(’புதுவிசை’ டிசம்பர் 2016 இதழில் வெளியான கட்டுரை)
1
காங்கிரஸ்
கட்சியின் ராஜீவ் காந்தி முதல்முறையாக பிரதமர் பொறுப்பேற்ற 1985-87
காலக்கட்டத்தில்தான் பொதுத்துறையின் முக்கியத்துவத்தை பின்னுக்குத்தள்ளி தனியார் முதலாளிகளை மேலும் கொழுக்க வைப்பதற்கான
திட்டங்களை அரசின் திட்டமாகவே ஆக்கிடும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 1986
செப்டம்பர் மாதத்தில் இந்தியத்தொழிற்துறையை மறுசீரமைப்பதற்கான (reforms)
விரிவான செயற்திட்டத்தை வரையுமாறு திட்டக்கமிசனை அவர் பணித்தார்,
ஒரு விரிவான திட்டமும் வரையப்பட்டது.
1989-90
காலக்கட்டத்தில் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி கூட்டணி அமைச்சரவை பொறுப்பில்
இருந்தது. அதன் பின் 1991 மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 232 இடங்களில்
வென்றது. மே 21ஆம் தேதி ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படும் முன் நடந்த முதற்கட்டத்
தேர்தலில் 319 இடங்களில் 130 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் இரண்டாம்கட்டத்
தேர்தலில் 202 இடங்களில் 102 இடங்களை
அதாவது சரிபாதி இடங்களை வென்றது அனுதாப அலையின் காரணமாகவே என்பது தெரிந்த செய்தி.
அப்போதும் கூட பெரும்பான்மை கிட்டவில்லை. அன்றைய சூழலில் மதவெறி ஆர் எஸ் எஸ் பிஜேபி
கும்பல் ஆட்சியமைப்பதை தடுக்கும் ஒற்றை நோக்குடன் இடதுசாரிகள் காங்கிரஸ் அரசுக்கு
ஆட்சியில் பங்குபெறாமல் ஆதரவு அளித்தார்கள், நரசிம்மராவ் பிரதமர் ஆனார்.
ரிசர்வ்
வங்கி கவர்நர், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவற்றில் பணியாற்றிய அனுபவம்
பெற்ற அரசு அதிகாரியான மன்மோஹன் சிங் நிதியமைச்சர் ஆக்கப்பட்டார். அன்றைய நிலையில்
இந்தியப்பொருளாதாரம் மிகமிக மோசமான நிலையில் இருந்ததாக காங்கிரஸ் கட்சியின்
ஜெய்ராம் ரமேஷ் தனது To the brink and back என்ற நூலில் சொல்கின்றார். அன்றைய மத்திய அமைச்சரவைச்செயலாளரான நரேஷ்
சந்திரா ‘பிரதமர் முன்னுள்ள உடனடி சவால்கள்’ அடங்கிய எட்டுப்பக்க ரகசியக்குறிப்பை
நரசிம்மராவிடம் அளித்தபோது ’நமது பொருளாதாரம் இத்தனை மோசமான நிலையில் உள்ளதா?’
என்று அவர் கேட்டதாகவும், நரேஷ் சந்திரா ‘இல்லை, உண்மையில் மிக மிக மோசமாக உள்ளது’
என்று சொன்னதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகின்றார். இத்தேசம் அப்படியான ஒரு
மிகப்பெரும் ஆபத்தான சிக்கலில் இருந்தது உண்மைதான் எனில் ஒரு சில வருடங்கள்
மட்டுமே ஆட்சியில் இருந்த (காங்கிரஸ் அல்லாத)
மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சி,
அதன் பின் வி.பி.சிங், சந்திரசேகர் போன்ற அரசுகளைத் தவிர 1947க்குப் பின்
இத்தேசத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியின் பெருமுதலாளிகளுக்கு
ஆதரவான கொள்கைகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்பதை காங்கிரஸ் கட்சியினர்
வசதியாக மறைத்து விடுகின்றார்கள். விசித்திரம் என்னவெனில் அப்பெரும் சிக்கலில்
இருந்து தேசத்தை மீட்பதாகச் சொல்லிக்கொண்டு சர்வதேச-இந்தியப் பெருமுதலாளிகளுக்கு
இத்தேசத்தை மேலும் அகலமாகத் திறந்துவிடும் எல்.பி.ஜி. எனப்படும் தாராளமயம்-
தனியார்மயம்-உலகமயம் ஆகிய மூன்று கோட்பாடுகளைத்தான் அசுரவேகத்தில் தறிகெட்டு ஓடும்
வாகனத்தின் வேகத்தில் நடைமுறைப்படுத்தினார்கள்.
இதன்பின்
இந்தியாவின் சமூக பொருளாதார வரலாற்றை 1991க்கு முன், பின் என இரண்டாக எழுதத் தக்கவகையில் பெரும்
சீரழிவை இத்தேசம் சந்தித்தது. அதுகாறும் இந்தியப்பெரு முதலாளிகளுடன்
மல்லுக்கட்டிக் கொண்டிருந்த இந்திய இடதுசாரி அரசியலும் தொழிற்சங்க இயக்கமும் சர்வதேசக்
கார்ப்பொரேட்டுக்களோடும் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகிய காங்கிரஸ் அல்லாத அரசுகளின் காலத்தில்
சொல்லும்படியாகவும், 2000க்குப் பிறகு அமைந்த காங்கிரஸ் அரசின்
காலத்தில் ஓரளவும் எல்.பி.ஜி.யின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது. இவை தவிர்த்த
1990க்குப் பின்னான காலத்தில் தனியார்மயம் மிக வேகமாக நடைமுறைக்கு வந்தது.
கார்ப்பொரேட்டுக்களின் சொர்க்க பூமியாக இந்தியா மிக வேகமாக மாறியது.
இக்காலக்கட்டத்தில்தான் உலககோடீசுவரர்கள் பட்டியலில் பல இந்தியர்களும்
சேர்ந்தார்கள். இதே காலகட்டத்தில்தான் மூடப்பட்ட ஆலைகளின் பட்டியலும்
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பட்டியலும் மிக நீளமானது. விவசாய நிலங்கள் பெருமுதலாளிகளின் நலன் பொருட்டும் நாற்கர அறுகரச் சாலைகளின்
பொருட்டும் பிடுங்கப்பட்டதும் விவசாயிகள் கிராமப்புறங்களை விட்டகன்று நகர்ப்புறங்களில்
தாம் இதுவரை செய்திடாத கட்டுமானத் தொழிலிலும் ஓட்டல்களிலும் தனியார் செக்யூரிட்டீ நிறுவனங்களிலும்
அத்தக்கூலி வேலைகளுக்காகத் துரத்தப்பட்டதும் இக்காலத்தில்தான். காங்கிரஸ் தொடங்கிவைத்த அழிவை சங்பரிவாரின் அடிப்பொடியான நரேந்திரமோடி மிக
வேகமாக முன்னெடுத்துச் செல்வதை தேசம் இப்போது பார்க்கின்றது. அலங்கார வண்டிகள் டெல்லியில் அணிவகுத்து வருவதுபோல் மோடியின் வாயிலிருந்து
அலங்கார வார்த்தைகள் அவ்வப்போது அணிவகுத்து வருகின்றன. செய்தித்தாட்களில்
முழுப்பக்க விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. கார்ப்பொரேட்டுக்களே
என் நண்பன் எனறு சொல்வதற்கு நரேந்திரமோடி எப்போது கூச்சப்பட்டதில்லை. அதானியின், அம்பானியின்
துணை இன்றி பயணம் எதையும் மேற்கொண்டதும் இல்லை. இரும்புத் தொழில்,
சுரங்கத் தொழில், தோல்தொழில், கம்ப்யூட்டர், பங்குச்சந்தை, பிட்சா, பர்கர்,
வறுத்தகோழிக்கறி என பல தொழில்களைச் செய்வதுபோல் டி .வி.சானல்களையும் பத்திரிகைகளையும் கார்ப்பொரேட் அதிபர்கள் விலைக்கு வாங்கி
ஒரு தொழிலாக நடத்துகின்றார்கள். நாம் பார்க்கின்ற 'நடுநிலை' டி.வி.க்களும் நாளேடுகளும் இந்த கார்ப்பொரேட் அதிபர்கள் நடத்துபவைதான். இந்த ஊடகங்கள்தான் 2014இல் நரேந்திரமோடியையும்
2016இல் ஜெயலலிதாவையும் நாற்காலியிலே உட்காரவைத்தன.
இப்பூவுலகின்
சாமானியர் எவராகிலும் அவர் உண்ணும் ஒரு கவள உணவாகினும் அருந்தும் ஒரு குவளை
நீராகிலும் அதற்குப் பின்னால் எவனோ எவளோ எத்தனை பேரோ தம் உயிரைத் தத்தம் செய்து பெற்ற
உரிமை என்பது சமூக வரலாறு. இவ்வுரிமைகளின் பொருட்டு
தம் இன்னுயிர்களை சிறைக் கொட்டடிகளிலும் இருள் கவிந்த தனிமைச் சிறைகளிலும் தூக்குக்
கயிறுகளிலும் நீத்தவர்களின் இரத்தம் சிந்தியவர்களின் வரலாறுகள் தேசங்களின்
செயற்கையான எல்லைகளைத் தாண்டி ரத்த நாளங்கள் போல் நீள்கின்றன. இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுகாறும் அனுபவித்து வரும் உரிமைகளுக்கும் இவ்வாறான
நெடிய வரலாறு உள்ளது. இவ்வாறு போராடியும் உயிர்நீத்தும் பெறப்பட்ட உரிமைகளை
1990களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தாமல்
வெறும் அரசாணைகள் மூலம் வெட்டியோ சுருக்கியோ முற்றாக நீக்கியோ சின்னாபின்னப்படுத்தும்
மக்கள் விரோத நடவடிக்கையில் காங்கிரசும் பாஜகவும் போட்டிபோடுகின்றன. தொழிற்சங்கச் சட்டம், தொழிற்தாவாசட்டம், தொழிற்சாலைகள் சட்டம் என ரத்தம் சிந்தியும் உயிர்த்தியாகம் செய்தும் வென்றெடுக்கப்பட்ட
சட்டங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டு அர்த்தம் இழக்கவைக்கப்படுகின்றன. அமைப்புரீதியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின்-விவசாயிகளின்
சக்தி மிகப்பெரும் அரசியல் பவுதீக சக்தி என்பதை நன்குணர்ந்துள்ள கார்ப்பெரேட்டுக்கள்
+அரசாங்கக் கூட்டணி, தொழிற்சாலைகளை மூடுவது,
தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, காலியிடங்களை
நிரப்பாமல் விடுவது, உற்பத்தியைக்குறைப்பது, நிரந்தரத் தொழிலாளர்களின் இடத்தில் காண்ட்ராக்ட் தொழிலாளிகள் என்னும் புதிய
வகை அடிமை முறையைப்புகுத்துகின்றது. தொழிலாளர் நலச் சட்டங்களைத்
திருத்தியோ சுருக்கியோ அவற்றை முனை மழுங்கச் செய்கிறது.
2
இத்திட்டத்தின்
ஒரு பகுதியாக 'தொழிலாளர் பிராவிடண்ட் நிதியை
(EPF) எந்தத்தொழிலாளியும் எடுத்துப்
பயன்படுத்த முடியாது' என்று இன்றைய பி.ஜே.பி.யின் மோடி அரசு புதிய
ஆணையை வெளியிட்டது. பிராவிடண்ட் நிதி என்பது ஒரு தொழிலாளி தன்
அடிப்படை 'ஊதியத்தில் 12 விழுக்காட்டைத்
தனது சேமிப்பில் சேர்ப்பது. இதே அளவு சமமான தொகையை முதலாளியும்
தனது பங்காக தொழிலாளியின் சேமிப்பில் சேர்க்க வேண்டும். ஒரு தொழிலாளி
இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலை இல்லாமல் இருப்பார் எனில் அவர் தனது ப்ராவிடண்ட்
நிதி சேமிப்பில் இருந்து 'மொத்தப் பணத்தையும் திரும்பப்பெற முடியும்.
2016 பிப்ரவரி 10 அன்று தொழிலாளர் அமைச்சகம்
(நல அமைச்சகம் என்றும் சொல்கின்றார்கள்) வெளியிட்ட ஆணையின்படி,
தொழிலாளி ஒருவர் தனது மொத்த சேமிப்பில் இருந்து தனது பங்காக தான்
செலுத்திய சேமிப்பை மட்டுமே திரும்பப் பெற முடியும், முதலாளி
அளித்த பங்கை 58 வயது முடிந்த பின்னரே திரும்பப் பெற முடியும்.
இன்னொரு கொடுமை என்னவெனில் தொழிலாளியின் பங்கான 12 விழுக்காட்டில் 3.67விழுக்காடு மட்டுமே விராவிடண்ட் நிதிக்குப்
போகின்றது, மீதி 8.33 விழுக்காடு ஓய்வூதிய
நிதியில்தான் சேர்க்கப்படும், எனவே மொத்தமுள்ள 24விழுக்காட்டில் 3.67 விழுக்காட்டை மட்டுமே திரும்பப்
பெறமுடியுமாம். மாதம் 7000 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும்
பல லட்சம் தொழிலாளிகளுக்கு இது மிகமிகச் சொற்பமான தொகை என்பதைச் சொல்லவும்
வேண்டாம். சி.ஐ.டி.யூவின் அகில இந்தியத் தலைவரான ஏ.கே.பத்மனாபன், ''இந்த அறிவிப்பை வெளியிடும் முன் தொழிலாளர்கள்
தம் விருப்பத்தைத் தெரிவிக்க, அதாவது ’சேமிப்பைத் திரும்பப் பெறுவதா
சேமிப்பில் தொடர்ந்து வைத்துக்கொள்வதா’ என்று தேர்வு செய்யும் உரிமையை அவர்களுக்கே
விடவேண்டும் என்று நாங்கள் அரசை வற்புறுத்தினோம். அரசுத்தரப்பு
இதை நிராகரித்தது'' என்று சொல்கின்றார். பிராவிடன்ட் நிதிக்கான மத்திய அறங்காவலர் வாரியத்தில் இவர் உறுப்பினராகவும்
உள்ளார்.
இதுவே
மிகப்பெரும் பாதகம் என்றால் இதனை விடவும் பாதகமான அல்லது மோசடியான ஒரு திட்டத்தை
மோடி அரசு இதற்கு முன் முன்வைத்தது: அதாவது பிராவிடன்ட் நிதியைத் திரும்பப் பெறும்
போது அதற்கான பணத்திற்கு வருமானவரியை விதிக்க மோடியின் 'மேக் இன் இந்தியா' அரசுதிட்டமிட்டது. புரிகின்றதா? தொழிலாளர்கள் தாங்கள்
சேமித்த பணத்தையே தமக்கான 'வருமானமா’கக் கருத வேண்டுமாம்.
பலத்த கண்டனங்களுக்குப் பிறகே இந்த மோசடித் திட்டத்தை மோடி அரசு கைவிட்டது.
58
வயதில்தான் திரும்பப் பெறமுடியும் என்ற மோடி அரசின் ஆணைக்கு நாடெங்கிலும்
பலத்த கண்டனங்கள் எழுந்தன. ஏனெனில் தொழிலாளர் பிராவிடன்ட் நிதிக்கு
நேரடியாகத் தொடர்புள்ளவர்கள் மாதம் 7000, 8000 ரூபாய் வருமானவரம்பில்
உள்ள கோடிக்கணக்கான மக்களே. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தைப்
பரிசீலிக்க நியமிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழு, மத்திய அரசு அதிகாரிகளின்
உயர்ந்தபட்ச மாத அடிப்படை ஊதியத்தை 2,10,000 ரூபாய் எனப் பரிந்துரைத்துள்ள
நிலையில் (பிற அலவன்சுகள் தனி) மாத ஊதியம்
மொத்தமாக பத்தாயிரம் கூடப் பெறாத பலகோடித் தொழிலாளர்கள் கொதிப்படைந்தார்கள்.
இந்தியாவெங்கிலும்
அணிதிரட்டப்படாத, அல்லது தொழிற்சங்கங்களில்
இணைய முடியாத அல்லது தொழிற்சங்கங்களால் திரட்டப்படமுடியாத தொழிலாளர்கள் பல லட்சம் அல்லது
சில கோடிகள் இருக்கின்றார்கள் எனில் அது ஆயத்த ஆடைத் தயாரிப்புத் தொழில்தான்.
சர்வ தேசத் தொழிலாளர் அமைப்பின் (International Labour
Organization) அறிக்கையின்படி, ''ஆயத்த ஆடைத் தொழில்தான்
நகர்ப்புற இந்தியாவின் மிகப் பெரிய தொழிலாக உள்ளது, தேசிய பொருளாதாரத்தில்
முக்கியப் பங்கு வகிக்கின்றது. இருபது வருடங்களுக்கு முன் முறைசாராத்
தொழில் என்ற நிலையில் இருந்தது மாறி தொழிற்சாலை சார்ந்த
தொழிலாக அது மாறியுள்ளது.'' முக்கியமாக இந்தியாவின் ஏற்றுமதிப்
பொருளாதாரத்தில் பெரும் அளவு வருவாய் ஈட்டும் தொழில்களில் இது முக்கியமானது.
குறிப்பாக பெங்களூர், திருப்பூர், சென்னை, டெல்லி நகரங்களில் மட்டும் பத்துலட்சம் தொழிலாளர்கள்
இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இது தவிர புறநகர்கள்,
சிறுநகரங்கள், கிராமங்கள், வீடுகள் என மேலும் பல பத்து லட்சம் தொழிலாளர்கள் உள்ளார்கள்.
அமெரிக்க,
ஐரோப்பிய நாடுகளின் பிரபல பிராண்டுகளாக அறியப்பட்ட ஆனால் இந்தியக் கடைகளில்
விற்கப்படும் உள்ளாடைகள், சட்டைகள், பாண்ட்டுகள்,அரை,முக்கால் டிரவுசர்கள் என அனைத்தும் இவர்களைப் போன்ற
பல லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவின் நகரங்களில் தைப்பவையே, உள்நாட்டில் அந்நிய பிராண்டு லேபிள் ஒட்டப்பட்டு விற்கப்படுவதோடு, பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இத்தொழிலாளர்களின்
வாழ்க்கைத்தரம்?
உதாரணமாக
பெங்களுரின் பிராண்டிக்ஸ் இந்தியா என்னும் கம்பெனி உள்ளாடைகள் தயாரித்து அமெரிக்க,
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. 19,000 தொழிலாளர்கள் பணி செய்கின்றார்கள், வருட நிதிச் சுழற்சி
ரூபாய் 1500 கோடி. ஷாஹிஎக்ஸ்போர்ட்ஸ் பெங்களுரின்
மிகப்பெரும் ஆயத்த ஆடைக்கம்பெனி, 45 இடங்களில் மொத்தம் 75,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள். கோகுல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ்க்கு
16 தொழிற்சாலைகள், 12,000 தொழிலாளர்கள்,
பெங்களூரில் மட்டும் ஐந்தாயிரம் தொழிலாளர்கள். டெக்ஸ்போர்ட் ஓவர் சீஸிற்கு 13 தொழிற்சாலைகள்,
12,000 தொழிலாளர்கள். கோகுல்தாஸ் இமேஜஸ்க்கு
13 தொழிற்சாலைகள், 2,000 தொழிலாளர்கள்.
வால்மார்ட், போலோ,நைக் உள்ளிட்ட
பல பிரபல பிராண்டுகளைத் தைப்பவர்கள் இந்தியத் தொழிலாளர்களே. இதே
பிராண்டிக்ஸ் இந்தியா கம்பெனி, ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில்
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 19,000 தொழிலாளர்களை வேலைக்கு
வைத்துள்ளது. இத்தொழிலில் பெங்களூரில் மட்டுமே சுமார் ஐந்து லட்சம்
தொழிலாளர்கள் உள்ளார்கள்.
சிறப்புப்
பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள இத்தொழிற்சாலைகளுக்கு அதாவது முதலாளிகளுக்கு கற்பனைக்
கெட்டாத சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வாரிக்கொட்டுகின்றன.
உதாரணமாக, ஆந்திர அரசு பிராண்டிக்ஸ் கம்பெனிக்கு
அரசுநிலத்தை ஒரு ஏக்கருக்கு ஒரு வருடத்திற்கு வெறும் ஓராயிரம் ரூபாய்க்கு மட்டுமே குத்தகைக்குவிட்டுள்ளது.
85 விழுக்காட்டிற்கும் அதிகம் பெண்கள் பணிபுரியும் இத்தொழிலில் நிலவும் மிக மோசமான
பணிக்கலாச்சாரம், பாதுகாப்பின்மை, அடிமைத்தனம்,
அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தையும் ஏமாற்றுதல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையை மறுத்தல், அனைத்திற்கும்
மேல் பாலியல் தொந்தரவு ஆகிய அனைத்துக் கொடுமைகளும் இத்தொழிலாளர்களை எப்போதும் கொதிநிலையிலேயே
வைத்துள்ளன. 10 மணி நேரம் வரை வேலை. பீஸ்ரேட்
முறையில் ஒரு மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட பீஸ்களின் எண்ணிக்கையை இருமடங்கு,
மும்மடங்கு என உயர்த்துவது (அதே கூலிக்கு)
கழிப்பறைகள் உபயோகிப்பதைக் கூட ஒரு நாளைக்கு இத்தனை முறைதான்,
அதுவும் இத்தனை நிமிடங்கள்தான் எனக் கண்காணிப்பது, உடல் நலக்குறைவால் எதிர்பாராது விடுப்பெடுக்க நேர்ந்தால் மீண்டும் தொழிற்சாலைக்குள்
நுழைய விடாமல் தடுத்து புதிய நிபந்தனைகளை விதிக்கும் தந்திரம், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது, சிறு தவறுகளுக்கும்
முகத்தில் துணிகளை விட்டு எறிவது, ஆண்களே மேலதிகாரிகளாக,
கண்காணிப்பாளர்களாக இருப்பதால் அவர்களால் தரப்படும் கண்ணுக்குத் தெரியாத
நுட்பமான பாலியல் வன்முறைகள், பிரசவத்திற்குப் பிறகு அரசு விதிகள்
தந்துள்ள பிரசவகால ஊதியத்துடன் கூடிய விடுப்பை மறுப்பது, பிரசவிக்கும்
பெண்களை வேலையிலிருந்து நீக்குவது, குழந்தைகள் காப்பகம் இருந்தாலும்
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கமறுப்பது(அதாவது குழந்தைகளுக்குத்
தாய்ப்பால் ஊட்டுவதால் உற்பத்தி பாதிக்கப்படுமாம்) எனத் தொடரும்
கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை.
அரசு
நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளுக்கு ரூ.287 (ஊதியத்துடன் கூடிய விடுப்பு நாட்கள் உட்பட) 26 நாட்களுக்கு
எனில், ரூ.7462 ரூபாய் தரப்பட வேண்டும்.
ஆனால் 7000 மட்டுமே தரப்படும். 7462 ரூபாய் தரப்பட்டதாகக் கணக்கில்
காட்டப்படும். இதுவன்றி இலக்கை எட்டாத தொழிலாளி, அதிகமாக இரண்டு மணி நேரம் வேலைசெய்ய வேண்டும், ஆனால்
ஓவர்டைம் ஊதியம் தரப்படாது. ஈ.எஸ்.ஐ, பிராவிடன்ட் நிதி, கேண்டீன்,
பஸ்வசதி எனப் பலவகைகளிலும் பிடித்தம் செய்யப்பட்டபின் இந்த
7000 ரூபாயும் கூடக் கையில் வராது. பிராண்டிக்ஸ் தொழிலாளர்கள் பெங்களூரைச்
சுற்றியுள்ள சுமார் 200 கிராமங்களிலிருந்து கம்பெனியில் பேருந்துகளில் ஏற்றப்பட்டு வருகின்றார்கள்.
காலை 6மணிக்கு தொழிற்சாலையில் இருக்க அதிகாலை
4 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட வேண்டும். மாலையும்
வீட்டை அடைய எட்டுமணி ஆகலாம். ஆக குழந்தைகளின் கல்வி,
உடல்நலன், தனது உடல்நலன், அன்றாடக் குடும்ப விசயங்கள், சமூகத் தொடர்புகள் அத்தனையும்
இரண்டாம் பட்சத்துக்கும் பின்னே எங்கோ போய்விடுகின்றன.
இதற்கு
முன் இத்தொழிலில் விடுதிகள் இருக்காது. இப்போது
விடுதிகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களான
அஸ்ஸாம், ஒரிசா போன்றவற்றில் இருந்தும் இத்தொழிலில் இப்போது பெங்களூரில்
பார்க்க முடிகின்றது. தந்திரமாக ஏற்கனவே பலபெயர்களில் பிடிக்கப்படும்
ஊதியத்தில் விடுதிவாடகையையும் நிர்வாகங்கள் பிடித்துவிடுகின்றன.
முக்கியமாகக்
கவனிக்கப்பட வேண்டியது, இந்திய சமூகத்தின் ஒடுக்கப்பட்ட
ஷெட்யூல்டு சாதி இனமக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட
பிரிவுகளில் இருந்தும், சிறுபான்மைச் சமூகங்களான இஸ்லாமியர்களும்
இத்தொழிலில் பெரும்பான்மையினர், அதிலும் பெண்கள், இவர்களின் சில நூறு ரூபாய்கள் மாத ஊதியத்தை நம்பியே இக்குடும்பத்தினர் வாழ்கின்றார்கள்,
இப்பெண்ககளின் கணவர்கள் தினக்கூலி வேலைக்குச் செல்வார்கள், அல்லது வேலைக்குச் செல்ல மாட்டார்கள். சென்றாலும் அவ்வருவாயை
மதுவைக் குடித்துத் தீர்த்துவிடுவார்கள்.
இத்தகைய
பல்வேறு அழுத்தங்களும் பிரச்சனைகளும் ஒரு பெண்மணியை ஒரு தொழிற்சாலையில் தொடர்ந்து ஐந்துவருடங்களுக்கு
வேலை செய்ய அனுமதித்தால் அதுவே பெரிய சாதனையாகும். ஐந்து வருடங்கள் பணிசெய்தால் கிராஜீட்டி எனப்படும் பணிக்கொடையை வழங்கவேண்டியிருக்கும்
என்பதால் ஐந்து வருடங்கள் முடியும் முன்பே பல்வேறு நெருக்கடிகள் தரப்படும்.
தொழிலாளர்கள் தாமாகவே வேலையைவிட்டு நின்றுவிட வேண்டும் என்பதே கொடூரமான
நோக்கம். ஐந்து வருடங்களுக்கு மேல் பணிபுரிவோரின் வருகை பதிவு
செய்யப்படாது, 'பஞ்சிங்' முறை மறுக்கப்படும்.
இத்தனை கொடுமைகளையும் சகிக்காமல் வேலையை விட்டுச் சென்றால், ஆனால் மீண்டும் அதே தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தால் அவர் புதிய தொழிலாளியாகிவிடுவார்.
எனவே புதிய பிராவிடன்ட் நிதிக் கணக்குத் தொடங்கப்படும்.
இத்தகைய
பின்னணியில் ஒரு தொழிற்சங்கத்தைத் தொடங்குவது அல்லது ஒரு தொழிற்சங்கத்தில் இணைவது என்பது
கற்பனைக்கு அப்பாற்பட்டதாகும். தொழிற்சங்கங்கள்
வெளியிடக்கூடிய துண்டறிக்கைகளைக் கையில் வைத்திருந்தால் அது போதும் வேலையை விட்டு நீக்குவதற்கு.
அப்படியிருக்க ஒரு தொழிற்சங்கம் தொடங்க முனிவோர் அல்லது ஒரு
தொழிற்சங்கத்தில் இணைய முனைவோரின் நிலை பற்றிக் கூறவேண்டிய அவசியம் இல்லை.
இருப்பினும்
பெங்களூரைப் பொருத்தவரை 1990களில் ஆயத்த ஆடைத்
தொழிலில் சி.ஐ.டி.யூ பெருவாரியான சங்கங்களைக் கொண்டிருந்ததாகவும் வலிமையான போராட்டங்களை நடத்திய
தொழிற்சங்கமாக இருந்ததாகவும் அறிய முடிகின்றது. ஆனால்
1990களின் தொடக்கத்தில் மத்திய காங்கிரஸ் அரசால் புகுத்தப்பட்ட தனியார்மய-
தாராளமயக் கொள்கைகளின் விளைவாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதும் தொழிலாளர்கள்
மிரட்டப்பட்டதும் பழிவாங்கப்பட்டதும் இத்தொழிலில் தொழிற்சங்க இயக்கத்தின் தேய்மானத்துக்குக்
காரணமானவை.
3
இந்நிலையில்தான்
தமது சொற்ப சேமிப்பான பிராவிடன்ட் நிதிச் சேமிப்பிலும் பாரதீய ஜனதாக்கட்சியின் நரேந்திரமோடி
அரசு கொடூரமாகக் கைவைப்பது கண்டு யாதொரு அமைப்பும் கட்சியும் தொழிற்சங்கமும் அறைகூவல்
விடுக்காமலேயே ஏப்ரல் 18,2016அன்று பெங்களூரின்
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கோபாவேசம் கொண்டவர்களாக வீதிகளிலும்
நெடுஞ்சாலைகளிலும் திரண்டார்கள். மிகச்சில ஆண்களும் பங்குபெற்றார்கள்.
இது வரலாற்றில் தனியாகக் குறிப்பிடவேண்டிய ஒரு போராட்ட நிகழ்வாகும்.
பெங்களூர்ப்
போராட்டத்துக்கு முன்பாகவே விசாகப்பட்டினத்தில் அச்சுதபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்
அமைந்துள்ள பிராண்டிக்ஸ் இந்தியா கம்பெனியின் 19000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். கம்பெனி வாயில்
முன்பு தர்ணா செய்து உட்கார்ந்தார்கள். கம்ப்யூட்டர் மீது பெரும்
நம்பிக்கை என்பதை விடவும் பக்தியே கொடிருப்பவரும் ஆளுயர லத்திகனைக் கண்டு பிடித்து
போலீசுகளின் கையில் கொடுத்து விவசாயிகளின், தொழிலாளர்களின் பல் போராட்டங்களின் மீது
ஏவி பெரும் ரத்தக்களறியை ஏற்படுத்திய வரலாற்றுக்குச் சொந்தக்காரரும் மோடியோடு சேர்ந்தே
ஸ்மார்ட்சிட்டி கனவைகாணும் நவீனருமான சந்திரபாபு நாயுடு இப்போராட்டத்தைக் கண்டு சகித்துக்கொள்ளாதவராக,
மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு உயர், நடுத்தர, கீழ் அதிகாரிகள், கிராமப்பஞ்சாயத்துத் தலைவர்கள், சுய உதவிக்குழுக்கள்,
தனது கட்சிக்காரர்கள் என அனைவரையும் களத்தில் இறக்கி தொழிலாளர்களை மிரட்டினார்,
போராட்டத்தை ஒடுக்க முனைந்தார். கர்நாடக காங்கிரஸ்
அரசும் இதே போன்ற நடவடிக்கையில்தான் இறங்கியது. பெங்களூரில் காங்கிரஸ்
அரசின் போலிஸ் மோசமான போராட்ட ஒடுக்குமுறையில் இறங்கியது. தொழிலாளர்களின்
போராட்டங்களை தொடக்க நிலையிலேயே கிள்ளி எறிவதில் பாரதீய ஜனதா, காங்கிரஸ், தெலுங்குதேசம் என அனைவரும் ஒரே அணியில் நின்றார்கள்.
பெங்களூரில் போராடிய
தொழிலாள்ர்களுடன் கலந்துவிட்ட சமூக விரோதிகள் பேருந்துகளை எரித்தது திட்டமிட்ட வகையில்
போராட்டத்தைச் சீர் குலைப்பதற்கே. இதனால் போலீஸ் தடியடி நடத்தியது.
அரசும் அடக்குமுறைக்கருவியான போலீசும் பெருமுதலாளிகளின் நலனுக்காவே
என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமானது.
பெங்களூரில்
ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் தொழிற்சாலையில் இத்தன்னெழுச்சியான போராட்டம் முதலில் வெடித்தது.
தொழிலாளர்கள் வெளியே வந்து மைசூர் சாலையில் மறியல் செய்தார்கள்.
80கி.மீ தொலைவில் பொம்மனஹள்ளியில் ஷாஹியின் மற்றொரு
தொழிற்சாலையின் தொழிலாளர்களும் வெளியேற செய்தி காட்டுத்தீயெனப் பரவியது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலைகளிலும் வீதிகளிலும் திரண்டார்கள்.
போலீசோடு சேர்ந்து கொண்டு தனியார் செக்யூரிட்டி ஆட்களும் தொழிலாளர்ககளை
லத்திகொண்டு தாக்கினார்கள். சில நூறுபேர்களை போலீஸ் கைதுசெய்தாலும்
மறுநாளும் போராட்டம் தீவிரம் அடைந்தது குறிப்பிடத்தக்க விசயமாக நிரந்தரத் தொழிலாளர்களுடன்
காண்ட்ராக்ட் தொழிலாளர்களும் இவ்வீதிப் போராட்டத்தில் இணைந்தார்கள்.
மார்க்சிஸ்ட்
கட்சியின் கர்நாடகா மாநிலச் செயலாளர் மீனாட்சி சுந்தரம்,
''இக் கோபாவேசப் போராட்டம் யாராலும் அறைகூவல் விடுக்கப்பட்ட ஒன்றல்ல,
தன்னெழுச்சியானது'' என்று கூறுகின்றார்.
பெங்களூரில் எந்த ஒரு தொழிலிலும் கடந்த 10 ஆண்டுகளில்
இப்படியான சக்தியான ஆவேசமானதொரு போராட்டம் நடந்ததில்லை என்றும் கூறுகின்றார்.
தாராளமயம்-தனியார் மயத்தின் பின்னணியில் சிறப்புப்
பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டபின் ஆயத்த ஆடைத்தொழிலாளர்களை மட்டுமல்ல, எந்தத்தொழிலிலும் எந்தத்தொழிலாளியையும் தொழிற்சங்கத்தில் இணைப்பதோ முடியாத
விசயமாகிப் போனதால் தொழிற்சங்க இயக்கம் தேய்ந்து சிதைந்ததை சி.ஐ.டி.யூ உள்ளிட்ட பல தொழிற்சங்கத்
தலைவர்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றார்கள்.
4
உழைக்கும்
பெண்கள் மிகப்பெரிய அளவில் வீதிகளில் திரண்டு, எந்தவொரு
அணி திரட்டப்பட்ட தொழிற்சங்கத்தின் அல்லது அமைப்பின் பின்னால் இல்லாமல் இரண்டுநாட்கன்
போலீஸ் அடக்குமுறையையும் தனியார் ரவுடிகளையும் எதிர்கொண்டு போராடியது 1990களுக்குப்பின் இதுவே முதன் முறையாக இருக்கக்கூடும்.
கட்டுரையின்
தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல் இரும்புத் தொழில், கார் உற்பத்தி, கத்தரிக்காய் தக்காளி விவசாயம் சூப்பர்
மார்க்கெட் சங்கிலி, மால்நடத்துவது,மது
தயாரிப்பது போல் டி.வி.சானல் நடத்துவது,
பத்திரிக்கைககள் நடத்துவதையும் கார்ப்பொரேட்டுகள் ஒரு தொழிலாக்கி விட்டதால்
பெங்களூர் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தை இடதுசாரிகளின் ஏடுகள் மட்டுமே வெளியிட்டுத்
தமது கடமையைச் செய்தன. பெருமுதலாளிகளின் டிவி சானல்கள்,
பத்திரிக்கைகள் சில பேருந்துகள் எரிகப்பட்டதை மட்டுமே செய்தியாக்கியதன் மூலம்
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை, குறிப்பாக மோடி அரசின் மோசடித்தனமான
அரசாணையின் கொடூரத்திற்கு எதிரானதே இப்போராட்டம் என்பதை திட்டமிட்டு இருட்டடிப்பு
செய்தன. போராட்டத்தின் இரண்டாவது நாள் பிராவிடன்ட் நிதி தொடர்பான தனது கொடுமையான ஆணையை
மோடி அரசு சத்தமின்றி திரும்ப பெற்றுக்கொண்டது. சாமான்ய மக்களின் வீரஞ்செறிந்த
போராட்டத்தின் விளைவாகவே மோடி அரசு தனது அரசாணையை திரும்ப பெற வேண்டியிருந்தது
என்பதை பெருமுதலாளிகளின் ஊடகங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதால் இதனையும்
ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. தனது எஜமானரான
இந்துத்துவா மோடிக்கு சாமானிய உழைக்கும் பெண்கள் கொடுத்த மிகப்பெரும் அடியை வெளியுலகுக்குக்
கொண்டு செல்ல கார்ப்பொரேட் ஊடகங்கள் ஒன்றும் அத்தனை அறிவீனமானவை.
5
இதே
போன்றதொரு போராட்டம், பெண்களே முக்கியப்பாத்திரம்
ஏற்ற ஒரு போராட்டம்¬ கடந்த 2015 செப்டம்பர்
மாதம் கேரளாவில் நடந்தது. அதுவும் கார்ப்பொரேட் ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டது.
ஆனால் இப்போராட்டம் குறித்து எதிர்மறையான- அதாவது
தொழிற்சங்க இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும்
குறிப்பாக இடதுசாரி அரசியலை கேள்விக்குள்ளாக்கும் திரிக்கப்பட்ட
செய்திகளை கேரளாவின் ஊடகங்கள் திட்டமிட்டு கேரளமக்கள் மத்தியில் பரப்பியதில் ஓரளவு வெற்றிபெற்றன என்பதைச் சொல்லத்தான் வேண்டும்.
மூணாறில்
உள்ள கண்ணன் தேவன் மலைத்தோட்டத் தொழிலாளர்களின் மகத்தான போராட்டம் அது.
அதாவது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம். தேவிகுளம் தாலுகாவில் உள்ள இத்தோட்டம் 1,36,600 ஏக்கர்
பரப்பளவுகொண்டது. இந்தியப் பெருமுதலாளியான டாடாவுக்குச் சொந்தமானது.
2005ம் ஆண்டு டாடா டீ (இப்போது டாடா க்ளோபல் பிவரேஜஸ்,
உலகின் இரண்டாவது பெரிய தேயிலைக் கம்பெனி) தனது
மூணாறு தோட்டங்களை தொழிலாளர்களுக்கு 'விற்பதாக' அறிவித்தது. அதாவது நிர்வாகத்தில தொழிலாளர்களும்
'பங்கு'பெறும் திட்டமாம். பெருமுதலாளியான டாடா அவ்வளவு
நல்லவரா? புதிய கம்பெனியில் 13,000 தொழிலாளர்கள் 'குட்டி' பங்குதாரர்களாக ஆனார்கள். ஆனால் கம்பெனியில் 28.52 சதவீதப்பங்குகள்
இப்போதும் டாடாக்கள் வசமே உள்ளன. இதன்றி 87.95 சதவீதப் பங்குகள் இப்போதும் டாடாநல அறக்குழுவுக்கும் கண்ணன் தேவன் மலைத் தோட்டக்
கம்பெனிக்கும் சொந்தமாகவே உள்ளன. உற்பத்தி செய்யப்படும் தேயிலையில்
ஒரு பங்கை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும் உரிமையும் டாடாக்கள் கையில் வைத்துள்ளனர்.
இதன்றி உள்ளூர் சந்தைகளில் தேயிலையின் விலையை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்களாக
டாடாக்கள் இருக்கிறார்கள்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில்
70 விழுக்காட்டினர் பெண்களே. கொழுந்து கிள்ளுவது
என்பது வெறுமனே கிள்ளுவதல்ல, லாவகம் வேண்டும். இதில் பெண்கள் பாரம்பரியமாகவே தேர்ந்தவர்கள் என்பதால் பறிக்கும் வேலை பெண்களுக்கும்,
களையெடுப்பது, மருந்துதெளிப்பது, உரம் வைப்பது போன்ற வேலைகள் ஆண்களுக்கும் ஆனவை. இத்தொழிலாளர்களில்
கேரளத்தைச் சேர்ந்தவர்களைக் காண்பது அரிது. அனைவரும் தமிழர்களே.
அதிகம் ஷெட்யூல்டு சாதி மக்களே. இவர்களது உறவுகள்
இப்போதும் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றார்கள்.
தொழிலாளர்
சட்டப்படி அவர்கள் ஒரு நாளைக்கு 20 கிலோ தேயிலை
பறித்தால் போதுமானது. ஆனால் 12 மணிநேரத்திற்கும்
அதிகமான வேலை வாங்கப்படும்.60 கிலோ, 100 கிலோ வரையும் பறிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். மூன்று
மாதங்களுக்கு 75கிலோ அரிசி (ஒரு குடும்பத்துக்கு)
தரப்படும், இதற்காக ஊதியத்தில் மாதம் ரூ.750
பிடிக்கப்படும். இது கிட்டத்தட்ட சந்தை விலைக்கு
ஈடாகும். ரேஷன் விலையைவிட மிக அதிகமாகும். பிரிட்டிஷ் காலத்திய அடிமைகளை அடைக்கும் கொடும் கொட்டகைகளே இவர்களுக்கு டாடா என்னும் பெருமுதலாளி
கொடுத்துள்ள வீடுகளாம். ஆண், பெண்,
தாய், தகப்பன், குழந்தைகள்
என அனைவரும் இதில்தான் படுத்துறங்க வேண்டும். சர்வதேசத் தொழிலாளர்
அமைப்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளாலும் தடை செய்யப்பட்டுள்ள
புற்றுநோய் உருவாக்க வல்ல அஸ்பெடாஸ் ஓடுகள்தாம் இங்கே வீட்டு ஓடுகளாம்.
கங்காணி
ஒருவரின் வாக்கு முறைப்படி ஓய்வு என்பது இல்லாத ஒன்று,
தேநீர் அருந்தும்போதுகூட ஒரு கையில் டம்ளரும் மறுகையில் இலை பறிப்பதும்
தொடரும். தமது வேலை நிமித்தம் தொடர்ச்சியான குனிதலால் பல பெண்கள்
கருப்பை பாதிக்கப்பட்டு கருப்பையையே இழந்திருக்கின்றார்கள்; தொடர்ச்சியான பூச்சி மருந்துகளோடு
ஆன புழக்கத்தால் ஆண்கள் விசத்தாக்குதல் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். மழைக்காலங்களில் இப்பூச்சிமருந்து நீரோடு கலந்து சமவெளியில் உள்ள ஊர்களின்
குடிநீரை உபயோகிப்பதற்குத் தகுதியற்றதாக ஆக்குகின்றது. ஏறத்தாழ
60 விழுக்காடு பங்குகள் தொழிலாளர்’களுக்கு எனச் சொல்லப்பட்டாலும் உண்மையில்
கம்பெனியின் கட்டுப்பாடு டாடாவிடமே உள்ளது. தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக
இருவர் இயக்குநர் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வது சும்மா பெயருக்கே, உண்மையில் அங்கு நடப்பது எதுவும் அவர்களுக்குப்புரியாது. கூட்டத்தில் தேநீர் அருந்திவிட்டு வருவார்கள்.
மே
2011இல் செய்து கொள்ளப்பட்ட ஊதிய ஒப்பந்தம் டிசம்பர் 31,
2014 உடன் முடிவுற்றது. அதிலிருந்து தொழிலாளர்கள் தொடர்ச்சியாக ஊதிய மாற்றம் கோரிவருகின்றார்கள்.
எட்டு சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. தோட்டத்
தொழிலாளர் கமிட்டியில தொழிற்சங்கங்கள், தேயிலை முதலாளிகள்,
அரசுத் தரப்பு என முத்தரப்பும் உள்ளன. 10ரூபாய்
ஊதிய உயர்வு அறிவித்தார்கள். 2013-2014க்கு 19 சதவீத போனஸ் வழங்கிய கண்ணன்தேவன் தோட்ட நிர்வாகம் 2014-15க்கு ஒரு தலைப்பட்சமாக 10 சதவீத போனஸ் அறிவித்த்து. 2014-2015
காலத்தில் நல்ல லாபம் ஈட்டியிருக்கின்ற முதலாளியின் அறிவிப்பு கொந்தளிப்பை
ஏற்படுத்தியது. எனவே கண்ணன்தேவன் தொழிலாளர்கள் ’மெதுவாக வேலை
செய்வது’ என்ற போராட்டத்தை நடத்தத் தொடங்கினார்கள்.
இதனை எதிர்கொள்ள 'லாக் அவுட்' செய்வோம் என டாடா நிர்வாகம் அச்சுறுத்தியது. லாக்அவுட்
என்பது பிரச்சினையை திசை திருப்பும் என்பதால் சி.ஐ.டி.யூ சங்கம் தலையிட்டு மெதுவாகச் செய்யும் போராட்டத்தைக்
கைவிடச் செய்தது.
ஏற்கனவே 2015 செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தத்தில்
தோட்டத்தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தார்கள். மறுநாள் 3ம் தேதி தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஊதிய உயர்வு, போனஸ் பிரச்னைக்காக வேலைநிறுத்தம்
தொடங்கினார்கள். 2015 செப்டம்பர் 5 அன்று
கண்ணன்தேவன் அலுவலகம் முன்பு சுமார்
50 பெண்கள் திரண்டு வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள்.
சற்று நேரத்தில் செய்தி பரவி மலையகம் எங்கிலும் உள்ள பெண் தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில்
இறங்கினார்கள். வேலை நிறுத்தம் தொடங்கிய மூன்று நாட்கள் கழித்தே
கேரள ஊடகங்கள் இது குறித்த செய்திகளை வெளியிட்டன.
எப்படிப்பட்ட செய்திகள்? கேரளாவின் தொழிற்சங்க
இயக்கங்களை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் புறக்கணித்துவிட்டதாகவும் புதிய அத்தியாயம்
எழுதப்பட்டுவிட்டதாகவும் ’மலையாள மனோரமா’ ஏடு கும்மாளம் போட்டது. கேரளா பின்தங்கி போகக் காரணமே இதுபோன்ற
வேலை நிறுத்தங்களும் தர்ணாக்களுமே என்று கொட்டை
எழுத்தில் பிரச்சாரம் செய்கின்ற ’மலையாளமனோராமா’, கண்ணன் தேவன்
போராட்டத்தைத் தனது போராட்டம்போல் சித்தரித்தது. உண்மையில் 2015 செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம் கேரளாவில் முழுஅளவு வெற்றிபெற்றதை ’மலையாளமனோரமா’
விரும்பவில்லை. ஏனெனில்
கேரளாவில் அது முழுஅளவு கடை அடைப்பாக மாறியது. தென்னை நார்த்
தொழிலாளர்கள், தலைச்சுமை, முந்திரி,
கைநெசவு, பீடி,கட்டுமானம்,
மோட்டார், லாட்டரி, அங்கன்வாடி
தொழிலாளர்களும், கேரள அரசுப் போக்குவரத்துத் துறை, ஃபாக்ட் உரத் தொழிற்சாலை ஊழியர்கள், கொச்சித் துறைமுகத்
தொழிலாளர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அன்றிருந்த மாநில காங்கிரஸ் அரசுக்கும்
மத்தியில் இருந்த பாஜக அரசுக்கும் எதிரான போராட்டங்களை மாநிலம் தழுவிய அளவில் நடத்தியபோதெல்லாம்
அதுபற்றிக் கண்டு கொள்ளாத அல்லது இதுபோன்ற போராட்டங்கள் மாநில வளர்ச்சியைப் பாதிப்பதாக
மட்டுமே விசத்தைக் கொட்டிய மலையாள மனோரமா உள்ளிட்ட ஏடுகள் மூணாறு தோட்டத் தொழிலாளர்கள்
போராட்டத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதன் நோக்கம் அது தன்னெழுச்சியாக வெடித்ததுதான்.
உண்மையில் இப்போராட்டம் திடீரென வெடிக்கவில்லை; நீண்ட கால காரணங்கள்
உள்நெருப்ப்பாக இல்லாமல் எந்த ஒரு போராட்டமும் குறிப்பாக வேலைநிறுத்தம் போன்ற
பெரும்போராட்டங்கள் திடீரென ஒரு காரணமும் இன்றி வெடிப்பதும் இல்லை. தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளை முதலாளிகள் + அரசாங்கம்
என்ற கூட்டணி திட்டமிட்டு இழுத்தடிப்பது தொழிலாளர்களைச் சோர்வடையச் செய்யும் தந்திரம்
மட்டுமின்றி தொழிற்சங்கத்தின்பால் தொழிலாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதறடிக்கச்
செய்வதும் தொழிற்சங்க இயக்கத்தை மழுங்கடித்து தேய்மானம் அடையச் செய்வதுமே ஆகும்.
இத்தகைய முதலாளித்துவ அரசியலுக்குத்
துணைபோவதே கார்ப்பொரேட் ஊடகங்களின் திட்டமிட்ட பணியாக குறிப்பாக 1990களுக்குப் பிறகு பார்க்கின்றோம். தொழிற்சங்க இயக்கத்தை
என்பதைவிடவும் இடதுசாரி அரசியலைச்சார்ந்த தொழிற்சங்க இயக்கத்தைக் கொச்சைப்படுத்தவதும்
பின்னுக்குத் தள்ளுவதும் 'மெய்ன்ஸ்ட்ரீம் மீடியா' என்று சொல்லப்படும் கார்ப்பொரேட்
மீடியாக்களின் திட்டமிட்ட அஜெண்டாவாக மாறியுள்ளது.
பெங்களூர்
ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் விசயத்திலும் மூணாறு தோட்டத் தொழிலாளர்கள் விசயத்திலும் நடந்தது
இதுவே.
கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான இளமரம் கரீம்,
''மூணாறு தோட்டத்தொழிலாளர் பிரச்னையில் தொடக்கம் முதலே சி.ஐ.டி .யூ தலையிட்டுவந்தது,
எர்ணாகுளத்திலும் திருவனந்தபுரத்திலும் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு
சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தலைவர்கள் களத்திற்கு நேரடியாகச் சென்றபோது தொழிலாளர்கள் அவர்களை
வரவேற்றார்கள். வி.எஸ்.அச்சுதானந்தன் போராட்டம் முடியும் வரை அவர்களுடன்தான் இருந்தார்” என்று சொல்கின்றார்.
6
பு.பொ.கொள்கையைப்புகுத்திய
நரசிம்மராவ், மன்மோஹன்சிங் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவரும்
அக்கொள்கைகள் வடிவெடுத்த காலத்தில் நெருங்கிப்பார்த்தவரும் மத்திய காங்கிரஸ்
அமைச்சரவையில் இருந்தவருமான ஜெய்ராம் ரமேஷ்
“To
the Brink and Back” என்ற நூலை எழுதினார். அவர் கூறுகின்றார்:
“பு.பொ.கொள்கைகளின் நேர்மறை அம்சங்கள் எனில் நுகர்பொருட்கள் இப்போது மக்களுக்கு
எளிதில் கிடைக்கின்றன; ஒரு தொலைபேசிக்காக ஒரு கேஸ் இணைபுக்காக ரயில்
டிக்கெட்டுக்காக நீண்டநேரம் காத்திருக்க
வேண்டியதில்லை. ஆனால் எதிர்மறையாக மக்களிடையே சமத்தும் இன்மை அதிகரித்துள்ளது,
கல்வி-பொது சுகாதாரம் ஆகியவை சீரழிந்துள்ளன. கல்விநிலையங்களின் எண்ணிக்கையும்
மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது உண்மைதான், ஆனால் கல்வியின் தரம்
தாழ்ந்துள்ளது. சுகாதாரத்துறையில் தனியார் பங்களிப்பு அதிகரித்துள்ளது உண்மைதான்,
ஆனால் அரசின் பொதுசுகாதார அமைப்பு (அதாவது சாமான்யக்குடிமக்களுக்கான மருத்துவம்
பெறும் உரிமை) சீரழிந்துள்ளது. உதாரணமாக ஹைதராபாத்தில் உலகத்தரம் வாய்ந்த
மருத்துவமனைகள் உள்ளன, உண்மைதான். ஆனால் அங்கிருந்து ஒரு அரைமணி நேரம் பயணம்
செய்தால் அரசுத்தொடக்கநிலை மருத்துவமனையில் டாக்டர்கள், நோயாளிகளின்
எண்ணிக்கையைவிடவும் பெருச்சாளிகள், எலிகள், பூனைகள், சிலந்திவலைகளைத்தான் நீங்கள்
பார்க்க முடியும்”. காங்கிரஸ்கட்சிக்காரான ஜெய்ராம்ரமேஷ் இந்த அளவுக்காவது
உண்மையைப் பேசினாரே என்று நாம் மகிழ்ச்சியடைய வேண்டியதுதான்.
பெங்களூர்
ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் வீதிப் போராட்டம் ஆகட்டும்,
மூணாறு போராட்டம் ஆகட்டும் பல்வேறு விசயங்கள் தெளிவாகின்றன.
1990களுக்குப் பிறகான புதிய பொருளாதாரக் கொள்கை, 90களுக்கு முன்பிருந்த 'அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள்'
என்ற வகையினர் அரசுக்கு ஆபத்தான அணியினர் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட
கொள்கை, எனவே எந்தெந்த வகையில் எல்லாம் தொழிலாளர்களை ஒன்று சேரவிடாமல்
தடுக்க முடியுமோ, ஏற்கனவே அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் அணிகளைச்
சிதைக்க முடியுமோ அதற்கான அத்தனை தந்திரங்களையும் செய்கின்றது. கட்டுரையில் தொடக்கத்தில் சொன்னபடி, வீதிகளிலும் சிறைகளிலும்
ரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற, பல விவாதங்களுக்குப்பிறகு நாடாளுமன்றத்தில்
சட்டவடிவாக்கப்பட்டுப் பெறப்பட்ட பல உரிமைகளை, யாரோ ஒரு அரசு
அதிகாரியின் ஒற்றைக்கையெழுத்திட்ட அரசு ஆணைகள் மூலம் (Executive Orders) அதிரடியாக நீக்குவதில்
காங்கிரஸ் பாஜக இரண்டும் ஒருமித்த கூட்டாளிகளாகவே நீடிக்கின்றன,
இவ்விசயத்தில் இவ்விரண்டு கட்சிகளிடம் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியாது. இதற்கு
மாநிலக் கட்சிகளான தெலுங்குதேசம், திமுக, அதிமுக, பாமக, திரிணாமுல் காங்கிரஸ்
உள்ளிட்ட கட்சிகள் துணைபோவதற்குத் தயங்குவதில்லை.
ஏற்கனவே
முறையாக அணிதிரட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் இயங்கக்கூடிய அரசுத்துறை,
அரசுத்துறைசார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைப்பளுவைக்
குறைப்பது, அதாவது இவ்வேலைகளை தனியார் தொழிற்சாலைகளுக்கு மாற்றுவது
அல்லது இத்தொழில்களின் இறுதி உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி
செய்து கொள்வது, இதன் விளைவாக செயற்கையான உற்பத்திக் குறைவு
மற்றும் செயற்கையான வேலைப்பளு இன்மையைக் காரணம்காட்டித் தொடர்ந்து ஆட்குறைப்புச் செய்வது,
இறுதியில் அத்தொழிற்சாலைகளை மூடிவிடுவது. இதற்கு
மிகச்சிறந்த உதாரணங்கள் பாரத் அலுமினியம் கம்பெனி, ஹிந்துஸ்தான்
டெலிபிரிண்டர்ஸ், பெங்களூரில் இருந்த இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ்,
ஹெச்.எம்.டி.யின் பல யூனிட்கள், தமிழக அரசின் சிறந்த கனரகத் தொழில்
பொதுத்துறை நிறுவனமான சதர்ன் ஸ்ட்ரச்சுரல் லிமிடெட் ஆகியவை.
நிரந்தரத்
தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது
ஒருபுறம்,
கணிணிமயம், தானியங்கிமயம் என்ற பெயரில் பல பத்துப்பேர்கள்
செய்த வேலையை ஒரு சில தொழிலாளிகளை மட்டுமே வைத்துக் கொண்டு தொழிலை நடத்துவது மறுபுறம்,
இத்தகைய தொழிற்கலாச்சாரப் பின்னணியில்தான் உலக கோடீசுவரர்கள் வரிசையில்
கடந்த இரண்டு பத்தாண்டுகளில் இந்தியாவில் பல தொழிலதிபர்களும் இடம் பெற்றள்ளார்கள் என்பதைத்
தொழிற்சங்க இயக்கம் கவனிக்காமல் இல்லைதான்.
சமீபத்திய
உதாரணமாக சேலத்தில் உள்ள மத்திய அரசின் உருக்காலைத் தொழிற்சாலையை தனியாருக்கு
விற்றுவிட மோடி அரசு தீவிரமாக முயன்று வருகின்றது. 4,000 ஏக்கர் நிலப்பரப்பில் 181
கோடி ரூபாய் மூலதனத்தில் 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உருக்காலை தொழிலாளர்களின்
உழைப்பால் இன்றைய தேதியில் 3,000 கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்ந்துள்ளது. ஆலை
இருக்கும் இடமான 2,500 ஏக்கர், வெற்றிடமான 1,500 ஏக்கர், ஏற்காட்டில் 10 ஏக்கர்,
குடியிருப்பு, பொதுமருத்துவமனை, பொது நூலகம், பொதுக்கல்விச்சாலை ஆகியனவும்
காலியிடத்தில் உள்ள தேக்கு, சந்தன மரங்கள் ஆகிய சொத்துக்களையும் சேர்த்துக்கணக்கிட்டால் இன்றைய
மதிப்பில் 15,000 கோடிக்கும் அதிகம் என ஆலையின் தொழிற்சங்கத்தினர்
கூறுகின்றார்கள். ஆலையை நட்டத்தில் இயங்குகின்றது என்று பொய்க்கணக்கு காட்டுவதன்
மூலம் அடிமாட்டு விலைக்கு மோடிக்கு பிரியமான ஒரு முதலாளிக்கு இந்த ஆலையை அதன்
சொத்துக்கள் எல்லாவற்றுடனும் விற்க முடியும், அத்தோடு அங்கே இயங்கிவரும்
தொழிற்சங்க இயக்கத்தையும் ஒழித்துவிடமுடியும்.
இந்த
வரிசையில் கேந்திரமான பல பாதுகாப்புத் துறைத் தொழிற்சாலைகளும் காத்திருக்கின்றன. பாதுகாப்புத்துறையில் அம்பானியின் ரிலையன்ஸ், டாடா, அதானி, லார்சன் அண்ட்
டப்ரோ போன்ற பெருமுதலாளிகளையும் சர்வதேச பெருமுதலாளிகளையும் அனுமதிப்பதென மோடி
அரசு கொள்கை முடிவு எடுத்துவிட்டது. இதன்
மூலம் அரசின் தொழிற்சாலைகளை மூடிவிடுவது, அங்கே ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சங்க
இயக்கத்தை அழிப்பது என இரண்டு நோக்கங்களை அரசால் நிறைவேற்ற முடியும். ஒரு சில லட்சங்கள் கொடுத்து செட்டில்மெண்ட் செய்யப்பட்ட
தொழிலாளர்கள் தம் தொழிலையும் மாதாந்திர வருமானத்தையும் இழப்பதோடு இத் தொழிற்சாலைகளில்
இயங்கிவந்த உயிரோட்டமான தொழிற்சங்க இயக்கமும் சாகடிக்கப்படுகின்றது என்பதுதான் மையமான
விசயம். ஆட்குறைப்பு, ஆலைமூடல் என்பது வெறும் ஊதியம்,
ப்ராவிடண்ட் நிதி, ஓய்வூதியம் போன்ற பணப்பலன் சார்ந்த விசயம் மட்டுமே அல்ல. அணிதிரட்டப்பட்ட தொழிலாளிவர்க்கம் எந்த ஒரு
நாட்டின் பாட்டாளிவர்க்க அரசியல் இயக்கத்துக்கும் அடிப்படையான ஒன்று என்பதை
இந்திய-சர்வதேச முதலாளித்துவம் நன்றாகவே புரிந்துவைத்துள்ளது. அத்தகைய
அணிதிரட்டப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தையும் தொழிலாளிவர்க்கத்தையும் அழிப்பதில் சர்வதேச-இந்திய முதலாளித்துவம் கடந்த இருபது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிபெற்றுள்ளதை
ஒப்புக்கொள்ள வேண்டும்.
தாராளமய,
தனியார்மய அடிப்படையில் ஆன புதிய பொருளாதாரக் கொள்கையில் அரசுசார்ந்த தொழில்களில் மேற்படி
தேய்மானம் எனில் தவிர்க்க இயலாத வகையில் அதன் இயற்கையான தொடர்ச்சியாக இணையாக முறைசாராத
அணிதிரட்டப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கை பல கோடிகளாக இந்த
25 ஆண்டுகளில் வளர்ந்துவிட்டது கண்கூடு.
உதாரணமாக முன்னர் குறிப்பிட்ட சேலம் உருக்காலையில் நிரந்தரத்தொழிலாளர்களின்
எண்ணிக்கை 1,200; ஒப்பந்த தொழிலாளர்கள் அதாவது நிரந்தரம் அற்ற தொழிலாளர்களின்
எண்ணிக்கை 850. பொதுத்துறையான நெய்வேலி
சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளரின் எண்ணிக்கை
ஏறத்தாழ 10,000. மத்திய அரசின்
தொலைதொடர்புத்துறையான BSNLஇல் ஒப்பந்தத்தொழிலாளர்களின்
எண்ணிக்கை பல்லாயிரம். முறையாக நிறுவப்பட்ட அரசு-அரசுசார் நிறுவனங்கள்
மூடப்பட்டபின், தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு இருக்கின்ற
தொழிலாளர் சட்டங்களை, உரிமைகளை மதிக்கும் என்பதற்கு பெங்களூரும்,
மூணாறும் நல்ல உதாரணங்கள். தனியார் தொழிற்சாலைகளில்
ஏன் தொழிற்சங்க இயக்கம் கடந்த 25 வருடங்களில் தோல்வியடைந்துள்ளது
என்பதற்கான காரணங்கள் இந்த இரண்டு உதாரணங்களிலும் மலிந்து கிடக்கின்றன. புதியவகை 'காண்ட்ராக்ட் தொழில் முறை' என்பதை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. அரசு
நிறுவனங்களில் நிரந்தர ஊழீயர்கள் எண்ணிக்கைக்கு இணையாக அல்லது அதிகமாக காண்ட்ராக்ட்
ஊழியர்களின் எண்ணிக்கை இருக்கின்றது. இது எதிர் காலத்தில் இன்னும்
அதிகமாகும். ஒரு வகையில் நிரந்தரத் தொழிலாளர்களை அச்சுறுத்தும்
நடவடிக்கையே இது. இணையாக
காண்ட்ராக்ட் தொழிலாளர்களையும் தொடர்ந்து ஒரு அச்சுறுத்தலின்கீழ் வைத்திருக்கும் தந்திரமும்
அடங்கியுள்ளது. ஆக நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன்
மூலம் ஏற்கனவே இத்தொழில்களில் இயங்கிவரும் அணி திரட்டப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தைத்
தேய்மானத்துக்கு இட்டுச்செல்வது. இணையாக நிரந்தரமற்ற காண்ட்ராக்ட்
தொழிலாளர்கள் எவ்வகையிலும் ஒரு தொழிற்சங்க இயக்கத்தின் கீழ் திரண்டுவிடாமல் இருப்பதை
உத்தரவாதம் செய்வது எனப் புதிய பொருளாதாரக் கொள்கை இரண்டு மாங்காய்களை அடிக்கின்றது.
இத்தனை
அழுத்தங்கள் அடக்கு முறைகளையும் மீறிப் போராட்டங்கள் வெடிக்கும் போது ஹரியானா
மாநிலத்தில் மாருதி சுசுகி தொழிற்சாலையில் நிகழ்ந்ததைப்போல் அரசு நிர்வாகம் தனது அடக்கு
முறைக் கருவியான போலீசை ஏவி ரத்தக் களறியை உருவாக்கி அடக்குகின்றது.
மாருதி சுசுகியின் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஜாமீனில் வெளிவர
முடியாத பல பிரிவுகளில் சிறைகளில் இப்போதும் அடைக்கப்பட்டுள்ளார்கள். சாலையில் டிராபிக் சிக்கலில் சிக்கிக் கொண்டதால் எரிச்சலுற்ற நீதிபதிகள் தாமாகவே
முன்வந்து ’பொதுநலன்’ கருதி வழக்குகளைத் தொடர்ந்து கொள்வதைப் பார்க்கின்ற இந்திய சமூகத்தால்,
மாருதி சுசுகித் தொழிலாளர்கள்பால் நீதிமன்றங்கள் எத்தகைய அணுகுமுறையை
மேற்கொள்கின்றன என்பதையும் தெளிவாகவே பார்க்க முடிகின்றது.
ஹரியானாவில்
ஹீரோ ஹோண்டாத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுபயங்கரமான போலீஸ் அடக்குமுறையும்,
சில வருடங்களுக்கு முன் ஆந்திராவில் தெருவில் இறங்கிப் போராடிய விவசாயிகள்
மீது ஆள் உயர லத்திகளைக் கொண்டு தாக்கி மண்டைகளை உடைத்த தெலுங்குத்தேசம் கட்சியின்
சந்திரபாபு நாயுடுவின் போலீஸ் அடக்குமுறையும் திட்டமிட்டவை, போராட
எத்தனிக்கின்ற தொழிலாளர்களை எச்சரிக்கை செய்து அச்சுறுத்துபவை.
இதற்குச்
சமமாக தொழிலாளர்களின் போராட்ட உணர்வை, தொழிற்சங்கக்
கோபாவேச உணர்வை மட்டுப்படுத்தவும் முழுங்கடிக்கவும் அரசு நடத்தை விதிகளைக் காரணம்
காட்டி மிரட்டுவது, தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு பணிபுரியும் ஊழியர்களை
பழிவாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளோடு,
பல்வேறு திசைதிருப்பல் வேலைகளையும் அரசு நிர்வாகம் செய்வதற்கு
தயங்குவதில்லை. அரசு ஊழியர்களுக்கு அரசு நிர்வாகமே யோகா நிபுணர்கள், மனவள நிபுணர்கள், ஆற்றல் வல்லுநர்கள் போன்ற பல பெயர்களில்
ஆர்.எஸ்.எஸ் சாமியார்களைக் கொண்டு பயிற்சி நடத்துகின்றது. 'சைவ'
உணவின் அருமைபெருமைகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. ’மனஅமைதி’ அதாவது போராட்ட உணர்வுகளோ அநீதி கண்டு ஆவேசப்படும் உணர்வுகளோ
அற்ற ’கொந்தளிப்பற்ற அமைதியான சாத்வீக மனநிலை’ கொண்ட ப்ராய்லர்கோழிகளாக அரசு
ஊழியர்களை திட்டமிட்டு மாற்றும் வேலை சமீப காலங்களில் தீவிரமாக நடக்கின்றது. அரசு ஊழியர்களின்
பொழுதுபோக்கு மன்றங்கள் மனமகிழ் மன்றங்கள் ஆகியன இத்திட்டமிட்ட பிரச்சாரத்துக்குத் துணை போகின்றன. விஞ்ஞானம், மருத்துவம் என்ற பெயரில் தெருவோர காயகல்ப
லேகிய ரேஞ்சுக்கு யோகாவிற்பனை முடுக்கிவிடப்படுகின்றது.
'மதச்சாற்பற்ற' இந்திய நாட்டின் ராணுவம், ஆர்எஸ் எஸ் சாமியாரான ரவிசங்கரின் யமுனை நதிப்பிரச்சாரக்
கூட்டத்துக்கு எடுபிடி வேலை செய்ய ஏவப்பட்டது. வாழும்கலை என்ற பெயரில் யமுனை நதியின் பல்லுயிர்ப்பெருக்கமும்
சுற்றுச்சூழலும் சாகடிக்கப்பட்டது. பாரத்மாதாவின் மிலிட்டரி அதிகாரிகளும் மிலிட்டரி
லாரிகளும் சீருடைகளை அணிந்து ஆர்.எஸ்.எஸ்
சாமியாருக்காக விசுவாசமான சங்பரிவார் ஊழியர்களாக மாறி களத்தில் இறங்கி வேலை செய்ததை
ஏதோ தேச பக்தியின் முக்கிய அம்சமாக மீடியாக்கள் செய்தியாக்கின எனில், ஒருங்கிணைக்கப்பட்ட - அணிதிரட்டப்பட்ட மத்தியத் தொழிற்சங்கங்களும்,
அரசியல் கட்சிகளும் கூட இந்த இந்துத்துவா அரசியல் பிரச்சாரத்தை எதிர்த்து
பெரிய அளவில் எதிர்ப்புக் குரல் ஏதும் எழுப்பவில்லை என்பதை எப்படிப் பொருள் கொள்வது?
அரசு அலுவலகங்கள் ஆர்.எஸ்.எஸ்சின் மடமாக மாற்றப்படுவதை தொழிற்சங்கங்கள் இப்போதும் உணர்ந்ததாக
தெரியவில்லை. இது அணாபைசா விவகாரம் அல்ல,
தத்துவம் சார்ந்த பிரச்னை என்பதைத் தொழிற்சங்கங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
தொழிற்சங்க இயக்கத்தின் தேய்மானத்தின் ஒரு பகுதிக் காரணமாக அரசின் இந்த
போராட்ட மழுங்கடிப்புத் திட்டம் இருப்பதை தொழிற்சங்கங்கள் உணரவேண்டிய கட்டத்தில்தான்
இப்போதும் நிலைமை உள்ளது. இந்துத்துவா அரசியல்+கார்ப்பொரேட் முதலாளிகள்+அரசு எந்திரம் என்ற கூட்டணி
இங்கே வெற்றி பெற்றுள்ளது.
தொழிற்சங்க
இயக்கமும் அணி திரட்டப்பட்டத் தொழிலாளர்கள் என்ற கோடிக்கால் பூதமும் ஒன்றிணையும்போது
அது அடிப்படையான சமூக பொருளாதாரக் கேள்விகளை எழுப்புகின்ற அடிப்படை சமூக
மாற்றத்திற்கு இட்டுச்செல்கின்ற பவுதீக சக்தியாக மாறும் என்பதை முதலாளித்துவம் நன்கு
உணர்ந்துள்ளது.
பெங்களூரும்
மூணாறும் ஒருவிசயத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன. எத்தகைய அழுத்தமான சிக்கலான புறச்சூழலிலும் தொழிலாளர்களின் நியாயமான அறச்சீற்றமும்
கொடுமைகண்டுபொங்கும் நியாயமான கோபாவேச உணர்வும் மங்கிப் போவதில்லை.
முதலாளித்துவம்
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான எல்லாவிதமான தந்திரங்களையும் எல்லாக் காலத்திலும்
செய்து கொண்டேதான் இருக்கின்றது. எல்லாவிதமான புதிய
புதிய வன்முறைகைளைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் தொழிலாளர்களின் அறச்சீற்றத்தையும் நியாயத்துக்கான கோபாவேச உணர்வையும்
எவ்வாறு ஒரு பவுதீக சக்தியாக மாற்றுவது என்பதற்கான வழிமுறைகளை, குறிப்பாக
1990களுக்குப் பிறகான சூழலில், கண்டறிய வேண்டியது இந்தியத் தொழிற்சங்க
இயக்கத்தின் இடதுசாரி இயக்கங்களின் கடமையாக இருக்கின்றது.
***************************************************************************
’புதுவிசை’ டிசம்பர் 2016 இதழில் வெளியான கட்டுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக