வியாழன், டிசம்பர் 01, 2016

கேடிஎம்மும் எங்கள் கருணைமிகு அரசரும்

காசில்லாதேசக்கனவு காணும் எங்கள் கருணைமிகு அரசர்
ஒன்பது விரல்களை இதுவரை வெட்டியுள்ளார்

அறிவிலிகள் பலர் ரகசியமாகப் புலம்பிக்கொண்டு திரிகின்றார்கள்

அறிவிலிகளும் அடாவடிப்பேர்வழிகளும்
புரிந்தும் புரியாதபடி நடிக்கின்றார்கள்,
கேடிஎம் (கஞ்சி டிஸ்பர்சிங் மெஷின்) எந்திரத்தில்
கடவுச்சொல்லை அழுத்த வசதியாக
நுனியில் சிப் பொருத்தப்பட்டுள்ள
ஒருவிரலை விட்டுவைத்துள்ளார் என்பது
எங்கள் அரசரின் கருணையை அன்றி வேறெதைக் காட்டுகின்றது?


வெட்டப்பட்ட விரல்கள்?
ஃப்ளூரசெண்ட் காவி பூசப்பட்டு
எல்லையில் எதிரிகளைத்தடுக்கும் வேலியாக நடப்பட்டுள்ளது,
120 கோடிx9!
எப்போதும் அதிர்ச்சியில் அடிபட்டுப்போகும் எதிரி
இந்த முறையும் அதுபோலவே அடிபட்டுப்போனதாக
சற்றுமுன்வந்த செய்தி சொல்கின்றது
சற்றுப்பின்வரப்போகும் செய்தியும்
இனி எப்போதோ வரப்போகும் செய்தியும்
இதையே சொல்லும் என்பதும் தெரிந்ததே
இன்றைய ஆயுதஎழுத்தின் நீட்சியும் இதைப்பற்றியதே
அரசரின் ராஜதந்திர அறிவுக்கூர்மை நீடு வாழ்க!


கேடிஎம் பராமரிப்புப்பொறியாளர்களின் விரல்கள்
தற்காலிகமாக விட்டுவைக்கப்பட்டுள்ளன
கேடிஎம் தொலைக்கட்டுப்படுத்து பராமரிப்புக்கான
(remote maintenance)
ட்ரம்ப்புடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் மறுநொடியில்
அவர்களின் விரல்களும் வெட்டப்படும்
அதுவரையில் அரசருடன் சுயமி (selfie) எடுத்துக்கொள்ளும்
பேறுபெற்றவர்களாகின்றார்கள் பொறியாளர்கள்
அரசரின் கணிப்பொறி அறிவுக்கூர்மை நீடு வாழ்க!


ஒரு நாளைக்கு இருமுறை
கேடிஎம்மின் வெளித்தள்ளுதலை (output) உபயோகிக்க
வாயுடன் நாக்கையும்
ஒரு நாளைக்கு இருமுறை
குடலின் வெளித்தள்ளுதலை அனுமதிக்க
குதபாகத்தையும்
கருணை கூர்ந்து விட்டுவைத்துள்ளார் அரசர்


விரல்நுனியைப்போலவே குதநுனியிலும்
சிப் பொருத்தியுள்ளார் கருணைமிகு எம் அரசர்
இருமுறைக்குமேல் மலம்கழிக்க முயற்சிப்போருக்கு
அடுத்த இருவேளைகள் பசியெடுக்காவண்ணம்
உடலியக்கத்தில் மாறுதல்கள் அல்ல,
முன்னேற்றங்களைச் செய்துள்ளார்
கருணைமிகு எம் அரசர்
அரசரின் உடற்கூற்றறிவுக்கூர்மை நீடு வாழ்க!


நாளைக்கு இருமுறை 120 கோடி ஜனங்களும்
கேடிஎம் எந்திரம் நோக்கிப்படையெடுப்பதால்
உண்டாகும் சாலைநெரிசல் சச்சரவு சண்டைகள்
கருணைமிகு அரசரால் துல்லியமாகத் தீர்க்கப்பட்டுள்ளன


குடிமக்களின் நெற்றியில் இலக்கம் இடப்பட்டும்
இலக்கத்துக்கு ஏற்ப நேரம் பிரிக்கப்பட்டும்
நூறுநூறு பேராக மக்களை அனுமதிக்கும்
கருணைமிகு அரசரின் ஆணை நேற்று வெளியிடப்பட்டது,
தலையெழுத்து கால்எழுத்து என்பதெல்லாம் இனியும் இல்லை
எல்லாமே நெற்றியிலக்கம்தான் அரசரின் ஆட்சியில்,
அரசரின் சர்ஜிகல் ஆபரேஷன் அறிவுக்கூர்மை நீடு வாழ்க!


குரல்நாணை நேற்று வெட்டியெறிந்துள்ளார் அரசர்
பேசியும் கோசமிட்டும் ஷக்தியை வீண்செய்ய வேண்டாம்
தேஷம் மேலும் முன்னேற அச் ஷக்தியை பயன்படுத்துவீராக!
அரசரின் தேஷ்பக்தியும்
மக்களின் தேஷ்ஷக்தியும் போற்றி போற்றி!
அரசரின் பொருளாதாரவிஞ்ஞான அறிவுக்கூர்மை நீடு வாழ்க!


உழைப்பே உயர்வு தரும்
உழைக்காத அந்த சில நிமிடங்களில் மட்டும்
அளவுக்கு மிஞ்சினால் அதுவும் நஞ்சு என்ற
ஆதார் அட்டையின் நியதி அடிப்படையில்
கட்டுப்பாட்டுடன் கூடிய உடலுறவு கொள்ளவும்
கருணைமிகு அரசர் அனுமதித்துள்ளார்
அரசரின் குடும்பவாழ்க்கை குறித்த அறிவுக்கூர்மை நீடு வாழ்க!


இதனை எழுதியவன் தட்டச்சுப்பலகையில்
எத்தனை விரல்கள் கொண்டு இயங்கினான் என
நீங்கள் கேட்பது கேட்கின்றது


எனது நெற்றியிலக்கத்தின்படி
கேடிஎம் செல்வதற்கான எனது நேரம் நெருங்குகின்றது

நேரம் தவறவிட்டவனுக்கு என்ன தண்டனை என்பது குறித்து
இதுநாள்வரை என்னை உயிருடன் வாழ அனுமதித்துள்ள
பத்துவிரல்களும் உள்ள எங்கள் கருணைமிகு அரசர்
மந்திரிசபையைக்கூட்டி விவாதித்துவருவதாக...

கருத்துகள் இல்லை: