(Still short of schooling at 74)
ஆசிரியர்: ழான் டெரெஸ் (Jean Derez)
இந்திய வளர்ச்சிப்பொருளாதார வல்லுநர்களிடம் இரண்டு விதமான சிந்தனைப்போக்குகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது - ஒன்று, வளர்ச்சியை மையமாகக் கொண்டது, மற்றது வளங்களை பங்கீடு செய்வதை மையமாக கொண்டது. இந்த பார்வை தவறானது. வளர்ச்சியும் வளங்களை பங்கீடு செய்வதும் மட்டுமே வளமான உலகுக்கு வழி செய்யாது.
உதாரணமாக குடிமை சமூக உரிமைகள் மனித வாழ்வுக்கு மிகப்பெரிய பங்காற்ற முடியும் என்பது உண்மைதான். எனினும் வளர்ச்சிக்கும் வளமைப்பங்கீடுக்கும் இந்த உரிமைகளால் பெரிய அளவுக்கு உதவி செய்ய முடியாது. மறுபுறம், வளர்ச்சியா வளமைப்பங்கீடா என்ற கேள்விக்கு மேல் மற்றொரு உண்மையும் உள்ளது - சில பொருளாதார கொள்கைகள் இரண்டையுமே முதன்மைப் படுத்துகின்றன. சிறந்த உதாரணம், அனைவருக்கும் தொடக்கக்கல்வி. பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுவது போலவே சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவதற்கும் தொடக்கபள்ளிக்கல்வி உதவுகின்றது. தரமான கல்வி என்பது மனித வாழ்க்கை மேம்படவும் பல்வேறு வழிகளில் அவசியமாகின்றது. உதாரணமாக, நம் உடலநலனைப் பேணிக்கொண்டு சமூகத்தின் சகமனிதர்களின் உடல்நலத்தையும் பேணுகின்றோம். இது, 'மூன்று தரப்புக்கும் வெற்றி' என்ற கொள்கை போன்றது. உண்மை என்னவெனில் வளரச்சிப்பாதையின் தொடக்க கட்டத்திலேயே அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கி முன்னேறிய நாடுகள் மிகப்பெரிய பலன்களை அடைந்துள்ளன. இந்தியாவில் இதற்கு உதாரணமாக கேரள மாநிலம் உள்ளது.
கடந்த காலத்தில் கல்விக்கொள்கை:
தொடக்ககால ஐந்தாண்டு திட்டங்களில் தொடக்கக்கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை. பவுதீக அளவிலான முதலீடுகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. "புதியதாக தொடக்கப்பள்ளிகளை திறப்பது என்ற முனைப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றுதான் முதலாவது ஐந்தாண்டு திட்டம் கூறியது. மாறாக "ஏற்கனவே இருக்கின்ற தொடக்கப்பள்ளிகளை அடிப்படையான கொள்கைகள் மீது புதுப்பித்துக் கட்டமைக்க வேண்டும்" என்றுதான் திட்டமிட்டு இருக்க வேண்டும் (மகாத்மா காந்தி கனவுகண்ட கல்விக்கொள்கைகளின் அடிப்படையில் "தொடக்கக்கல்வித்திட்டம்" என்பதை நினைவில் கொண்டு சொல்கின்றேன்).
வேறு ஒரு காரணமும் உள்ளது. சமூகத்தின் கீழ்சாதியினருக்கு கல்வி என்பது அவசியம் அற்றதும் முக்கியத்துவம் அற்றதும் ஆகும் என்ற பாரம்பரியம் ஆன மேல்சாதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் அக்காலத்தில் கல்விக்கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. இப்போது மட்டும் என்ன? மேல்சாதியினரும் கிராமப்புறப்பள்ளி ஆசிரியர்களும் "உழைக்கும் வர்க்கங்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது அவசியம் அற்றது, நன்றிக்கு உரியதும் அல்ல" என்று சொல்வதை இப்போதும் நாம் கேட்கின்றோம். "ஏழைகள் கல்வி கற்றால் எங்கள் வயல்களிலும் வீடுகளிலும் யார் வேலை செய்வது?" என்று வெளிப்படையாகவும் வெறுப்புடனும் புலம்புவார்கள்.
விடுதலைக்குப்பின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது என்பது உண்மைதான். 1951இல் பெண்கல்வி 9% தான், 2011இல் அது 65% (1951இல் ஏழு வயதுக்கு மேலும், 201இல் 5 வயதுக்கு மேலும் என்று கொள்க). வரலாற்றுப்பார்வையில் இது மிகப்பெரிய பாய்ச்சல்தான். ஆனால் ஒப்பீட்டளவில் குறைந்த பட்சம் தெற்காசிய நாடுகளின் தர அடிப்படையில் இது திருப்தி அளிக்கும் வளர்ச்சி அல்ல. பல்வேறு சமூகக்கூறுகள், சுகாதார கணக்கீட்டு புள்ளி விவரங்கள் அடிப்படையில், 15-24 வயது வரம்புக்குள் ஆன பெண் கல்வி என்பது இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் ஏறத்தாழ சமமாகத்தான் உள்ளது - 2016இல் 85%. உண்மையில் பங்களாதேஷ், நேபாளம் இரண்டும் இந்தியாவுக்கு வெகு பின்னால்தான் இருந்தன, ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆன ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி GDP, அதிவிரைவான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, இந்த இரண்டு நாடுகளின் பெண்கல்வி நிலை மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவை கிழக்கு ஆசிய நாடுகளின் பெண்கல்வித் தரத்துடன் ஒப்பிட்டால் அது துயரில் முடியும்.
பள்ளிக்கல்விக்கான வாய்ப்புக்கள் எனில் சிலருக்கு அது உலகத்தரத்திலும் பலருக்கு அது மிக மோசமான நிலையிலும்தான் உள்ளது. மிகச்சிறிய கிராமங்களில் கூட இந்தப் பாகுபாடு நிலவுவது வியப்புக்குரியது. முப்பது வருடங்களுக்கு முன்பு, மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பாலன்பூர் என்ற சிறிய கிராமத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை, தலித் சமூக பெண்களிடம் பூஜ்யம் விழுக்காடாக இருக்க, காயஸ்தா சமூகத்தின் ஆண் குழந்தைகள் 100% கல்வியறிவு பெற்றவர்கள் ஆக இருந்தார்கள். வகுப்பறைகளிலும் கற்றல் திறனில் மிகப்பெரிய பாகுபாட்டைப் பார்க்கின்றோம், சில குழந்தைகளின் வாசிப்புத்திறன் மேம்பட்ட நிலையில் இருக்க, மற்றவர்களோ அடிப்படை எழுத்துக்களைக் கூட வாசிக்கத் தடுமாறுகின்றார்கள். யுனெஸ்கோ அறிக்கை ஒன்றின்படி, 2012ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் தனியார் நடத்தும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 12% ( இந்தியா தவிர), அதுவே "வளர்ச்சியடைந்த நாடுகளில்" 10%க்கும் கீழே. ஆனால் இந்தியாவில் அதுவே 40% ஆக இருந்தது, அதற்கு மேலும் உயர்ந்துகொண்டே இருந்தது.
தவிர, அரசுப்பள்ளிகளின் பாடங்களுக்கும், தனியார் பள்ளிகளின் பாடங்களுக்குமே கூட மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அறிவுக்குப்பொருத்தமான சமதகுதி உள்ள கல்வியே குழந்தைகளுக்குச்சிறந்தது என்பதுதான் உலகளாவிய நியதி. இந்தியாவிலோ கல்வியின் தரம் என்பது, வர்க்கம், சாதி, பாலினம், பள்ளிகட்டணத்தை கட்டக்கூடிய தகுதி ஆகிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. சமூக அசமத்துவங்களில் இருந்து விடுபட பள்ளிக்கல்வி ஒரு வழியாக இருக்கும் என்ற நோக்கத்தையே இந்தப் பாகுபாடுகள் அடித்து நொறுக்குகின்றன.
முரண்பட்ட அடுக்குகளைக் கொண்ட இந்தியாவின் பள்ளிக்கல்வித்திட்டத்தின் முகம் கடந்த சில மாதங்களாக அம்பலப்பட்டுள்ளது. கோவிட்19 தொற்றுக் காலத்தின் பின் பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. இன்னும் மூடிக்கிடக்கின்றன. பொருளாதார வசதி படைத்த குடும்பத்து பிள்ளைகள் வசதிகள் பொருந்திய தம் வீடுகளில் உட்கார்ந்து இணையவழியாக பாடங்களை கற்றுக்கொண்டு இருக்க, வசதி இல்லாத குழந்தைகள் "இணையவழிப்பள்ளி"யில் இருந்த வெளியேற்றப்பட்டுள்ளாகள். இணையவழிகல்வி என்னும் அத்தி இலை, பள்ளிக்கல்வி மறுப்பு என்னும் யானையை மறைந்துவிட்டது, 16 மாதங்களாக.
ஜார்கண்டில் Latehar கிராமத்தில் நாங்கள் இந்த மாத தொடக்கத்தில் வீடுதோறும் சென்று நடத்திய கணக்கெடுப்பில் தெரிந்தது இதுவே. தலித் - ஆதிவாசி சமூக மக்களின் நான்கு குடியிருப்பு பகுதிகளில் நாங்கள் கண்டது என்னவெனில், பெரும்பாலான குழந்தைகளுக்கு ஒரே ஒரு சொல்லைக் கூட வாசிக்க தெரியவில்லை, இணையவழிக்கல்வி என்பதன் அடையாளமே தெரியவில்லை.
.... .... .....
The Hindu, 15.8.2021
தமிழில் மு இக்பால் அகமது