வியாழன், ஜனவரி 15, 2026

குறைந்த பட்ச கூலிச்சட்டமும் பாண்டி விளையாடிய குலுக்கல் சீட்டும்

குறைந்த பட்ச கூலி சட்டம் Minimum Wages Act, 1948 என்று ஒரு சட்டம் உள்ளது. இந்தியாவில்தான். 

எட்டாவது வகுப்புக்கு மேலே படிக்க முடியாமல் பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்தும் பல கோடி மக்கள் நிறைந்த நாடு இது. விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன பின்னாலும் இதுதான் யதார்த்தம். ஆசாத் கி அம்ருத் எல்லாம் மேடையில் வாய் கிழிக்கவும் பிலெக்ஸ் போர்ட் வைக்கவும் மட்டுமே பயன்படும். எட்டாவது வகுப்பை தாண்டி பத்தாவது வகுப்பை முடித்து ப்ளஸ் ஒன்று வகுப்பை தொடர முடியாமல் அத்துடன் வெளியேறும் பல கோடி மாணவர்களும் இருக்கின்றார்கள். எட்டாவதும் இல்லாமல் ப்ளஸ் டூவும் இல்லாமல் இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளவர்கள் இவர்கள். 

இவர்களின் எதிர்காலம் கருதி ஏதாவது ஒரு கைத்தொழிலை இவர்கள் கற்றுக்கொண்டால்நல்லது என்று 1950களின் தொடக்கத்தில் அன்று இருந்த ஒன்றிய அரசு திட்டமிட்டதால் ஐ டி ஐ எனப்படும் கைவினை தொழில்சார் பயிற்சிப்பள்ளிகள் நாடெங்கும் உருவாக்கப்பட்டன. ஏறத்தாழ 130க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி தரப்படுகிறது. எட்டாவது முதல் பன்னிரெண்டாவது வகுப்பு தேறியவர்கள் பயிற்சி பெற தகுதி படைத்தவர்கள். சான்றிதழ் பெற்று வருபவர்கள் தம் வாழ்க்கைக்கான குறைந்தபட்ச வருவாயை தேடிக்கொள்ள முடியும் என்பதுதான் ஐ டி ஐ படிப்பின் சிறப்பு. 

... ...

என்னதான் ஒரு தொழிற்சாலையில் நாணயமாக நேரத்தை வீணாக்காமல் உழைத்தாலும் முதலாளி என்பவனுக்கு லாபம் ஒன்றுதான் குறிக்கோள். அவன் வீசி எறியும் சில்லறைகள்தான் அந்த தொழிலாளியின் உழைப்புக்கான கூலி. பல நேரங்களில் வீசி எறியாமலும் போகலாம்.

இந்தியத்தொழிலாளர்கள் இப்படி முதலாளிகளால் ஏமாற்றப்படுவார்கள் என்று தெரிந்ததால்தான் K G R Chowdhury என்பவர் 'ஒவ்வொரு தொழிலுக்கும் ஆன குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்கான வாரியங்களை உருவாக்க வேண்டும்' என்று 1920இலேயே அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு பரிந்துரைத்தார். அதன் தொடர்ச்சியாக பலவேறு கூட்டங்கள், அரசுகள், கமிட்டிகள், தொழிற்சங்கங்களின் போராட்டங்கள், பரிந்துரைகள், பேச்சுவார்த்தைகள் என தொடர்ச்சியாக தொய்வின்றி ஒரு நீண்ட இயக்கம் நடைபெற்றது, நடைபெறுகின்றது. இதன் விளைவுதான் அல்லது பலன்தான் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் வெவ்வேறு வகையான தொழில்களுக்கு இதுதான் குறைந்தபட்சகூலி என்று நிர்ணயம் செய்கின்றன, அதற்கான பஞ்சப்படியும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட தொழிலாளிக்கு employees provident fund, ESI வசதிகள் அளிக்கப்படும். 

... .... ...

இந்த சட்டத்தின்படி மாநகராட்சி, முனிசிபலிட்டி, இவை அல்லாத பிற பகுதிகள் என மூன்று மண்டலங்களாக zones a, b and c தொழில் செய்யும் பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன, அதற்கொப்ப ஊதியத்தில் சிறிது வேறுபாடு உள்ளது.  ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் பஞ்சப்படி பரிசீலனை செய்யப்படும், அதாவது உயர்த்தப்படும். தொழிலாளர்கள் unskilled, semiskilled / supervisor, clerk/skilled, highly skilled என்று தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உதாரணமாக 1.10.2022 முதல் மண்டலம் Aயில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

unskilled 454 ரூ,  semiskilled / supervisor 495 ரூ, clerk/skilled 539 ரூ, highly skilled 596 ரூ.

காவலாளியின் தினசரி ஊதியம் மண்டலவாரியாக 940, 866, 788 என்றும், தரையை கூட்டி சுத்தம் செய்யும் பணியாளருக்கு 711, 595, 477 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதாவது இதன் பொருள் என்னவெனில் 454 ரூபாய் தினக்கூலி பெறும் ஒரு தொழிலாளி அந்த 454 ரூபாயில் (25 வேலை நாட்கள் எனில் மாத ஊதியம் ரூ.11350) தன் மனைவி, இரண்டு பிள்ளைகள் இருந்தால் நான்கு பேர் அந்த 454 ரூபாய்க்குள் தமது ஒட்டுமொத்த குடும்ப செலவுகளையும் சமாளித்துக்கொள்ள வேண்டும். உணவு, உடை, பள்ளி கல்லூரி கல்விச்செலவு, போக்குவரத்து (இதில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் என்று புரிந்துகொள்க), பண்டிகை கால செலவுகள், எதிர்பாராத செலவுகள் ஆன குடும்ப விழாக்கள் போன்றவை என அனைத்தும் அடங்கும்.

Organised sector எனப்படும் அணித்திரட்டப்பட்ட உழைப்பாளர் திரள் ஆன அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், மேற்படி குறைந்தபட்ச ஊதியத்துக்குள் வராத (அதனினும் அதிக ஊதியம் பெறும்) தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தவிர பல கோடி உழைப்பாளர்களை அடக்கிய மிகப்பெரும்பான்மை இந்திய சமூகம் இந்த குறைந்தபட்ச ஊதிய வரம்புக்குள்தான் வாழ்க்கையை நடத்துகின்றது. இதுதான் யதார்த்தம்.

... ...

இதுதான் இன்றைய யதார்த்தம் எனில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பின் ஒன்றிய அரசு வெளியிட்ட  2000 ரூபாய் தாள் யாருக்கு என்ற கேள்வி நியாயமானது. அதாவது ஒரு நாளைக்கு 454 ரூபாய் வருமானமே உள்ள ஒரு தொழிலாளிக்கு இரண்டு 200 ரூபாய் தாளும்,  மீதி 54 ரூபாய்க்கு 10 ரூபாய், 5 ரூபாய் தாள் அல்லது நாணயங்களே தேவையானவை, போதுமானவை. அன்று demonetization அறிவிக்கப்பட்ட பின் ஏ டி எம் எந்திரங்கள் எல்லாவற்றிலும் 2000 ரூ தாள்கள் மட்டுமே அடுக்கப்பட்டு இருந்தன என்பதையும் இப்போது அந்த 2000 ரூ தாளை எங்கும் பார்க்க முடியவில்லை என்பதையும் இணைத்துப் பார்த்தால் அவை யாருக்காக அச்சிடப்பட்டன, இப்போது யாரால் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன என்பதை புரிந்துகொள்ள பெரிய அரசியல் பொருளாதார மேதைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

.. ...

கறுப்பு பணம் புரளும் ஆகப்பெரிய தொழில் என்பது சினிமா தொழில் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் இது தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என்ற அளவில்தான் கடந்த காலங்களில் இருந்தது. அதாவது எத்தனை கோடிகள் செலவு செய்து படங்களை தயாரித்து வெளியிட்டாலும் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை ஒரு காலத்தில் 75 பைசா,  1, 2, 5, 10 ரூபாய் என்று இருந்து பின் 10, 20, 40, 50 என்பதை தாண்டி விற்றது இல்லை, படம் பார்க்க வரும் மக்களின் தலையில் அநியாயமாக டிக்கெட் விலையை சுமத்தி கொள்ளை அடித்தது இல்லை.

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் புதிய கலாச்சாரம் ஒன்று உருவாகி கேள்வி கேட்பார் இன்றி வளர்ந்து வருகிறது. பொங்கல், தீபாவளி அன்று அதிகாலை காட்சி என்ற பெயரில் டிக்கெட் விலை 1000, 2000 என்று அடிக்கப்படும் பெருங்கொள்ளைக்கு வரம்பே இல்லை. சாதாரண காலங்களிலும் டிக்கெட் விலை 200, வண்டி பார்க்கிங் 100, காப்பி 50, பாப் கார்ன் 100 என்று தியேட்டர்காரர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவு எதுவுமில்லை. அதாவது ஒரு நாள் குறைந்த பட்ச கூலி ஆன (ஒரு குடும்பமே வாழ வேண்டிய) 454 ரூபாய்க்கு சமம் அல்லது அதிகம்.

இந்த லட்சணத்தில் தாய் தகப்பன் வருமானத்தில் நாயகர்களுக்கு கட் அவுட், மாலை, பால் அபிஷேகம், தவறி விழுந்து சாவு எல்லாம் அநாகரிகத்தின் உச்சக்கட்டம். சமூகத்தின் அறிவு மட்டமும் கலாச்சார மட்டமும் உயர்ந்து வருவதை சில பத்தாண்டுகள் இடைவெளியில் உணர முடியும். எம் ஜி ஆர் காலத்தில் கூட இந்த அளவு சீர்கேட்டை, சீரழிவை நான் கண்டதில்லை.

... ...

கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். ஒரு தீபாவளி அன்று மதுரை நியூ சினிமாவில் ரிலீஸ் ஆன எம் ஜி ஆர் நடித்த சிரித்து வாழ வேண்டும் என்ற படத்தை பார்க்க என் பக்கத்து வீட்டு குடும்பமும் என் அம்மாவுடன் நானும் செல்ல திட்டமிட்டோம். வீட்டில் பெரிய ஆண்கள் யாரும் வரவில்லை. பெண்கள் வரும் முன் பக்கத்து வீட்டு பாண்டியும் நானும் சென்று டிக்கெட் எடுக்க வேண்டும் என்று திட்டம். அவன் என்னை விட வயதில் மூத்தவன். தியேட்டர் வாசலில் சிவாஜி, பத்மினி, எம் ஜி ஆர், மஞ்சுளா என்று  சீட்டு போட்டு குலுக்கிக்கொண்டு இருந்தார்கள். எனக்கு அது பற்றி அப்போது ஒன்றும் தெரியாது. டிக்கெட் எடுக்க கொடுத்து இருந்த பணத்தில் இருந்து (மொத்தமே 5 ரூபாய்க்கு மேல் இருந்திருக்காது) பாண்டி 50 பைசா வைத்து விளையாடினான். அவனுக்கு ஒரு ரூபாய் கிடைத்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பாண்டி இப்போது 2 ரூபாய் வைத்து விளையாடினான். மொத்தமும் போனது. பாண்டி திருதிரு என முழித்தான். பணம் காணாமல் போய்விட்டது என்று அவன் அம்மாவிடம் பொய் சொன்னான்.

இப்போது சினிமா தியேட்டர்காரர்களும் அரசாங்கமும் சேர்ந்து மூணு சீட்டு விளையாடுகின்றார்கள்.

.

15.1.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக