7) நான்
ஆறாவது வகுப்புப் படிக்கும்போது வரலாறு + புவியியல் பாடம் நடத்திய திரு.வடிவேல்
வாத்தியார்தான் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் பொது அறிவு வினாக்களை எழுப்பி
மாணவர்களை நாளிதழ்களை வாசிக்கத் தூண்டியவர். அந்த வகையில் பள்ளிப்பாடங்களுக்கு
வெளியே உள்ள உலகத்தை எனை கவனிக்க தூண்டியதில் அவரே முதற்காரணமாக இருந்தார்.
கார்ட்டுன்
கதைகளான இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட் (அந்த ஸ்டெல்லா இப்போதும் குதிரைவால்
கொண்டையுடன், குட்டைப்பாவாடையுடன்தான் வலம்வருகின்றாளா?), மந்திரவாதி மாண்ட்ரேக்,
வேதாளன் (Phantom)... வேதாளன் தனது மனைவியுடனும்
பிள்ளையுடனும் அடர்ந்த காட்டில் வாழ்கின்றான்; வேதாளன் தனது முகத்தை
வாசிப்போருக்கு காட்டுவதில்லை, முகமூடி கொண்டு மூடியபடியேதான் இருக்கின்றான்;
எப்போதாவது நதியில் குளிக்கும்போதும் கூட வாசிப்போருக்கு தனது முதுகைத்தான் காட்டுகின்றான்,
முகத்தை திருப்பிக்கொள்கின்றான். அதிவீரதீரசாகசக்காரனான வேதாளனின் முகத்தை ஒருமுறையாவது
பார்த்துவிடமாட்டோமா என்ற குழந்தைப்பருவத்து ஏக்கம் இப்போதும் தீராமல் என்னிடம்
மிச்சமாகவே நிற்கின்றது. வாசிப்பவரை கதாபாத்திரத்துடன் நெருங்கிவரச் செய்யும் வேதாளன் பாத்திரத்தைப்
படைத்த ஆசிரியனின் இந்தத் தந்திரம் இத்தனை வயசுக்குப் பிறகு இப்போது
பிடிபடுகின்றது. குரங்குகளும் யானைகளும்
சிங்கம் புலி இன்னபிற விலங்குகளும் வேதாளனுடன் மட்டுமின்றி சோறுதண்ணி மறந்து கதியே
எனக்கிடந்து வாசித்த அன்றைய என்போன்ற குழந்தைகளுடனும் நெருங்கிய உறவுகொண்டுவிடுகின்றன.
வாண்டுமாமா, அணில், முயல், தவறாமல் இந்த வரிசையில் நிலைத்து நிற்பது அம்புலிமாமா. தன்
முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கைமரத்தின் மீதேறி
அங்கு தொங்கும் வேதாளத்தின் உடலை வெட்டி வீழ்த்தினான், அப்போது அதன் உள்ளிருந்த
வேதாளம் இப்போதும் எள்ளி நகையாடிக்கொண்டே இருக்கின்றது. பி.சி.சர்க்காரின்
தந்திரக்கதைகள் ஆர்வத்தை தூண்டுவன. பாதாள உலகின் பறக்கும் பாப்பா...
8) நான்
பள்ளிவாழ்க்கையை வாழ்ந்த மதுரை செல்லூரில் கைத்தறி முதலாளிமார்கள் நடத்திய
கலைவாணர் என்.எஸ்.கே. படிப்பகம் அன்றைய என் வயசுக்கு போதிய தீனிபோட்டது என்றே
சொல்வேன். கலைவாணரின் கண்களும் சிரிக்கின்ற புகைப்படம் மட்டுமின்றி தனது தோளில்
கிடக்கும் கனத்த துண்டின் இரண்டுமுனைகளையும் பிடித்தபடியே புன்னகை புரியும்
சிவாஜிகணேசன், மேல்நோக்கி சிரித்தவாறே இருக்கும் ஜெய்சங்கர், கறுப்புவெள்ளையில் ஆன
இவர்களின் புகைப்படங்கள் மாட்டப்படிருந்த கலைவாணர் என்.எஸ்.கே. படிப்பகத்தின்
சுவர்கள் இப்போதும் நினைவில் நிற்கின்றன. தினத்தந்தி, தினமணி, தினமணிகதிர், தினமலர்,
முரசொலி, உண்மை, விடுதலை, சோவியத்நாடு, குமுதம், ஆனந்தவிகடன், கல்கண்டு, ராணி, சாவி,
இதயம் பேசுகிறது, குங்குமம் என 70களில் வெளிவந்த அனைத்து நாளிதழ்கள், வார மாத
ஏடுகள் அனைத்தையும் வாசிக்கின்ற களமாக அது இருந்தது. தினமணிகதிரில்தான்
குஷ்வந்த்சிங்கின் ட்ரெய்ன் டு பாகிஸ்தான் மொழிபெயர்ப்பை வாசித்தேன், அப்போது வயது
பதின்மூன்று. இங்கேதான் மு.கருணாநிதியின் நெஞ்சுக்குநீதி, குறளோவியம், பொன்னர்
சங்கர் ஆகிய கதைகளை வாசித்தேன். மராமத்து
என்ற சொல்லை மரமத்து என்று அரசுஊழியர் டைப் செய்துவிட, மிகப்பெரிய
மரத்தால் ஆன மத்தை எவ்வாறு செய்வது என்று அரசு நிர்வாகம் மண்டையைப் பிய்த்துக்கொள்கின்றது;
அரசு நிர்வாக எந்திரம் உண்மையில் அச்சடிக்கப்பட்ட
சொற்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கின்ற உணர்ச்சிகள் ஏதுமற்ற எந்திரமே
என்பதை மரமத்து என்ற கதையில் நகைச்சுவையுடன் சொல்வார் சாவி.
9) செல்லூரின்
அரசு நூலகம் அடுத்தது. திரு.சுந்தரராஜன் என்ற தமிழ்ப்புலவர் எங்கள் வீட்டின் அருகில்
இருந்தார்; அவர் கிளைநூலக உறுப்பினர்.
தனது உறுப்பினர் அட்டையை ஆறாவது ஏழாவது படித்த என்னிடம் கொடுத்து புத்தகங்களை
எடுத்து வாசிக்கச்சொன்னாலும் சொன்னார், புத்தகங்களே கதியென்று கிடந்தேன். ஒரே
நாளில் மூன்று புத்தகங்களை மாற்றி மாற்றிப் படித்து முடித்து நூலகரின் செல்லமான
கோபத்துக்கு ஆளானதும் உண்டு. அவரது வீட்டில்தான் ராணிமுத்து அறிமுகமானது. அதில்
வரும் கேள்வி-பதிலை (யாரிடம் பொய் சொல்லக்கூடாது? வக்கீல்/டாக்டர்...) நிரப்பி
வெட்டியெடுத்து ஒவ்வொருமாதமும் அவர் அனுப்புவார்; எப்போதாவது பரிசு கிடைத்ததா
என்பது எனக்கு நினைவில் இல்லை. கண்ணதாசன், குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன்,
கோவி.மணிசேகரன், சாண்டில்யன், சுஜாதா, புஷ்பா தங்கதுரை, தமிழ்வாணன், ஙே என்று
விழிக்கும் ராஜேந்திரகுமார், ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி), மகரிஷி, பாலகுமாரன், சிவசங்கரி, இந்துமதி,
லட்சுமி என்ற டாக்டர் திரிபுரசுந்தரி... ஓவியர்கள் கோபுலு, ஜெயராஜ், மணியம்
செல்வன் போன்ற பெயர்கள் எல்லா, தினத்தந்தி, ராணிமுத்து, மாலைமதி ஆகியவற்றின் மூலமே
எனக்கு அறிமுகம். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ஒருநாள் இரவு காரில் பயணம்
செய்தபோது காரின் முகப்பு விளக்கு ஒளியில் வெள்ளை நிறத்தில் ‘பேய்’ ஒன்று
வானத்தில் பறப்பதைக்கண்ட காரோட்டி பயந்து நடுங்கி அலறியதை லட்சுமி
எழுதியிருந்தார், இப்போதும் நினைவில் உள்ளது.
குப்பைகளை பாலித்தீன் பையில் போட்டு குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து
விடுவது அங்குள்ள மக்களின் வழக்கம், அப்படியான ஒரு குப்பை நிரம்பிய பை ஒன்றுதான்
உள்ளிருந்த காற்றின் காரணமாக உயரே எழும்ப் பறந்துகொண்டிருந்தது என்பதை அவனுக்கு
விளக்கிச்சொல்ல வேண்டியிருந்ததை லட்சுமி எழுதியிருப்பார். ஆப்பிரிக்காவில் அப்படியாக
பாலித்தீன் பை கலாச்சாரம் இருந்தது என்பதை வாசிக்கும்போது வியப்பாக இருந்தது, இப்போது
இந்தியாவே பாலீத்தீன் பைக்குள்தான்
இருக்கின்றது. பாலித்தீன் மலைகளைப்
பார்க்கும்போதெல்லாம் ‘இப்படியும் ஒரு காலம் இந்தியாவுக்கு வரும் என்று லட்சுமி
அன்றைக்கு நினைத்தும் பார்த்திருப்பாரோ?’ என்று அவரது ஞாபகம்
துரத்தியவண்ணம் உள்ளது.
10) சுஜாதாவின்
நூல்கள் அனைத்தையும் வாசித்தேன். சுஜாதாவின் கணேஷ்-வசந்த் துப்பறியும் கதைகள் விருவிருப்பாகப்போயின
என்பதைத்தாண்டி மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட அவரது புதிய தமிழ்நடையும்
எழுத்துநடையும் என்னை மயக்கின. என் வீட்டில் பழைய ஒரு அட்டைப்பெட்டியில்
(நெசவாளியின் குடும்பம் எங்களுடையது; அலமாரி, பீரோ, மின்விசிறி போன்ற
‘ஆடம்பரப்பொருட்க’ளெல்லாம் கிடையாது) குமுதத்தில் தொடர்ந்து வெளியான
சுஜாதாவின் ‘அனிதா இளம்மனைவி’ நாவலின் கட்டிங்கின் பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம்
ஒன்றை என் மூத்த அண்ணன் வைத்திருந்தார். என்னவென்றே தெரியாமல் அதை எடுத்து நான்
வாசிக்கத்தொடங்கினேன், விறுவிறுப்பாக இருந்தது, சுஜாதா இப்படித்தான் அறிமுகம்
ஆனார். அவரது எழுத்தில் இருந்த க்ரைம்
நாவல்களுக்கேயான உத்தியும் நியாயமும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர்
ஆகியோரது எழுத்துக்களில் இல்லை என்பதை உணர்ந்தேன் (வெறும் கொலையும் கொள்ளையும்
மட்டுமே க்ரைம் நாவலாக ஆகிவிடாது).
11) பெண்களின்
அங்கங்களை அங்குலம் அங்குலமாக வர்ணிக்கும் புஷ்பாதங்கதுரையின் எழுத்துக்கள்
வேறுவிதத்தில் அந்த வயதில் ஆளை மயக்கின. அவரே ஸ்ரீவேணுகோபாலனாக திருவரங்கன்உலா எழுதியதை
வாசிக்கும்போது அவரது எழுத்துலகின் இன்னொரு முகத்தைக் காட்டியது என்பது உண்மை.
அதேபோல் கடலுக்குள் ஜூலி. பாலகுமாரனின்
இரும்புக்குதிரை, மெர்க்குரிப்பூக்கள் ஆகியன வேறு தளத்தில் இயங்கின. அன்றைய வயதில் கவர்ச்சிகரமாக இருந்த அவரது
எழுத்துக்களை இப்போது நினைவுபடுத்திப்பார்க்கும்போது ஆண் பெண் உறவு குறித்த,
தொழிற்சங்க அரசியல் குறித்த அவரது பார்வை இப்போது புரிகின்றது. இதன் பிறகு
நூலகத்தில் இவர்கள் எழுதிய நூல்களைத்தேடி வாசிக்கத் தொடங்கினேன். கண்ணதாசன்,
ஜெயகாந்தன், பாக்கியம் ராமசாமி + ஓவியர் ஜெ...யின் அப்புசாமி சீதாப்பாட்டி...
சாண்டில்யனின் மிகக்கனத்த புத்தகங்களின் பாகங்களை காற்றிலும் கடிய அவரது
குதிரைகளின் வேகத்தைவிடவும் அதிக வேகத்தில் வாசித்து முடிக்கப்பழகினேன். ராஜாஜியின்
வியாசர்விருந்தை இரண்டு முறை வாசித்தேன்.
12) இப்படியே
போய்க்கொண்டிருந்த வாசிப்புப்பயணத்தில் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவந்தவர் எனது
மூத்த அண்ணன். கம்யூனிஸ்ட்டான அவர் ஒருநாள் ‘நாளைக்கு ஒரு க்ளாஸ் இருக்குது, வா’ என்றார். சிஐடியூ சங்கமான செல்லூர் ஐக்கிய கைத்தறி
நெசவாளர் சங்கக்கட்டிடத்தில் அந்த க்ளாஸ் நடந்தது. இரண்டு அடி அகலம் மூன்றடி உயரத்தில்
இருந்த ஆயில் வண்ணப்படங்களில் இருந்தவர்கள் லெனின், ஸ்டாலின் என்று
தெரிந்துகொண்டேன். இவர்கள் இருவரும் நன்றாக சவரம் செய்யப்பட்டு பளிச்சென்று இருக்க
வேறு இரண்டு படங்களில் இருந்தவர்கள் கோட் அணிந்து வாய் தெரியாத அளவுக்கு மீசையுடனும்
நீண்ட தாடியுடனும் காணப்பட்டனர், வெளிநாட்டுக்காரர்கள் என்று தெரிந்தது. மேலும் பல
வண்ண, கறுப்புவெள்ளைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. வகுப்பில் என்னைப்போல் 13, 14,
15 வயசுப்பையன்கள் சிலரும் இருந்தார்கள். சூரியன், பூமி, குரங்கில் இருந்து மனிதன்
தோன்றியது, பரிணாம வளர்ச்சி... என்று வகுப்பெடுத்தார் ஒருவர். வித்தியாசமாக
இருந்தது. சிலந்தியும் ஈயும், குரங்கில் இருந்து மனிதனாக மாறிய... என்பது போன்ற
சிகப்பு அட்டை போட்ட புத்தகங்களை காசு வாங்காமல் படிக்கக் கொடுத்தார்கள்.
சிலந்தியும் ஈயும் அதுவரையிலும் நான் வாசிக்காத வேறு ஒரு உலகத்தை திறந்துவிட்டது. வால்காவில் இருந்து கங்கை வரை என்று ஒரு
புத்தகத்தை வாசிக்கச் சொன்னார்கள், ராகுல சாங்கிருத்தியாயன் என்பவர் எழுதிய அந்த
நூலை செல்லூர் நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன். தொடர்ந்து நெசவாளர்
சங்கத்திற்கு செல்லத்தொடங்கினேன். கே பி ஜானகி அம்மாள், ஐ.மாயாண்டிபாரதி, பாப்பா உமாநாத் போன்ற பெரும் தியாகிகளை அவர்களின் வரலாறு எதுவும் தெரியாத போதே அந்த சங்கத்தில் பலமுறை பார்த்துள்ளேன். அதன்
பின் சிந்து முதல் கங்கை வரை. அவரே
பல்வேறு சமயங்களின் தத்துவங்களை தனித்தனிப்புத்தகமாக எழுதியிருக்கின்றார் என்பதை
வயது கூடும்போது தெரிந்து கொண்டேன். தீக்கதிர் என்றொரு வாரப்பத்திரிக்கை
வெளிவருவது தெரிந்தது. செம்மலர், சிகரம், கார்க்கி, மனிதன், நயனதாரா என்ற
பெயரிலும் சில பருவ ஏடுகள் வெளிவருகின்றன என்பதையும் தெரிந்துகொண்டேன். தவிர சோவியத்நாடு
தமிழ்ப்பதிப்பை எனது அண்ணன் வீட்டுக்கே வரவழைத்திருந்தார். அதன் வழவழப்பான தாளும்
குறிப்பாக சோவியத்தின் விண்வெளி அறிவியல்துறையில் அவர்கள் செய்த சாகசங்களும்
சோவியத் தொடர்பான நூல்களை வாசிக்கத்தூண்டின. சோவியத் ரஷ்யாவில் இருந்து வெளிவரும்
தரம்வாய்ந்த தாளில் அச்சடிக்கபட்ட நூல்கள் 15 பைசா, இருபது பைசா, ஒரு ரூபாய் என
நம்பமுடியாத விலையில் இருந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டேன். மதுரை
மேலக்கோபுரத்தெருவில் இருந்த நியு செஞ்சுரி புக் ஹவுஸில் சோவியத் நூல்கள்
கிடைப்பதை எனது அண்ணனின் நண்பர்கள் சொல்ல, அவர்களுடன் சென்று சில நூல்களை
வாங்கினேன். ஜான் ரீட் எழுதிய உலகைக்குலுக்கிய பத்து நாட்கள் அதில் ஒன்று.
இப்போதும் என்னிடம் உள்ளது,
அதன் அன்றைய விலை ரூ.3.50.
13) ஈ.எம்.எஸ்.நம்பூரிப்பாட்,
ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்ரமண்யம்,
வி.பி.சிந்தன், ஈ.கே. நாயனார், கே.ஆர்.கௌரி, உமாநாத், கே.பி.ஜானகி அம்மாள்,
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சந்திரசேகர் ஆசாத், லியோனித் ப்ரஷ்னேவ், வியட்நாம்,
ஹோ சி மின், சீனா, மா சே துங், க்யூபா, ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, கிழக்கு
ஜெர்மனி, ருமேனியா, பல்கேரியா, போலந்து, செக்கோஸ்லோவாகியா, யுகோஸ்லோவாக்கியா, அமெரிக்க
சி.ஐ.ஏ போன்ற சொற்கள் அறிமுகமாயின. அமெரிக்காவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்
சோவியத் யூனியன் பங்கு பெறாமல் புறக்கணித்த்தும் சோவியத்தில் நடந்த ஒலிம்பிக்கை
அமெரிக்கா புறக்கணித்ததும் நினைவில் உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின்
பதக்கப்பட்டியலின் முதல் இடங்களை சோவியத் யூனியனும் ஐரோப்பியக்கண்டம் முழுவதும்
பரவிக்கிடந்த பிற சோசலிஸ்ட் நாடுகளும் 1990 வரையிலும் தொடர்ந்து தமது
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததை இப்போது நினைத்துப்பார்க்கின்றேன். பின்னாட்களில் ரீகல் தியேட்டரில் தி க்ரேட்
ரஷ்யன் சர்க்கஸ் என்ற படத்தை பார்த்து அதிசயித்தேன்.
14) இதன்
பின்னர் வேலை நிமித்தம் சென்னைக்கு வந்தபின் நண்பன் சுந்தரவேல் ‘சென்னையில்
புத்தகக்கண்காட்சி ஒன்று ஒவ்வொரு ஜனவரி மாதமும் நடக்குது, வா போகலாம்’ என
ஒரு ஜனவரி மாதம் (1983 என்று நினைவு) என்னை அழைத்துச்சென்றான். காய்தேமில்லத் பெண்கள்
கல்லூரியில் நடந்துகொண்டிருந்த கண்காட்சிக்கு சென்றோம். பபாசி என்ற சொல் அறிமுகம்
ஆனது. அநேகமாக 50 பதிப்பாளர்கள் ஸ்டால் போட்டிருந்தார்கள் என்று நினைக்கின்றேன்.
ஒவ்வொரு வருடமும் செல்லத்தொடங்கினேன். அன்றைய நாணய மதிப்பில் 300, 400 ரூபாய்க்கு
நிறையவே புத்தகங்களை வாங்கலாம். என்னிடம் உள்ள மிகப்பல நூல்கள் சென்னைப் புத்தகக்கண்காட்சியில்
வாங்கியவையே. இப்போது ஒரு புத்தகத்தின்
விலையே 300, 400 ரூபாய்க்கும் மேல்.
குறிப்பாக அன்னம், அகரம், நர்மதா, தமிழ்ப்புத்தகாலயம், காவ்யா, கலைஞன், என்
சி பி ஹெச் ஆகிய பதிப்பகங்களை நாடிச்சென்றேன்.
(தொடரும்)