எனது பள்ளிப்பருவத்தில் திமுக, திக மேடைகளில் தவறாமல் ஒலித்த பாடல் அவர்தான் பெரியார் பார் அவர்தாம் பெரியார்
அன்பு மக்கள் களின் மீதில்
அறிவுத்தேக்கம் தங்கத்தேரில்
அவர்தான் பெரியார்!
அந்த வயதில் கடவுள் இல்லை இல்லவே இல்லை! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! போன்ற வாசகங்கள் மதுரையின் சுவர்களில் எங்கும் காணப்படும். எனக்கு மட்டுமல்ல நம் மக்களுக்கு பெரியார் என்பவர் கடவுள் மறுப்பாளர் என்ற பிம்பம் மட்டுமே மிகப்பெரியதாக மீண்டும் மீண்டும் மனதில் இறுத்தப்பட்டுள்ளது. கடவுளை மற மனிதனை நினை என்ற உயர்ந்த சிந்தனையை திட்டமிட்டு பின்னால் தள்ளினார்கள்.
அந்தப்பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல். பாடலின் ஆசிரியர் பாரதிதாசன். இந்த கட்டுரையை எழுத தொடங்கும் முன் இரண்டு முறை அந்த பாடலை கேட்டு பரவசம் அடைந்தேன். ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் சீர்காழி அவர்களின் தெளிவான உணர்ச்சி மிகுந்து ஓங்கும் குரலால் உயிர் பெற்று பெரியார் குறித்த முழுமையான உணர்ச்சிமிக்க ஓர் உருவத்தை நமக்கு வரைந்துகாட்டி விடுகின்றன.
அவரது திரைப்படப்பாடல்கள் குறித்து தனியே எழுத வேண்டும். நிறைய நண்பர்கள் எழுதியும் இருக்கிறார்கள். நேற்று அவர் நினைவு தினம். 55 வயதில் அவர் இறந்திருக்க வேண்டாம்.
.....
முதலாவது பகுதியை அவர் மீனாட்சியம்மன் கோவிலில் ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி பாடலை பாடிக்கொண்டு இருந்ததில் தொடங்கினேன்.
அவர் மகன் டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம் "டி ஆர் பாப்பா (என்கிற சிவசங்கரன்) சீர்காழி அவர்களுக்கு மட்டுமே ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அவருடைய பக்தி பாடல்களில் ஆகப்பெரும்பான்மை உளுந்தூர்பேட்டை சண்முகம் எழுதியவை. இந்த மூவர் கூட்டணி வெற்றிக்கூட்டணி" என்று சொல்லியிருக்கிறார்.
சிதம்பரம் கோவிலுக்கு பல வருடங்கள் முன் சென்று இருந்தேன். அங்கே டிக்கெட், சிதம்பர ரகசியம் விஷயத்தில் தீட்சிதர்களுடன் வாக்குவாதம் ஆகி முற்றிய நிலையில் உடன் வந்த நண்பர்கள் என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள். நானும் பிரச்சனை வேறு வடிவம் எடுத்து விடும் என்று உணர்ந்து வெளியே வந்துவிட்டேன்.
அதே சிதம்பரத்தில் பத்து முக்கிய தீர்த்தங்கள் இருப்பதாகவும் மூன்றாவது வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சிவகங்கைக்குளத்தின் கரையில் அன்னை சிவகாமி குடியிருப்பதாகவும் அறிந்தேன்.
யூடியூப்பில் அந்த பாடல் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் என்பது ஒருவகை. ஆண், பெண் இருபாலருக்கும் 21ஆவது மாதம் வரை பருவம் பிரித்து பாடப்படுவதாகும். சீர்காழி அவர்கள் அந்த சிவகாமியை பாடுகிறார்.
சின்னஞ்சிறு பெண் போலே
சிற்றாடை உடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே
ஸ்ரீதுர்கை அமர்ந்திருப்பாள்
பெண்ணவளின் கண்ணழகை
பேசி முடியாது
பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது...
பின்னல் ஜடை போட்டு
பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக
நர்த்தனம் ஆடிடுவாள்!
பாடலின் ஒவ்வொரு சொல்லையும் மீண்டும் மீண்டும் கேளுங்கள்! பெண்ணவளின் என்ற சொல்லை மீண்டும் மீண்டும் கேளுங்கள்! ....ஆடிடுவாள் என்ற சொல்லில் அவள் ஆடுவதை பாருங்கள்! பித்தன் சிவன்.
பிள்ளைத்தமிழ் இல்லை இப்பாடல். சின்னஞ்சிறு பெண் போலே.... ஆம். பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடிய வாலிப யுவதியாக சிவகாமி. மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி. ஒரு யுவதியின் அழகை வியந்து பாடும் பக்தன் நிலையில் எழுதியவரும் பாடியவரும். சென்னை தொலைக்காட்சிக்காக இந்த பாடலை அவர் பாடிய கருப்பு வெள்ளை பதிவு இருக்கிறது. கமென்டில் தொடுப்பு தருகிறேன் பாருங்கள். 2011 நவம்பர் முதல் 41.37 லட்சம் நண்பர்கள் பார்த்துள்ளனர்!
.... ..... .....
இப்படி அவர் பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
கண்டவர்தம் மனமுருக்கும்
திருக்கண்ணப்புரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே
எண்ணமதில் சூழ்ந்திருக்கும்....
காலத்தை உருவாக்கும் காரணமே
அந்தக் காலனையும் உதைக்கும் பூரணமே
பரிபூரணமே
தேனினும் இனியவள்
சிந்தையில் உறைபவள்
செந்தாமரை மலராள்
பன்னிரு விழிகளிலே
பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும்
நீயே என் வாழ்வுக்கு கெதியானவன் முருகா
நிலையாக எனைக்காக்கும் துணையானவன்.
பழம்நீ மலை முருகா
பழம் நீ திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்குத்தா...
தென்பழனி மலையோரம்
தெள்ளுதமிழ் இசைபாடும்
செந்தூரின் கடலோரம்
வேலோடு மயிலாடும் என்ற பாடலை இப்போது வேண்டாம், இரவில் கேளுங்கள், தாலாட்டி தூங்க வைப்பார் சீர்காழி.
...
1979இல் சாரா நவரோஜி என்ற பெண்மணி எழுதி சக்தி விக்டர் இசையில் சீர்காழி கிறித்துவ வழிபாட்டுப்பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
இரவும் கடந்தது
பகல் ஒளி உதித்தது
இரக்கமும் கிடைத்தது
இயேசுவிடம்... இயேசுவிடம்
சிலுவையிலே...
..... கல்வாரி மேட்டினிலே
உயிர்கொடுத்தவரின்
குருதியும் வடிந்ததே
உனக்காக மைந்தா...
யூடியூப்பில் இந்த பாடலை ஏற்றம் செய்த நண்பருக்கு நன்றி. கேளுங்கள்.
கிறித்துவ வழிபாட்டு பாடல்கள் பற்றி தனியே எழுதுவேன்.
.... ...
19.1.1933 அன்று பிறந்தவர் கோவிந்தராஜன்.
தெலுங்கு கீர்த்தனைகள், பஜனைகள் மட்டுமே சங்கீதம், சம்ஸ்கிருதம் மட்டுமே தேவபாஷை என்று மேல்சாதி சுத்தசங்கீத காண்ட்ராக்ட்டர்கள் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்த காலத்தில் திரையிசை மக்களின் தேவையை நிரப்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்தது. விளைவு தேர்ந்த இசைக்கலைஞர்கள் பலர் திரையில் தோன்றி தமிழில் பாடி நடித்தார்கள். 30, 40 பாடல்கள் இடம்பெற்ற படங்கள் சர்வசாதாரணம். ஆனாலும் அந்த பாடல்கள் முழுமையாக தமிழிலும் இல்லை, பாடியவர்களால் வடமொழி உச்சரிப்பை தவிர்க்கவும் முடியவில்லை.
அன்றைய திராவிட அரசியல் எழுச்சியும் எழுத்தாளர்களும் திரையுலகில் புகுந்த பின்னர்தான் இதில் மாற்றம் வந்தது. தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா ஆகியோரைத் தொடர்ந்து கே ஆர் ராமசாமி, திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன் ஆகியோர்தான் முழுக்கவும் தமிழில் பாடி வேறு தளத்துக்கு கொண்டுவந்தார்கள். தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயணகவி, குயிலன், விந்தன், பாரதிதாசன், கம்பதாசன், கா மு ஷெரீப், கு மா பா, சுரதா என ஒரு பெரிய கவிஞர் படை புறப்பட்டு வந்தது.
ஆனால் கச்சேரி இசை திருவிழா எனில் அது மேல்சாதி சங்கீத காண்ட்ராக்ட்டர்கள் வசம்தான் அப்போதும் சிக்கிக்கொண்டு இருந்தது. இவர்களின் பீடமாக திருவையாறு இருந்தது. தமிழுக்கு அங்கே எப்போதும் இடம் இருந்தது இல்லை. தமிழில் பாடக்கூடாது என்று சீர்காழி கோவிந்தராஜன்அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அவரும் திருவையாறு கும்பலை ஒதுக்கி வைத்தார். இறைபக்தி வேறு மொழிப்பற்று வேறு என்பதை தெளிவாக உணர்ந்து இருந்த அவரை கை கூப்பி தொழலாம்.
இதை அறிந்த தந்தை பெரியார் சீர்காழியை அழைத்து தி க மேடைகளில் பாட வருமாறு அழைக்கிறார். 'ஐயா! நான் நெற்றி நிறைய நீறு அணிந்து இறைவனை பாடுபவன். இறைவனை மறுக்கும் உங்கள் மேடைகளில் எனக்கு ஏது இடம்?' என்று இவர் கேட்க நீங்கள் எதை வேண்டுமானாலும் பாடுங்கள், தமிழில் பாடுங்கள் என்று அவரை வரவேற்று மரியாதை கொடுத்தார் தந்தை பெரியார். அவ்வாறே தி க மேடைகளில் சீர்காழி பக்தி பாடல்களை பாடியிருக்கிறார்! அங்கே பெரியாருக்கும் சீர்காழிக்கும் பொதுவாக இருந்தது தமிழ்மொழிபால் இருந்த பற்று. கூடவே திருவையாறு கும்பலுக்கு புகட்டப்பட்ட சரியான பாடம். டி எம் கிருஷ்ணா வரை இது தொடர்கிறது.
மக்கள் நெஞ்சில் மலிவுப்பதிப்பு
வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப்பெரும் படையின் தொடுப்பு
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச்சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
என்று அவரே பாரதிதாசன் எழுதிய பாடலை பாடவும் செய்தார். மனக்குகையில் சிறுத்தை எழும் என்ற வரியை மீண்டும் மீண்டும் கேளுங்கள். சிறுத்தை சிலிர்த்து எழும்.
.... ....
சிறு வயது முதல் கேட்டுக்கொண்டு இருக்கும் தமிழ் பக்தி பாடல்களும் திரைப்பட பாடல்களும் அப்படியே மனதில் பதிந்து விடுகின்றன. இது மரபும் மொழியும் சார்ந்த ஒன்று என்பதை மறுக்க முடியாது. எளிமையான சொற்களும் இனிமையான இசையும் நம் மனதை ஆட்கொண்டு விடுகின்றன. பாடல்கள் வெவ்வேறு சமயங்களின் வழிபாட்டு பாடல்களாக இருக்கட்டும், காதல் பாடல்களாக, தத்துவ பாடல்களாக அல்லது கட்சிகளின் பிரச்சார பாடல்களாக இருக்கட்டும். எளிய தமிழில் இருந்தன, நமது மொழி அறிவை வளர்த்தன. பக்தி பாடல்களோ அவற்றின் ஆன்மிக கருத்துக்களோ அல்ல நம் மனதை கவர்ந்ததன் காரணம், தமிழும் இசையும் மட்டுமே. நமது அரசியல் சார்புக்கோ பற்றிக்கொண்ட அரசியல் கொள்கைக்கோ இவை என்றும் குறுக்கே நின்றதில்லை. அன்று கேட்பவன் அரசன் மறந்தால் என்ற பாடலை மீண்டும் மீண்டும் கரோகியில் பாடிக்கொண்டே இருக்கிறேன்.
தொடர்வேன்.
- மு இக்பால் அகமது