செய்தித்தாட்கள் (நாளேடு, வார ஏடு, மாத ஏடு, வருச ஏடு போன்றவை மட்டுமின்றி சுத்தமானஅல்லது ‘நடுநிலையான அரசியல், துப்பறியும் ஏடு, பக்தி, இலக்கியம், தீவிர இலக்கியம், கம்ப்யூட்டர், வேளாண்மை, மருத்துவம், பசுமை, ஜோதிடம், விளையாட்டு, சிறார் இதழ்கள், பெண்களுக்கான இதழ்கள்.. என பல்வேறு செக்‌ஷன்களுக்கான ஏடுகளும் இதில் அடக்கம்),  டிவி, வானொலி போன்றவை மட்டுமின்றி, இணையங்களிலும் இப்பிரச்சாரம் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது.

இதுகாறும் தமக்கு அறிமுகமான அரசியல்கட்சிகளின் ஆட்சியதிகாரம் தமது வாழ்க்கையை எந்த வகையிலும் முன்னேற்றிவிடவில்லை  என்று மக்கள் சலிப்புறும்போதெல்லாம் மக்களின் நாடித்துடிப்பைத் தொடர்ந்து கண்காணித்துவரும் இந்த முதலாளித்துவ சக்திகள் உடனடியாக உப்புப்பெறாத விசயங்களை காட்டுத்தீயாக திட்டமிட்ட வகையில் பரப்புவார்கள்; மயிர்பிளக்கும் வாதப் பிரதிவாதங்களில் திட்டமிட்டு இறங்கி நாடகம் ஆடுவார்கள்; ஒருவருக்கு ஒருவர் சேறுவாரி இறைக்கும் திட்டமிட்ட அநாகரீக பெருங்கூச்சலைப் பரப்புவார்கள்; மிகப்பெரும் சாதி அல்லது மத அல்லது இனக்கலவரங்களைத் தூண்டிவிடுவார்கள். சமூகத்தில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் பரப்புவார்கள். போலி தேசபக்தி, தேசியவாதம், பெரும்பான்மை – சிறுபான்மை மோதல்களைத் தூண்டிவிடுவார்கள் (இது சாதி, மதம், இனம், மொழி என எந்த அடிப்படையிலும் இருக்கலாம்). அண்டை நாடுகள் மேல் போர் தொடுத்து தேசம் அபாயக்கட்டத்தில் இருப்பதாக மக்களின் கவனத்தை ஒரே குவிமையத்தில் குவிப்பார்கள்.  இந்தியா போன்ற நாடுகளில் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களையும் திசைதிருப்பல் கருவியாகப் பயன்படுத்துகின்றார்கள். ‘அரசியலே சாக்கடையப்பா! ஒரே நாத்தம், சுத்த ஃப்ராடு!என மக்களை சலிப்படைய வைப்பதன் மூலம் தமது வலதுசாரிஅரசியலைத் தக்கவைப்பதிலும் மக்களின் கவனம் இடதுசாரிகளின் பக்கம் திரும்பிவிடாமலும் இருப்பதை உறுதி செய்வார்கள்.   இது ஆட்சியதிகாரத்தில் நீடிப்பதற்கான கட்சி அரசியல் தந்திரமே அன்றி தத்துவ அரசியல் போர் அல்ல என்பதைப் புரிந்துகொள்வதில் மக்களுக்கு எப்போதுமே சிக்கல் இருந்து வருகின்றது. மக்கள் சலிப்புற்றுள்ள இதுபோன்ற சூழலில் யாரோ ஒருவர் – ஒரு தேவதூதன் - ‘அரசியலுக்குவருவார், அப்போது இவரால் எல்லாம் சரியாகிவிடும்என்பது போன்ற பிரச்சாரத்தை அனைத்து வடிவிலான ஊடகங்களும் சொல்லிவைத்தாற்போல் செய்கின்றன.

உண்மை என்னவெனில் யாரும் அரசியலுக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. இரண்டுபட்ட வர்க்க சமுதாயத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் விதிவிலக்கு ஏதும் இன்றி அரசியலில் எப்போதும், இந்த நொடியும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டேதான் இருக்கின்றன, ஆனால் இது ‘கட்சிஅரசியல் அல்ல என்பதைப் புரிந்துகொள்வதில்தான் சிக்கல் உள்ளது. ஒரு அரசியல் தத்துவத்தை உலகுக்கு அளிப்பதன் மூலமோ ஏற்கனவே சமூகத்தின் விவாதத்திற்குரிய ஒரு அரசியல் தத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள ஒரு இயக்கத்தில் (கட்சியும் ஒரு இயக்கமே, கட்சி மட்டுமே இயக்கம் அல்ல) தன்னை இணைத்துக் கொள்வதன் மூலமோ எந்த ஒரு தனிமனிதனின் செயல்பாடுகள் பொதுவெளியில் தெரிகின்றன. (தேர்தல் அரசியலில் வாக்களிப்பது ஒரு அரசியல்வேலை எனில் ஏதோ ஒரு காரணத்தால்  வாக்களிக்க மறுப்பதும் தேர்தல் அரசியலே மோசடிதான் என்று வாக்களிக்காமல் இருப்பதும் கூட ஒரு அரசியல் செயல்பாடுதான்.) இந்த இரண்டிலும் சேராத ‘அரசியலுக்கு வருவார்அல்லது  வருவேன்போன்ற பூச்சாண்டி வேலைகள் எல்லாம் ஏற்கனவே வேரூன்றி உள்ள வலதுசாரி அரசியலைப் பாதுகாக்கின்ற, இடதுசாரி அரசியல்பால் மக்கள் கவனம் திரும்பிவிடாமல் இருப்பதற்கான சாதுரியமான திசைதிருப்பலே அன்றி வேறு எதுவும் இல்லை.

தென் ஆப்பிரிக்காவில் நேட்டாலின் தலைநகர் மார்ட்ஸ்பர்க் நகரில் கறுப்புமனிதனாக இருந்த ஒரே காரணத்திற்காக வெள்ளைநிறப்போலீஸ் அதிகாரியால் பட்ட அவமானமும், பார்டே கோப் என்ற இடத்தில் கோச் வண்டிப்பயணத்தின்போது ஒரு வெள்ளைநிற அதிகாரியின் கைகளால் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி வாங்கிய அறைகளும், நேரில் கண்ட நிறவெறிக்கொடுமைகளும்தான் வக்கீல் தொழில்செய்வதற்காக மட்டுமே அங்கே சென்றிருந்த பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அதே நாட்டில் ஆசிய மக்களுக்கான அரசியல் இயக்கங்களை நிறுவுவதற்கான தீப்பொறிகளாக அமைந்தன; 1914இல் இந்தியா திரும்பியபின் தேசிய இயக்கத்தில் தன்னைப் பிணைத்துக்கொள்வதற்கான பலமான பலத்த அஸ்திவாரத்தை தென்னாப்பிரிக்க வாழ்க்கையில்தான் அவர் கட்டிக்கொண்டார். அவரது தென்னாப்பிரிக்க வாழ்விலும் இந்திய வாழ்விலும் சாய்மான அரசியல் இல்லாமல் இல்லை.

லாகூர் நகரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ரவுலட் சட்டங்களை எதிர்த்து மக்கள் நடத்திய மிகப்பெரிய மூன்று மைல் நீள ஊர்வலமும் அதனைத்தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நீடித்த மகத்தான ஹர்த்தால் போராட்டமும் பன்னிரெண்டு வயதேயான மாணவன் பகத்சிங்சின் மனதில் போராட்ட விதையை விதைத்தது. அடுத்த இரண்டு வருடங்களில் ஒத்துழையாமை இயக்கத்தில் இணையச் செய்தது. பின்னாட்களில் அவராலும் அவரது சகாக்களாலும் கட்டியமைக்கப்பட்ட ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுப்படை (Hindustan Socialist Republic Army) என்பது வெறும் சமூகசேவை மன்றம் அல்ல, அது அரசியல் இயக்கம்.

1919ஆம் ஆண்டில் ஜல்லியன்வாலாபாக்கில் வெள்ளைப்போலீஸ் அதிகாரியான டயரால் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் செத்துக்கொண்டே இருந்த பஞ்சாப் மக்களுக்கு வாயில் நீரை ஊற்றத்தூண்டிய உணர்ச்சிகரமான கணங்கள்தான் உதாம்சிங் என்ற அந்தச் சிறுவனை பின்னொரு காலத்தில் பஞ்சாப் கவர்னராக இருந்த மைக்கேல் ஓடயரை லண்டன் காக்ஸ்டன் அரங்கில் கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொல்லத்தூண்டியது. இந்த ஒரே லட்சியத்தின் பொருட்டு - ஒரே ஒரு துப்பாக்கி வாங்கும் பொருட்டு - கப்பல் ஏறி லண்டனின் ஓட்டல்களில் தட்டுக்களைக்கழுவியும்  பிற இடங்களில்  கூலிவேலைகள் செய்தும் மாட்டுத்தொழுவங்களிலும் பன்றித்தொழுவங்களிலும் தங்கி உயிரைப்பேணி அந்தக் கணத்திற்காக காத்திருக்கச் செய்தது.
  
மஹார் சாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக ஊர்க்குளத்தில் தண்ணீர் அருந்தும்போது உயர்சாதிக்காரன் தொடுத்த கொடுந்தாக்குதல்தான் பீமாராவின் உள்ளத்தில் எதிர்ப்புணர்வு விதையை விதைத்தது. எதிர்காலத்தில் கோடானுகோடி தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஆன அரசியல் தலைவரானார், அவருக்கான தத்துவஅரசியல் இருந்தது.  விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல் சட்டத்தை வடிவமைக்கும் பெரும் பொறுப்பு அவரை வந்து அடைந்தது நாம் வாசிப்பதுபோல் அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை. ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் இருந்து அவராகவே விலகிவிடுவதற்கான மறைமுகமான எண்ணற்ற நிர்ப்பந்தங்களையும் நெருக்கடிகளையும் நாடறிந்த ‘நல்ல அரசியல் தலைவர்கள்தான் அவருக்குக் கொடுத்துக்கொண்டே இருந்தனர், அவர்களுக்கான தத்துவஅரசியல் இருந்தது.    

வட இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் பிறந்த அமீர் ஹைதர்கானை, தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான பொருத்தமான ஆளுமையாக கட்சி தேர்வு செய்து அனுப்பியபோது எவ்விதத்தயக்கமும் இன்றி அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததெனில் சமூகத்தின்பால் அவர் கொண்ட பற்று மட்டுமே காரணம் அல்ல,  அவர் வரித்துக்கொண்ட அரசியல் தத்துவம் அவரைப் பக்குவப்படுத்தியிருந்தது.

பல நூறுஏக்கர் வயல்வெளிகளுக்குச் சொந்தமான உயர்சாதி நம்பூதிரி நிலப்பிரபுக்கு மகனாகப் பிறந்தவர் ஈ.எம்.சங்கரன் நம்பூதிரிப்பாடு. அதே நம்பூதிரி சமூகம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த கொடுமைகளை தனக்குத்தானே விருப்புவெறுப்பற்ற விமர்சனத்துக்கு உட்படுத்திக்கொண்டதாலும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களின்  கட்சிகளின் அரசியல் இயக்கப்போக்குகளை பிரிட்டிஷ் இந்தியாவின் விடுதலைப்போராட்ட இயக்கத்தின் பின்னணியில் வர்க்க அரசியல் தத்துவ வெளிச்சத்தில் ஒப்பீடு  செய்யத்தக்க அளவுக்கு தனது அறிவுத்திறனை மேம்படுத்திக்கொண்டதாலும் ஒரு கட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசியல்தான் இத்தேசமக்களை அனைத்துவிதமான சமூக ஒடுக்குமுறைகளில் இருந்தும் விடுதலை பெறச்செய்யும் என்ற தீர்க்கமான முடிவுக்கு அவரை இட்டுச்சென்றது, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக அவரை விளங்கச்செய்தது. பின்னர் விடுதலை பெற்ற இந்தியாவின் ஒரு மாநிலத்தில் முதல் கம்யூனிஸ்ட்  அமைச்சரவைக்குத் தலைமை ஏற்கவும் அவருக்கு வாய்த்ததெனில் அது தனிநபர் திறமை மட்டுமே சார்ந்த ஒன்றல்ல, அவர் வரித்துக்கொண்ட அரசியல் தத்துவச்சார்பும் அதேதத்துவத்தை தனது  கொள்கையாக ஏற்றுக்கொண்ட இடதுசாரி கம்யூனிஸ்ட்  இயக்கமும் தலையாய காரணங்கள்.

தஞ்சை மாவட்ட்த்தில் நாகரிக மனிதன் கற்பனையும் செய்ய முடியாத அளவுக்கு தலைவிரித்தாடிய பண்ணை அடிமை முறையையும் சாணிப்பால் கொடுமைகளையும் ஒழித்துக்கட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் முடிவுசெய்தபோது கர்நாடகாவில் பிராமண வகுப்பில் பிறந்த பி.சீனிவாசராவ் கட்சியின் கட்டளையை ஏற்று   தஞ்சைக்கு வந்து தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் வீடுகளில் தங்கி அவர்களுடன் உண்டு உறங்கி வாழ்ந்து பணி செய்ய முடிந்த்தெனில் அதற்கு உரமாக இருந்த்து அவர் வரித்துக்கொண்ட அரசியல் த்த்துவமும் அதன்பால் அவர் கொண்ட உறுதியும் அன்றி வேறென்ன?

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இலையாவூர் கிராமத்தில் பரம்பரைச் சொத்தும் கல்வி வசதியும் ஏராளமாக இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்த சிண்டன் என்ற செல்லப்பிள்ளை பிற்பாடு வளர்ந்து வாலிபனாக நின்றபோது தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிப்பணியேற்று, தன் வாழ்நாளில் பதின்மூன்று வருடங்கள் சிறையில் கழித்தான் என்றால் அதற்கு உரமாக இருந்தது அவன் ஏற்றுக்கொண்ட அரசியல் தத்துவமே. வி.பி.சிந்தன் என்று சொன்னால் அனைவரும் அறிவர்.

1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது: ‘நான் ஒரு க்யூபன்; நான் ஒரு அர்ஜெண்டைன்; நான் யாருக்கும் குறைவில்லாத லத்தீன் அமெரிக்க தேசபக்தன்’. அர்ஜெண்டினாவில் பிறந்தவன், பிற்காலத்தில் புரட்சிகர க்யூபாவின் தேசிய வங்கியின் இயக்குநர்; பின்னர் தொழிற்துறை அமைச்சர். இந்தப்பதவிகளை எல்லாம் பதவிகளாகக் கருதாமல் இயக்கம் தனக்கு அளித்த பொறுப்புக்களில் ஒரு பகுதியென மட்டுமே எடுத்துக்கொண்டு தனது உற்ற தோழன் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் வயதுமுதிர்ந்த பெற்றோருக்கும் அன்புமகள் ஹிடில்டாவுக்கும் சில கடிதங்களை மட்டும் எழுதிவைத்து விட்டு 1965 ஏப்ரலில் க்யூபாவை விட்டு வெளியேறி பொலிவியாவிலும் காங்கோவிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பொருட்டு பிள்ளைப்பிராயம் தொட்டே தன்னை வாட்டிவதைத்துக்கொண்டிருந்த கொடும் ஆஸ்த்துமாவுடன் தனது போராட்டத்தைத் தொடரவும் ஒரு சர்வதேசக்குடிமகனாகவும் தன்னை உருப்படுத்திக்கொள்ளவும் முறையாக மருத்துவர் பட்டம் பெற்ற சே குவேராவால் முடிந்திருக்கின்றதெனில் அது தனது சகமக்கள் மீது அவன் செலுத்திய அன்பால் மட்டும் விளைந்தது அல்ல; எத்தகைய அரசியல் தத்துவ சார்பும் அற்ற  ஒருவரும் கூட தனது சக மனிதர்கள் மீது  அன்பையும் பாசத்தையும் பொழிந்துவிட முடியும். அத்தகைய அன்பும் பாசமும் அதற்கான தனிமனித எல்லையுடன் நின்றுவிடும்; மாறாக சர்வதேச மக்கள் சமூகத்தின் மீதான அன்பும் உழைக்கும் மக்கள் மீதான பாசமும் அவர்களின் விடுதலைக்கான போராட்டமும் இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசியல் கொள்கை சார்ந்தது, அதுவே சே குவேரா போன்ற மாவீர்ர்களும் போராளிகளும் வரித்துக்கொண்டது.  

இப்படி வாழ்ந்து மறைந்த பல தியாகச்செம்மல்களும் இன்னும் நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கும்  சுயநலமற்ற தியாகவாழ்க்கைக்கு உதாரணமாகத் திகழும் தத்துவ ஞானவிளக்குகளும் திடீரென்று ஒரு நாள் மண்ணைப்பிளந்து தோன்றியவர்கள் அல்லர்; கூட்டத்தைக் காட்டி காசு பண்ணும் வித்தைக்காரர்களும் அல்லர்; மாறாக இவர்களைத் தனியாகவும் அவர்களது அரசியல் தத்துவக்கொள்கையைத் தனியாகவும் இனம்பிரித்து அறியமுடியாத அளவில் அவர்களே தத்துவங்களாகவும் தத்துவங்களே அவர்களாகவும் விளக்கும் ஒளியும் போல வாழ்ந்து காட்டுகின்றார்கள்.

‘புயலில் 10 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை இழந்து நொடித்துப்போன எங்களின் கம்பெனி க்ளியரன்ஸ் சேல்ஸ் விற்பனையை
பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்பது போல ஏதோ ஒரு திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நேரம் முடிவு செய்துகொண்டு ஒருநாள் காலையில் வாழைமரத்தையும் கொடியையும் கட்டி தேர்தல் கமிசனில் பதிவு செய்வதற்காகவும், தனக்குப்பின்னால் உள்ள கூட்டத்தைக் காட்டி தேச அளவிலோ மாநில அளவிலோ இருக்கின்ற இரண்டு+இரண்டு பெரிய கட்சிகளுக்கும் தண்ணி காட்டி நான்கில் இரண்டு கட்சிகளுடன் திரைமறைவு பேரம் பேசி சீரழிவு அரசியலுக்குத் தடம்போடுகின்ற சீரழிவு திடீர் அரசியல்வாதிகளுக்கும் மேலே நாம் குறிப்பிட்டுள்ள தியாகச்செம்மல்களுக்கும் ஒப்பீட்டளவில் எள்முனையளவு கூட எதுவும் இல்லை. சர்வதேச + உள்நாட்டு பெரும் கார்பொரேட்டுக்களோடு கூட்டணி அமைத்துக்கொண்டும் பெயரளவில் மக்கள் பார்வையில் படும்படியாக தமக்குள் போலிச்சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக்கொண்டும் உள்ள இத்தேசத்தின் வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளும், கட்சியல்லாத இயக்கங்களும், சாமானிய மக்களின் கடும் உழைப்பால் மட்டுமே உயர்ந்துள்ள இந்திய தேசத்தை சகலவிதங்களிலும் இயன்றவரையில் எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்றன. மக்கள்விரோத வலதுசாரிகளுக்கும் மக்களுக்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கும்  இடையே ஆன வர்க்கப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.  இப்போராட்டத்தில் இதுபோன்ற வலதுசாரி சீரழிவுசக்திகளுக்குத் துணைநிற்கவும் அச்சக்திகளிடம் விலைபோகவும் திடீர் புளியோதரை, திடீர் லெமன்ரைஸ் போல திடீர் அரசியல் தலைவர்கள் உருவாக்கப்படுவார்கள்; திடீர் அரசியல்கட்சிகள் உருவாக்கப்படும். அதற்கான முகங்களாக கெடுவாய்ப்பாக இத்தேசத்தில் சினிமா நடிகர்களை வலதுசாரி சக்திகள் பயன்படுத்திக்கொண்டே வந்துள்ளன.

இத்தேசமும் உலகமும் முன்னர் சொன்ன தியாகசீலர்களின் அரசியல் தத்துவத்தின் மீது பலமாக மட்டுமே நிற்க முடியும். அவர்களது அரசியல் ஞானஒளியில்தான் நம் இளைஞர்களின் எதிர்காலப்பாதை தெளிவாகப் புலப்படுகின்றது. வலதுசாரி சீரழிவு சக்திகளின் கைப்பாவைகளான திடீர் ‘அரசியல்வாதிகளையும் திடீர் ‘அரசியல்கட்சிகளையும் இத்தேசத்தின் இளைஞர்கள் புறக்கணிப்பார்கள்.
***********

(’சமரசம்’ (16-31 ஆகஸ்ட் 2017) இதழில் வெளியானது)

திங்கள், ஜூன் 05, 2017

போர்க்கப்பல் பொடெம்கின் (Battleship Potemkin)

1
1905ஆம் ஆண்டு. ஜார் இரண்டாம் நிகோலஸ்ஸின் ரஷ்யா. பீட்டர்ஸ்பர்க்கின் புதீலவ் தொழிற்சாலையின் மூன்று தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படுகின்றார்கள்; தொடர்ந்து தொழிலாளர்கள் போராடுகின்றார்கள். ஓரிரண்டு நாட்களில் போராட்டம் உச்சகட்டத்தை அடைகின்றது. 360 ஆலைகளிலும் வேலைநிறுத்தம் நடக்கின்றது, எந்திரங்களின் ஓட்டம் நிற்கின்றது.

முதலாளிகளும் மேஸ்திரிகளும் மோசமானவர்கள்; தங்களைக்காக்கும் ஜார் மன்னரிடம் இந்த மோசமானவர்களைப்பற்றி முறையிட்டல் நீதி கிடைக்கும் என்ற முடிவுடன் புனிதமான ஞாயிற்றுக்கிழமையான ஜனவரி 9 அன்று தமது கைகளில் புனித தேவமாதா, பிதா, தேவாலயங்களின் உருவம் பொறித்த சரிகைப்பதாகைகளை ஏந்தியபடி ஜார் மன்னரின் கருணை வேண்டி மன்னரின் குளிர்கால அரண்மணை நோக்கி அப்பாவி மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். தமது முறையீடுகளை செவிமடுத்து நீதி வழங்குவார் என்று யாரை நம்பினரோ அந்த ஜார் தனது படைகளுக்கு உத்தரவிட்டான், நம்பிவந்த மக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பீட்டர்ஸ்பர்க்கின் சாலைகளில் உறைந்திருந்த ஜனவரிமாத வெண்பனி தொழிலாளிகளின் செங்குருதியால் மின்னியது. துரோகத்தால் வீழ்ந்துபட்ட அப்பாவிகளின் உடல்களை கொட்டும் பனி சத்தமின்றிப் புதைத்தது. அந்த ஞாயிறு கறுப்பு ஞாயிறானது.
ஜாரின் உண்மைமுகம் எதுவெனத்தெரிந்துகொண்ட ரஷ்ய மக்கள் கிளர்ச்சியில் இறங்கினார்கள். அதே நேரம் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டிருத்தது. கொரியக்கடற்பகுதியில் ரஷ்யக்கப்பற்படை அணி ஒன்று முற்றிலும் நாசமாக்கப்பட்டது.
ரஷ்யாவின் போர்க்கப்பலான பொடெம்கின் (பத்யோம்கின் என்பது ரஷ்ய உச்சரிப்பு) செவஸ்தோப்பல் துறைமுகத்தில் இருந்தது. மிகப்பெரிய பீரங்கிகளைக் கொண்ட கப்பல் அது. எழுநூற்று நாற்பது மாலுமிகள் இருந்தார்கள். கரையில் புரண்டோடும் கிளர்ச்சி கடலில் புகுந்து கப்பலுக்குள்ளும் தொற்றிக்கொள்ளுமோ என்று பயந்த கப்பலின் கமாண்டர், துறைமுகத்தை விட்டு தூரமாகச் செல்வதே நல்லது என்று முடிவு செய்து கடலுக்குள் கப்பலைச்செலுத்தினான்.

2
பொடெம்கின். வழக்கமான அதிகாலை மணியோசை கேட்டு உறக்கம் கலைந்தார்கள் மாலுமிகள். ஆனால் என்ன இது? மிக மோசமான ஒரு துர்நாற்றம் வீசுகின்றதே? கப்பலின் மேல்தளத்தில் இருந்தே வருகின்றது இந்த நாற்றம். மேலே ஏறிப்பார்த்த மாலுமிகள் அதிர்ந்து போகின்றார்கள். கொக்கிகளில் மாட்டப்பட்டிருந்த இறைச்சிகளில் நன்கு கொழுத்த புழுக்கள் நெளிகின்றன, இறைச்சியே வெளியே தெரியாத அளவுக்கு புழுக்கள் மொய்த்துக்கொண்டிருக்கும் மிக அருவருப்பான காட்சி. ’நமக்கு அடுத்த வேளை உணவாக இதைத்தான் தரப் போகின்றார்களா?’.

மதிய உணவுநேரத்திற்கான மணி அடிக்கின்றது. மாலுமிகள் உணவு அறையை அடைகின்றார்கள். பரிமாரப்படும் காரட் சூப்பில் புழுக்கள் நெளிகின்றன. கோபம் கொண்ட மாலுமிகள்’ சாப்பிடமாட்டோம்’ என்று குரல் உயர்த்துகின்றார்கள். ஜார் மன்ன்னின் போர்க்கப்பலில் கலகக்குரலா? கமாண்டருக்கு செய்தி பறக்கின்றது. மாலுமிகளை கப்பலின் மேல்த்தளத்தில் அணிவகுத்து நிற்குமாறு உத்தரவிடுகின்றான்.
பளிச்சிடும் நீலவானம் சூழ்ந்த மேல்த்தளம். ’போர்க்கப்பலில் கலகமா? இப்போதே முடிவு செய்கின்றேன். உங்களைத்தூண்டிவிட்டது யார்?’
பதில் இல்லை. ‘தார்ப்பாய் கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவு இடுகின்றான். யாரையாவது கொல்லவேண்டுமெனில் விசாரணை ஏதும் இன்றி தார்ப்பாய் போர்த்தி சுட்டு வீழ்த்திவிடுவார்கள்.

இப்போது அநியாயமாகச் சாகப்போவது யார் என்ற ஒற்றைக்கேள்வி காற்றில் தொங்குகின்றது. விநாடிகள் நகர்கின்றன. அப்போதுதான் அது நடக்கின்றது. திடீரென அணிவகுப்பைப் பிளந்துகொண்டு ஒரு மாலுமி பாய்ந்து வெளியே வருகின்றான். ‘சகோதரர்களே! பொறுத்தது போதும்! ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள்! கொடுங்கோலன் ஜார் ஒழிக! விடுதலை ஓங்குக!’ என்று கடல் அதிர முழங்குகின்றான். இக்கணத்திற்காகவே நெடுங்காலம் காத்திருந்ததுபோல் அணிவரிசை உடனடியாகக் கலைகின்றது. அடுத்த நொடிகளில் துப்பாக்கிகளைக் கைப்பற்றுகின்றார்கள் மாலுமிகள். அந்த முதல் கலகக்குரலுக்குச் சொந்தக்காரன் மாலுமி மத்யுஷென்கோ. அவன் ஒரு போல்ஸ்விக் வீரன். உஷாரான கமாண்டர் சற்றே பின்வாங்கி துப்பாக்கியை இயக்க மற்றொரு மாலுமியான வாகுலின் சுக் வீழ்கின்றான். அவனும் ஒரு போல்ஸ்விக்.

அடுத்தடுத்த விநாடிகளில் மாயாஜாலம்போல் நடக்கும் இக்காட்சிகளைக்கண்ட மாலுமிகளின் ஆவேசம் அதிகரிக்க தங்களை இதுவரை நாயினும் கேடாக நட்த்திவந்த அதிகாரிகளைச் சுட்டு வீழ்த்தி கடலில் எறிகின்றார்கள். கமாண்டருக்கும் இதே கதிதான்.
இப்போது கப்பல் முழுமையாகப் புரட்சியாளர்கள் வசம் வந்துவிட்ட்து. ஆனால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? உடனடியாக ஒரு நிர்வாகக்குழு தேர்வு செய்யப்படுகின்றது. அஃபனாஸீ மத்யுஷென்கோ இக்குழுவின் தலைவர். பொடெம்கினை ஒதெஸ்ஸா துறைமுகத்துக்குச் செலுத்துவதென முடிவுசெய்யப்படுகின்றது; 1905 ஜூன் 14 அன்று கப்பலில் ஜார்மன்னனின் கொடி இறக்கப்பட்டு செங்கொடி ஏற்றப்படுகின்றது.
நீலநிற நீள்கடலில் செங்கொடி கம்பீரமாகப் பறக்க கப்பல் ஒதெஸ்ஸா துறைமுகத்தை வந்தடைகின்றது. கொல்லப்பட்ட வாகுலினின் உடல் கரைக்கு எடுத்துவரப்படுகின்றது. ஜாரின் கொடுங்கோல் ஆட்சி மீது ஏற்கனவே வெறுப்புற்றிருந்த மக்களின் கோபாவேச நெருப்புக்கு வாகுலினின் இறுதி மரியாதைச்சடங்கு எண்ணெய் வார்க்கின்றது. பொடெம்கின்னின் வீரர்களுக்கு உணவையும் மற்ற உதவிகளையும் மக்கள் வழங்குகின்றார்கள். ஆனால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியாமல் பொடெம்கின் ஒதெஸ்ஸாவில் நின்றுகொண்டிருக்கின்றது.

3
ஜார் இரண்டாம் நிக்கோலஸ் பொடெம்கின் கிளர்ச்சியை நசுக்க உத்தரவிடுகின்றான். பொடெம்கின்னுக்கு எதிராக செவஸ்தோப்பல் கடற்படைப்பிரிவு ஒன்று ஒதெஸ்ஸா புறப்படுகின்றது.
நான்காம் நாள் காலை. செங்கொடி பறக்கும் பொடெம்கினைச் சூழ்ந்துகொண்டு ஜாரின் பதின்மூன்று கப்பல்கள் நிற்கின்றன. தனது மாலுமிகளை போருக்கு ஆயத்தமாகுமாறு தலைவன் மத்யுஷென்கோ உத்தரவிடுகின்றான். சூழ்ந்து நிற்கும் கப்பலின் மாலுமிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றான்: ‘கடற்படைப்பிரிவின் சக பீரங்கி வீரர்களே! பொடெம்கின்னின் மாலுமிகளாகிய நாங்கள் எங்களைச் சுட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்!’. இந்த வேண்டுகோளை ஏற்கும் வண்ணம் பதின்மூன்று கப்பல்களில் இருந்தும் உற்சாகமான ஆரவாரம் எழுகின்றது. ‘வெற்றிவீரன் ஜார்ஜ்’ என்னும் கப்பல் பொடெம்கின்னுடன் புரட்சியில் இணைவதாக அறிவிக்கின்றது.

கட்டுப்பாடுமிக்க கடற்படையில் இது எதிர்பாராத ஒன்று. இச்சிறுபொறி பெருந்தீயாகப்பரவிவிடும் பேரபாயம் உள்ளது. கடற்படையின் தளபதி மிரள்கின்றான். நிலைமை கைமீறிப்போகின்றது. ‘கடற்படைப்பிரிவு முற்றிலுமாக செவஸ்தோப்பலுக்குத் திரும்ப வேண்டும்’ என உத்தரவிடுகின்றான்.
பொடெம்கின், வெற்றிவீரன் ஜார்ஜ் இரண்டும் இப்போது ஒதெஸ்ஸா துறைமுகத்தில். கரையில் இருக்கும் ஜாரின் அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தவில்லை, ஒதெஸ்ஸா துறைமுகத்தையும் கைப்பற்றவில்லை. அடுத்து என்ன செய்வது? உணவும் எரிபொருளும் தீரும் நிலை. இறுதியாக ஒரு முடிவு எடுக்கப்படுகின்றது. ‘கப்பலை எங்கள் நாட்டுக்குக் கொண்டுவாருங்கள், அடைக்கலம் தருகின்றோம், ஜாரிடம் காட்டிக்கொடுக்க மாட்டோம்’ என்று ருமேனிய அரசு அளித்த உறுதிமொழியின் மீது நம்பிக்கை கொண்டு ருமேனியாவை நோக்கிப் பயணித்தார்கள்.
பதினொரு நாட்கள். ஜார் இரண்டாம் நிக்கோலஸ்ஸையும் ரஷ்யாவின் மேட்டுக்குடி நிலப்பிரபுக்களையும் கொடுங்கோல் அதிகாரிகளையும் திணறடித்த பொடெம்கின் ருமேனியாவை அடைகின்றது.

4
பொடெம்கின் வெறும் கப்பல் அல்ல. பல நூற்றாண்டுகாலமாகக் கரடுதட்டிக் கெட்டியான நிலப்பிரபுத்துவத்தின் மன்னராட்சியின் அடக்குமுறைக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிரான மக்களின் ஆவேச சின்னம், புரட்சியின் அடையாளம், நீரில் மிதந்த நெருப்புக்கோளம். அடுத்த பன்னிரெண்டு வருடங்களில் ரஷ்ய நிலப்பிரபுத்துவமும் ஜார் பேரரசும் அழியப்போவதைச் சொன்ன மணியோசையின் அடையாளம்.

1905இல் நடைபெற்றது இக்கிளர்ச்சி. 1917இல் மாபெரும் அக்டோபர் புரட்சி வெடிக்கின்றது; விளாடிமிர் இலியிச் உல்யானோவ் என்ற லெனினின் தலைமையில் சோவியத் ஒன்றியம் உதயமானது. 1925இல் சோவியத் மக்களரசு பொடெம்கின் கிளர்ச்சியை வரல்லற்றுப்பதிவாக்குவதென முடிவுசெய்து, அதனைத் திரைப்படமாக்கும் பெரும் பொறுப்பை புகழ்பெற்ற இயக்குநர் செர்ஜி ஈசன்ஸ்டைன் வசம் ஒப்புவித்தது. சோவியத் கடற்படையின் உதவியுடன் படம் உருவானது.
படத்தின் மிக முக்கியமான காட்சியாக ஒதெஸ்ஸா படிக்கட்டுத்தாக்குதல் இன்றளவும் பேசப்படுகின்றது. அப்பாவிமக்கள் மீது ஜார் படை நடத்திய இரக்கமற்ற தாக்குதல் காண்போரை உணர்ச்சிவசப்படச் செய்கின்றது. ஒவ்வொரு காட்சியும் இரண்டு விநாடிகளுக்கு மேல் இல்லை. இதுபோன்ற சில நூறுக்காட்சிகள் அடுத்தடுத்துக் காட்டப்படும்போது காண்போர் நெஞ்சம் பதைபதைக்கின்றது.
குறிப்பாக கைக்குழந்தையை அதற்கான வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டுவந்த ஒரு தாய் படிக்கட்டுக்களில் ஏறி சுடுவதை நிறுத்துமாறு படையினரை வேண்டும் காட்சியை படிக்கட்டுக்களின் உயரே இருந்து படமாக்கியதால் படம் பார்ப்போரிடம் நேரடியாக உரையாடுவதைப்போல் உள்ளது. ஆனால் நடந்தது என்ன? அந்தப்பெண்ணை சுட்டு வீழ்த்துகின்றார்கள். குழந்தையோ வண்டியோடு உயரமான படிக்கட்டுக்களில் உருண்டு உருண்டு... பார்வையாளரை உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஆழ்த்தி ஆவேசப்படச்செய்யும் மகத்தான திரைக்காட்சியாக இக்காட்சி இன்றும் நீடிக்கின்றது. எடிட்டிங் உத்தியை திறம்படப் பயன்படுத்தினால் பார்வையாளரை பட்த்துடன் ஒன்றச்செய்ய முடியும் என்பதற்கு இக்காட்சி உதாரணம். படத்தை எடிட் செய்தவரும் ஈசன்ஸ்டைனே.
உலகத்தின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக நூறு வருடங்களுக்குப் பிறகும் பாட்டில்ஷிப் பொடெம்கின் கொடிகட்டிப் பறக்கின்றது. தன்னை மிகவும் கவர்ந்த படம் என சார்லி சாப்ளின் குறிப்பிடுகின்றார்.
5
ருமேனியாவைச் சென்றடைந்த மத்யுஷென்கோ என்ன செய்தார்? தகவல் உள்ளது. அப்போது (1905) மக்கள் தலைவர் லெனின் தனது மனைவி நதேழ்தா கான்ஸ்தான்தீனவ்னாவுடன் ஜெனிவாவில் இருந்தார். கோடைக்கால இறுதியில் ஒருநாள் அவரது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கின்றது. வீட்டுக்கு வந்த விருந்தாளி மத்யுஷென்கோ. அவர் பொடெம்கின் புரட்சி குறித்து போல்ஸ்விக் தலைவர் லெனினுக்கு விரிவாகச் சொல்லவே வந்துள்ளார்.

1905க்கு பொடெம்கின் எனில் 1917 மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு அரோரா. 1917 அக்டோபர் 26 இரவு. நெவா ஆற்றில் அமைதியாக நின்று கொண்டிருந்த போர்க்கப்பல் அரோராவின் பீரங்கியில் இருந்து அமைதியைக் கலைத்தவாறும் இருளைக்கிழித்தவாறும் வீசப்பட்ட குண்டுகள், “ஜார் மன்ன்னின் குளிர்கால அரண்மணை மீது தாக்குதலைத் தொடங்குங்கள்!” என்று போரைத்தொடங்கிவிட்டதற்கான சமிக்ஞையை செஞ்சேனை வீரர்களுக்கு அறிவித்தன. நள்ளிரவு கடந்தபின் ராணுவப்புரட்சிக்கமிட்டியின் தலைவர் பத்வோய்ஸ்க், தோழர் லெனினைச் சந்தித்து அறிவிக்கின்றார்: ‘தோழர் லெனின், குளிர்கால அரண்மணை நம் வசம் வந்துவிட்டது!’.
மன்னராட்சிக்கும் நிலப்பிரபுத்துவக்கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த, உலகம் அதுவரை கண்டிராத புதுமையான முப்பதுகோடி ஜனங்களுக்கும் ஒரு பொதுவுடைமை சமுதாயம் படைத்திட்ட மாபெரும் அக்டோபர் புரட்சியைத் தொடங்கி வைத்த அரோரா போர்க்கப்பல் சோவியத் மக்களரசால் பெருமையுடன் போற்றிப்பாதுகாக்கப்பட்டது.
‘இந்தியாவில் இனிமேலும் நம்மால் காலம் தள்ள முடியாது’ என அன்றைய பிரிட்டிஷ் பிரதமராக இருந்த அட்லியை ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கச்செய்த மகத்தான 1942 பம்பாய் கப்பற்படைப்புரட்சியை தொடங்கிவைத்த பெருமைமிகு தல்வார் போர்க்கப்பல் 1947க்குப்பிறகு எங்கே போனது? பொடெம்கின்னில் பறந்த ஜார்மன்னனின் கொடி இறக்கப்பட்டு செங்கொடி ஏற்றப்பட்டதெனில், பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கி மூவர்ணக்கொடியையும் முஸ்லிம்லீக்கின் பச்சைவண்ணக்கொடியையும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியல் பொறித்த செங்கொடியையும் ஏற்றி பட்டொளிவீசிப்பறக்கச் செய்த தல்வாரின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய மாலுமிகளின் தியாக வரலாறு எங்கே?