வெள்ளி, ஜனவரி 17, 2025

தினமணி 11.1.25


மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன், மு.இக்பால் அகமது, பக்.276, ரூ.350, பரிசல் புத்தக நிலையம், பம்மல், சென்னை.
...
தமிழில் இடதுசாரி சிந்தனையாளரான எம்.பி.சீனிவாசன் திரைப்படத் துறை இசையமைப்பாளராகவும் விளங்கியவா். அவரது வாழ்க்கையை மிக விரிவாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட முதல் நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. திரைப்பட இசையமைப்பாளரான எம்.பி.சீனிவாசன் முன்னோா்கள் வரலாறு தொடங்கி அவரது திரைத்துறை சாதனைகள் வரை மொத்தம் 33 கட்டுரைகள் மூலம் அவரது வாழ்க்கை இந்நூல் மூலம் நினைவுகூரப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைத்துறையில் இசைக்கலைஞா்களுக்கான சங்கத்தை முதலில் நிறுவிய எம்.பி.சீனிவாசனின் முன்னோா்கள் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் சிவகங்கை பகுதியில் குடியேறிய நிலையில், ஜமீனின் ஆதரவைப் பெற்று பல்லக்கில் செல்லும் உரிமையையும் பெற்றிருந்தனா். எம்.பி.சீனிவாசன் தந்தையான பாலகிருஷ்ணன் ஆங்கிலப் புலமையுடன், கா்நாடக இசைப்புலமை பெற்றவராகவும்,  விடுதலைப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தாா். கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் தீவிரமாக செயல்பட்டாா் என்பது உள்ளிட்ட அரிய பல தகவல்கள் நாவல் இலக்கிய நடையில் எழுதப்பட்டுள்ளது. 

அவரது கலை இலக்கியத் தொடா்புகள் கடிதங்கள், குறிப்புகள் என எம்.பி.எஸ்.ஸின் முழுமையான வாழ்க்கை வரலாற்று பதிவாக இந்நூல் அமைந்துள்ளது. மதுரையில் எம்.பி.சீனிவாசன், மணவாளனுடன் இணைந்து நடத்திய கலை இலக்கிய நிகழ்வுகளை தியாகி மாயாண்டி பாரதி நினைவுகூா்வதையும் நூலில் இணைத்துள்ளது சிறப்பாகும்.  தமிழில் 1960-ஆம் ஆண்டு ‘பாதை தெரியுது பாா்’ திரைப்படம் தொடங்கி 1978-ஆம் ஆண்டு வெளியான ‘புது செருப்பு கடிக்கும்’ படம் வரையில் 8  படங்களுக்கு இசையமைத்துள்ளாா்.

அவா் 59 மலையாளப் படங்களுக்கும்,1 தெலுங்குப்படத்துக்கும் இசையமைத்து பெரும்புகழ் பெற்றுள்ளாா். வந்தாரை வாழ வைத்த தமிழகம் அவரது இசையை இன்னும் பயன்படுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. மொத்தத்தில் இந்த நூலானது  ஏதோ திரைப்பட இசையமைப்பாளா் குறித்த தகவல்கள் தொகுப்பு என்றில்லாமல், சமூகத்துக்கான பங்களிப்பை ஓா் இசைக்கலைஞன் எப்படி வெளிப்படுத்தி மக்கள் சேவை புரிந்தாா் என்பதையே இந்தநூல் உணா்த்துவதாக உள்ளது.
...

தினமணிக்கு நன்றி

புதன், ஜனவரி 08, 2025

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் நூல் வெளிவந்துவிட்டது

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் நூல் வெளிவந்துவிட்டது.

நான்கு வருடங்களுக்கும் மேலான உழைப்பைச் செலுத்தியதன் பலன் நூலாக இப்போது கைகளில்.  வெளியிட்டுள்ள பரிசல் பதிப்பகத் தோழர் சிவசெந்தில்நாதன், நூலின் முகப்பையும் வடிவத்தையும் அழகுற வடிவமைத்த ஜீவமணி பாலன் ஆகியோருக்கு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

எம்.பி.எஸ். வரலாற்றை எழுதிவிட வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்தது உண்மைதான். ஆனால் அதில் எத்தனை உழைப்பை செலுத்த வேண்டி இருக்கும் என்ற யதார்த்த நிலையை உணர்ந்தபோது பிரமிப்பாக இருந்தது, முடியுமா என்று உண்மையில் தயங்கினேன்.

2020 மார்ச் மாதம் பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் முகநூலில் அவர் குறித்து சிறிய பதிவுகளை தொடராக இட்டு வந்தேன். எம்.பி.எஸ்ஸை அறிந்த நண்பர்கள் அவற்றை வாசித்தார்கள். சுமார் 25 தொடர்கள் நிறைவுற்ற நிலையில் அவற்றை அச்சிட்டுப் பார்த்தபோது ஒரு சிறிய நூலின் அளவுக்கு இருந்தது. அதுதான் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. 

எம்.பி.எஸ். குறித்து மரியாதைக்குரிய மறைந்த அறந்தை நாராயணன் 1991இல் எழுதிய சிறிய நூல் உண்மையில் மிகுந்த மதிப்புமிக்கது, தமிழில் எம்.பி.எஸ் பற்றிய ஓரளவு முழுமையான நூல் அது மட்டுமே என்ற நிலையும் இருந்தது. அவர் பற்றிய அடுத்த நூல் எனில் அது நான் எழுதும் நூலாகத்தான் இருக்கும் என்ற யதார்த்தம் சற்றே பயத்தை கொடுத்தது. தகவல் தொழில் நுட்பம் மிக உயர்ந்து நிற்கும் 30 வருடங்களுக்குப் பிறகான சூழலில், அவர் பற்றி வெளியாகும் அப்படியான ஒரு நூல் அதற்கு ஏற்ப ஓரளவேனும் முழுமை பெற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்ற பெரிய கவனமும் கூடுதல் பொறுப்புணர்வை ஏற்படுத்தியது. எனில் அதற்கான நேரம், உழைப்பு ஆகியவற்றை தனிப்பெரும் கவனத்துடன் செலுத்த வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக, இவை அனைத்தையும் தாண்டி நூலை எழுதிவிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுக்கு நான் செல்ல ஒரே ஒரு முக்கியமான காரணம் இருந்தது: அவர் ஒரு இடதுசாரி, மார்க்சியவாதி, தொழிற்சங்கவாதி. இந்தக் காரணங்களாலேயே தமிழ் திரைப்பட முதலாளிகளால் திட்டமிட்ட வகையில் அவர் புறக்கணிக்கப்பட்டார். அவரது சக தோழரான நிமாய் கோஷுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. 

சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் தொழிற்சங்க இயக்கத்தில் முன்னணியில் நின்று ஈடுபட்டவன் என்ற என் மனநிலை என்னை முன்னே தள்ளி 'நீ அவரைப் பற்றி எழுது,உன்னால் முடியும். யாருக்காக காத்திருக்கப் போகிறாய்?' என்று கேள்வி எழுப்பியது. தொடங்கினேன். நான்கரை வருடம் உழைப்பில் கடந்து வந்த புத்தகங்கள், பதிவுகள், இணையத்தில் கண்ட காணொளிகள், ஒலிப்பதிவுகள், அவரை அறிந்த மிக சிலருடன் ஆன உரையாடல்கள் யாவும் எனக்கு பெரிய நம்பிக்கையை தந்தன. சிறு துளி பெருவெள்ளம் என்ற பழமொழி இந்த நூலைப் பொருத்தவரை முற்றிலும் உண்மை. நூலின் தேவை கருதி நான் வாங்கிய தமிழ், ஆங்கில மொழி நூல்கள் மட்டுமே நூற்றுக்கும் மேல் இருக்கின்றன. இவற்றுள் சிலவற்றில் இருந்து நேரடியான தகவல்களைப் பெற முடிந்தது. பிற நூல்கள் நூலின் கருத்தாக்கத்துக்கு பெரிதும் உதவின. பல நூல்கள் வெவ்வேறு திசைகளுக்கு இட்டுச் சென்றன, சென்று சேர்ந்த இடங்களில் இருந்து பெற்றவை ஏராளம்.

எல்லாமும் சேர்ந்து இப்போது ஒரு நூலாக வடிவம் பெற்றுள்ளன. எடுத்துக்கொண்ட வேலையை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்து முடித்தேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நூலை எழுதியது என்பது என்னைப் பொருத்தவரை அது ஓர் அரசியல் செயல்பாடுதான். அதற்கான நோக்கம் உள்ளது.

உதவி செய்த, ஒத்துழைத்த, உற்சாகம் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றி. என் மனைவியும் மகனும் இந்த நான்கு வருட காலமாக நல்கிய பெரும் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகப்பெரியன, அவர்களுக்கும் நன்றி.