1919இல் நடந்த சம்பவம்
சாதத் ஹசன் மாண்டோ
தமிழில்: மு. இக்பால் அகமது
“முஸ்லிம், ஹிந்து, சீக்கியர் என அனைவருமே காந்திஜியை உயர்ந்த இடத்தில் வைத்து மஹாத்மா என்று கொண்டாடினார்கள். அவரைக் கைது செய்துவிட்டார்கள் என்ற செய்தி லாஹூரை எட்டியதுமே ஒட்டுமொத்தக் கடைகளும் மூடப்பட்டன. அம்ரித்சரில் அநேகமாக முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்டது.
“அம்ரித்சரில் இருந்து டாக்டர் சத்யபால், டாக்டர் கிச்லூ 2 இருவரையும் வெளியேற்றுவதற்கான ஆணைகளை ஏப்ரல் ஒன்பதாம் தேதி மாலையே டெபுடி கமிசனர் பெற்றுக் கொண்டபோதும் அதை உடனடியாக நடைமுறைப்படுத்த அவர் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் அம்ரித்சரில் நடந்து விடாது என்று அவர் நம்பினார். அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இதுவரையிலும் அமைதியாகவே நடந்துள்ளன; வன்முறை எதுவும் இதுவரை இல்லை. நான் பார்த்ததைத்தான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அன்று ராமநவமி தினம். ஊர்வலமும் நடத்தப்பட்டது, ஆனால் அரசு நிர்வாகத்தின் கட்டளையை மீறிச் செயல்பட ஒருவருக்கும் துணிவில்லை. ஆனால் இந்த சர் மைக்கேல் இருக்கிறாரே, பித்துப்பிடித்த நிலைக்குப் போனார். பிரிட்டிஷ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான போராட்டங்களில் இறங்குவதற்கான மஹாத்மா காந்தியின் சமிக்ஞைக்காகவே இந்தத் தலைவர்கள் காத்திருப்பதாகவும், இந்த ஊர்வலங்கள், போராட்டங்களுக்குப் பின்னால் பெரிய சதி இருப்பதாகவும் எண்ணிப் பயந்துபோன மைக்கேல், டெபுடி கமிசனரின் நம்பிக்கையைப் புறந்தள்ளினார்.
“டாக்டர் சத்யபால், டாக்டர் கிச்லூ இருவரும் கைது செய்யப்பட்ட செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. மோசமான ஏதோ ஒன்று நடக்கப் போவதாக ஒவ்வொருவரும் பதட்டம் அடைந்தார்கள். மக்கள் அனைவரிடமும் உணர்ச்சிக் கொந்தளிப்பு காணப்பட்டது. ஒட்டுமொத்த நகரமும் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது; நகரமெங்கும் மயான அமைதியே நிலவியது. மேலோட்டமாக அமைதியாகத் தெரிந்தாலும் கீழே பெரும் ஆக்ரோச உணர்ச்சி ஓடிக் கொண்டுதான் இருந்தது. மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டார்கள். டெபுடி கமிசனர் பஹதூரை நேரில் சந்தித்துத் தமது அன்புக்குரிய தலைவர்கள் மீது விதிக்கப்பட்ட தடையாணையை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள ஊர்வலமாகச் செல்வதென முடிவுசெய்தார்கள். ஆனால், சகோதரரே, மனுப்போட்டு நிர்வாகத்தை அசையச் செய்யும் நாட்கள் அல்லவே அவை!? சர் மைக்கேலின் உருவத்தில் ஒரு கொடூரன்தான் அன்று பஞ்சாபின் தலைமை நிர்வாகியாக இருந்தான், அவன்தான் மனுவைப் பரிசீலனை செய்வானா? நடக்காது. மாறாக மக்கள் இப்படித் திரளுவதே சட்டத்தை மீறிய செயல் என்று அறிவித்தான்.
“விடுதலைப்போராட்டக்களத்தின் மிகப்பெரிய மையங்களில் அம்ரித்சரும் ஒன்று. ஜாலியன்வாலாபாக்கின் காயங்களைப் பெருமை மிக்க பரிசாக தன் உடலில் ஏந்திக் கொண்ட நகரம், இன்று என்ன நிலையில் இருக்கிறது பாருங்கள்! சரி, அந்தக் கொடுமையான கதையைப் பேச வேண்டாம், விடுங்கள். என்றும் நம் இதயத்தில் ஆழமாகப் படிந்து போன நிகழ்வு. ஐந்து வருடங்களுக்கு முன் இந்தப் பெருமை மிக்க நகரத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட கோரச்சம்பவங்களுக்குக் காரணமான பிரிட்டிஷ்காரர்களை மக்கள் தூற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சகோதரரே, உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் அங்கே சிந்தப்பட்ட குருதி நமது கரங்களிலும் கரையாகப் படிந்துள்ளது என்று சொல்வேன். சரி, அதை விடுங்கள்…
“பெரிய அதிகாரிகள், பிரிட்டிஷ் அரசுக்குச் சலாம் போட்டு வாழும் அடிமைகள் யாவரும் வசிக்கும் சிவில் லைன்ஸில்தான் டெபுடி கமிசனரின் பங்களாவும் இருந்தது. நீங்கள் அம்ரித்சருக்குச் சென்றிருப்பீர்கள் எனில் நகரத்தையும் இந்த சிவில் லைன்ஸ் குடியிருப்பையும் இணைக்கும் பாலம் ஒன்றைப் பார்த்திருப்பீர்கள். பாலத்தைக் கடந்தால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தமக்காகவே உருவாக்கிக் கொண்ட சொர்க்கமான மால் என்னும் கடை வீதியைப் பார்ப்பீர்கள்.
“ஊர்வலம் ஹால் கேட்டுக்கு அருகில் வந்தபோது பிரிட்டிஷ் குதிரைப்படையினர் காத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஊர்வலம் வந்தவர்கள் அதைக் கண்டு அஞ்சவில்லை. எவ்வளவு ஆக்ரோசமாக இருந்தார்கள் என்று என்னால் சொல்லத் தொடங்கவும் முடியவில்லை. ஆனால் ஒன்று, ஒருவர் கையிலும் ஒரு குச்சி கூட இல்லை, ஆயுதங்கள் ஏதுமற்ற கூட்டம். அவர்கள் வந்த நோக்கம் ஒன்றுதான் – டாக்டர் சத்யபால், டாக்டர் கிச்லூ இருவரையும் நிபந்தனை ஏதுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளிப்பதே. ஊர்வலம் பாலத்தை நெருங்கியது. தம்மை நெருங்கியவுடன் குதிரைப்படை வெள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அவர்கள் சில டஜன் வீரர்கள்தான், ஊர்வலமோ பல நூறு பேர் கொண்டது, ஆனால் துப்பாக்கி ரவைகளுக்கு முன்னால் எதுவும் நிற்காது அல்லவா? கற்பனை செய்ய முடியாத குழப்பம் அங்கே ஏற்பட்டது. சிலர் மீது துப்பாக்கி ரவைகள் பாய்ந்தன, பலர் கூட்டத்தினரின் காலடியில் விழுந்து நசுங்கினார்கள்.
“வலது பக்கத்தில் ஒரு நாற்றம் பிடித்த சாக்கடை ஓரம் நின்று கொண்டு இருந்தேன். கூட்டம் என்னைச் சாக்கடையில் தள்ளி விட்டது. துப்பாக்கிச்சூடு நின்றபின் நான் வெளியே எழுந்து வந்தேன். மக்கள் சிதறிக் கிடந்தார்கள். குண்டடி பட்டவர்கள் சாலையில் வீழ்ந்து கிடக்க, வெள்ளைக்காரர்கள் அவர்களைப் பார்த்து நகைத்துக்கொண்டு இருந்தார்கள்.
“தொலைதூரத்தில் இருந்து கொடூரமான ஒரு சத்தம் கேட்டது, யாரோ அலறுவது போல. சாக்கடையைக் கடந்து ஜாஹிரா பீர் நினைவுச் சின்னத்தைக் கடந்து ஹால் கேட்டுக்கு வந்தேன். கேட்டின் மேலே இருந்த பெரிய கடிகாரத்தின் மீது கற்களை எறிந்து கொண்டிருந்தது ஒரு இளைஞர் கூட்டம். முப்பது, நாற்பது பேர் இருந்தார்கள். கடுமையான கோபத்தில் இருந்தார்கள். கடிகாரத்தின் கண்ணாடி உடைந்து தரையில் விழ, ஒருவன் சத்தம் போட்டான், ‘வாங்க, ராணியோட சிலையை உடைப்போம்!’.
“இன்னொருவன் சொன்னான், ‘இல்லை, போலீஸ் க்வாட்டர்ஸ்க்கு தீ வைப்போம்’.
‘பேங்குகளை கொளுத்துவோமா?’
“நான்காவது இளைஞன் சொன்னான், ‘இருங்க! அதெல்லாம் தேவையில்லை. பாலத்துக்குப் போவோம், வெள்ளைக்காரய்ங்களை கவனிப்போம்’.
“அந்தப்பையனை எனக்குத் தெரியும்; தைலா குஞ்சார். நல்ல உயரமான கட்டுமஸ்தான அழகான பையன். அவனது உண்மையான பெயர் முஹம்மத் டுஃபைல். ஆனால் அவன் அம்மா ஒரு வேசிங்கிறதால அவனை குஞ்சார்ன்னு கூப்பிடுவாங்க. சின்ன வயதில் இருந்தே குடி, சூதாட்டம் என்று கெட்டுப் போனவன். அவனுடைய இரண்டு சகோதரிகள் ஆன ஷம்ஷத், அல்மாஸ் இரண்டு பேரும் மிக அழகான வேசிகள் அப்போது. ஷம்ஷத்துக்கு அப்படி ஒரு அழகான குரல் அமைந்திருந்தது. அவளுடைய முஜ்ரா3வுக்கென்றே கொழுப்பெடுத்த பணக்காரர்கள் வெளியூர்களில் இருந்தெல்லாம் வருவார்கள். முஹம்மதை சகோதரிகள் கை கழுவி இருந்தார்கள்.
“அவன் பேசுவதைக் கூட்டம் கேட்பதாக இல்லை. ராணியின் சிலையை நோக்கி நகர்ந்தார்கள். ‘இது வேண்டாத வேலை, என்னுடன் வாருங்கள். அப்பாவிகளைக் கொலை செய்த வெள்ளைக்காரர்களை ஒரு கை பார்ப்போம். எல்லாரும் சேர்ந்து கழுத்தை நெறிப்போம். வாங்க’ என்றான்.
“சிலர் சிலையை உடைக்கச் செல்ல, மீதி இருந்தவர்கள் தைலாவுடன் போனார்கள். எனக்குத் தெரியும், இவர்கள் சாகப் போகிறார்கள். நீருற்றுக்குப் பக்கத்தில் மறைந்திருந்த நான் தைலாவை அழைத்தேன், ‘தைலா, போகாதே, உனக்கும் நண்பர்களுக்கும் இது ஆபத்து, வேண்டாம்’ என்றேன்.
“தைலா ஒரு மாதிரியாக சிரித்துக்கொண்டு சொன்னான், ‘வெள்ளைக்காரய்ங்களோட குண்டு தைலாவை ஒண்ணும் புடுங்க முடியாதுன்னு தைலா சொல்லப் போறான்’. தனது நண்பர்கள் பக்கம் திரும்பிச் சொன்னான், ‘உங்களுக்கு பயமா இருந்துச்சுன்னா திரும்பிப் போய்க்கிட்டே இருங்க’. தலைவன் அச்சமின்றி முன்னேறுகிறான், மற்றவர்களும் தொடர்ந்தார்கள்.
“… பாலத்தின் பக்கச்சுவர் தொடங்கும் இருபதடிக்குப் பின்னால் குதிரை மேல் இரண்டு வெள்ளைக்காரர்கள் காவலில் இருந்தார்கள். தைலா பாலத்தை நெருங்குகிறான், கோஷம் இடுகிறான், ஒரு துப்பாக்கி வெடித்தது. தைலா கீழே சாய்ந்து விட்டான் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒன்றுமே நடக்காததுபோல் தைலா முன்னேறுகிறான். பின்னால் வந்த அவனது சகாக்கள் தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். திரும்பி நின்று ‘ஓடாதீர்கள், வாருங்கள்!’ என்று தைலா சத்தமிடுகிறான்.
“அவன் என்னைப் பார்க்கிறான், உடனே வெள்ளைக்காரர்கள் பக்கம் திரும்பியவாறே முதுகுப்பக்கம் கையைக் கொண்டு போகிறான். தூரத்தில் இருந்தாலும் அவனது சட்டையில் படிந்துள்ள குருதிக்கரையை என்னால் பார்க்க முடிந்தது. அடிபட்ட புலிபோல முன்னேறுகிறான். அடுத்த துப்பாக்கிச்சூடு. தைலா தடுமாறினாலும் ஒரு குதிரை வீரன் மீது பாய்ந்தான். ஒரு விநாடிதான், வெள்ளைக்காரன் தரையில் கிடந்தான், அவன் மேலே தைலா. நடப்பதை நம்ப முடியாமல் பார்த்த மற்றொரு வெள்ளைக்காரன் சம்பவ இடத்துக்கு தன் குதிரையைத் திருப்ப முயற்சித்தான், ஆனால் குதிரையோ பயத்தில் தடுமாறித் திரும்பியது, தன் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடத் தொடங்கினான். அடுத்து என்ன நடந்தது என்று அறியேன், கண்கள் இருட்டிக் கொண்டு வரக் கீழே சாய்ந்தேன்.
“கண்ணை விழித்துப் பார்க்கும்போது வீட்டில் இருப்பதை உணர்ந்தேன். என்னை அறிந்தவர்கள் என்னைத் தூக்கி வீட்டில் சேர்த்திருப்பார்கள் போல. பாலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் கொந்தளித்த கூட்டம் தொடர்ந்து முன்னேறி ராணியின் சிலையை உடைத்தெறியப் போனதாக அறிந்தேன். தொடர்ந்து டவுன் ஹாலும் மூன்று வங்கிகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. சுமார் ஆறு ஐரோப்பியர்கள் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். பெரிய அளவில் சூறையாடல் நடந்தது.
“சூறையாடல் பற்றி பிரிட்டிஷ்காரர்களுக்கு அத்தனை கவலையில்லை; பிரிட்டிஷ்காரர்கள் கொலை செய்யப்பட்டதுதான் அவர்களது வெறியைத் தூண்டியது. இதன் பின் விளைவுதான் ஜாலியன்வாலியன்பாக் படுகொலை. டெபுடி கமிசனர் பஹதூர், அம்ரித்சர் நகரை ஜெனெரல் ட்வையரிடம்4 ஒப்படைத்தார். ஏப்ரல் 12 அன்று தனது படை பரிவாரங்களுடன் நகரின் பல வீதிகளிலும் அணிவகுப்பு நடத்திய ட்வையர் அப்பாவி மக்கள் மிகப்பலரைக் கைது செய்தான்.
“மறுநாள்தான் சுமார் இருபத்தைந்தாயிரம் மக்கள் ஜாலியன்வாலாபாக்கில் அமைதியாகத் திரண்டார்கள். மாலையில் கூர்கா, சீக்கிய ரெஜிமென்ட் படைகளுடன் வந்த ட்வையர், ஆயுதம் ஏதுமற்ற அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான்.
“எத்தனை பேர் இதில் செத்தார்கள் என்று எவருக்கும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. பிற்காலத்தில் விசாரணை நடந்தபோது சுமார் ஆயிரம் பேர் செத்தார்கள், மூன்றாயிரம் முதல் நான்காயிரம் பேர் காயமடைந்தார்கள் என்று சொல்லப்பட்டது.
“நான் தைலாவைப் பற்றிப்பேசிக் கொண்டிருந்தேன் அல்லவா? ஷரியாவை மீறிய நான்கு பெரிய பாவங்களைச் செய்து இருந்தான் தைலா. ஒரு வேசியின் மகன்தான் எனினும் அவன் அசாத்திய தைரியசாலியாக இருந்தான். சம்பவம் நடந்த அன்று திரும்பி நின்று அவனது சகாக்களை அழைத்தபோது ஏற்கனவே அவனது உடலில் முதல் குண்டு பாய்ந்திருந்தது. பரபரப்பான அந்தச் சூழலில் தனது நெஞ்சில் பாய்ந்திருந்த செம்பிழம்பான ஈய ரவை தன் உடலில் பாய்ந்திருப்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை. இப்போது இரண்டாவது ரவை அவன் முதுகில் பாய மூன்றாவது ரவை மீண்டும் நெஞ்சில் பாய்ந்தது. நான் பார்க்கவில்லை, பின்னர் கேள்விப்பட்டேன், குதிரையிலிருந்து கீழே விழுந்த வெள்ளைக்காரனின் தொண்டையில் தைலாவின் விரல்கள் ஆழமாகப் பதிந்து இருந்ததாகவும் செத்துப்போன அவனையும் தைலாவையும் ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் பிரித்து எடுத்தார்கள் என்று.
“அடுத்தநாள் அவனது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டாவது வெள்ளைக்காரன் தனது துப்பாக்கியால் இறந்துபோன தைலாவைச் சுட்டு ரவைகளைக் காலி செய்திருந்தான்.
“உண்மைதான், தைலாவை அக்கம்பக்கத்தார் நேசிக்கவில்லைதான். ஆனால் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டுத் துவண்டுபோன அவனது உடலைப் பார்த்த ஒவ்வொருவரும் கதறி அழுதார்கள். ஷம்ஷத்தும் அல்மாஸும் மயங்கி விழுந்தார்கள். தைலாவின் உடல் இறுதி ஊர்வலத்துக்காகத் தூக்கப்பட்டபோது கதறி அழுத அவர்களின் கூச்சலால் ஊர்மக்கள் கண்ணீரை வடித்தார்கள், கட்டுப்படுத்த முடியாமல் ஓடிய ரத்தக்கண்ணீர்.
“சகோதரரே, நான் எங்கேயோ படித்திருக்கிறேன். பிரெஞ்சுப்புரட்சி தொடங்கியபோது படைகளின் முதல் குண்டுக்கு இலக்கானவள் ஒரு வேசி என்று. முஹம்மத் டுஃபைல் வேசியின் மகன்தான். பிரிட்டிஷ்காரனின் முதல் குண்டா ஐந்தாவது குண்டா ஐம்பதாவது குண்டா, இந்த விடுதலைப் போராட்டக் களத்தில் எதனால் முஹம்மத் வீழ்ந்தான் என்று எவர் ஒருவரும் கவலைப்பட்டுக்கொள்ளவில்லை. ஏனெனில் இந்த அப்பாவி முஹம்மத் இந்த சமுதாயத்தில் அப்படி ஒன்றும் பெரிய ஆள் இல்லை, பத்தோடு பதினொன்று. பஞ்சாப் படுகொலையில் வீழ்ந்தவர்களின் பட்டியலில் தைலா குஞ்சாரின் பெயர் இருக்குமா என்று கூட நான் சந்தேகப்படுகிறேன். அல்லது அப்படி ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்குமா என்பதே கூட சந்தேகம்தான்.
“சகோதரரே, இப்படித்தான் தைலா செத்தான்… புதைக்கப்பட்டான்… அப்புறம்…”
எனது சக பயணி தன் உரையாடலை முதல் முறையாக சற்றே நிறுத்தினார். இந்த இடைவெளியில் ரயிலின் தடக் தடக் சத்தம் எனக்கு வேறு மாதிரியாகக் கேட்டது: தைலா செத்தான் தைலா புதைந்தான்… தைலா செத்தான் தைலா புதைந்தான். இறப்பதற்கும் புதைக்கப்படுவதற்கும் இடையே சிறிய இடைவெளி கூட இல்லையோ என்பதாக அந்தச் சத்தம்.
“கதையின் மிக அவலமான மீதியை இனிமேல்தான் சொல்லப் போகிறேன்.”
“அப்படியா?”
“நான் ஏற்கனவே சொன்னேன், தைலாவுக்கு இரண்டு சகோதரிகள், ஷம்ஷத், அல்மாஸ், இருவரும் பேரழகிகள் என்று. ஷம்ஷத்தின் கட்டழகும் அழகிய பெரிய விழிகளும்… ஷம்ஷத் தும்ரி பாடுவதில் வல்லவள். கான் ஷாகிப் பதே அலிகானிடம் அவள் பாட்டுக் கற்றுக் கொண்டதாக மக்கள் பேசிக் கொள்வார்கள். அல்மாஸ், பாடுவதில் அவள் வல்லவள் இல்லைதான், ஆனால் அப்படி ஒரு தலைசிறந்த நாட்டியக்காரி. நவரசங்களை வெளிப்படுத்தும் அபிநய சுந்தரி. முஜ்ராக்களில் அவளது உடலின் ஒவ்வொரு அணுவும் நடனமாடும். ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் இருக்கும். ஒளிரும் அவளது கண்களின் அழகு ரசிகர்களை வீழ்த்த ஒருபோதும் தவறியதில்லை.
“இவர்களைப் பற்றித்தான் எவனோ ஓர் அடிமை நாய் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறான். நடந்த கலவரத்தில் … எவளோ ஒருத்தி… ஆங்… ஷேர்வுட் என்ற ஆங்கிலேய சீமாட்டி கொல்லப்பட்டுவிட்டாள். இதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக சகோதரிகளை இழுத்து வரச் செய்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள்”.
“நாட்டியக்காரிகளோ வேசிகளோ, அவர்களும் நம் அம்மாவைப் போல அக்கா தங்கை போலத்தானே? அவர்களது மானமரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும் இல்லையா? ஆனால் இந்த நாட்டில் அப்படி ஒன்று உள்ளதா என்ன? தைலா புதைக்கப்பட்ட இடத்தில் மண் கூடக் காயவில்லை. இருவரையும் இழுத்து வர ஆணையிடப்பட்டது. அரசவையில் இருவரும் நடனம் ஆட வேண்டும். இதை விடக் கொடூரம் வேறு என்ன இருக்க முடியும்? இதை விடவும் மனிதர்களை வேறு எப்படிக் கேவலப்படுத்த முடியும்? ஒரு வேசிக்கும் சுயமரியாதை, கண்ணியம் எல்லாம் உண்டு என்பதை அந்த பிரிட்டிஷ் அதிகாரி நினைத்துப் பார்க்கவில்லையா? ஏன், அவளுக்கு இருக்கக்கூடாதா என்ன?”
“நிச்சயமாக”
“தைலா என்ன குடித்துவிட்டு தெருச்சண்டையில் கலகத்தில் செத்துப்போனானா? தனது நாட்டுக்காகத் தைரியத்துடன் போராடி உயிரை விட்டான். வேசியின் மகன்; வேசியின் மகள்கள், ஆனால் அவளும் ஒரு தாய்தானே. இரண்டு மகள்களும் தைலாவின் சகோதரிகள், வேசி என்பதெல்லாம் இரண்டாவது…”
“சரி, போனார்களா?”
சற்று நேரம் அமைதி நிலவியது. “ஆம், போனார்கள். தங்களை முழுமையாக அலங்கரித்துக் கொண்டு போனார்கள். அது ஓர் அற்புதமான நடன நிகழ்ச்சி… கேள்விப்பட்டேன். அப்படி ஒரு நடனமாம். பேஸ்வாஸ் உடையில் சகோதரிகள் இருவரும் மவுன்ட் காக்கசஸ் தேவதைகள் போல் ஜொலித்தார்களாம். மது ஆறாக ஓடியது. திகட்டத்திகட்டப் பாடி ஆடினார்களாம், முழு இரவும். நிகழ்ச்சி முடிந்தது”
“அதன் பிறகு?”
ரயிலின் ஜன்னலுக்கு வெளியே கூர்மையாகப் பார்த்தார் நண்பர். மரங்களும் மின் கம்பங்களும் சரசரவென்று ஓடின.
“ஆம், என்ன நடந்தது? நடனம் முடிந்தது, இருவரும் தமது ஜொலிக்கும் ஆடைகளைக் கிழித்து எறிந்து விட்டு சபையில் முழு நிர்வாணமாக நின்றார்கள். ‘பாருங்கள், நாங்கள் தைலாவின் சகோதரிகள். ஒரு தேசபக்தனின் உயிரை எடுக்க தைலாவின் உடலை சல்லடையாகத் துளைத்தீர்கள். நாங்கள் தைலாவின் அழகுமிக்க சகோதரிகள். வாங்க, நறுமணம் கமழும் எங்களது உடலை உங்கள் இழிவான உணர்ச்சிகளால் நாசப்படுத்துங்கள். ஆனால் அதற்கு முன் உங்கள் முகங்களில் நாங்கள் காறி உமிழ அனுமதியுங்கள்!’
அமைதியாக இருந்தார். சொல்வதற்கு ஏதும் இல்லை என்பதாக.
நான் அவசரப்பட்டேன், “என்ன நடந்தது?”
அவரது விழிகள் கண்ணீரால் நிரம்பின. சொன்னார், “அந்த இடத்திலேயே இருவரையும் சுட்டு வீழ்த்தினார்கள்”.
நான் ஒன்றும் பேசவில்லை. ரயில் வேகம் குறைந்து ஸ்டேசனுக்குள் நுழைந்தது. கூலியை அழைத்துச் சுமையை ஏற்றினார். புறப்பட்டார். அப்போதுதான் நான் கேட்டேன், “நீங்கள் இப்போது சொன்ன கதையின் முடிவு, அது நீங்களாக இட்டுக்கட்டியதுபோல் தெரிகிறதே?”
அப்படியே என் கண்களை உற்று நோக்கினார். “எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” குரலில் வியப்புத் தெரிந்தது.
“எப்படியா? உங்கள் குரலில் நம்ப முடியாத சோகம் இருந்தது”.
அப்படியே எச்சில் விழுங்கியவாறே சொன்னார், “ஆம், அந்தப் பெட்டை நாய்கள்”. சாபம் விட்டார். பிறகு சொன்னார், “தமது சகோதரனின் தன்னலமற்ற தியாகத்தை கேவலப்படுத்தி விட்டார்கள்”.
ரயிலில் இருந்து இறங்கித் தன் வழியில் சென்றார்.
… … …
குறிப்புகள்:
A Tale of the year 1919 என்ற கதையின் மொழியாக்கம் இது.
1. Defence of India Act, 1915: முதலாவது லாகூர் சதி வழக்கு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக கதார் (Ghadr) கிளர்ச்சியை அடக்குவதற்காகவே அன்றைய பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ ட்வையர் இச்சட்டத்திற்கான அழுத்தத்தை பிரிட்டிஷ் அரசுக்கு கொடுத்தான்.
2. டாக்டர் சைஃபுதீன் கிச்லூ: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித்தலைவர். ரவுலட் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் பின் காந்தி, சத்யபால், கிச்லூ மூவரும் கைது செய்யப்பட்டனர். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை நிறுவியவர்களில் ஒருவர். இவரது மகள் ஜஹிதா கிச்லூவும் தமிழகத்தைச் சேர்ந்த இடதுசாரி இயக்கத்தவரான இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனும் காதலித்து மணம் புரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. முஜ்ரா: முகலாயர் காலத்தில் இந்தியாவில் அறிமுகமான நடனக்கலை. கதக், தும்ரி, கஜல் ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கியது. அடிப்படையில் அரசவையினரையும் மேல்தட்டு வர்க்கத்தையும் மகிழ்விக்கப் பெண்களால் நிகழ்த்தப்பட்ட நடனம் இது.
4. ஜெனரல் ரெஜினால்ட் ட்வையர்: கர்னல் ட்வையர் ஆன இவனுக்கு தற்காலிகமாக பிரிகேடியர்-ஜெனரல் பொறுப்பு அளிக்கப்பட்டது. 13 ஏப்ரல் 1919 ஜாலியன்வாலாபாக் படுகொலையை தலைமை ஏற்று நடத்திய மாபாதகன். “அம்ரித்சர் கசாப்புக்காரன்” என்ற அவப்பெயரைப் பெற்றான்.
...
மணல்வீடு இதழ் எண் 54 (ஜனவரி-மார்ச் 2025) இல் வெளியானது.
ஓவியம்: ஆலங்குடி சுப்ரமண்யம்