திருவள்ளூர் மாவட்ட செங்கொடி இயக்க வரலாறு,
ஆசிரியர் கே. செல்வராஜ்,
வெளியீடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருவள்ளூர் மாவட்டம்
…
மாவட்டக்கட்சியின் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த நூல்,
இடதுசாரி இயக்கம் இல்லாத கிராமங்களிலும் ஊர்களிலும், குறிப்பாக ஆலைத்தொழில் வளர்ச்சி
பெறாத, ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் சக்தி ஏதும் காணப்படாத விவசாயத்தை மையமாகக் கொண்ட
கிராமங்களில் இயக்கத்தைக் கட்டியவர்களின் வரலாறாக விரிகிறது.
நூலை எழுதியவரே இந்த மாவட்டத்தின் கட்சிச் செயலாளராக இருந்துள்ளார்
என்பதும் அவரே ஒரு தேர்ந்த வாசிப்பாளர் என்பதும் இந்த வரலாற்றுத் தேடலுக்கு இயல்பாகவே
கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி, தொல்லியல் படிவங்கள், சான்றுகள்
என்றால் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி, கொடுமணல், சிவகளை ஆகிய ஊர்கள்தான் உடனடியாக
நினைவுக்கு வரும்.
1963, 64 ஆம் ஆண்டுகளில் இந்த மாவட்டத்தில் கொற்றலை ஆற்றுப்படுகை,
அத்திரம்பாக்கம் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல் ஆயுதங்கள் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு
முற்பட்டவை என்று சொல்கின்றன. பூண்டி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைப்படிவங்கள்
13 கோடி ஆண்டு வயதானவை. குடியம் குகைகளில் ஆதிமனிதன் வாழ்ந்த ஆதாரங்கள் உள்ளன. நூல்
இங்கே இருந்து தொடங்குவது சிறப்பு.
மாநில அரசு இந்த ஊரின் தொல்லியல் முக்கியத்துவத்தை
உணர்ந்து மக்கள் மத்தியில், குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் விளம்பரம்
செய்ய வேண்டும்.
பழவேற்காடு உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர்களைப் பற்றியும்
நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நூலில் நான் குறிப்பாக கவனம் செலுத்திய இடங்களை மட்டுமே இங்கே
என் பார்வையில் சொல்லி இருக்கிறேன்.
மஹாத்மா காந்தி கோட்சேயால் கொலை செய்யப்பட்ட வெள்ளிக்கிழமை
மாலை 5.25 மணி நேரத்தை குறிக்கும் வகையில் திருவள்ளூர் நகரில் வெள்ளிக்கிழமை மாலை
5 மணிக்கு சங்கொலி எழுப்ப படுகிறது.
தெலிங்கானாப்புரட்சி நாயகன் பி.சுந்தரய்யா திருவள்ளூர் ரெஸ்லன்
உயர்நிலைப்பள்ளியில் 1918, 19 காலத்தில் படித்துள்ளார்.
செவ்வாப்பேட்டை திருவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்தான்
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்.
சென்னை மாவட்டத்தின் கம்யுனிஸ்ட் கட்சியின் முதல் மாவட்ட
செயலாளர் கே. முத்தையா.
1964இல் செங்கல்பட்டு மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கட்சிச் செயலாளர்
கே.எஸ்.பார்த்தசாரதி. அவர்தான் தமிழகத்தில் கைத்தறி நெசவாளர் தொழிற்சங்க இயக்கத்தின்
சிற்பி என்பதை சரியாகப் பதிவு செய்துள்ளார் செல்வராஜ்.
ஒன்றுபட்ட சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தின் செயலாளர் பி.ஆர்.பரமேஸ்வரன்.
1968-81 காலகட்டத்தில். சென்னை மாவட்டக் கட்சிச் செயலாளராக அவர் இருந்த காலத்தில் விசேச
அரங்கத்தில் நான் கட்சி உறுப்பினர் ஆக இருந்தேன் என்பதை நினைவு கூர்கிறேன். 1946 கப்பற்படை எழுச்சி,
நினைவுகள் அழிவதில்லை (மொழி பெயர்ப்பு), இந்தியா இந்து இந்துமதம் ஆகிய நூல்களின் ஆசிரியர்
அவர். செங்கல்பட்டு மாவட்டம் தனியாக செயல்படும்போது அதன் செயலாளர் டி. லட்சுமணன். த.நா.சிறுபான்மை
மக்கள் நலக்குழு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சங்கம் ஆகியவற்றை நிறுவியதில் அவர்
பங்கு மகத்தானது.
அவ்வாறு அமைக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டக் கட்சியில் தோழர்
என். மருத்துவமணி, ஜி.மணி, காஞ்சிபுரம் சுந்தா, கே.செல்வராஜ் ஆகியோரும் மாவட்டக்குழு
உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள். எனது வட சென்னைக் கட்சி, த மு எ ச இயக்கப் பணியின்போது
தனிப்பட்ட முறையில் மருத்துவமணி அவர்களை நான் அறிவேன். மதுராந்தகம் சர்க்கரை ஆலையில்
பணி செய்து தொழிற்சங்கம் கட்டியவர் அவர். 'ஜீவா- கலாச்சாரத்தின் அரசியல்' என்ற முக்கியமான நூலை அவர் எழுதினார்.
சுந்தா காஞ்சிபுரம் மாவட்ட த மு எ ச செயலாளர் ஆகவும், மாநிலக்குழு உறுப்பினர் ஆக இருந்தார். காலமாகி விட்டார்.
பொன்னேரி தாலுகாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் சைக்கிளில் போக
கூடாது, துண்டு, செருப்பு அணியக்கூடாது என ஆதிக்க சாதியினர் அட்டூழியம் செய்த காலத்தில்,
கட்சி நடத்திய போராட்டத்தில் மூத்த தோழர்கள் ஏ.கே.கோபாலன், மணலி கந்தசாமி பங்கு பெற்ற
செய்தி நூலில் உள்ளது. போராட்டத்திற்குப் பிறகு பொய் வழக்கு, பேச்சு வார்த்தை, உடன்பாடு ஆகிய
நடவடிக்கைகள் நடந்துள்ளன. வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, எம்.கல்யாண சுந்தரம் ஆகியோரும்
கூட்டங்களில் பங்கு பெற்றுள்ளனர். சங்கம் அமைத்துப் போராடியதால் இந்தக் கிராமத்திற்கு
1958ஆம் ஆண்டிலேயே முழுமையான மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது.
சீமாவரம் கிராமத்தில் ராஜகோபால் நாயுடு என்ற பண்ணையாரின்
கொடுமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் பதிவாகி உள்ளது.
திருப்பாலைவனம் கிராமத்தில் தலித் மக்கள் நடத்திய போராட்டத்தில்
சி.கே.மாணிக்கம், வி.பி.சிந்தன், கே.எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
சோழவரம் ஒன்றியம் சிறுனியம் கிராமத்தில் பலராம நாயுடு என்ற
பண்ணையார் நடத்திய கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஒரு கட்டத்தில் தோழர் சாமுவேல்
என்பவர் பண்ணையின் கையில் இருந்த சாட்டையைப் பிடுங்கி அவரைத் திருப்பி அடித்த வரலாறு பதிவாகி
உள்ளது.
பஞ்சமி நிலம் மீட்புக்கான போராட்டத்தில் 1994இல் நடந்த சாலை
மறியலில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் மாண்டுள்ளனர்.
பக்தவத்சலம் முதலமைச்சர் ஆக இருந்த 1963-67 காலத்தில் தலைவிரித்து ஆடிய உணவுப் பஞ்சத்தைக் கட்சி எதிர்கொண்டுள்ளது. அரிசிப் பதுக்கல்காரர்களை எதிர்த்து வலிமையான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அரிசி ஆலைகள் அதிகம் இருந்த செங்குன்றம் பகுதியிலேயே பஞ்சம் என்பது மக்களிடையே கோபத்தைத் தூண்டி உள்ளது. விளைவாக அரிசி ஏற்றி வந்த லாரிகளை மக்கள் வழிமறித்து அரிசியைப் பறிமுதல் செய்ய முயன்றபோது காவல்துறையும் அரசு நிர்வாகமும் தலையிட்டு ஒவ்வோர் அரிசி ஆலையிலும் ஐந்து மூட்டைகளை மக்களுக்குக் கொடுப்பது என்று உடன்பாடு எட்டப்பட்ட வரலாறு உள்ளது. பி.ஆர்.பரமேஸ்வரன், கே.எம்.ஹரிபட் ஆகிய தோழர்களும் களத்தில் நேரடியாக இறங்கியுள்ளனர்.
இந்தப் போராட்டங்கள் யாவும் மகத்தான தஞ்சை மாவட்ட விவசாய இயக்கத்தை
நினைவு படுத்துகின்றன என்பதில் மிகையில்லை. திருவள்ளூர் மாவட்ட விவசாய இயக்கத்தின்
வரலாறு தனியாக எழுதப்பட வேண்டிய ஒன்று என்பதையே இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள பதிவுகள் காட்டுகின்றன.
1946ஆம் ஆண்டிலேயே திருவள்ளூர் நகரத்தில் பீடித் தொழிலாளர்
சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் சங்கம் 1978இல் அமைக்கப்பட்டுள்ளது.
பிரிக்கப்பட்ட தென் மாவட்ட வி.ச.வுக்கு என்.மருத்துவமணி செயலாளராக
இருந்துள்ளார். கே. செல்வராஜ் வடக்குமாவட்டப் பொருளாளராக இருந்துள்ளார்.
மதுராந்தகம் ஜமீன் எண்டத்தூர் கிராம ஏரியின் சட்ட விரோத
கலங்கலை மூன்று கிராம மக்களை திரட்டி 1980இல் உடைத்து எறிந்துள்ளனர். 1914ஆம் ஆண்டு
முதல் இருந்து வந்த தலைவலி தீர்ந்துள்ளது.
கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி பி.டி.தினகரன் என்பவர்
199 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததும் அதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும் நூலில்
பதிவாகி உள்ளது!
2000ஆவது ஆண்டில் மலைவாழ் மக்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட DYFI செயலாளராக என். மருத்துவமணி இருந்துள்ளார்.
மாணவர் அமைப்பின் ஊத்துக்கோட்டை இடைக்கமிட்டி உறுப்பினர் ஆக
இருந்த பி.டில்லிபாபு, கட்சியின் வழிகாட்டுதலுக்கு இணங்க 1988ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டக் கட்சிப்பணிக்குச் சென்றார். தர்மபுரி மாவட்டக் கட்சிச் செயலாளரகவும் ஆனார். 2006, 2011 ஆகிய
இரண்டு தேர்தல்களில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
2019ஆம் ஆண்டு பொன்னேரியில் நடந்த சிறுபான்மை மக்கள் நலக்குழு
மாநாட்டில் எஸ்.எம்.அனீப், அப்சல் அகமது, ராபர்ட் எபினேசர் ஆகியோர் தலைவர், செயலாளர்,
பொருளாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.
மாவட்டத்தின் நீண்ட கால இயக்க வரலாற்றில் ஏ.கே.கோபாலன், எம்.ஆர்.வெங்கட்
ராமன், பி.ராம மூர்த்தி, எம். கல்யாண சுந்தரம், வி.பி.சிந்தன், பால தண்டாயுதம், ஹரிபட்,
என். சங்கரய்யா உள்ளிட்ட மூத்த தோழர்கள் பல போராட்டங்களில் நேரடியாகக் களம் கண்டுள்ளனர்.
நூலாசிரியரே சொல்வது போல் நூலில் விடுபட்டுள்ள கீழ்க்காணும்
விவரங்களை அடுத்த பதிப்பில் சேர்த்து வளப்படுத்த வேண்டும்.
ஆவடியில் அமைந்துள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் திருவள்ளூர் மாவட்டத்தின்
முக்கியமான, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அடக்கிய தொழில் மையங்கள் ஆகும்.
1962 சீனப்போருக்குப் பின்னர்தான் டேங்க் ஃபேக்டரி எனப்படும் கனரக வாகன தொழிற்சாலை நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து
டேங்க் ஆராய்ச்சிக்கென சி.வி.ஆர்.டி.ஈ. எனப்படும் ஆய்வு-வளர்ச்சி நிறுவனமும் அருகில்
நிறுவப்பட்டது. இந்தியாவில் கனரக டேங்க் ஆராய்ச்சி நிறுவனம் இது ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் டேங்க் எஞ்சின் உற்பத்தி தொழிற்சாலையும் நிறுவப்பட்டது.
பிரிட்டிஷ் நிர்வாகத்தில் அமைக்கப்பட்ட பழமையான ஆர்ட்னன்ஸ்
டிப்போ, விமானப்படை தளம், 8 பேஸ் ரிப்பேர் டிப்போ, விமானப்படையின் 23 எக்விப்மென்ட்
டிப்பொ, சென்ட்ரல் வெஹிக்கிள் டிப்போ, கபற்படை வயர்லெஸ் ஸ்டேஷன் ஆகிய தலையாய பாதுகாப்புத்துறை
நிறுவனங்கள் ஆவடியில்தான் உள்ளன. இடதுசாரிகளின் தலைமையில் ஆன அகில இந்திய பாதுகாப்புத்துறை
ஊழியர் சம்மேளனத்துடன் (All India Defence Employees Federation) இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள்
கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக வீரஞ்செறிந்த பல போராட்டங்களை நடத்தி உள்ளன. வி.பி.சிந்தன்
வழிகாட்டலில் எழுபதுகளில் டேங்க் ஃபேக்டரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் பாதுகாப்புத்துறை
வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பதாகும்.
டேங்க் ஃபேக்டரி ஊழியர் ஆன தோழர் மணி திருவள்ளூர் நகர கட்சிக்கிளையில்
உறுப்பினராக இருந்தார் என்பது நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே தொழிற்சாலையில்
கட்சியில் இயங்கிய மூத்த தோழர் சு.பால்சாமி (இப்போது வட சென்னை சி.ஐ.டி.யு.வின் நிர்வாகிகளில்
ஒருவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையின் பல சங்கங்களில் பொறுப்பில் உள்ளார்) பணியில் இருந்தபோதே
பொத்தூர் பம்மது குளம் கிராமத்தில் விவசாயிகளுக்குப் பாத்தியப்பட்ட நில ஆக்கிரமிப்பை எதிர்த்த போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம்
வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தமிழக
அரசின் இரண்டு போலீஸ் பட்டாலியன், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் ஆகியன ஆவடியில்தான்
அமைந்துள்ளன.
சென்னை வானொலியின் ஒலிபரப்பு கோபுரம் ஆவடி திருமுல்லைவாயிலில்தான் உள்ளது.
அண்ணனூர் ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே ஆராய்ச்சி சோதனைச்சாலை ஒன்றும் உள்ளது.
ஒன்றிய அரசின் ஊழியர்கள் பல்லாயிரம் பேர் வாழும் நகரம் ஆன
ஆவடியில் பல மாநில மக்களையும் எந்த இடத்திலும் எப்போதும் காண முடியும் என்பதால் ஆவடி
ஒரு குட்டி இந்தியா ஆகும்.
ஆவடி டியுப் ப்ராட்க்ட் ஆஃப் இந்தியா, திருநின்றவூர் டி.ஐ.மெட்டல்
ஃபார்மிங் ஆகியவை பழைய தொழிற்சாலைகள்.
சில நாட்கள் முன்பு பட்டாபிராமில் 21 தளங்கள்
கொண்ட டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளது. சதர்ன் ஸ்ட்ரக்சுரல் லிமிடெட் என்ற மாநில அரசின்
பழமையான புகழ்பெற்ற கனரக பொறியியல் பொதுத்துறை
நிறுவனத்தை இடித்து தள்ளிவிட்டு அதனிடத்தில்தான் டைடல் பார்க் நிறுவப்பட்டுள்ளது என்பதையும்
தள்ளி விட முடியாது. எஸ்.எஸ்.எல். என்று சுருக்கமாக அறியப்பட்ட அந்த நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் ப. சிதம்பரமும் துணைத்தலைவராக மைதிலி சிவராமன் அவர்களும் பொறுப்பில் இருந்துள்ளார்கள்.
ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் அமைந்துள்ள சத்யமூர்த்தி நகருக்கான
பெயர்க்காரணம் உள்ளது. காங்கிரஸ் கட்சி சோசலிசம் பேசிய ஆவடி காங்கிரஸ் மாநாடு இந்த
நகரில் நடந்ததால் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியின் பெயரால் அப்பகுதி அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் தலைசிறந்த மார்க்சிய அறிஞர் ராகுல சாங்கிருத்தியாயன்,
திருமழிசையில் உத்தராதி என்னும் வைஷ்ணவ மடத்தில் தாமோதராச்சாரி என்ற பெயரில் தங்கி
இருந்துள்ளார் என்பதும் வரலாறு.
சென்னை சைதாப்பேட்டை, பழவந்தாங்கல் பகுதிகளில் டபுள்யு.ஆர்.வரதராஜன்,வை.கிருஷ்ணசாமி,
சு.பொ.அகத்தியலிங்கம், சு.பொ.நாராயணன் போன்ற மூத்த தோழர்களுடன் இணைந்து கட்சிப்பணி
செய்த டிவிஎஸ் தொழிலாளியான தோழர் உத்தண்டராமன் திருவள்ளூர் மாவட்டத்தின் தமுஎச செயலாளராக
இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த தோழர் ஆன அவர் இப்போதும் செவ்வாப்பேட்டையில்
வசிக்கிறார்.
நூலைச் செப்பனிட்ட தோழர் கமலாலயன் இதே திருவள்ளூர் மாவட்டத்தின்
அறிவொளி ஒருங்கிணைப்பாளராக இருபது வருடங்களுக்கும் மேல் திறம்பட செயல்பட்டவர். அறிவியல்
இயக்கத்திலும் செயலாற்றியவர்.
புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர்
என்ற ராஜகோபால குலசேகரனின் சொந்த ஊர் கீழானூர் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.கே.சேகர் மலையாளத் திரைப்பட உலகில் புகழ்மிக்க இசையமைப்பாளர்.
…
மூத்த தோழர் கே.செல்வராஜ் குறுகிய கால அவகாசத்தில் இந்த வரலாற்று
நூலை எழுதியுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அந்த நெருக்கடியையும் மீறி ஒரு
மாவட்டத்தின் வரலாறு, அதன் இடதுசாரி இயக்க வரலாறு ஆகியவற்றை தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.
அவருடைய உழைப்பைப் பாராட்ட வேண்டும். கடந்த கால வரலாற்றின் தொடர்ச்சிதான் நிகழ்காலம்.
தன்னலம் அற்று தம்மை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட மூத்த தோழர்களின் வரலாற்றைப்
பயில்வதன் மூலமே இன்றைய ஊழியர்கள் தமது செயற்பாடுகளை செம்மைப் படுத்தி முன்னேற முடியும். ஏனெனில் இடதுசாரிகளின் வரலாறு எப்போதுமே தனி நபர்களின்
வரலாறாக இருந்தது இல்லை, அவை இயக்கத்தின் வரலாறு.
- ...
23.12.2024