திங்கள், ஜூலை 24, 2023

வடகிழக்கு கலவரங்களின் மையமான ஒன்றிய பி ஜெ பி அரசு+கார்ப்போரேட் கூட்டணி


1

கடந்த மார்ச் மாதம் மணிப்பூரின் மலைப்பிரதேச மக்களை அவர்களின் பாரம்பரிய காடுகளில் இருந்து மாநில பிஜேபி அரசு வெளியேற்றியது.  அரசு கூறிய ஒரே காரணம்: இக்காடுகள் பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகள். 

அதே மார்ச் மாதம் பிஜேபி அரசு நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவை செய்தது. அதன் பெயர் Forest Conservation (Amendment) Bill, 2023.

பல்லுயிர்பெருக்கம் மிக அதிகமான அளவில் கொட்டிக்கிடக்கும் வடகிழக்கு மாநிலங்களில், அதே வனங்களில் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக வனங்களோடும் இயற்கையோடும் தம் வாழ்வை பிணைத்துக்கொண்டு வாழும் பழங்குடியினர் பகுதிகளில் இப்படி ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய வேண்டியதன் பின்னணி என்ன?

ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற Forest Conservation Act, 1980இல் திருத்தத்தை கொண்டுவருவதே இந்த முன்வரைவு. அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. விந்தை என்னவெனில் அந்த குழுவில் இருந்த அனைத்து எம்.பி.களும் பிஜேபி கட்சியினர். நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பாமல் இகுழுவுக்கு அனுப்பியதில் உள்நோக்கம் இருந்தது. இக்குழு பொதுமக்கள் கருத்தை அறிவதற்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து விளம்பரம் செய்தது. அதாவது 2023 மே 18 இறுதி நாள் என்று அறிவித்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இக்குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்கும். இப்போது நடந்து கொண்டு இருப்பது அந்த மழைக்கால கூட்டத்தொடர்தான்.

FCA 1980 சட்டம் சுற்றுச்சூழலுக்கும் சமூக வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக இருப்பதால் இச்சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவது அவசியம் என்று  ஒன்றிய பிஜேபி அரசு கூறிக்கொண்டாலும் உண்மை என்ன? வடகிழக்கு மாநில மக்களின் நிலங்கள் முழுவதையும் அந்த மக்களிடம் இருந்து பறிமுதல் செய்து கார்பொரேட் முதலைகளிடம் ஒப்படைப்பது என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே இதில் ஒளிந்துள்ளது. அதனை மறைக்க பிஜேபி அரசு வளர்ச்சி, மக்கள் நலன் என்று பகட்டான வார்த்தைகளை அள்ளி வீசுகிறது.

வடகிழக்கு மாநிலங்களின் நிலம், இயற்கை வளம், கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்ற்றின் மீதான அம்மக்களின் உரிமைகளுக்கு நம் அரசியமைப்புசட்டம் சிறப்பான பாதுகாப்பை வழங்கியுள்ளது.

ஒன்றிய அரசு முன்வைத்துள்ள இந்த முன்வரைவோ வடகிழக்கு மக்களின் உரிமைகளை முற்றாக நிராகரிக்கிறது, மாறாக பல லட்சம் ஹெக்டேர் காடுகளை அவர்களிடம் இருந்து பறித்து கார்பொரேட் வசம் கொடுக்கவும், காடுகள் சாராத பிற வணிகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் எளிதில் வழி செய்கின்றது.

உதாரணமாக, இப்போது நடைமுறையில் உள்ள வனப்பாதுகாப்பு சட்டத்தின் மிக கடுமையான ஷரத்துகளில் இருந்து இந்த திருத்தம் முழுமையாக விலக்கு அளிக்கிறது. உதாரணமாக, சர்வதேச எல்லைகளில் இருந்து, கட்டுப்பாட்டு கோட்டில் LOC அல்லது LAC யில் இருந்து 100 கிமீ தூரத்துக்குள் இருக்கின்ற எந்த ஒரு நிலத்தையும் அரசு கைப்பற்றி கொள்ளலாம். 

வடகிழக்கு மாநிலங்கள் சீனா, திபெத், மியான்மர், பூடான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் எல்லையை கொண்டவை. நாகாலாந்து மாநிலத்தின்  90% நிலங்களையும் இந்த சட்டத்திருத்தம் பாதிக்கும். கூடவே அருணாசல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களின் காடுகளையும், மேகாலயா, மிஜோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 100% நிலங்களையும் பாதிக்கும். 

Godavarman வழக்கில் உச்சநீதிமன்றம்1996இல் வழங்கிய தீர்ப்பின்படி வனங்களை பாதுகாப்பதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆன விதிகள் அனைத்து காடுகளுக்கும் சமமாக பொருந்தும். அந்த நிலத்தின் உரிமையாளர் யாராக இருந்தாலும், அது என்ன வகையான காடாக இருந்தாலும்.

இமயமலை தொடரில் உள்ள 15,000 கி.மீ சர்வதேச எல்லை, வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான்நிக்கோபார் தீவுகள், மேற்குத்தொடர்ச்சி மலைகள் ஆகிய நிலப்பரப்பில் உள்ள காடுகள் அனைத்தையும் பாதுக்காக்க தக்க வகையில் இதுகாறும் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் இப்போது கொண்டுவரப்பட்ட சட்ட முவரைவு கைவிட சொல்கிறது.


2

1980 சட்டமானது, நாகாலாந்து, மிஜோரம் சட்டமன்றங்களுக்கு நிலம், இயற்கை வளம், அரசியல்-கலாச்சார உரிமைகள் மீதான தமது சொந்த சட்டங்களை இயற்றிக்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. 2023 திருத்தமோ அரசியலமைப்பு சட்டம் பிரிவு371ஐ நீர்த்துபோக செய்யுமா அல்லது முற்றாகவே துடைத்து போட்டு விடுமா என்பதுதான் நாகா மக்களின் இன்றைய கேள்வி.

பல்லாயிரம் வருடங்கள் ஆக வனங்களில் குடியிருந்த, கூடியிருக்கும் பழங்குடியினர்தான் வனங்களை உண்மையில் பாதுகாக்கின்றார்களே தவிர அரசோ அரசின் சட்டங்களோ அதிகாரிகளோ அல்லர். அரசு என்ற ஒன்று இல்லாத காலத்தில் இருந்தே பழங்குடியினர்தான் வனங்களை பாதுகாத்து வந்துள்ளனர் என்பதே எளிய உண்மை. 

ஒன்றிய பிஜேபி அரசு 2021இல் National Mission on Edible Oils-Oil Palm NMEOOP என்ற திட்டத்தின் கீழ் 11040 கோடி ரூபாய் ஒதுக்கியது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளும் குறிவைக்கப்பட்டன. இந்த பகுதிகள்தான் இந்தியாவின் முக்கியமான பல்லுயிர்பெருக்க பகுதிகள், உலகின் தலையாய மூன்று பல்லுயிர்பெருக்க பகுதிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பவை. மிக அரிய விலங்கினங்கள், பறவைகள், அரிய மருத்துவ குணங்களை கொண்ட தாவரங்கள், காடுகளில் மட்டுமே விளையக்கூடிய உணவுப்பயிர்களை உள்ளடக்கிய பாதுக்காக்க பட்ட வனங்களை கொண்ட பிரதேசங்கள்.

2021 திட்டப்படி இக்காடுகளில் பாமாயில் மரங்களை பயிரிட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.    இக்காடுகளில் பாமாயில் மரங்களை பயிரிட்டால் இக்காடுகளின், இந்த மாநிலங்களின் சுற்றுச்சூழலும் காடு சார்ந்த வாழ்வை ஒட்டிய அம்மக்களின் கலாச்சார பாரம்பரியமும் அழியும் என்று நன்கு தெரிந்தே அசாமிலும் அருணாச்சல பிரதேசிலும் 2021க்கு முன்பே அதாவது 2004 தொடங்கியே பாமாயில் மரங்கள் பயிரிடப்பட்டன. கோத்ரெஜ், சங்கி சாமியார் ராம்தேவின் பதஞ்சலி, 3F Oil palm Agrotech ஆகிய கம்பெனிகள் மாநில அரசின் உதவியுடன்

விவசாயிகளை அணுகி கொள்ளை லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி பாமாயில் பயிரிட தூண்டின. ஏற்கனவே இருந்த இயற்கையான காடுகள் அழிக்கப் பட்டன, அந்த இடங்களில் பாமாயில் பயிரிடப்பட்டது. இதுவரை கண்டிடாத அளவுக்கு தாராள மானியம், இலவச மரக்கன்றுகள்,  விளைபொருட்களை சந்தையில் விற்க உதவி, உள்நாட்டில் இதனால் வளர்ச்சி என்று பல்வேறு ஜிகினா விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதன் பின்விளைவுகள் மிக பயங்கரமானவை என்று மக்கள் பின்னர் உணர்ந்தார்கள். ஆனால் அந்த அழிவை அவ்வளவு எளிதில் கடந்து வர முடியவில்லை.


3

ஒரே நிலத்தில் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ற பயிர்களை சுழற்சி முறையில் பயிரிடுவதுதான் மண்ணின் வளத்தை பெருக்கும். பணப்பயிர் ஆன பாமாயில் மரத்தை மட்டுமே பயிரிடுவதால் அதாவது  ஒற்றைப்பயிர் விவசாயம் செய்வதால் monoculture எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கேடுகள், உணவு உத்தரவாதத்துக்கு நேர்ந்துள்ள அபாயம் ஆகியவற்றை அரசும் கார்பொரேட் நிறுவனங்களும் பழங்குடியின மக்களிடம் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 

மிஜோரம் மாநிலத்தில் 2004 தொடங்கி ஒற்றைப்பயிர் ஆன பாமாயில் மட்டுமே பயிரிட்டதால் ஏற்பட்ட சேதாரம் ஆனது வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துக்கும் பொருந்தும். அவற்றை பட்டியல் இடலாம்:

* Food and Agricultural Organization வெளியிட்ட வரைபடங்களின்படி வடகிழக்கு மாநிலங்களின் நிலம் பாமாயில் விவசாயத்துக்கு ஏற்றவை அல்ல.

* மிஜோரம் மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்களின் நிலம் பாமாயில் விவசாயத்துக்கு ஏற்றவை அல்ல. ஒரு பாமாயில் மரம் ஒரு நாளைக்கு 300 லிட்டர் தண்ணீர் குடிக்கும். அதாவது ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ஒரு நாளைக்கு 40000-50000 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதாவது இரண்டு ஹெக்டேர் பாமாயில் மரங்களுக்கு தேவையான தண்ணீர் ஆனது ஒரு மிஜோர குடிமகன் ஒரு வருடம் முழுவதும் உட்கொள்ளும் குடிநீருக்கு சமம்.

 வடகிழக்கு மாநிலங்களில் வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே மழை பெய்யும்.  ஆக இருக்கும் நிலத்தடி நீரையும் பெய்யும் மழை நீரையும் ஒட்டுமொத்தமாக பாமாயில் மரங்கள் உறிஞ்சி எடுத்துவிட, கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.

* பாமாயில் மரங்களுக்கு உரமும் பூச்சி மருந்தும் அதிகம் தேவை என்பதால் வடகிழக்கு மாநிலங்களின் காடுகள் தம் இயற்கையான மண்ணின் வளத்தை இழந்தன.

* அறுவடை செய்யப்பட்ட பாமாயில் பழங்களை 24 மணி நேரத்துக்குள் பக்குவப்படுத்தி எண்ணெய் எடுக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பிழிவு ஆலைகளுக்கு பழங்களை கொண்டு செல்லத்தக்க சாலை வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கொள்முதல் மையங்கள் எதுவும் இல்லாததால் பழங்கள் அழிந்து நட்டத்தில் முடிந்தது.

* அவ்வாறு அழிந்து போன பழங்களால் நிலம் மேலும் நாசமானது.

* பாமாயில் மரத்தின் அடிப்பாகம் மிக மிக பெரிதாக வளரும் என்றும் வருடத்திற்கு நான்கு முறை இந்த மரங்களை சீராக்க வேண்டும் என்றும் அதற்கென கூலியாட்களை நியமித்து கூலி கொடுக்க வேண்டியுள்ளது என்றும் நஷ்டம் அடைந்த விவசாயிகள் கூறுகின்றனர்.

* பாரம்பரிய காடுகளில் பன்னெடுங்காலமாக விளைந்த அல்லது விளைவிக்கப்பட்ட உணவுதான்ய, தாவர வகைகளை உண்பதை தமது உணவுப்பண்பாடாக கொண்டிருந்த பழங்குடியினர், ஒற்றைப்பயிர் ஆன பாமாயில் விவசாயத்தால் தமக்கான உணவு உத்தரவாதத்தை இழந்தனர். அதாவது தம் உணவுப்பண்பாட்டை கைவிடும் அவலம் நேர்ந்தது.

* இக்காடுகளில் இயற்கையாக விளைந்த உணவுப்பயிர்கள், மருத்துவ தாவரங்கள், தேக்கு உள்ளிட்ட மரங்கள் ஆகியவை அளிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலக்காய் ஆகியன பயிரிடப்பட்டதால் மக்களுக்கான உணவு உத்தரவாதம் இல்லாத அவலநிலை ஏற்பட்டது. இது நீண்டகால பாதிப்பு ஆகும்.

* ஒரு ரூபாய் வருமானமோ லாபமோ கிடைக்காத ஒரு விவசாயி நாளடைவில் தன் நிலத்தை பாமாயில் பயிர் செய்ய தூண்டிய கார்பொரேட் நிறுவனத்திடம் விற்றுவிட்டு வெளியேறுவார். அவ்வாறு வெளியேறியுள்ளார்கள். அதன் பின் தம் பாரம்பரிய நிலங்களில் கார்பொரேட் கம்பெனிகளின் கூலிகளாக உழைத்தார்கள். ஆக கார்ப்பரேட் முதலைகளுக்கு வடகிழக்கு மாநிலங்களின் காடுகளை கிட்டத்தட்ட இலவசமாக கொடுத்துவிடும் பிஜேபி அரசின் திட்டம் இப்படி நிறைவேறுகிறது.

* ஒன்றிய, மாநில அரசுகளின் அடாவடி சட்டங்கள், சட்ட திருத்தங்களால் தமது அதிகாரத்துக்கு உட்பட்ட நிலங்களின் மீது கிராம பஞ்சாயத்துக்களோ பிற கிராம சமூக கவுன்சில்களோ எந்த உரிமையும் கொண்டாட முடியாத கையறு நிலை ஏற்பட்டது.


* காடுகளின் அல்லது வடகிழக்கு மாநிலங்களின் பல்லுயிர்பெருக்கம் நாசமானது. 


* உண்மையில் காடுசாரா வணிக நடவடிக்கைகளின் பொருட்டே வடகிழக்கு மாநிலங்களின் காடுகளை கார்பொரேட் நிறுவனங்கள் கைப்பற்றின. காட்டு சுற்றுலா, வனவிலங்கு காட்சிசாலைகள், சபாரி ஆகிய தொழில்களை இக்காடுகளில் தொடங்கி நடத்த கார்பொரேட் முதலைகளுக்கு குத்தகை விடலாம் என்றுதான் பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள 2023 சட்ட முன்வடிவு கூறுகிறது. 

* ஒருமுறை பாமாயில் பயிர் செய்தால் அந்த மண்ணில் வேறு விவசாயம் செய்ய முடியாது.

* உலகின் இரண்டாவது பெரிய பல்லுயிர்பெருக்க பிரதேசம் ஆன வடகிழக்கு மாநிலங்கள் இந்த கார்பொரேட், அரசுகள் கூட்டணியால் தம் இயற்கை சூழலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக அழிந்து போனதாக கருதப்பட்ட Bugun Liocichla என்ற பறவை வடகிழக்கில் மட்டுமே கண்டறியப்பட்டது.


4

மிஜோரம் மாநில அரசு New Land Use Policy NLUP என்ற திட்டத்தை நடைமுறை படுத்தியே தன் மாநிலத்தில் பாமாயில் விவசாயத்தை ஊக்குவித்தது. பாமாயில் விவசாயம் அதாவது ஒற்றைப்பயிர் விவசாயம் மிஜோரத்தில் மிக மோசமாக தோல்வி அடைந்ததை கண்ட மணிப்பூர் விவசாயிகள் அதாவது மலைவாழ் குக்கி மக்கள் தம் மாநில அரசு மிஜோரம் அரசின் NLUP ஐ நகல் எடுப்பதை 2014இலேயே எதிர்த்தார்கள். பாரம்பரிய, இயற்கை சார்ந்த  ஜூம் jhum சுழற்சி விவசாய முறையே சிறந்தது என்ற தம் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் பாமாயில் விவசாயத்தின் அனுபவம் என்ன?

வளர்ந்து வரும் நாடுகள் ஆன தென் கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் விவசாயம் என்பது மிகப்பெரிய எதிர்மறையான அனுபவத்தை அவர்களுக்கு கொடுத்தது என்பது வரலாறு. 

இந்த நாடுகள் தமது கசப்பான பாமாயில் விவசாய அனுபவங்களை பிறகு Round Table On Sustainable Palmoil என்ற அமைப்பை ஏற்படுத்தி பாமாயில் விவசாயத்தை மிக கவனமாக முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்கள் நலம் பேணும் அரசுகளால் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். தவறு செய்வதையே கொள்கையாக கொண்ட அரசால் நாடு நாசமாவது மட்டுமே நடக்கும்.


5

ஒன்றிய பிஜேபி அரசின் பிரதமரும் அமைச்சர்களும் கடந்த பத்து வருடங்களில் மிகப்பல முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தது ஏன் என்ற கேள்வியையும் இப்போது நடக்கும் மணிப்பூர் கலவரங்களின் பின்னணியையும் மேலே சொல்லப்பட்ட ஒன்றிய அரசு, கார்பொரேட் கூட்டணி மேற்கொண்டுள்ள மக்கள் விரோத கொள்கைகளோடு இணைத்துப்பார்க்காமல் இருக்க முடியாது. 

ஒருபுறம் இஸ்லாமிய, கிறித்துவ மக்களுக்கும் இந்து மத மக்களுக்கும் இடையே கலவரங்களை தூண்டி விடுவது; மறுபுறம் அதானி, அம்பானி, நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற பெரும் கார்பொரேட் முதலைகள் தம் சொத்தை பல நூறு மடங்கு பெருக்கி கொள்ள ஏதுவாக வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதும் பல லட்சம் கோடி மதிப்புக்கு கார்பொரேட் வரியை தள்ளுபடி செய்வதும் வங்கிகள் திவால் ஆவதை அனுமதிப்பதும் மிகத்தீவிரமாக தெளிவாக பிஜேபி அரசால் நடத்தப்படுகிறது. 

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக மட்டுமே 4500 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ள கட்சிதான் பிஜேபி. கொரோனாவின் பேரால் மக்களிடம் திரட்டப்பட்ட நன்கொடை எவ்வளவு என்பதை வெளிப்படையாக சொல்ல மறுக்கும் அதே கட்சியின் பிரதமர்.

தன் தேசத்தின் ஒரு மாநிலத்தில் இரண்டு பெண்கள் ஓராயிரம் ஆண்களால் நிர்வாணமாக வீதிகளில் நடத்தப்பட்டது தெரிந்தும் கூட அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பது போல, அது பற்றி கடுகளவும் கவலை இன்றி அமெரிக்க அதிபர், பிரெஞ்சு அதிபர் மனைவிகளுக்கு வைரமோதிரம், சேலை ஆகிய பரிசுபொருட்களை தேர்வு செய்யும் வேலையில் கவனமாக இருந்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பெருத்த வாய்வீச்சு வீரராக திறந்து வைத்த இந்த தேசத்தின் பிரதமர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வந்து மணிப்பூர் பற்றி பேச அச்சப்படுகிறார்.

இந்த பின்னணியில் பார்க்கும்போது மணிப்பூர் கலகங்களை இரண்டு மக்கள் பிரிவினருக்கு இடையே ஆன கலவரம் ஆக பிஜேபியும் ஆர் எஸ் எஸ் சார்பு ஊடகங்களும் சித்தரிக்க முயல்கின்றன, ஒன்றிய பிஜேபி அரசு+கார்பொரேட் கூட்டணி கொள்ளையை  திட்டமிட்டு மறைக்கின்றன என்பது தெளிவு.

இதை புரிந்துகொண்டு மெய்தெய் இன மக்களும் குக்கி இன மக்களும் கைகோர்த்து, வடகிழக்கின் இந்து, முஸ்லிம், கிறித்துவ, புத்த சமய மக்களும் கைகோர்த்து பிஜேபி ஒன்றிய அரசு + கார்பொரேட் கூட்டணியை எதிர்க்க வேண்டும். வடகிழக்கில் அமைதியும் சமாதானமும் திரும்ப வேண்டும் எனில் இடதுசாரி ஜனநாயக சக்திகளும் மதசார்பற்ற சக்திகளும் அமைதியை விரும்பும் இயக்கங்களும் வடகிழக்கு மக்களிடையே இந்த பின்னணியை வலுவாக பிரச்சாரம் செய்ய வேண்டும். 

இந்திய நாடு ஒருசில கார்பொரேட் கம்பெனிகளின் சொத்து அல்ல என்பதிலும் மக்களிடையே பிளவை உருவாக்கி தந்திரமாக நாட்டை ஒருசில கார்பொரேட்டுகளுக்கு விற்பனை செய்யும் பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலை அம்பலப்படுத்துவதே நம் முன் உள்ள உடனடியான பெரும் கடமை என்பதிலும் உறுதியாக இருப்போம்.

... ...

வெள்ளி, ஜூலை 21, 2023

மணிப்பூர்: பின்னோக்கிய பார்வையும் கலவரங்களுக்கான காரணங்களும்

 

1

வடகிழக்கு மாநிலங்கள் ஏழு. ஏழு சகோதரிகள் அதாவது seven sisters என அழைக்கப்படும் ஏழு மாநிலங்கள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி அசாம், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம் ஆகியவற்றில் இந்து மத மக்கள் பெரும்பான்மையினர்; மேகாலயா, நாகாலாந்து, மிஜோரம், அருணாசல பிரதேஷ் ஆகியவற்றில் கிறித்துவ மக்கள் பெரும்பான்மையினர். அசாமில் குறிப்பிடத்தக்க அம்சம் அங்கே மட்டும் ஒரு கோடி இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள், அதாவது வட கிழக்கின் 93% இஸ்லாமிய மக்கள் அசாமில் வாழ்கின்றனர். 

இந்தியாவின் கிறித்துவ மக்களில் 30% பேர் வடகிழக்கு மாநிலங்களில்தான் வாழ்கிறார்கள்.  குறிப்பிடத்தக்க அளவில் புத்த மத மக்கள்

திரிபுரா, சிக்கிம், அருணாசல பிரதேஷ், மிஜோரம் ஆகிய மாநிலங்களில் வாழ்கிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் ஏறத்தாழ 50 சிறுபான்மை இனக்குழுக்களும், 10 பெரும்பான்மை இனக்குழுக்களும் உள்ளன என்று சொல்லப்பட்டாலும் அது சரியான கணக்கும் அல்ல, ஏனெனில் நூற்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. 

பேராசிரியர் பிபன் சந்திரா எழுதிய India after Independence 1947-2000 (1999, Penguin)

என்ற நூலில் கூறுகிறார்: "1971 மக்கள்தொகை கணக்கின்படி இந்திய மக்கள்தொகையில் நானூறுக்கும் மேற்பட்ட பழங்குடி இனங்கள் இருந்துள்ளன. அன்றைய கணக்கின்படி 38 மில்லியன் அதாவது 3 கோடியே 80 லட்சம் பழங்குடி மக்கள் இருந்துள்ளனர். அதாவது அன்றைய மக்கள்தொகையில் 6.90 விழுக்காடு.

பழங்குடி மக்கள் மத்திய பிரதேசம், பிஹார், ஒரிசா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகியமாநிலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களில்தான் ஒட்டுமொத்த வடகிழக்கு மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்தார்கள். மலைகளிலும் காடுகளிலும் வசித்த பழங்குடியினரின் பாரம்பரிய வாழ்க்கை கூறுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், அன்றாட வாழ்வியல் ஆகிய அனைத்தும் பிற மக்களின் அதாவது பழங்குடியினர் அல்லாத மக்களின் வாழ்க்கை கூறுகளில் இருந்து பெரிதும் மாறுபட்டவை.

இந்த அடிப்படையான முக்கியமான மானுடவியல் கூற்றினை, விஞ்ஞான அடிப்படையில் ஆன உண்மையை, சமூக வரலாற்றை எவர் ஒருவர் புரிந்துக்கொள்ள முற்படுகிறாரோ, புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்கின்றாரோ அவரால் மட்டுமே பழங்குடி மக்களின் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மக்களின் வாழ்வியலை, அரசியல் பொருளாதார நிலையை அல்லது மாற்றங்களை புரிந்துகொள்ள முடியும், சரியான கோணத்தில் அணுக முடியும்.

1952இல் பிரதமர் நேரு இவ்வாறு எழுதினார்: வடகிழக்கு எல்லைப்பிரதேசம் ஆனது அரசாங்கங்களின் சிறப்பு கவனத்திற்கு மட்டுமே உட்பட்டது அல்ல, மாறாக இந்திய மக்கள் அனைவரின் தனிப்பட்ட கவனத்துக்கும் உரியதாகும். அந்த மக்களுடன் நமது தொடர்பானது நமக்கு அதாவது எஞ்சிய பகுதி இந்திய மக்களுக்கு நன்மைபயக்கும் என்பதுடன் வடகிழக்கு பிரதேச மக்களுக்கும் நன்மை பயப்பதாகும். இந்தியாவின் கலாச்சார வல்லமைக்கும் கலாச்சார பன்முகத்தன்மைக்கும் வளமைக்கும் வடகிழக்கு பிரதேச மக்கள் சிறப்பான பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்கள்".

நேருவின் இந்தப் பார்வையை அரசியலமைப்பு சட்டத்தின் ஆறாவது செட்யூலில் நம்மால் உணர முடியும். ஆறாவது செட்யூல் அசாமின் பழங்குடி மக்களுக்கு மட்டுமே பொருந்தியதாகும். பழங்குடி மக்கள் தம்மைத்தாமே ஆண்டுகொள்ளும் உரிமையை வழங்குகிறது; சுயாட்சி பெற்ற மாவட்டங்கள், மாவட்ட-பிரதேச கவுன்சில்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு அவை அசாம் மாநில சட்டமன்ற அதிகாரத்தை மீறாத வகையில் சில சட்டங்களையும் நீதி நிர்வாக அமைப்புகளையும் உருவாக்கிக் கொள்ள வகை செய்தது.

நேருவின் இந்த அணுகுமுறைகள் அசாமின் எல்லைப்பிரதேசங்களை உள்ளடக்கிய North East Frontier agency அதாவது NEFA 1948இல் உருவாகக்காரணமானது. அது ஒரு யூனியன் பிரதேசமாக தனிப்பட்ட நிர்வாக அமைப்புக்கு உட்பட்டு இருந்தது. 1987இல்தான் NEFA ஆனது அருணாசல பிரதேசம் ஆக மாறி தனிமாநிலம் ஆனது.

இதன் பிறகு அசாம் மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த பழங்குடி மக்களுக்கும் சமவெளிப்பகுதிகளில் இருந்த அசாம், வங்காளி மக்களுக்கும் இடையே பிரச்னைகள் தோன்றின, முக்கிய காரணம்: பழங்குடி மக்களின் கலாச்சார பழக்க வழக்கங்களும் அசாமிய, வங்காள மக்களின் கலாச்சார பழக்கவழக்கங்களும் ஒத்துபோகவில்லை. தமது தனிப்பட்ட கலாச்சார அடையாளங்கள் மறைந்து விடுவதாக, அல்லது பழங்குடி அல்லாத மக்களால் அழிக்கப்படுவதாக பழங்குடி மக்கள் அச்சம் அடைந்தார்கள்.

இப்பிரச்சினை பெரிதாகி 1950களின் நடுவே தமக்கான தனிப்பட்ட மலையக மாநிலம் வேண்டும் என்று பழங்குடியினரின் ஒரு பிரிவினர் கோரிக்கை எழுப்பினார்கள். ஆனால் மிக வலிமையாக இக்கோரிக்கை வற்புறுத்தப் படவில்லை, ஒன்றிய அரசு இக்கோரிக்கையை கண்டுகொள்ளவும் இல்லை. தொடர்ந்து அசாம் மாநிலத்துக்குள்ளேயே பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர்.

1960இல் ஒரு திருப்பமாக அசாமிய தலைவர்கள் ஒன்றுகூடி அசாமிய மொழிமட்டுமே மாநிலத்தின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைக்க, மலைப்பிரதேசத்தின் பல அரசியல் கட்சிகள் ஒன்று கூடி  All party hill leaders conference (APHLC) என்ற ஒற்றை அமைப்பின் கீழ் திரண்டு இந்திய அரசுக்குள்ளேயே தமக்கான தனிப்பட்ட மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர்.

போராட்டங்கள், கடை அடைப்பு என பழங்குடி மக்களின் கோரிக்கை தீவிரம் அடைந்தது. 1962 சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, தனி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்த பழங்குடி மக்களின் தலைவர்கள்தான் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடங்களில் வென்றனர்! அசாம் சட்டமன்றத்தை புற க்கணிப்பதாகவும் அவர்கள் பிரகடன்ம்செய்தார்கள். 

பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன, இது குறித்து விவாதித்துமுடிவு செய்ய பல கமிஷன்கள், கமிட்டிகள் நியமிக்கப்பட்டன.

1969இல் அரசியமைப்புசட்டம் திருத்தப்பட்டது. அசாமுக்குள் ஒரு மாநிலமாக மேகாலயா உருவாக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களை மறு வரைவு செய்யும் திட்டத்தின் கீழ் 1972இல் மேகாலயா தனி மாநிலம் ஆனது.  Garo, Khasi, jaintia பழங்குடி மக்களை உள்ளடக்கியது மேகாலயா.

தொடர்ந்து மணிப்பூர், திரிபுரா ஆகிய யூனியன் பிரதேசங்கள் மாநிலமாக உருவாகின.

...

2

மணிப்பூரின் எல்லைகள்: வடக்கில் நாகாலாந்து, தெற்கில் மிஜோரம், மேற்கில் அசாம், கிழக்கில் பர்மாவின் (மியான்மர்) Sagaing பிரதேசமும் அதே தென்கிழக்கில் பர்மாவின் ச்சின் Chin மாகாணமும் எல்லைகள். 

மொழி: அதிகாரப்பூர்வ மொழி மணிப்புரி. யதார்த்தத்தில் அது மெய்த்தேய் Meitei மொழி. Sino-Tibetan மொழிகள் பேசும் மக்களும் உள்ளார்கள். Sini-Tibetan மொழிக்குடும்பம் ஏறத்தாழ 400 மொழிகள் கொண்ட பெரிய குடும்பம்.

விடுதலைக்கு முந்தைய காலத்தில் மணிப்பூர் மன்னராட்சியின் கீழ் இருந்துள்ளது. 1930களில் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 1939இல் இரண்டாவது உலகப்போர் தொடங்கிடவே பேச்சுவார்த்தை தொடரவில்லை. மன்னராட்சி இருந்தபோதும் 1948இல் ஒரு சட்டப்பேரவை நிறுவப்பட்டது. 1941 முதல் 1955 வரை மன்னராக இருந்த மஹராஜா புத்தசந்திரா 1949 செப்டம்பர் 21 அன்று இந்திய அரசுடன் மணிப்பூரை இணைத்த்துக்கொள்ள முடிவு செய்தார். 1949 அக்டோபர் 15 அன்று இந்திய அரசுடன் முறையாக இணைந்தது.

இங்கே ஒரு நிகழ்வை குறிப்பிடவேண்டும். மஹராஜா புத்தசந்திரா அசாம் கவர்னரை சந்தித்து மணிப்பூரின் சட்ட ஒழுங்கு நிலவரம் பற்றி பேசும்பொருட்டு ஷில்லாங் சென்றதாகவும் ஆனால் ஷில்லாங்கில் அவரை நிர்ப்பந்தம் செய்து இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட செய்ததாகவும் வரலாறு சொல்கிறது. சட்டமன்றமும் கலைக்கப்பட்டது.L

இந்த இணைப்பு பற்றி மணிப்பூர் சட்டமன்றத்தில் பேசவும் இல்லை, விவாதிக்கவும் இல்லை என்பதுடன் மணிப்பூர் மக்களின் ஒப்புதலும் இல்லை என்பது மணிப்பூரில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது, மணிப்பூர் மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக எண்ணினார்கள். ஆக அரசுக்கும் மணிப்பூர் மக்களுக்கும் இடையே ஆன கசப்புணர்வு 1949இலேயே தோன்றிவிட்டது எனலாம். 1949க்கும் 1972க்கும் இடைப்பட்ட காலத்தில் யூனியன் பிரதேசமாக இருந்தது. அதன் பின் ஆன காலம் முழுவதும் அங்கே 

 ஆயுதம் ஏந்திய பல குழுக்கள் முளைத்து தொடர்ந்து அரசியல் சிக்கல்கள் நீடிக்கும் மாநிலம் ஆக மணிப்பூர் உள்ளது.

... 

"அரசியல் சட்டப்படி வரையறுக்கப்பட்ட" நிபந்தனைகளுக்குள் ஒரு சமூகம் அல்லது சமூகக்குழு வருமாயின் அச்சமூகத்தை சார்ந்தவர் பழங்குடி அதாவது scheduled tribe என்ற உரிமை பெற்றவர் ஆகிறார்.

மணிப்பூரின் Meitei மெய்த்தேய் இனத்தை சேர்ந்த (பெரும்பான்மை மக்கள்) தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீண்டகாலமாக வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் மக்களில் சிறுபான்மையினர் ஆன ஏற்கனவே பழங்குடியினர் ஆக உள்ள மலைவாழ்மக்கள் ஆன குக்கி சமூகத்தினர் மெய்த்தேய் மக்களின் இக்கோரிக்கையை அடியோடு எதிர்க்கிறார்கள். காரணங்கள் பல.

.....

3

மணிப்பூர் இரண்டு முக்கியமான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கு மணிப்பூரின் பரப்பளவில் 10% நிலப்பரப்பு ஆகும். மெய்த்தேய் வகுப்பினர் இப்பள்ளத்தாக்கில் வாழ்கிறார்கள். இவர்கள் சட்டப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் OBC. மணிப்பூர் மக்கள்தொகையில் இவர்கள் 64%க்கும் அதிகம். மணிப்பூரின் மொத்த சட்டமன்ற தொகுதிகள் 60, இப்பள்ளத்தாக்கில் மட்டும் 40 தொகுதிகள் உள்ளன. அதாவது மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் பலம் வாய்ந்த இடத்தில் மெய்த்தேய் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் வைஷ்ணவ பிரிவை சேர்ந்த இந்து மத மக்கள். இசுலாமிய மக்களும் இருக்கிறார்கள்.

மற்றொரு பகுதி மலைப்பகுதி. குக்கி பழங்குடி மக்கள் வாழும் பகுதி. மணிப்பூரின் பரப்பளவில் 90% நிலப்பரப்பு ஆகும். அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி மக்களில் 35%க்கும் மேல் இந்த 90% நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் சட்டமன்றத்தின் 20 தொகுதிகள் மட்டுமே இங்கே உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 33 பழங்குடி இனமக்கள் முக்கியமான இரு பிரிவுகளுக்குள் அடங்குவர்: நாகா பழங்குடியினர், குக்கி பழங்குடியினர்.  Kuki-Chin-Mizo சமூக மக்கள்.

 இவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவ மக்கள். இவர்கள் சட்டப்படி செட்யூல்ட் பழங்குடியினர் Scheduled Tribes.

இரு பிரிவு மக்களும் சமூக, கலாச்சார அடிப்படையிலும் பூகோள ரீதியான வரலாற்று கூறுகள் அடிப்படையிலும் இவ்வாறு OBC, ST என வரையறுக்கப்பட்டுள்ளனர்.

....

4

1963 முதல் 2017 வரையில் ஆன காலகட்டத்தில் பெரும்பாலான காலங்களில், ஒன்பது முறை, காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்துள்ளது. 1977-79 காலத்தில் ஜனதா கட்சியும் 2001இல் சுமார் நான்கு மாதங்கள் சமதா கட்சியும், இடைப்பட்ட காலங்களில் மாநிலத்தில் உள்ள கட்சிகளும் ஆட்சி செய்துள்ளன.

2017 மார்ச் முதல் 2022 மார்ச் வரையும், அதன் பின்னும் பி ஜெ பி ஆட்சி செய்கின்றது. இரண்டு ஆட்சியிலும் நாங்தோம்பாம் பிரேன் சிங் முதலமைச்சராக உள்ளார். 2007இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் 2016இல் விலகுகின்றார். அதாவது காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் முதல்வருக்கு எதிராக கிளர்ச்சி செய்து கட்சியில் இருந்து வெளியேறி பி ஜெ பியில் சேர்கிறார். 2017 தேர்தலில் பி ஜெ பி (முதல் முறையாக) ஆட்சி அமைக்கிறது. பிரேன் சிங் முதல்வர் ஆகிறார். 

...

5

கலவரங்களுக்கான காரணங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டம் பழங்குடி மக்களுக்கு என பல சிறப்பான உரிமைகளை வழங்கியுள்ளது. ஏற்கனவே முன்னேறிய சமூகத்தினர் பழங்குடி சமூக மக்களை எந்த விதத்திலும் சுரண்டிவிடாத அளவுக்கு பழங்குடிகளை பாதுக்காக்கும் அம்சங்களை கொண்டுள்ளது. பழங்குடியினர்க்கு உரிமையான நிலப்பகுதிகளை பழங்குடி அல்லாத ஒருவர் விலைக்கு வாங்க முடியாது, உரிமை கொண்டாடவும் முடியாது.

அரசியல் சட்டம் பிரிவு 371(c) இன்படி மணிப்பூரின் பழங்குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்க பட்டுள்ளன. பழங்குடி அல்லாத மக்களுக்கு மணிப்பூர் பழங்குடி மக்களின் நிலங்களை கைமாற்றவோ விற்கவோ முடியாது. மேலும் அரசு வேலைகளிலும் கல்வி நிலையங்களிலும் பழங்குடியினர்க்கான இட ஒதுக்கீடு இப்போதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. Lol

2015ஆம் ஆண்டு அப்போது இருந்த காங்கிரஸ் அரசு சட்ட மன்றத்தில் மூன்று சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தது: The Manipur Land Revenue and Land Reforms (Seventh) Amendment Bill, 2015; The Protection Of Manipur People's Bill, 2015; The Manipur Shops and Establishments Act (Second) Amendment Bill, 2015 ஆகிய மூன்று மொழிவுகள்.

இந்த மூன்று சட்டமுன்வடிவுகளையும் பழங்குடி குக்கி மக்கள் எதிர்த்தார்கள். திரும்ப பெற வலியுறுத்தினார்கள். 

காரணங்கள்: 1. இந்த சட்டமுன்வடிவுகள் மெய்த்தேய் மக்களை பழங்குடியினர் ஆக அங்கீகரிக்கும் அம்சங்களை கொண்டுள்ளன. அவ்வாறு செய்தால் மாநிலத்தின் பொருளாதாரமும் அரசியலும் மெய்த்தேய் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். ஏற்கனவே தமது மலைப்பகுதிகளுக்கு அதாவது பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கு அரசால் ஒதுக்கப்படும் நிதிகள் பள்ளத்தாக்கு மக்களுக்கு அதாவது மெய்த்தேய் மக்களுக்கு மடை மாற்றி விடப்படுவதாகவும் தம் நலன்களுக்கு அரசு போதிய அளவு நிதி ஒதுக்குவது இல்லை என்றும் குக்கி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

2. மூன்று சட்டமுன்வடிவுகளும் 'மணிப்புரி' அல்லாத ஒருவர் அந்த மாநிலத்துக்குள் நுழைய வேண்டும் எனில் அதற்கான பிரத்யேக பயண நுழைவு அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டும் என்று சொல்கின்றன. Inner Line Permit என்று அழைக்கப்படும் அனுமதி அது. இதே போன்றதொரு அனுமதிக்கான நிபந்தனை அருணாசல பிரதேஷ், மிஜோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உண்டு.

3. இந்த முன்வடிவுகள் சட்டமானால் சமவெளிப்பகுதிகளில் வாழும் மெய்த்தேய் இன மக்கள் தமது (குக்கி) வாழிடமான மலைப்பகுதிகளை ஆக்கிரமிக்கவும் தமது பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து கைப்பற்றிக்கொள்ளவும் வழி ஏற்படும் என்று குக்கிகள் ஆவேசம் அடைந்தார்கள், போராட்டங்கள் வெடித்தன.

மறுபுறம் மெய்த்தேய் மக்கள் இந்த சட்ட முன்வடிவுகளை வரவேற்று அவற்றை சட்டமாக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கினார்கள்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முன்வடிவுகளை அன்றைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பினார்கள். The Protection Of Manipur People's Bill, 2015 என்ற சட்ட முன்வடிவில் 'மணிப்புரி' என்ற வரையறைக்கு தெளிவான விளக்கம் இல்லை என்று கருத்து கூறி அதை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார், மற்ற இரண்டு முன்வடிவுகளையும் மாநில அரசின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பினார்.

...

6

2017இல் பி ஜெ பி ஆட்சி அமைந்தது, பிரேன் சிங் முதல்வர் ஆனார். மெய்த்தேய் மக்கள் பழங்குடியினர் ஆக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று பி ஜெ பி தேர்தல் வாக்குறுதி கொடுத்து இருந்தது. எனவே இக்கோரிக்கையை மெய்த்தேய் மக்கள் கையில் எடுத்தார்கள். குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு உயிர் கொடுத்து மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தார்கள்.

மெய்த்தேய் மக்களின் நீண்ட கால கோரிக்கையான இது, The Protection Of Manipur People's Bill, 2018 என்ற வடிவத்தில் பி ஜெ பி ஆளும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குக்கி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மிக எளிதாக இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது, ஏனெனில் 60இல் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் பி ஜெ பி கட்சிக்காரர்கள்!

The Protection Of Manipur People's Bill, 2018 என்ற சட்டமுன்வடிவின்படி 1951க்கு முன்புவரை மணிப்பூரில் வாழ்ந்தவர்கள், 1951க்கு முன்பே இருந்து இப்போதும் வாழ்கின்றவர்களுக்கு 'அந்த மண்ணின் பூர்வகுடிகள்' அதாவது indigenous people என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.  ஆக பாங்கல் Pangalaa இசுலாமியர்கள், மணிப்பூரின் ST மக்கள், மேலும் 1951க்கு முன்பான காலத்தில் இருந்து மணிப்பூரில் வசிக்கும் இந்தியக்குடிமக்கள் அனைவரும் 'மணிப்புரிகள்' அதாவது மணிப்பூரின் பூர்வகுடிமக்கள் என்று வரையறுக்கப்பட்டது.

இந்த வரையறைக்கு உட்படாத எவரும் மணிப்புரி அல்லாதவர் Non-Manipuri என்றும் ஒருமாத காலத்துக்குள் அவர்கள் தமது பெயரை அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் கட்டளை இட்டது. 

மிக முக்கியமான பிரச்சனைக்கு உரிய அம்சம் அல்லது தந்திரம் இந்த சட்ட முன்வடிவில் உள்ளது என்று குக்கிகள் குற்றம்சாட்டியது எது எனில் National Register for Citizens, 1951 தேசிய குடிமக்கள் பதிவேட்டிலோ Village Directory, 1951 கிராம பதிவேட்டிலோ குக்கி பழங்குடி மக்களின் பெயர்கள் இருக்காது அல்லது சரியான துல்லியமான தகவல்கள் இருக்காது. மணிப்பூர் என்ற மாநிலம் உருவானது 1972 ஜனவரி1 என்பதால் 1972க்கு முன்பு என்ற காலக்கெடுதான் நியாயமானதாக இருக்கும் என்று Joint Action Committee against Anti-Tribal Bills என்ற அமைப்பு (பழங்குடி மக்களுக்கு எதிரான சட்ட முன்வடிவுகளுக்கு எதிரான போராட்ட கூட்டமைப்பு) வலியுறுத்தியது. குக்கிகளை அடையாளப்படுத்த தக்க 

வாக்காளர் பட்டியல், நிலவுடைமை பத்திரம் உள்ளிட்ட எந்தவொரு ஆவணமும் 1951க்கு முன்பான காலத்தில் இருக்காது. எனவே இந்த நிபந்தனை அல்லது காலக்கெடு குக்கி இன பழங்குடி மக்களை அவர்களின் பாரம்பரிய மலைப்பகுதியில் இருந்தும் வாழிடங்கள், காடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் தந்திரம் இதில் அடங்கியுள்ளதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.

.....

7

பிரச்சினையின் பிற வடிவங்கள்:

1. குக்கி பழங்குடியினர் வாழும் பகுதியில் மெய்த்தேய் மக்களோ பிறரோ நிலம் வாங்க முடியாது. ஆனால் மெய்த்தேய் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள நிலங்களை பிற பகுதி மக்கள் வாங்க முடியும்.

2. Reserve forest எனப்படும் காப்புக்காடுகள் என்று அரசு அறிவித்த பகுதிகளில் இருந்து குக்கி பழங்குடியினர் மக்களை அரசு வெளியேற்றிய நடவடிக்கை குக்கி மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

2020இல் ஏறத்தாழ 1346 வீடுகளை Langol காப்புக்காடு பகுதியில் இடிக்க அரசு முடிவு செய்தது, 95 குடும்பங்கள் தமது வீடுகளை இழந்தன. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது. Langol பகுதி இம்பால் நகரின் மலையடிவாரத்தில் உள்ளது.

3. வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் பழங்குடியினர் வாழிடங்களை அரசு பறிமுதல் செய்வதும் சில ஆயிரம் ரூபாய் பணத்தை இழப்பீடு என்ற பெயரில் கொடுப்பதும் "பழங்குடி மக்கள் மீதான சட்டப்பூர்வமான தாக்குதல்" அன்றி வேறில்லை.

4. ஓபியம் எனப்படும் கசகசாவை போதைப்பொருள் ஆக பயிரிடுவது மணிப்பூரின் ஆகப்பெரிய சமூகக்கேடு. ஒரு காலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பூமியாக இருந்த நிலைமாறி மணிப்பூர் இப்போது ஓப்பியத்தின் உற்பத்திக்களனாக மாறி விட்டது. போதைப்பொருட்களுக்கு எதிரான அரசு நிர்வாக அமைப்பான Narcotics and Affairs of Border இன் தகவல் படி  மணிப்பூரில் 2017-23 கால இடைவெளியில் 15,400 ஏக்கர் பரப்பில் ஓபியம் பயிரிடப்பட்டுள்ளது. 2,518 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் தங்களை தம் பாரம்பரிய வாழிடங்களில் இருந்து வெளியேற்றவே போதைப்பொருளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஒரு போர்வையாக பி ஜெ பி அரசு ஏவுகிறது என குக்கி பழங்குடியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளும் நிறைவேற்றப்பட்ட நாள் அன்று சுராசந்த்பூரில் போராட்டம் உடனடியாக வெடித்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தார்கள். 11 வயது சிறுவனும் ஒருவன். குக்கிகள் அவனது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யாமல் 632 நாட்கள் வைத்திருந்தார்கள்.

....

அரசுகள் சொல்வது போல் இது வெறும் இரண்டு குழுக்களுக்கு இடையே, அதாவது பழங்குடியினர், பழங்குடி அல்லாதவர்கள் இடையே ஆன பிரச்னை மட்டுமேதானா? உண்மை அங்கே முற்றுப்பெறுகிறதா?

இல்லை. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் 370ஐ அவசரகதியில் பி ஜெ பி அரசு நீக்கிய உடன் அங்கே நிலங்களை வாங்கிட இந்தியாவின் பிற பகுதிகளின் சாமான்ய மக்களில் எத்தனை பேர் அங்கே நிலங்களை வாங்கி குவித்து விட்டார்கள்? இத்தனை வருடங்களுக்கு பிறகு அங்கே லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, வெகு விரைவில் இந்திய, சர்வதேச கார்பொரேட்டுகளுக்கு காஷ்மீரின் கதவுகளை அகலமாக திறப்பார்கள். மேலும் UAE ஐ சேர்ந்த ஒரு பெரிய கார்பொரேட் கம்பெனி அங்கே மால் தொடங்கிட அனுமதி பெற்றுள்ளதாம்.

அதே போல் மெய்த்தேய் இன மக்களில் பெரும்பாலோர் குக்கி பழங்குடியினர் வாழும் பகுதிகளை விலைக்கு வாங்கிவிட முடியாது என்பதும் தெளிவான உண்மை! எனில் மெய்த்தேய் மக்களின் பேரால் இந்த கோரிக்கையை பின்னால் இருந்து தூண்டி விடுவோர் ஆதிக்க வர்க்கத்தின் பிரதிநிதிகளே. பணம் படைத்த கார்பரேட் கும்பலின் ஏஜெண்டுகள் ஆன மெய்த்தேய் ஆதிக்கவர்க்கத்தின் கோரிக்கைதான் அது. 

கடந்த மார்ச் 29 அன்று வனப்பாதுகாப்பு சட்டம்,1980இல் ஒன்றிய பி ஜெபி அரசு கொண்டுவந்த திருத்தம் இது:  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, நாட்டின் பாதுகாப்பு-ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு வனப்பாதுகாப்பு சட்டத்தின்கீழ் முன்அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணப்பயிர் வேளாண்மை செய்யவும், காடுகளுக்கு அடியில் உள்ள வளங்களை கொள்ளையிடவும் அனுமதி அளித்தது. அத்திருத்தத்தின் மூலம் வனப்பாதுகாப்பு சட்டத்தை ஒழித்துக்கட்டி இயற்கை வளங்களை கார்பொரேட் டுகள் கொள்ளையடிக்க  வழி செய்து கொடுத்தது மோடியின் ஒன்றிய அரசு. இதை நன்கு புரிந்துகொண்டுள்ள குக்கி இன பழங்குடியினர் தம் போராட்டங்களை கார்பொரேட் முதலைகளுக்கு எதிராகவும் நடத்த வேண்டியகட்டாயத்தில் உள்ளார்கள். 

...

9

ஆப்பசைத்த குரங்கின் கதை


குக்கி அமைப்புகள் 2000ஆவது வருடத்திற்கு முன்பே தமக்கான தனி குக்கி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வந்தார்கள். ஒரு உடன்பாட்டுக்கு வரும் விதமாக Kuki land territorial council என்ற நிர்வாக அமைப்பு குக்கி பழங்குடியினரின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட ஒத்துகொண்டார்கள். மணிப்பூர் அரசு, மணிப்பூர் சட்டமன்றம் ஆகியவற்றின் நிர்வாக, நிதி அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கவுன்சில் ஆக இது இருக்கும்.

2008 ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்த உடன்படிக்கை எட்டப்பட்டது. முக்கியமாக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நிறுத்திவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்ற நிலையை ஏறத்தாழ 25 ஆயுதம் தாங்கிய குக்கி அமைப்புகள் ஏற்றுக்கொண்டார்கள். அப்படியான ஆயுதம் ஏந்திய அமைப்புகள் ஏறத்தாழ 32 இருந்தன. இந்த உடன்படிக்கை Suspension of Operations (SoO) என்று அழைக்கப்பட்டது.

இந்த உடன்பாடு ஒரு வருட காலத்துக்கு செல்லும், அதன்பின் ஒவ்வொரு வருடமும் உடன்படிக்கையை நீட்டித்துக்கொண்டு வந்தார்கள்.

இந் SoOஇன் படி UPF என்ற United Peoples Front, KNO எனப்படும் Kuki National Organization ஆகிய ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புகள் தம் ஆயுதப்போராட்டத்தை கைவிடுவதாக கையெழுத்து இட்டனர், ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. Kuki Zo சமூகத்தின் மிகப்பெரிய குழுக்களில் ஒன்றான United People's Front ஒன்பது வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கியது, ஏறத்தாழ 2,000 கிளர்ச்சியாளர்களை கொண்டது. KNO 23 ஆயுதம் ஏந்தி ய குழுக்களை உள்ளடக்கியது, இங்கேயும் ஏறத்தாழ 2,000 கிளர்ச்சியாளர்கள் உள்ளனர்.

இது ஒரு முத்தரப்பு உடன்படிக்கை அதாவது Tripartite agreement. ஒன்றிய அரசு, மாநில அரசு, குக்கி கிளர்ச்சியாளர் அமைப்புகள் ஆகிய மூன்று தரப்பினரும் ஏற்றுக்கொண்ட உடன்படிக்கை. மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் பகுதிகளில் 14 கண்காணிப்பு முகாம்களை நிறுவி அமைதியை கொண்டு வர முயற்சி செய்வது இதன் நோக்கம்.

ஆனால் மெய்த்தேய் சமூகத்திற்கு ஆதரவான People's Alliance for Peace and Progress என்ற அமைப்பு SoO உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வற்புறுத்தியது. அதற்கு அந்த அமைப்பு சொன்ன காரணங்கள்:

1. இந்த சமாதான கால இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு  ஆயுதம் ஏந்திய குக்கி அமைப்புகள் தம்மை பலப்படுட்கள் கொள்கின்றனர்.

2. மியான்மரில் (பர்மா) இருந்து குக்கி இன மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரவைத்து தம் அமைப்புகளில் இணைத்துக் கொள்கிறார்கள்.

3. ஓபியம் பயிரிடுவது, ஆயுதக்கடத்தல் ஆகியவற்றுக்கு சட்டவிரோதமாக எல்லைதாண்டி வரும் குக்கிகளை ஈடுபடுத்துகிறார்கள்.

4. SoO உடன்படிக்கையை பயன்படுத்தி காடுகளையும் வனவிலங்கு சரணாலயங்களையும் குக்கிகள் ஆக்கிரமிக்கிறார்கள். போதைப்பொருள் விற்பனை மூலமாக பணத்தை பெருக்குகிறார்கள்.

...

இந்த முத்தரப்பு உடன்படிக்கை ஒப்பந்தம் மாநிலத்தில் அமைதியை கொண்டுவந்தது என குக்கிகள் உறுதியாக நம்பினார்கள். "ஆனால்  சமாதானமம் அமைதியும் முற்றிலுமாக திரும்புவதற்கு முன்பாக SoS உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மெய்த்தேய் வலியுறுத்துவதற்கு ஒரே காரணம் குக்கிகளுக்கு எந்த பலனும் கிடைக்க கூடாது என்பதே."

பி ஜெ பி முதலமைச்சர் பிரேன் சிங் செய்த தவறு ஆப்பசைத்த குரங்கின் கதையாக ஆனது. இந்த SoS உடன்படிக்கையை மேலும் வலுவாக்குவதற்கு பதிலாக மெய்த்தேய் குழுக்களின் நிர்ப்பந்ததிற்கு அடிபணிந்தார். 2023 மார்ச் 10 அன்று அமைச்சரவையை கூட்டி SoO உடன்படிக்கையை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதாவது உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டது என்று பொருள். இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம், முதலமைச்சர் பிரேன் சிங் மெய்த்தேய் சமூகத்தை சேர்ந்தவர்.

ஒன்றிய அரசுக்கும் இதனை தெரிவித்தார். ஆனால் ஒன்றிய பி ஜெ பி அரசு மாநில பிஜேபி அரசின் இந்த முடிவை ஏற்பதில் தயக்கம் இருப்பதாக தெரிவித்தது. 

மாநில முதல்வரின் பொறுப்பற்ற இந்த நடவடிக்கை எரியும் தீயில் எண்ணெய் வார்த்தது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒரு உடன்படிக்கையை கைவிடுவதால் விளையக்கூடிய  கேடுகளை கூட ஒரு முதல்வரால் முன்னுணர முடியவில்லை என்று சொல்லிவிட முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டால் 40 எம் எல் ஏ க்களை கொண்ட பெரும்பான்மை சமூகத்தின் நிர்ப்பந்தத்துக்கு அவர் அடிபணிந்து போனதில் வியப்பில்லை.

....

10

இந்த நேரத்தில் மலைப்பிரதேசமான சுரசாந்த்பூர், தெங் நூபல் Tengnoupal ஆகிய மாவட்டங்களில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்தன. இப்போராட்டங்களை ஒருங்கிணைத்தது Indigenous Tribal Leaders Forum என்ற அமைப்பு.  இந்த கிளர்ச்சிகளுக்கான காரணம்: குக்கிகள் வாழும் பகுதிகளில் பல வீடுகளை காலி செய்யுமாறு மாநில அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. பல கிறித்துவ சர்ச்சுகளுக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்ட து. அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதாக காரணம் சொன்னது. இந்த போராட்டங்களுக்கு பின் குக்கி ஆயுத கிளர்ச்சி அமைப்புகள் இருப்பதாக அரசு கருதியது. இப்போராட்டங்கள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை, சட்ட விரோதமானவை என்று அறிவித்தது மட்டுமின்றி இந்த போராட்ட ஊர்வலங்களை அனுமதித்த டெபுடி கமிஷனர், எஸ் பி ஆகியோருக்கு விளக்கம் தருமாறு நோட்டிஸ் அனுப்பியது.

இந்த கெடுபிடிகள் யாவும் தங்களை ஒடுக்குவதற்கான மாநில அரசின் நடவடிக்கை என்றே குக்கி மக்கள் கருதியதில் வியப்பில்லை. மூன்று கிறித்துவ ஆலயங்களை மாநில அரசு இடித்து தள்ளியப்பின் மாநில அரசு இந்து மத மக்களை பெரும்பான்மையாக கொண்ட மெய்த்தேய் சமூகத்துடன் கைகோர்த்து இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மணிப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (மணிப்பூரின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்) ஆன Kim Kangte  கூறுவதை கேட்போம் (News click, 5.7.2023):

கலவரகும்பல்களுடன் சேர்ந்து சாதாரண சிவிலியன் மக்களும் கலவரம் செய்தார்கள், உண்மைதான். ஆனால் Arambai Tenggol அமைப்பினர் சீருடை அணிந்து இந்த கலவரத்துக்கு தலைமை தாங்கியதை நான் என் வீட்டின் மாடியில் இருந்து பார்த்தேன். (Arambai Tenggol என்ற அமைப்பு பெரும்பான்மை மெய்தெய் மக்களின் அமைப்பு). இந்த சம்பவங்கள் யாவும் நன்றாக திட்டமிட்டு நடத்தப்பட்டவை. இல்லையெனில் மே 3, 4, 5 ஆகிய மூன்று நாட்களும் குக்கி வாழும் பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடந்தது எப்படி?l

Arambai Tenggol, Meitei Leepun (மெய்த்தேய் ஆயுதகுழுக்கள்) ஆகிய இரண்டும் ஆர் எஸ் எஸ்ஸால் உருவாக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

நடக்கும் கலவரங்களுக்கு பின்னால் மதம் உள்ளது. சர்ச்சுகளை எரித்தார்கள், வீடுகளை எரித்தார்கள், பின்னர் மனிதர்களை கொலை செய்தார்கள். ஆக இப்போது மெய்த்தேய்க்கும் குக்கிகளுக்கும் இடையே ஆன கலகம் என்று சித்தரிக்கிறார்கள். இது உண்மை இல்லை. உண்மையில் பெரும்பாலான மெய்த்தே சர்ச்சுகளை எரித்தவர்கள் மெய்த்தேய் அமைப்பான Arambai Tenggol இன் ஆட்களே.

....

Kim Kangte யின் கூற்றுக்கு வலு சேர்க்கும் செய்திகள் உள்ளன.

Bangalore Manipur Students Association என்ற அமைப்பு பெரும்பான்மை மெய்த்தேய் சமூக இளைஞர்களை கொண்ட அமைப்பு. மே 3 கலவரங்களுக்கு பின் இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை அதன் இந்துத்துவா பின்னணியை அம்பலமாக்குகிறது: "இந்து கிராமங்களை குக்கி ஆயுத கிளர்ச்சியாளர்கள் தீயிட்டு எரிப்பதால் அப்பாவிகள் சாகின்றார்கள்... குக்கி ஆயுத போராட்டகாரர்களும் சட்ட விரோத பர்மிய குடியேறிகளும் போதை வஸ்து மாஃபியாக்களால் ஆதரிக்கப்படுவோர் ஆவர். இந்த குக்கிகள்தான் முற்றிலும் அமைதியான இந்து மணிப்புரி குடியிருப்புகளை தீயிட்டு அழித்தார்கள்".

 அப்பட்டமான ஆர் எஸ் எஸ் சொல்லாடல் அன்றி வேறென்ன? 'அப்பாவிகள்' யார்? மெய்த்தேய் இன மக்களுக்குள், அவர்களது அமைப்புகளுக்குள் ஆர் எஸ் எஸ் நுழைந்து விட்டது அல்லது அந்த அமைப்புக்களே ஆர் எஸ் எஸ் அமைப்புகள்தான் என்று சொல்லலாம். இப்போது மணிப்பூர் பற்றி எரிவதற்கான காரணம் வலதுசாரி இந்துத்துவா அமைப்புகளே. 

Forum of Religious for Justice and peace என்ற அமைப்பு சொல்கிறது: இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான ஒரு பிரச்சனை இப்போது கிறித்தவர்களுக்கு எதிரான ஒரு விசயமாக மாற்றப்பட்டுள்ளது. கத்தோலிக்கர் உள்ளிட்ட அனைத்து கிரித்துவர்களும் இப்போது மணிப்பூரில் கலவரங்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மெய்த்தேய், மார்ஸ், மிஜோஸ், ச்சின் இனங்களை சேர்ந்த அனைத்து கிறித்துவர்களும் இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Arch Bishop Lumon: அரசியல் சட்ட விழுமியங்களுக்கும் ஜனநாயக மாண்புகளுக்கும் விரோதமான, ஒளிவுமறைவான மதவாத சதிகளும் பிற்போக்கு சித்தாந்தங்களும் இப்பிரதேசத்தில் நுழைந்து மாநிலத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்களிடையே, சமாதானத்துடனும் மத நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்த மக்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளன.

Father Velickagam, Vicar General, இம்பால்: அவர்கள் எங்களை திட்டமிட்டு துல்லியமாக இலக்கு நிர்ணயித்து தாக்குகிறார்கள், எங்கள் சர்ச்சுகளையும் நிறுவனங்களையும் தாக்குகிறார்கள். கத்தோலிக்க மக்களை எளிதில் அடையாளம் கண்டு தாக்குகிறார்கள்.

நாங்கள் போலீசை தொலைப்பேசியில் மீண்டும் மீண்டும் அழைத்தாலும் பதில் இல்லை. கலவரம் செய்த குற்றவாளிகளோ தெருக்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். எமது Pastoral Training Centre ஐ தாக்கினார்கள். சர்ச்சுக்குள் தீ வைத்தார்கள்... சர்ச்சுகள், பிற சொத்துக்கள் என  20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அழிக்கப்பட்ட்டுள்ளன. இந்த இழப்புக்கு ஈடு செய்ய அரசும் இதுவரை முன்வரவில்லை. கலாச்சார காவலர்கள் என்ற பேரில் மதவாத சக்திகள் கிறித்தவ மதத்தை அழிக்கும் முயற்சியில் எங்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றார்கள்.

குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெரும்பான்மை இந்து மத மக்களுக்கு எதிரானவர்களாக இஸ்லாமிய மக்களை சித்தரித்து தன் வாக்கு வங்கி அரசியலை நடத்திக்கொண்டு இருக்கும் ஆர் எஸ் எஸ் சின் உறுப்புகள் ஆன பி ஜெ பி, விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தல், வனவாசி கல்யாண் போன்ற அமைப்புகள் இதுவரை தாம் நுழைய முடியாத வடகிழக்கு மாநிலங்களில் கால் பதிக்கவே பல பத்தாண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே பகைமையை மூட்டி கலவரங்களை தூண்டுகிறது. 

....

11

மே மாதம் தொடங்கி வைக்கப்பட்ட கலவரங்களில் 150க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் அண்டை மாநிலங்களுக்கும், எல்லை கடந்து மியான்மர், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குள்ளும் தஞ்சம் புகுந்து இருப்பதாக வாசிக்கும் செய்திகள் சொல்கின்றன. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் உண்மையான கள நிலவரத்தை யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை. மாநிலத்துக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியுள்ளது காவல்துறை. அவரோ ஹெலிகாப்டரில் பறந்து சென்று நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து வந்தார்.

சி பி எம், சி பி ஐ கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் நிவாரணமுகாம்களில் தங்கியுள்ள மக்களையும் மாநில கவர்னரையும் சந்தித்து வந்த பின் "தமது மாநில முதல்வர் மீது நம்பிக்கை இழந்துள்ளனர், பிரதமரின் மவுனத்தை கேள்வி கேட்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்கள். 

மணிப்பூருக்கு சென்ற உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினர்கள் ஆன ஆனி ராஜா, நிஷா சித்து, தீக்ஷா த்விவேதி ஆகியோர் மீது ஜூலை 8 அன்று எப் ஐ ஆர் பதிவு செய்துள்ளது காவல்துறை.

அண்டை மாநிலம் ஆன மிஜோரத்தின் பி ஜெ பி துணைத்தலைவர் ஆர்வன்ராம் சுவாங்கா இப்படி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்: மணிப்பூரில் சர்ச்சுகள் எரிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது என்பது கலவரங்களுக்கு ஆதரவு அளிப்பதே. 357 சர்ச்சுகள், கிறித்துவ போதகர்களின் வீடுகள், சர்ச் அலுவலகங்கள் எரிக்கப்பட்டுள்ளன. கிறித்துவர்களுக்கும் கிறித்துவ மதத்துக்கும் எதிராக இழைக்கப்படும் இந்த குற்றச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில துணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்".

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் ஏவல் துறைகளையும் கவர்னர்களையும் ஏவி சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பல், தான் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் பெயரளவுக்காவது சட்ட ஒழுங்கை பராமரிக்க முடியாமல் போனது மிக மிக கேவலமானது.

கடந்த ஒன்பது வருடங்களில் முப்பது தடவைக்கும் மேல் நம் பிரதமர் வட கிழக்கு மாநிலங்களுக்கு பயணம் சென்றுள்ளார். 80 நாட்களுக்கு மேல் பற்றி எரியும் ஒரு வடகிழக்கு மாநிலம் பற்றி இதுவரை ஒரே ஒரு சொல்லைக்கூட அவர் உதிர்த்து விடாமல் மிக கவனமாக இருக்கிறார். கலவரத்தில் ஈடுபடுவோரை ஒரே ஒரு சொல்லாலும் கூட கண்டனம் செய்யவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் ஆதரவை வெளிப்படுத்தும், நம்பிக்கை தரும் ஒரே ஒரு சொல்லை கூட இதுவரை உதிர்க்கவில்லை. அவர் சார்ந்துள்ள ஆர் எஸ் எஸ் அமைப்பு எவ்வாறு திட்டமிடுகிறதோ எவ்வாறு கட்டளை இடுகிறதோ அவ்வாறே அவர் நடந்து கொள்கிறார்.

மே  மாத முதல் வாரத்தில் ஒரு பெரிய ஆண்கள் கூட்டம் இரண்டு குக்கி இன பெண்களை உடலில் இருந்த ஆடைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு நிர்வாணமாக தெருக்களில் ஊர்வலமாக நடத்தி சென்ற காட்சி இன்று வெளியாகிட நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைர மோதிரம் தேர்வு செய்வதிலும் பிரான்ஸ் அதிபரின் மனைவிக்கு சேலை தேர்வு செய்வதிலும் இந்திய பிரதமர் தன் பொன்னான நேரத்தை செலவு செய்து கொண்டு இருக்கிறார். 

....

20.7.2023

வியாழன், ஜூலை 20, 2023

மேரி மக்தலீனாவின் அருளாசியும் இந்திய விண்வெளி சாதனைகளும்


இந்தியாவில் முதன்முதலாக ஒரு ராக்கெட் ஏவப்பட்டது கேரளாவில் திருவனந்தபுரத்தில் தும்பா என்ற கடற்கரை ஓர மீனவ கிராமத்தில் இருந்துதான்.

அப்போது ISRO கிடையாது. 1962இல் பிரதமர் ஜவஹர்லால் நேரு National Committee for space research என்ற ஆய்வு நிறுவனத்தை அணுசக்தி துறையின்கீழ் நிறுவினார். அவருக்கு தூண்டுதலாக இருந்தவர் குஜராத்தை சேர்ந்த விக்ரம் சாராபாய் என்ற விஞ்ஞானி. ISRO முறையாக நிறுவப்பட்டது 15.8.1969 அன்று.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா, 1975இல் அதை விண்ணில் ஏவியது சோவியத் யூனியன்.

திருவனந்தபுரத்தில் இருந்து 15 கிமீ வடக்கில் உள்ள கடற்கரை மீன்பிடி கிராமம்தான்

தும்பா. புனித பிரான்சிஸ் சேவியர் பதினாறாம் நூற்றாண்டில் கேரளாVவுக்கு வந்தபோது தங்கியிருந்த கிராமம் அது. மண் சுவராலும் தென்னை ஓலைகளாலும் ஒரு தேவாலயத்தை புனித பிரான்சிஸ் கட்டுகின்றார். ஏறத்தாழ100 வருடங்களுக்கு பிறகு புனித பார்தலோமியோவ்வுக்கானஆலயமாக மண்சுவர் அகற்றப்பட்டு நிலையான கட்டிடம் கட்டப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த ஆலயம் மேரி மக்தலீன் ஆலயமாக மாறியது. ஆலய கட்டுமானம் நடந்துகொண்டு இருந்தபோது கடற்கரையில் ஒதுங்கிய மிக அழகிய சந்தனமர சிலைதான் அந்த மேரி மக்தலீன் உருவச்சிலை. அதுவே ஆலயத்தின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகியது. அதுவரை காணப்படாத மிகப்பெரிய மரம் ஒன்று அதே கரையில் ஒதுங்க, அதுவே ஆலயத்தின் கொடிமரமாக ஆக்கப்பட்டது. மரித்த யேசு உயிர்த்து எழுந்தபோது மேரி மக்தலீனுக்கே முதலில் காட்சியளித்தார் என்பது கிறித்துவ மக்களின் நம்பிக்கை.

... ...

இந்தியாவுக்கான ராக்கெட் ஏவுதளத்தை எங்கே நிறுவலாம் என்ற கேள்வி எழுந்தபோது புவியின் காந்தப்புல நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்த தும்பா சிறந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டது. 

அன்று விக்ரம் சாரா பாயும் ஹோமி பாபாவும் திட்டமிட்டபடி சாராபாய் மேரி மக்தலீன் ஆலயத்தின் பிஷப் ஆக இருந்த ரெவரெண்ட் பீட்டர் பெர்னார்டு பெரீராவை சந்திக்கிறார். அது ஒரு சனிக்கிழமை. தும்பாவின் அருமையை பிஷப்புக்கு எடுத்துச்சொல்லி சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஆலயம், நிலம் அனைத்தையும் அரசுக்கு விட்டுத்தருமாறு சாராபாய் வேண்டுகிறார். பிஷப் புன்னகை புரிந்து மறுநாள் வர சொல்கின்றார். 

ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டுக்கூட்டத்தில் கூடியுள்ள கிறித்துவ மக்களிடையே பிஷப் உரையாற்றுகிறார்: என் குழந்தைகளே! இங்கே புகழ்பெற்ற ஒரு விஞ்ஞானி வந்துள்ளார். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்காக நமது ஆலயத்தையும் நான் வாழும் வீட்டையும் விட்டுக்கொடுக்குமாறு அவர் நம்மிடம் வேண்டுகிறார். விஞ்ஞானம் உண்மையை தேடுகிறது, அது தனிமனித வாழ்க்கையை மேலும் மேம்படுத்துகிறது. மதத்தின் உயரிய வடிவம் என்பது ஆன்மீகமே. ஆன்மீகவாதிகள் கடவுளிடம் எதை வேண்டுகிறார்கள்? மனித மனங்களில் அமைதியை வேண்டுகிறார்கள். சுருக்கமாக சொல்வேன் - நானும் விக்ரமும் ஒரே வேலையைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம் - விஞ்ஞானமும் ஆன்மீகமும் கடவுளின் ஆசீர்வாதத்தை வேண்டுகின்றன, எதற்கு? மனிதனின் சிந்தனையும் உடலும் வளம் பெற வேண்டும் என்பதற்கே. ஆக, குழந்தைகளே, கடவுளின் ஆலயத்தை ஒரு நெடுங்கால விஞ்ஞான திட்டத்திற்காக ஒரு விஞ்ஞானி கேட்கிறார், கொடுத்து விடலாமா?

கூட்டத்தில் பெரும் அமைதி நிலவுகிறது. ஒருசில நொடிகள் மட்டுமே. அதன்பின் ஒட்டுமொத்த சபையும் 'ஆமென்' என்று முழங்க அந்த நொடியில் இருந்து தொடங்குகிறது எதிர்கால இந்தியாவுக்கான விண்வெளி ஆய்வு.

... ....

Thumba Equatorial Rocket Launching Station என்ற இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமும் முதல் ராக்கெட் ஏவுதளமும் கிறித்துவ மக்கள் மனமுவந்து அளித்த இடத்தில்தான் அமைந்தது. தேவாலயமும் சுற்றி இருந்த மீனவ மக்களின் வீடுகளும் காலி செய்யப்பட்டன. ஆலயத்தின் மேரி மக்தலீன் பீடத்திற்கு முன்புதான் இந்தியாவின் முதற்கட்ட ராக்கெட்டுகள் பலவும் வடிவமைக்கப்பட்டன, உருவாக்கப்பட்டன. அமெரிக்கா NASAவில் செய்யப்பட்டு இந்தியா வாங்கிய Nike-Apache ராக்கெட் மேரி மக்தலீனுக்கு முன்புதான் ஒருங்கிணைக்கப்பட்டது. 

ஆலயத்தின் மையமான இடத்தில் TERLS நிர்வாக அலுவலகம் இயங்கியது. பின்னர் ராக்கெட் கட்டுமானத்திற்கு என தனி கட்டிடம் கட்டப்பட்டபோது ராக்கெட் பணிகள் அங்கே மாற்றப்பட்டன. அதன்பின் ஆலயமும் பிற கட்டிடங்களும் விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் தங்கும் இடமாக மாற்றப்பட்டன. ஏவுதளத்தின் பக்கத்தில் இருந்த ஒரு தொடக்கப்பள்ளிதான் ஏவுதள அலுவலகம் ஆக இருந்துள்ளது. பின்னர் அது நூலகமாக மாற்றப்பட்டது.

மிக உயர்ந்த அழகிய ஆலயத்தின் கட்டுமானத்திற்கோ மேரி மக்தலீன் உருவச்சிலைக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிமொழி பாதுகாக்கப்பட்டது. 

கிராமத்தின் மீனவ மக்கள் கடற்கரையின் மீதான தம் உரிமையை எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை. தமது மீன்பிடித்தொழில் நடவடிக்கைகள், வலைகளை காய வைப்பது ஆகிய அன்றாட வாழ்க்கையை இதே கடற்கரையில்தான் நடத்தி வந்தார்கள். ராக்கெட் ஏவும் முன்பு அறிவிக்கப்பட்டால் கடற்கரையில் தமது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்து ஒத்துழைப்பார்கள்.

விண்வெளி ஆய்வின் தொடக்க காலத்தில் வெளிநாடுகளில் இருந்த தலைசிறந்த விஞ்ஞானிகளை அரசு தேர்வுசெய்து இங்கே வரச்செய்தது. அப்படி வந்த விஞ்ஞானிகள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கி நேராக ராக்கெட் ஆய்வு மையத்திற்கு வந்தால் ஆலயத்தில் இருந்த 'குடியிருப்பு' பகுதிக்கு செல்வதும் அதன் பின்னர் வந்து சேரும் குடும்பத்தினரும் இந்த 'குடியிருப்பு' பகுதியில்தான் வசிக்க வேண்டும். 

ஆலயத்தை சுற்றி இருந்த பழைய செங்கல் கட்டிடங்களும் கூட பயன்பாட்டில்தான் இருந்துள்ளன. ராக்கெட் கட்டுமான பிரிவு, காவலர் பிரிவு, உணவகம் உள்ளிட்ட பல துறைகள் இயங்கியுள்ளன. பிஷப்பின் இல்லத்தில்தான் TERLS இன் இயக்குனருக்கும் பிற மூத்த விஞ்ஞானிகளுக்கும் ஆன அலுவலகம் ஆக இருந்துள்ளது.

1985இல் தும்பா ஏவுதளமும் குடியிருப்பு பகுதிகளும் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்களுக்கு இடம்பெயர்ந்த பின்னர், ஆலயம் விண்வெளி ஆய்வுக்கண்காட்சியாகமாக மாறியது.

... ...

இந்தியாவின் முதல் SLV3 ஐ வடிவமைத்தவர் அப்துல்கலாம். ரோஹிணி செயற்கைக்கோளை சுமந்து சென்றது. நாள் 18.7.1980.

அப்துல் கலாம், சின்யா ராமச்சந்திர ராவ் சத்யா ஆகியோரால் அங்கே வடிவைக்கப்பட்ட ஒரு எந்திரத்தை 1968 பிப்ரவரி 2 அன்று அன்றைய பிரதமர் இந்திரா இயக்கி தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அதே நாளில் Centaur rocket ஐ மாலை 6 மணிக்கு இந்திராவே இயக்கி ஏவுவதாகவும் திட்டமிடப்பட்ட து. மிக அபாயகரமான ஒரு வேதிப்பொருள் அடங்கிய ஒரு சாதனத்தை அந்த ராக்கெட்டுடன் இணைக்கும் வேலையில் விஞஞானி சி ஆர் சத்யா ஈடுபட்டு வருகிறார். நேரமோ ஓடிக்கொண்டிருக்க, மூன்று கி மீ தொலைவில் இருந்தவர்களுக்கு ஜீப் அனுப்பி வைக்க நிர்வாகம் மறந்துவிட்டதே!  வேறு வழியின்றி சத்யாவும், வேலப்பன் நாயரும் சைக்கிளில் காரியாரில் வைத்து தள்ளிக்கொண்டு போன காட்சியை கருப்பு வெள்ளை யில் படம் ஆக்கியவர் உலகப்புகழ் பெற்ற Henri Cartier Bresson!!! 

விக்ரம் சாராபாய் 1942இல் மிருணாளினியை மணம் புரிந்தார், அவர்களது மகள் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் மல்லிகா சாராபாய். கேப்டன் லட்சுமி அவர்களின் இளைய சகோதரிதான் மிருணாளிணி. 

... ...

இன்று பிற்பகல் 2.30க்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து

ஏவப்பட்ட சந்த்ராயன் 3 விண்கலத்தை விண்ணுக்கு எடுத்துக்கொண்டு சென்ற ஏவுவாகனம் LVM3. 

சந்த்ராயன் 3 வெற்றி பெறட்டும்! ஆமென்.

...