இந்திய ரயில்வேயின் குறிக்கோள் "நியாயமான கட்டணத்தில் மக்களின் பாதுகாப்பு, விரைவான பயணம்" safe, fast train services at affordable cost.
உலகின் நான்காவது பெரிய ரயில்வே நிறுவனம் இந்திய ரயில்வேக்கு 1,21,000 கிமீ ரயில்பாதை சொந்தமானது. இதன் பொருள் இந்த 121000 கிமீ ரயில்பாதை மக்களின் பணத்தில் கட்டப்பட்டது என்பதே. ஒரு வருடத்திற்கு 8,10,700 கோடி பயணிகளையும் நூற்றுப்பத்து கோடி டன் சரக்குகளையும்கையாளுவது இந்திய ரயில்வே துறை. அதாவது ரயில்வேயில் பணிபுரியும் பல லட்சம் தொழிலாளர்களின் உழைப்பும் மக்கள் பணத்தில் உருவான கட்டமைப்பும் இதை சாத்தியப்படுத்தி உள்ளது என்று பொருள்.
தோழர் ஆர் இளங்கோவன், DREU ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜூன் 2022இல் ஒரு கூட்டத்தில் ஆற்றிய உரையின் சாரம் கீழே:
1950களில் நாட்டின் மொத்த சரக்குப்போக்குவரத்தில் 84% இந்திய ரயில்வே மூலம் நடந்தது. இப்போது இது 28% மட்டுமே. அப்போது 78% பயணிகள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தினார்கள், இப்போது இது 12% ஆக குறைந்து விட்டது. இப்போது சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 25 கிமீ, பயணிகள் ரயிலின் சராசரி வேகம் 50 கிமீ, அவ்வளவுதான். சீனாவில் இது முறையே 200-300கிமீ, 400கிமீ.
ஒவ்வொரு வருடமும் 4500 கிமீ ரயில்பாதையை புதுப்பிக்க வேண்டும், ஆனால் 2022 வருட கணக்கின் படி 11000 கிமீ பாதை புதுப்பிக்கப்படவில்லை.
ஒவ்வொரு வருடமும் 200 ரயில் நிலையங்கள் புதுப்பிக்க வேண்டும், ஆனால் உண்மையில் 100 மட்டுமே புதுப்பிக்கப்படுகின்றன.
பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பல நூறு பாலங்கள் இப்போதும் அப்படியே பயன்பாட்டில் உள்ளன. CAG அறிக்கை கூறுகிறது: கட்டமைப்புகளை புதுப்பிக்க 1,14,000 கோடி ரூபாய் நிதி தேவை, ஆனால் அவ்வாறு செலவு செய்யப்படவில்லை, எனவே பாதுகாப்பு, வளர்ச்சி இரண்டும் சிக்கலில் உள்ளன.
பி ஜெ பி அரசின் National Monetization Pipeline திட்ட வரைவின் படி, 150 பயணியர் ரயில்களில் 60% ரயில்கள் அதாவது 90 ரயில்கள் தனியார்மயம் ஆக்கப்படும்.
உண்மை என்ன? தனியார் கம்பெனிகளுக்கு சரக்குபோக்குவரத்தில்தான் குறி அதிகம், அதில்தான் லாபம் கொட்டும். பி ஜெ பி அரசின் Dedicated Freight Corridor அதற்கு வழி செய்கிறது. இத்திட்டம் தனியார் கம்பெனிகள் ஒட்டுமொத்தமாக இந்திய ரயில்வேயை கொள்ளை அடிப்பதற்கு மட்டுமே தீட்டப்பட்ட 'தொலைநோக்கு' திட்டமாகும்.
இத்திட்டத்தின்படி ரயில்வே அடிப்படை கட்டமைப்புகளில் 10% மட்டுமே முதலீடு செய்யப்படும். 2022இல் ஒரு வருடத்திற்கு 1160 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டார்கள் எனில் 2051இல் 6585 மி டன் ஆக இது உயரும். ஆனால் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியில் அரசின் முதலீடு இலை எனில் இந்த இலக்கை சமாளிக்க முடியாது, இது அரசுக்கும் பிரதமர், ரயில்வே அமைச்சர் அனைவருக்கும் தெரியும்.
எனவேதான் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியில் அரசு முதலீடு என்பதற்கு பதிலாக ரயில்வே சொத்து அனைத்தையும் தனியாரிடம் விற்று விட திட்டமிடுகின்றது பி ஜெ பி அரசு. அதாவது இந்திய மக்களின் வரிப்பணத்தில் பல பத்தாண்டுகளாக கட்டி அமைக்கப்பட்ட பலமான இந்திய ரயில்வே துறையை அதானி, அம்பானி, டாடா, மஹிந்திரா ஆகிய நண்பர்களுக்கு தானமாக கொடுப்பார் நம் பிரதமர்.
National Infra Pipeline என்றொரு திட்டம், அதுவும் பி ஜெ பி அரசின் திட்டமே. 2025இல் 500 பயணிகள் ரயிலும், 80 ரயில் நிலையங்களும், 30% சரக்கு ரயில்களும் தனியார் வசம் கொடுக்கப்படும் என்பதுதான் இந்த திட்டம். National Rail Plan திட்டம் என்ற மற்றொரு திட்டத்தின் படி, 2031இல் அரசுக்கு சொந்தமாக சரக்கு ரயில் ஒன்று கூட இருக்காது. அதாவது அரசுக்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டாவிடம் விற்றப்பின் விமான நிறுவனம் இல்லாத அரசுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றது போல் சொந்தமாக சரக்கு ரயில்கள் இல்லாத நாடு என்ற சாதனையை பி ஜெ பி அரசு செய்யும், ஆனால் அந்த சாதனை இந்திய மக்களின் ரத்தமும் சதையும் உயிரும் ஆன இந்திய ரயில்வே துறையை விற்று செய்யும் மோசடியாக இருக்கும்.
இதனை ஒரு எளிய புள்ளி விவரம் மூலம் புரியவைத்து விடுகிறார் தோழர் ஆர் இளங்கோவன். CAG அறிக்கையின்படி சரக்குபோக்குவரத்தில் 28000 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தது அரசு. 64000 கோடி ரூபாய் பயணிகள் போக்குவரத்தில் நஷ்டம் என்றது. ஆக நிகர நஷ்டம் 36000 கோடி எனில், சரக்குபோக்குவரத்தில்தான் லாபம் என்பது தெளிவு. 36000 கோடி நஷ்டம் ஏன் ஏற்படுகிறது என்பதை ஆய்ந்து குறைகளை களைய அரசால் முடியும். ஆனால் சரக்குபோக்குவரத்தில் மட்டுமே லாபம் என்ற நிலையை அல்லது பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் ஒட்டுமொத்த சரக்குபோக்குவரத்தை தனியாரிடம் கொடுப்பது அல்லது விற்பது என்பது நாட்டு மக்களுக்கு இந்த அரசு செய்யும் ஆகப்பெரிய துரோகம் ஆகும்.
இதன் விளைவு என்ன ஆகும்? ரயில்வேயில் சரக்குபோக்குவரத்து முற்றாக இல்லை எனில் ரயில்வே தொழிலாளர்களுக்கு ஊதியம் இல்லை, ஓய்வூதியம் இல்லை என்பது துறைசார்ந்த சிக்கல் ஆக, தொழிலாளர்கள் பிரச்சினை ஆகும், தொழில் அமைதி சீர்குலையும், இதனையே காரணம் காட்டி ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் அதாவது பயணிகள் போக்குவரத்து உட்பட அனைத்தையும் தனியாருக்கு விற்று விடலாம். ஏற்கனவே 68% ரயில்வே தொழிலாளர்கள் எந்த வித உத்தரவாதமும் இல்லாத புதிய பென்சன் திட்டத்தின்கீழ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனில், மறுபக்கத்தில் தனியார் நிறுவன முதலாளிகள் சரக்குபோக்குவரத்துக்கு குறிப்பாக விவசாய விளைபொருட்கள், உணவு தானியங்கள், காய் கறிகள், உரம், பூச்சி மருந்து போன்றவற்றுக்கு ஆன கட்டணங்களை தாறுமாறாக உயர்த்துவார்கள், அதில் அரசின் கட்டுப்பாடு ஏதும் இருக்காது எனில் பொதுசந்தையில் உணவு தானியங்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை எங்கே போகும்? சிமெண்ட், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் போக்குவரத்து கட்டணத்தை தனியார் ரயில் முதலாளிகள் தாறுமாறாக உயர்த்துவார்கள் எனில் நிலை என்ன ஆகும்?
... ...
லாபம், லாபம், லாபம் ஒன்றே குறிக்கோள் ஆக கொண்ட தனியார் முதலாளிகளுக்கு சமூகப்பார்வை, சமூக அக்கறை, சேவை மனப்பான்மை என்பது அறவே தேவை இல்லாத ஒன்று.
ஏற்கனவே இந்தூர்-காசி இடையே ஓடும் காசி மகாகால் எக்ஸ்பிரஸ், அகமதாபாத் மும்பை இடையே ஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸ், டில்லி லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் ஷீர்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை 100% தனியார் ரயில் என்பதே பலர் அறியாத ஒன்று.
போபாலில் ஹபீப்கஞ்ச் ரயில்வே ஸ்டேஷன் 2017இலேயே தனியார்மயம் ஆக்கப்பட்டது.
வரும் நாட்களில் 150 ரயில்களை தனியார் முதலாளிகள் இயக்குவார்கள்.
எதிர்கால ரயில் பயணம் எப்படி இருக்கும்?
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19, இந்திய மக்கள் இந்த நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் சுதந்திரமாக சென்று வர உரிமை அளிக்கிறது. மட்டுமின்றி, மக்களால் தாங்க முடிகிற, மலிவான செலவில் பயண வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது.
நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒருங்கிணைக்கப்படாத உதிரி தொழிலாளர்கள், உடல் உழைப்பாளர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று உழைக்கிற தொழிலாளர்கள்,
மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து சென்று உழைத்து தோலை தூரங்களில் இருக்கிற தம் குடும்பங்களை காப்பாற்றுகிற உழைப்பாளர்கள், குறைந்த பட்ச கூலி சட்டத்துக்குள் வராத பல கோடி தொழிலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள், இவர்கள் அனைவரும் தம் போக்குவரத்துக்கு நம்பி இருப்பது அரசின் ரயில் வண்டிகளை மட்டுமே.
கொரோனா ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த பல லட்சம் தொழிலாளர்களுக்கு இருந்த ஒரே போக்குவரத்து சாதனம் ரயில்கள் மட்டுமே. அந்த நேரத்தில் ஆக்சிஜன் நிரம்பிய டேங்கர்களை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு சென்றவை ரயில்கள்தான். அனைத்தும் அரசின் வசம் இருந்ததால் இவை சாத்தியம் ஆனது.
ஒட்டுமொத்த ரயில்வே துறையும் monopoly ஆக தனியார் முதலைகள் வசம் சென்றால் அவர்கள் வைத்ததே ரயில் கட்டணங்கள். ஏற்கனவே பிரிமியம், பிரிமியம் தட்கல் என்ற பெயரில் மிகப்பெரிய மோசடியை ஐ ஆர் சி டி சி செய்துகொண்டு இருக்கிறது.
உடைமை, பராமரிப்பு, கட்டமைப்பு, மக்கள் சேவை இவை அனைத்தையும் ஒன்றிணைத்து பார்க்க மக்கள் நல அரசால் மட்டுமே முடியும், எந்த ஒரு தனியார் முதலாளிக்கும் இந்த நான்கு தலையாய கோட்பாடுகளை விடவும் முதன்மையாக இருப்பதும் எக்காலத்திலும் இருக்கப்போவதும் லாபம் லாபம் மட்டுமே. மக்களின்,பயணிகளின் பாதுகாப்பு என்பது இரண்டாம் பட்சம் கூட இல்லை, அது அவர்களின் அஜெண்டாவில் என்றுமே இருக்காது என்பதற்கு போபால் விசவாயு, என்ரான், ஸ்டெர்லைட் என நிறைய உதாரணங்கள் உள்ளன.
ஏற்கனவே 46க்கும் மேற்பட்ட அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்ட பி ஜெ பி அரசு இந்தியாவின் மிகச்சிறந்த, மிகப்பெரிய, பல பத்தாண்டுகள் பழமையான மக்கள் சொத்தான ரயில்வே துறையையும் அம்பானி, அதானிகளுக்கு விற்றுவிட மிக விரிவான திட்டங்களை தீட்டி உள்ளது. மக்களின் கவனத்தை இவற்றில் இருந்து திசை திருப்பவோ மதக்கலவரம், ராம், மந்திர், அயோத்தி, ஹிஜாப், ஜிஹாத், எல்லை தாண்டிய பயங்கரவாதம், புதிய நாடாளுமன்றம், 2000 ரூபாய் நோட்டு என ஏகப்பட்ட வெத்துவேட்டுகளை வெடிக்கிறது.
....
(2.6.2023 அன்று ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தின் பின் எழுதியது)
.jpeg)
.jpeg)