
ஷெல் கம்பெனி கடந்த 2008ஆம் வருடத்தில், ஒரு நொடிக்கு 700 பவுண்டு (சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்) சம்பாதித்ததாக அதன் கணக்கே சொல்கின்றது. அதே நேரத்தில் எழுபது விழுக்காடு நைஜீரிய மக்களின் ஒருநாள் வருமானம் வெறும் நூறு ரூபாய்க்கு சமானம்! இதையே நாம் இப்படியும் சொல்லலாம்: நைஜீரிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி விற்றால் ஒரு நொடிக்கு 700 பவுண்டு சம்பாதிக்கலாம். 1997 கணக்குப்படி மட்டும் ஒருநாளைக்கு 20 லட்சம் பேரல் கச்சாஎண்ணெய் நைஜீரியாவின் மடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
ஷெல் உட்பட்ட பன்னாட்டு எண்ணெய் சுரண்டல் கம்பெனிகள், பெட்ரோலை உறிஞ்சி எடுத்து விற்று சம்பாதித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நைஜீரிய மக்களுக்கு செய்த 'நன்மைகள்' வருமாறு: எண்ணெய்க்கசிவு, கழிவுகளால் மண்வளம், நீர்வளம் வீழ்ச்சி, மீனினம் அழிப்பு, சாயம், மீன்பிடித்தொழில் அழிப்பு, மண்ணா¢ப்பு, காடு அழிப்பு, அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் வீழ்ச்சி, நச்சுப்பொருட்கள் வெளியேற்றம், சுற்றுச்சூழல் அழிப்பு, நீர், நிலம், காற்று என அனைத்து வாழ்வாதாரங்களும் அழிப்பு, எனவே மக்களின் வாழ்க்கை சீரழிவு, வேலையின்மை, வருமான இழப்பு, வறுமை, நோய், விபச்சாரம், மக்கள்தொகைப்பெருக்கம், கூடவே அநாதைக்குழந்தைகள் அதிகா¢ப்பு, அரசுநிர்வாக சீரழிவு, லஞ்சலாவண்யம்...என நீள்கின்றது.
எண்ணெய்க்கம்பெனிகளின் இந்த சூறையாடல் ஏதோ ஒருநாள் திடீர் என தொடங்கியது அல்ல; உலகப்போக்கிரியான அமெரிக்கா, அதன் ஏவல் நாயான இஸ்ரேல், ஜப்பான், ஐரோப்பியப் பொருளாதாரக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் என கடல்கடந்த கொள்ளையர்களின் ஏவல் நாயாக தொடர்ந்து இருந்த நைஜீரிய அரசுகள், வெறும் பொம்மை அரசுகளாக மட்டுமே இருந்ததும், அரசும் சர்வதேச முதலாளிகளும் சர்வதேச முதலாளித்துவம் விதித்த புனிதமான கோட்பாட்டை - "கூட்டுச்சேர்; தேச எல்லை, மொழி, இனம் பாராமல் கொள்ளை அடி" - அப்படியே பின்பற்றியதும்தான் நைஜீரியா சீரழிந்துபோனதற்கு காரணம். அதே சர்வதேச விதிகளின் அடுத்த விதியான "ஈவு இரக்கம் அனைத்தையும் குழிதோண்டிப்புதை: எதிர்க்குரல்களை ஒடுக்கு, அடிப்படை மனித உரிமைகளை மீறு, அரசுபயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடு, ராணுவத்தையும் போலிசையும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்து, தேவைப்பட்டால் உயிரை எடுத்துவிடு" போன்ற அனைத்தையும் ஒன்றுவிடாமல் நைஜீரிய அரசும் சர்வதேச முதலாளிகளும் திட்டமிட்டு நடத்தினார்கள்.
ஷெல் உள்ளிட்ட அந்நிய எண்ணெய்க்கம்பெனிகளின் புண்ணியத்தில் நைஜர் டெல்டாவின் மக்களும் இயற்கை வளங்களும் நாசமாகிக்கொண்டு வந்ததை பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கடந்த பல பத்தாண்டுகளாக அம்பலப்படுத்தி வந்தார்கள். பல புத்தகங்களாகவும் அறிக்கைகளாகவும் இணையதளங்களில் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன, அவற்றில் ஒரு சில மட்டும் கீழே:
1) எண்ணெய் தோண்டி எடுக்கும்போது நிலத்திலிருந்து வெளிப்படும் இயற்கை எரிவாயுவை அப்படியே 24 மணிநேரமும் எரிப்பது. இதனால் 24 மணி நேரமும் அப்பகுதி தாங்கமுடியாத வெப்பத்துடன் தகித்தால் மனிதர்கள் எவ்வாறு வாழ்வது? கூடவே இந்த வாயு, சூறாவளி போன்ற பெரும்சத்தத்துடன் கெட்டநாற்றத்தையும் வெளிவிடுகின்றது. இப்போதுள்ள தொழினுட்பத்தின்படி இந்த வாயுவை வெளியேற்றாமல் வேறு வகையில் பயன்படுத்தலாம்; சேமித்து வேறு பல தொழில்களுக்கும், உள்ளூர் மக்களின் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்; இல்லையேல் மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும், இந்த முறையை பல நாடுகள் பின்பற்றி வருகின்றன. ஆனால் இவ்வாறு செய்வதற்கு ஆகும் செலவை விடவும் இப்படி எரிப்பதால் அரசுக்கு தரப்படும் அபராதத்தொகை குறைவு என்பதால் கம்பெனிகள் எரிக்கின்றன. விவேக் ஒரு படத்தில் சொல்வதுபோல் "ஏண்டா, அட்வான்சா அபராதம் கட்டிட்டு ரேப் பண்றீங்களாடா?". 2008 டிசம்பர் வரை இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட எர்¢க்கும் இடங்கள் இருந்ததாக தகவல் உள்ளது. உள்ளூர் மக்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. 24 மணிநேரமும் வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்றவற்றால் தட்பவெப்பநிலை நாசமாகி விட்டது. குறைந்த பட்சம் மனிதன் அனுபவிக்கின்ற இயற்கையான இருள் சூழ்ந்த இரவு என்ற உரிமையைக்கூட நைஜா£ய மக்கள் இழந்துவிட்டார்கள்.
2) அமிலமழைப்பொழிவால் குடிநீர் கெட்டுவிட்டது; விவசாயம் நாசமாகி விட்டது. துத்தநாகத்தால் ஆன வீட்டுக்கூரைகள் 7 முதல் 10 வருடங்கள் உழைக்கும், ஆனால் இப்போது அமிலமழையால் இரண்டுவருடங்களில் நாசமாகிவிடுகின்றன.
3) எண்ணெய்க்குழாய்க்கசிவுதான் நைஜர் டெல்டாவின் மிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு காரணம். மக்கள் வசிக்கும் வீடுகளின் முன்னால், தெருக்கள் நடுவே, வயல்களின் நடுவே என்று திரும்பிய திசை தோறும் எண்ணெய்க்குழாய்களே என்றால் மனிதன் எப்படி வாழ்வது? பல குழாய்கள் நாற்பது வருடங்களுக்கும் மேற்பட்டவை. இதனால் எண்ணெய்க்கசிவு மிக சாதாரணமான ஒன்று... உதாரணமாக 1998 ஜூன் மாதம் ஊட்டிகுவே1 பகுதியில் ஷெல்லின் 16 அங்குலக்குழாயில் இருந்து மாதக்கணக்கில் கசிந்த கச்சாஎண்ணெய் மட்டும் எட்டு லட்சம் பேரல்கள். அதே 1998 அக்டோபரில் ஜெஸ்சி கிராமத்தின் ஊடாக ஓடும் குழாய் வெடித்ததில் எழுநூறு பேருக்கும் அதிகமானோர், பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், செத்து மடிந்தனர். கடந்த ஐம்பது வருடங்களில் 15 லட்சம் பேரல் எண்ணெய் இதுபோல் நைஜர் டெல்டா எங்கும் கசிந்து ஓடி நாசம் செய்ததாக தகவல் கூறுகின்றது.
...3