கமலஹாசன் அவர்களுக்கு...
1) தீவிரவாதிகள் என்றால் துப்பாக்கி தூக்கி அடுத்தவனை சுட்டு ரத்தம் வரவைப்பவன் என்ற இந்திய/தமிழ் சமூகத்தின் பொதுப்புத்தியையே நீங்களூம் உன்னைப்போல் ஒருவனில் முன்வைத்தீர்கள். நன்றாக சவரம் செய்து கோட்டு சூட்டணிந்து இலக்கணம் தவறாத ஆங்கிலம் பேசி கடப்பாரை தூக்கி வழிபாட்டுத்தலத்தை இடித்த (லாஹூர் கல்லூரியில் படித்த) எல்.கே.அத்வானி, நியூக்ளியர் ஃபிசிசிஸ்ட் டாக்டர் முரளிமனோஹர் ஜோஷி போன்றோர் தீவிரவாதிகள் இல்லையா? விடுதலை பெற்ற இந்தியாவில் முதல்முதலாக ஆர்கனைஸ் செய்யப்பட்ட கூட்டத்தை திரட்டி ஒரு வழிபாட்டுத்தலத்தை இடித்த கூட்டத்தின் தலைவர் அத்வானி தீவிரவாதி இல்லையா? தேசப்பிரிவினைக்குப் பின் மிகப்பெரும் மதக்கலவரங்களுக்கு விதை போட்டது பாபர் மசூதி இடிப்பு எனில் அதற்கு காரணமான ஆர் எஸ் எஸ், பாஜக தீவிரவாத இயக்கங்கள் இல்லையா? அதன் தலைவர்கள் தீவிரவாதிகள் இல்லையா? வரலாற்று அடிப்படையில் திரைப்படம் எடுப்பதாக சொல்லும் நீங்கள் பாபர் மசூதி இடிப்பு குறித்து தனது அடுத்த படத்தை எடுக்க வேண்டும். ஒரு நாள் நள்ளிரவில் எப்படி மசூதிக்குள் ராமர் சிலை வந்தது என்பதில் இருந்து தொடங்க வேண்டும். படத்தை எடுத்துவிட்டு உத்தவ் தாக்ரேயிடம் போட்டுக்காண்பித்துவிட்டு வெளியிடக்கூடாது (பம்பாய் படத்தை சூப்பர் சென்சார் பால் தாக்ரேயிடம் காண்பித்து அப்ரூவல் வாங்கிய பின் மணிரத்னம் வெளியிட்டது போல).
2) 1990களில் புதிய பொருளாதாரம் என்ற பெயரில் இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்க- ஐரோப்பிய நலன்களுக்கு அடகுவைத்த மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி செய்ததும் செய்வதும் தீவிரவாதம் இல்லையா? விவசாய நாடான இந்தியாவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது இதே கொள்கைகள்தான் எனில் இக்கொள்கையை வடிவமைத்துப்புகுத்திய மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி தீவிரவாதிகள் இல்லையா? ஜனவரி 1 முதல் வால்மார்ட் போன்ற ராட்ச்சர்களை இந்தியாவுக்குள் அனுமதித்து நமது தெருக்களின் சில்லறை வியாபாரிகளை அழிப்பது இக்கொள்கைதான் எனில் இக்கொள்கையை வடிவமைத்துப்புகுத்திய மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி தீவிரவாதிகள் இல்லையா?
3) சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில்தான் தான் படங்கள் எடுப்பதாக நீங்கள் கூறுகின்றீர்களாம். உங்களது உன்னைப்போல் ஒருவனின் வரலாற்று நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்கியது நேர்மையான செயலா? ’ஆரிஃப் பாய், பெஸ்ட் பேக்கரியில் நம்ம ஆளுங்களை கொளுத்திட்டாங்க, அதுனாலதான் நான் தீவிரவாதி ஆனேன்’ என்று அமானுல்லா கூறுவது புரட்டு அல்லவா? 2002இல் நடந்த பெஸ்ட் பேக்கரி கொடுமைக்கு 1993இல் மும்பையில் அல்லது 1998இல் கோவையில் அமானுல்லா வெடிகுண்டு வைத்தான் என்பது நீங்கள் செய்த வரலாற்றுப்புரட்டு அன்றி வேறென்ன? ஆர் எஸ் எஸ்-ம் பாஜக-வும் இதைத்தானே செய்கின்றார்கள்? என்ன பெரிதாக நீங்கள் வரலாறு பேசுகின்றீர்கள்? அதுவும் உங்கள் படம் உள்ளிட்ட தமிழ், இந்திப்படங்களில் இந்திய முஸ்லிம்களில் தீவிரவாதிகளாக இருப்பவர்கள் பாகிஸ்தானிய உளவாளிகளாக இருப்பதும் தேஷபக்தி கொண்ட ‘நல்ல’ முஸ்லிம்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக இருந்து அதே ‘முஸ்லிம்’ தீவிரவாதிகளை கண்டுபிடித்து உதைப்பதும் எப்படி சார்? விஜயகாந்தும் அர்ஜூனும் இதைத்தானே தங்கள் படங்களில் செய்தார்கள்? குருதிப்புனலிலும் (அர்ஜுனின் பெயர் அப்பாஸ்) உன்னைப்போலிலும் இப்படித்தானே? தனக்கு சாதகமான ஒத்திசைவு கொண்டவராக இருந்ததால்தானே அப்துல்கலாமை ’இவரு ரொம்ப நல்லவரு’ அதாவது ’நல்ல முஸ்லிம்’ என்று ஆர் எஸ் எஸ்-ம் பாஜகவும் ஜனாதிபதி அந்தஸ்துக்கு உயர்த்தின? தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள்தான் என்ற இந்திய/தமிழ் சமூகத்தின் பொதுப்புத்தியில் முதலீடு செய்துதான் விஜயகாந்தும் அர்ஜூனும் லாபம் சம்பாதித்தார்கள், நீங்களும் உன்னைப்போலொருவனில் லாபம் பார்த்தீர்கள், இதில் என்ன உங்களிடம் பெரிய வரலாறும் அதற்கு ஆதாரமும் வேண்டிக்கிடக்கின்றது? (ஆர்.கே.செல்வமணி என்ற மிகப்பெரும் அறிவாளி டைரக்டர் புதியதலைமுறை விவாதத்தில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இப்படி சொன்னார்: ‘என் நண்பர் யார் தெரியுமா, அ.செ.இப்ராஹிம் ராவுத்தர்!’. அதாவது இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பெரீய்ய்ய உதாரணமாம்! இப்படிப்பட்ட அறிவாளிகள்தான் உங்களோடு இருக்கும் தமிழ்ச்சினிமா இயக்குனர்களாம்!)
4) ‘தீவிரவாதிகளை அழித்துவிட்டால் தீவிரவாதம் ஒழிந்துவிடும்’ என்ற உங்களது உயரிய ‘அறிவார்ந்த’ தத்துவத்தை ஏற்றுக்கொள்ளலாமா? அதுவும் அமெரிக்காவும் ஆர் எஸ் எஸ்-பாஜகவும் சொல்கின்ற ’இஸ்லாமிய தீவிரவாதம்’ குறித்து மட்டும்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் பேசுவீர்களா? அப்படியெனில் ‘இந்துதீவிரவாதிகளை ஒழித்துவிட்டால் இந்து தீவிரவாதம் ஒழிந்துவிடும்’ என்ற ஃபார்முலாவை நீங்கள் முன்வைப்பீர்களா? மெக்கா மசூதி, மாலேஹாவ்ன், சம்ஜௌதா ரயில் போன்ற வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபட்ட இந்துதீவிரவாத அமைப்புக்கள் குறித்து நீங்கள் பேச வேண்டும்; தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பிகள், பொய் (ஒட்டு) தாடிகள் ஆகியவை காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட்து குறித்தும், ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பிகள், பொய் (ஒட்டு) தாடிகளுக்கு என்ன வேலை என்பது குறித்தும் நீங்கள் படம் எடுக்க வேண்டும். புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில் நாதுராம் கோட்சேயின் சாம்பல் இப்போதும் கரைக்கப்படாமல் கலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது ஏன் என்பது குறித்து நீங்கள் படம் எடுக்க வேண்டும்.
5) நீங்கள் பெரிய படிப்பாளி, படைப்பாளி. காந்தஹார், மசூத் அசார், முல்லா ஒமர், பின்லேடன் குறித்தெல்லாம் படம் எடுக்கும் நீங்கள், தமிழ்நாட்டுக்குள்ளேயே தாமிரபரணி தமிழர் படுகொலை, உத்தப்புரத்தில் தீண்டாமை சுவர் கட்டியது-அதை இடித்தது, ஒரு மாசத்துக்கு முன் தர்மபுரியில் இந்து மதத்தை சார்ந்த வன்னியர்கள் அதே இந்து மதத்தை சார்ந்த தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தியது, முப்பது மைல் தொலைவில் உள்ள இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே ராணுவம் படுகொலை செய்தது போன்றவையும் வரலாற்று நிகழ்வுகள்தான், நீங்கள் இவற்றையும் திரைப்படமாக எடுக்க வேண்டும். உங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் தேவர் சாதி மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே என்ன பிரச்னை என்பது குறித்தும், தேவர் குருபூஜை என்றால் துப்பாக்கியோடு காவல்காக்கும் தமிழக அரசு இம்மானுவேல் சேகரன் குருபூஜை என்று சொன்னாலே துப்பாக்கி சூடு நடத்துவது ஏன் என்பது குறித்தும் திரைப்படமாக எடுக்க வேண்டும். தேவைப்படும் எனில் இந்த நிகழ்வுகள் குறித்து உங்களுக்கு வரலாற்று ஆதாரங்களை கொடுத்து உதவ நான் தயார்.
6) நீங்கள் பெரிய படிப்பாளி, படைப்பாளி. காந்தஹார், மசூத் அசார், முல்லா ஒமர், பின்லேடன் குறித்தெல்லாம் படம் எடுக்கும் நீங்கள், ‘ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக நாங்கள் சொன்னது பொய்’ என்று அமெரிக்கா சொன்னதையும், அப்படியானால் அமெரிக்கா அங்கே படையெடுத்து சதாம் உசேன் உட்பட பல லட்சம் மக்களை படுகொலைகள் செய்தது புல் புடுங்கவா என்பதையும் படமாக எடுக்க வேண்டும். படைப்பாளியான உங்களுக்கு நானோ பிறரோ கட்டளை போட முடியாது, உங்களை நான் வேண்டிக் கொள்ளலாம், அவ்வளவே.
7)இறுதியாக: விஸ்வரூபம் நான் இன்னும் பார்க்கவில்லை, எனவே கருத்து சொல்லவில்லை. விஸ்வரூபம் திரைக்கு வர வேண்டும் என்பதே என் ஆசை. கமலஹாசன் யார் என்பதை இஸ்லாமிய சமூகம் மட்டுமல்ல, தமிழ்ச்சமூகம் மொத்தமும் புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?