சனி, ஆகஸ்ட் 26, 2017

க்ளாரா ஜெட்கின்: பிரிட்டன் சகோதரிகளுக்கு ஜெர்மானிய சகோதரிகளின் அறைகூவல்

பிரிட்டன் சகோதரிகளுக்கு ஜெர்மானிய சகோதரிகளின் அறைகூவல்
க்ளாரா ஜெட்கின்(Clara Zetkin)1
(டிசம்பர் 1913)
தமிழில்: இக்பால்

அன்புக்குரிய சகோதரிகளே!
ஜெர்மானியப் பாட்டாளிவர்க்கப் பெண்கள் சோசலிசத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அந்நம்பிக்கையின் அடிப்படையில்தான் இன்றைய `காலக்கட்டத்தில் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்ற இச்செய்தியை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றார்கள்.

இந்த நூற்றாண்டு நாகரிகத்தையும் மனிதாபிமானத்தையும் உயர்த்திப்பிடிக்கின்ற நூற்றாண்டு எனப் பீற்றிக்கொள்கின்றார்கள். ஆனால் சமீபத்திய பால்கன் (Balkan) போரின்2 கொடூரமான மனித உயிர்ப்பலிகளையும் பேரழிவுகளையும் காட்டுகின்ற கொடுமையான புகைப்படங்களைப் பார்த்தபின் அந்த அச்சத்திலிருந்து மீள முடியாத நிலையில் நாங்கள் உறைந்துள்ளோம். எங்கள் கண்முன்னே குருதி கொப்பளிக்கும் உடல்கள்; சகமனிதனை இன்னொரு மனிதன் கொன்றுசாய்ப்பதால் கொப்பளிக்கும் குருதி; தரைமட்டமாக்கப்பட்ட கிராமங்கள் நகரங்கள்; கால்களும் கைகளும் பிற உறுப்புக்களும் அறுத்து எறியப்பட்ட நிலையில் ஏற்கனவே செத்துமடிந்தவர்களின் அருகில் செத்துக்கொண்டே இருக்கும் மனிதர்கள் எழுப்பும் தீனமான  அவலக்குரல்கள்...இவை யாவும் எம் காதுகளில் விழுகின்றன. தங்கள் வாழ்வின் பொருட்டே பிழைப்புத்தேடி சென்று போரில் உயிரை மாய்த்துக்கொண்ட அன்புக்குரியவர்களின் மனைவியரும் சகோதரிகளும் தாய்மார்களும் குழந்தைகளும் விசும்பி அழும் அவலமான கேவல் ஒலிகள் எங்கள் காதுகளில் விழுகின்றன.

ஐரோப்பாவின் பெருந்தேசங்களின் மக்கள் கடந்த சில மாதங்களாகவே மிகக்கொடூரமான பேரழிவுப்போர்களின் விளிம்புக்குச் செல்வதும் மீள்வதுமான வாழ்வா சாவா என்ற கெடுநிலையில் வாழ்ந்துகொண்டிருப்பதை நாங்கள் நினைத்துப் பார்க்கின்றோம். இத்தகைய அவலநிலையை இவ்வுலகம் இதற்கு முன் கண்டதில்லை. நாங்கள் இதனை நினைத்து அச்சத்தில் நடுங்குகின்றோம். அப்பேரழிவின் இறுதிநாள் இன்றில்லை எனினும் பிரிதொரு நாள் வந்தே தீரலாம். நாகரிகமடைந்த நாடுகளின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அந்த சிறுபான்மையினரின் கரங்களைப் பாருங்கள்! அவர்கள் பேசுவதைக் கேளுங்கள்! அவர்களின் கரங்களில் இருப்பதுதான் என்ன?

உழைக்கும் மக்களின் பைகளில் இருந்து திருடிக்கொண்ட பணத்தைக்கொண்டு அவர்கள் ராணுவத்தளங்களையும் போர்க்கப்பல்களையும் கட்டுகின்றார்கள்; தரையிலும் கடலிலும் ஆகாயத்திலும் மக்களை கொத்துக்கொத்தாகக்  கொன்றழிக்கக் கூடிய மிகத்துல்லியமான கடற்படைத்துப்பாக்கிகளையும் பிற ஆயுதங்களையும் வாங்கிக்குவிக்கின்றார்கள். பல இலட்சம்  இளம்தொழிலாளர்களுக்குப் பயிற்சியளிப்பதாகச் சொல்லிக்கொண்டு அவர்களைத் துன்புறுத்துகின்றார்கள். வெளிநாடுகளில் உள்ள இவர்களது  சகதொழிலாளிகளின் காயின்(Cain)களாக3 அவர்களை மாற்றும்பொருட்டே இப்பயிற்சி அளிக்கப்படுகின்றது.

அவர்களது சுயநலமிக்க ஆயுதக்குவிப்புப்போட்டிக்கும் போர்களுக்கும் வசதியாக, சாமானியமக்கள் தமது உடைமைகளையும் செங்குருதியையும் தியாகம் செய்யும் பொருட்டு மக்களை ஆயத்தமாக வைத்திருக்கும் கள்ளநோக்கத்துடன் சகநாடுகளின் மக்களுக்கிடையில் பகைமையும் வெறுப்புணர்வும் எப்போதும் நிலைத்திருக்கும்வண்ணம் இச்சுயநலமிகள் எப்போதும் வாய்கிழியப்பேசிக்கொண்டே இருக்கின்றார்கள். தமது நாட்டின் நலன்பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனில் அடுத்த நாட்டின் மீது போர்தொடுத்து மரணத்தைக் கட்டவிழ்த்துவிடத்தக்க வகையில் ஆகப்பெரும் ராணுவங்களும் போர்க்கப்பல்களும் இருப்பது அவசியம் என்று கூச்சலிடுகின்றார்கள்.

இங்கிலாந்தில் உள்ள எங்கள் அன்புச்சகோதரிகளே! பகைமையுணர்வும் வெறுப்புணர்வும் விசிறிவிடப்படும் வெறிக்கூச்சல்கள் வதந்திகளாகப் பரப்பப்படுகின்றன என்பதை அறிந்து ஜெர்மனியில் இருக்கின்ற சோசலிச உழைக்கும் பெண்களாகிய நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கின்றோம். ஆனால் ஜெர்மன் மக்கள் மீது பிரிட்டிஷ் மக்கள் பொறாமையும் வெறித்தனமான பகைமையுணர்வும் கொண்டுள்ளதாக இங்கே ஜெர்மனியில் இருக்கின்ற அரசியல்வாதிகளும் செய்தித்தாட்களும் கட்டவிழ்த்துவிட்டுள்ள புரளிகளை நாங்கள் நம்பவில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றோம். பயங்கர சேதத்தை விளைவிக்கும் போர்க்கப்பல்கள் புதிதுபுதிதாகக் கட்டப்படுவதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. போலித்தேசியவாத வெறிப்பேச்சுக்களை விசிறிவிட்டுக்கொண்டேதான் இருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இப்புரளிகளை நம்பவில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றோம்.  இதேபோல் அங்கே உங்கள் நாட்டில் வெளிவரும் சில ஆங்கிலமொழிச்செய்தியேடுகளும் உள்ளூர் அரசியல்வாதிகளும் ஜெர்மன் மக்களின் உணர்வு என்பதாகச் சொல்லிக்கொண்டு உங்கள் மத்தியில் பரப்பிவிடும் வதந்திகளை உண்மை என நீங்கள் நம்பவேண்டாம் என உங்களை உள்ளன்போடு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வலுக்கட்டாயமாக சக்கரவர்த்தியின் சீருடையை அணியக்கட்டாயப்படுத்தப் பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் அச்சுறுத்தும் துப்பாக்கிகளும் இதுவெல்லாம் உண்மைதானோ என்ற ஐயத்தைக் கிளப்பினாலும் நாங்கள் உறுதியளிக்கின்றோம், இவையாவும் உண்மை அல்ல. இங்கே ஜெர்மனியில் உள்ள போலிதேசியவாதம் பேசுகின்ற சுமார் அரைடஜன் வெறியர்கள் கிளப்பிவிடும் கட்டுக்கதைகளையே இச்செய்தியேடுகள் வெளியிடுகின்றன, எமது பொறுமையையும் சோதிக்கின்றன.

மக்கள் எனப்படுவோர் உண்மையில் யார்? ஜெர்மனியிலும் சரி உங்கள் மகாபிரிட்டனிலும் சரி, நாட்டின் முதல் பத்துப்பணக்காரர்கள், இளவரசர்கள், ராணுவ ஜென்ரல்கள், தங்க இழைப்பின்னல்களை அணிந்த அதிகாரிகள், வலிமைமிகு நிலக்கிழார்கள், ராணுவத்திற்கும் கடற்படைக்கும் ஆயுதசப்ளை செய்கின்ற கம்பெனிகளின் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள், துப்பாக்கிகள், டாங்கிகளின் கவசத்தகடுகள், புகையில்லா வெடிகுண்டுகள், போர்விமானங்களைத் தயாரிக்கின்ற ‘மன்னர்கள் இவர்களில் ஒருவர் கூட  சாமானிய மக்கள் அல்லர். ராணுவத்திற்கும் கடற்படைக்கும் தேவையான ஏராளமான ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் போர்க்களங்களில் வழிந்தோடும் குருதியில் இருந்து காசுகளைப்பொறுக்குகின்ற, போர்க்களங்களில் வீழ்ந்துபட்ட பிணங்களே உரமாகிப்போனதால் செழித்துவளரும் வயல்களில் இருந்து லாபத்தை அறுவடை செய்கின்ற ஒரு சிறு பகுதியினரை சாமான்யமக்கள் என்று சொல்ல முடியாது.

இலட்சோப இலட்சம் உழைக்கும் ஆண்களும் பெண்களுமே சாமானிய ஜெர்மன்மக்கள் ஆவர்; இந்த உழைக்கும் மக்களின் கரங்களும் மூளைகளும் இயங்காவிடில் இச்சிறு பகுதியினர் செல்வத்தை குவிக்க முடியாது, மனிதநாகரிகம் என்பதும் சாத்தியம் இல்லாத ஒன்றாகும்; ஆயினும் இந்த இலட்சக்கணக்கான மக்கள் செல்வத்தை, வாழ்க்கை வசதிகளை, மகிழ்ச்சியை அனுபவித்தார்களா என்றால் இல்லவே இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கையிலிருந்து வெகுதூரத்தில் இருக்கின்ற இந்த சாமானிய மக்கள்தான் உண்மையான ஜெர்மன் மக்கள். தமது எதிரியை எல்லை தாண்டியிருக்கின்ற நாடுகளில் தேடக்கூடாது, வடக்குக்கடலின் மறுகரையில் தேடக்கூடாது என்ற உண்மையை அவர்கள் இப்போது உணர்ந்திருக்கின்றார்கள். இரக்கமற்ற தமது எதிரி வேறெங்கும் இல்லை, தமது சொந்தமண்ணில்தான் இருக்கின்றான் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். முதலாளித்துவமே தமது எதிரி,  உழைக்கும் மக்களை சுரண்டி அவர்கள் மீது தமது ஆட்சியதிகாரத்தைச் செலுத்தும் சொத்துடைமைவர்க்கமே தமது எதிரி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். முதலாளித்துவம் என்னும் இந்த ராட்சசனே  உலகெங்கிலும் இருக்கின்ற உழைக்கும் மக்களின் பொதுவான எதிரி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

நாங்களும் உங்களைப்போலவே சங்கிலிகளால் கட்டுண்டுள்ளோம். உங்களது சுமைகள் எங்களது சுமைகளும் கூட, உங்களது துயரங்களை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம். ஆகவே நாங்கள் உங்களுடன் துயருருகின்றோம், உங்களோடு சேர்ந்து நாங்களும் நம்பிக்கை கொள்கின்றோம், ‘துயரங்களின் சமுத்திரத்துக்கு எதிராக உங்களுடன் நாங்களும் ஆயுதங்களை ஏந்துகின்றோம். எங்கள் கணவர்களுடன், குழந்தைகளுடன், சகோதரர்களுடன் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கிடையே சமாதானமும் சகோதரத்துவமும் நிலைத்திருக்க முன்வருகின்றோம். அவர்களுடன் இணைந்தே முதலாளித்துவத்துக்கு எதிராக, சோசலிசத்துக்காகப் போராடுகின்றோம். இங்கிலாந்து என்ற தேசத்தின் முன்னணி அறிவாளிகளின் ஞானமும் கனிவுமிக்க இதயங்களும் தேசிய சோசலிச (National Socialist) இயக்கம் நிலைத்து நீடித்திருக்கவும், அது வெல்லமுடியாத பலமிக்க அமைப்பாகவும் விளங்கிட எத்தகு மகத்தான அரிய பங்குப்பணியை அளித்துள்ளார்கள் என்பதை நாங்கள் ஒருபோதும் மறவோம். மகாபிரிட்டனின் உழைக்கும் ஆண்களும் பெண்களும் தமது உணவுக்காக உரிமைக்காக சுதந்திரத்திற்காக முதலாளிவர்க்கத்துக்கு எதிராக நடத்திவரும் போராட்டத்தை மறவாமல் என்றும் நினைவில் இருத்தியுள்ளோம். எரிமலையின் கீழே நிலநடுக்கம் ஏற்படும்போது வெளிப்படும் எரிமலையின் சக்தி மலையின் அடியில் ஒளிந்திருப்பனவற்றை எவ்வாறு வெளியே அள்ளி வீசுகின்றதோ அதேபோல் ‘தொழிலாளர் போராட்டம்என்பது சமூகஅடுக்கில் ஒளிந்துள்ள வசதிவாய்ப்புப்படைத்த சிறு சுரண்டும்வர்க்கத்தை அம்பலப்படுத்துகின்றது, இவ்வர்க்கம் ‘தொழிலாளர் போராட்டம்என்ற நிலநடுக்கத்தை கண்டு அஞ்சுகின்றது. இன்றைய நிலை எப்படியுள்ளது? உழைக்கும் வர்க்கத்தை முதலாளித்துவம் அச்சுறுத்துகின்றது, ஆனால் உழைக்கும்வர்க்கமோ சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது.  
      
பிரிட்டனின் சகோதரிகளே! எங்கள் உண்ர்வுகளுடனும் இலட்சியங்களுடனும் நீங்களும் இணைந்திருக்கின்றீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். அனைத்து விதமான குறுகிய தேசியவாதங்கள், வெறுப்புணர்வுக்கு எதிராகவும் ஆயுதக்குவிப்புக்கும் போருக்கும் எதிராகவும்  போராடுவதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம். பாட்டாளிவர்க்கத்தின் விடுதலைக்காக பாட்டாளிவர்க்கமே நடத்தும் புனிதப்போரின் முதல்வரிசையில் போராளிகளாக நிற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். நமது குழந்தைகள் சோசலிசத்தின்பால் நம்பிக்கை கொண்டுள்ளார்கள், நாம் தொடங்கியிருக்கின்ற இந்தப்போரை அவர்கள் வெற்றிகரமாக முடித்துவைப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கின்றது. முதலாளித்துவம் என்பது நம் அனைவரின் மீதும் நடத்தப்படும் சமூகப்போராகும். பாட்டாளிவர்க்கம் நடத்தும் வர்க்கப்போராட்டம் என்பதன் பொருள் உலகநாடுகளிலுள்ள அனைத்து உழைப்பாளிகளின் சகோதரத்துவம் என்பதே.

               சோசலிசம் என்பது உலகசமாதானமே!
                                ***
குறிப்புக்கள்:
க்ளாரா ஜெட்கின் (Clara Zetkin) (1857-1933): ஜெர்மன் நாட்டின் கம்யூனிஸ்ட். அரசியலில் உழைக்கும்பெண்களின் பாத்திரத்தின், போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர், சர்வதேச அளவில் அறியச்செய்தவர். அக்கால கட்டத்தில்  ஜெர்மன் நாட்டில் பெண்கள் தொழிற்சங்க இயக்கங்களில் பங்கேற்பது தடைசெய்யப்பட்டிருந்தபோதும் பல்வேறு தொழிற்சங்கங்களில் நிர்வாகக்குழுக்களில் பங்கேற்றவர். சர்வதேச சோசலிஸ்ட் பெண்கள் இயக்கத்தின் (International Bureau of Socialist Women) செயலாளராக இருந்தவர்.  ரோசா லக்சம்பர்க், கார்ல் லீப்னெக்ட் ஆகியோருடன் இணைந்து ஜெர்மானிய கம்யுனிஸ்ட் கட்சியை 1918இல் நிறுவியவர். 1920இல் ஜெர்மானிய ரீக்ஸ்டேக்கின் உறுப்பினராகவும் இருந்தார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் (Communist International) செயற்குழுவில் உறுப்பினராகவும், சர்வதேச பெண்கள் தலைமையகத்தின் (International Women’s Secretaraiat) பொதுச்செயலாளராகவும் இருந்தார்.  பால்கன் போர்கள் முடிந்த நிலையில் 1913 டிசம்பர் மாதம் அவர் இச்செய்தியை வெளியிடுகின்றார்; ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன நாடுபிடிக்கும் போட்டி, ஆயுதக்குவிப்பு மற்றும் கெடுபிடிகளின் விளைவாக 1914இல்  முதலாம் உலகப்போர் தொடங்கியது. நேசநாடுகள் என அறியப்பட்ட ரஷ்யப்பேரரசு, ஃப்ரெஞ்ச் மூன்றாம் குடியரசு, மகா பிரிட்டனும் ஐயர்லாந்தும் இணைந்த ஒன்றிய அரசியம் (United Kingdom) ஆகிய பேரரசுகள் ஒரு புறமும், ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி கூட்டணியில் மத்தியவல்லரசுகள் என்று அறியப்பட்ட நாடுகள் மறுபுறமும் இப்போரில் இறங்கின. போரின் போக்கில் இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை நேசநாடுகளின் பக்கமும்,  துருக்கியின் ஓட்டோமான் பேரரசும் பல்கேரியாவும் மத்தியவல்லரசுகளின் பக்கமும் சேர்ந்து போரைத்தொடர்ந்தன. போரின் போக்கில் 1917ஆம் ஆண்டு ரஷ்ய ஜார் மன்னனின் ஆட்சி, லெனின் தலைமையிலான மாபெரும் ரஷ்யப்புரட்சியால் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2 பால்கன் போர்: 1912-13இல் முதலாம் பால்கன் போர் நடந்தது. பால்கன் அமைப்பின் கீழ் அமைந்த கிரீஸ், பல்கேரியா, செர்பியா, மோண்டினெக்ரோ ஆகிய நாடுகளுக்கும் பலஹீனமடைந்து கொண்டிருந்த துருக்கியின் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே இப்போர் நடந்தது. 1913இல் செய்துகொள்ளப்பட்ட லண்டன் ஒப்பந்தத்தின்படி எல்லைகள் மறுவரைவு செய்யப்பட்டு இப்போர் முடிவுக்கு வந்தது. ஆனாலும் தொடர்புடைய சில நாடுகளின் அதிருப்தி காரணமாக 1913ஆம் ஆண்டே மீண்டும் ஒரு போர் நடந்தது. புகாரெஸ்ட் ஒப்பந்தம் வரையப்பட்ட பின் இப்போர் முடிவுக்கு வந்தது.
3 காய்ன் (Cain): கிறித்துவர்களின் பழைய வேதாகமத்தின் ஒரு பாத்திரம். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த முதல் மகன். தனது சகோதரன் ஆபெல்லை காய்ன் கொலை செய்ததாக கூறப்படுகின்றது.
***************
(புதுவிசை இதழ் எண் 48,செப்டம்பர் 2017இல் வெளியானது)

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

உச்சநீதிமன்றத்தீர்ப்பும் காங்கிரஸ் + பிஜேபியின் கோரமுகமும்


இருண்ட காலங்களிலும் கவிதைகள் பாடப்படுமா?
ஆம், கவிதைகள் பாடப்படும், 
இருளைப்பற்றி பாடப்படும் 
– பெர்டோல்ட் ப்ரெக்ட்

1) விடுதலை பெற்ற இந்தியாவின் ஆகப்பெரும் இருண்டகாலமான காங்கிரசின் இந்திராகாந்தி காலத்தில்தான் அவசரநிலை காலத்தில்தான் அனைத்து ஜனநாயக-தனிமனித உரிமைகளும் முற்றாக நசுக்கப்பட்டன. அன்றைய நிலையில் எந்த ஒரு மனிதனையும் எங்கேயும் கைது செய்து கண்காணாத இடத்தில் அடைத்துவிடவோ அல்லது கொலை செய்துவிடவோ காவல்துறைக்கு முற்றாக அதிகாரம் இருந்தது. தனது உறவினர் அல்லது நண்பரைக் காணவில்லை, அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றோ தனது தன்னலன் பொருட்டோ எந்த ஒரு மனிதரும் நீதிமன்றத்தை அணுகி முறையிடும் habeas corpus மனுக்கள் நீதிமன்றங்களில் குவிந்தன.

குறிப்பாக 9 உயர்நீதிமன்றங்கள் ‘எமர்ஜென்சி காலத்திலும் கூட இது போன்ற ஹேபியஸ் கார்பஸ் மனுக்களை அனுமதிக்க இயலும் என்று தீர்ப்பளித்தன. தனது ஃபாசிச ஆட்சியின்போதும் இந்த உரிமை இருப்பதா என்று வெறுப்புற்ற இந்திராகாந்தி கீழமை நீதிமன்றங்களின் இத்தீர்ப்புக்களுக்கு எதிராக உச்ச்நீதிமன்றத்தில் முறையிட்டார், தொடர்ந்து 5 நீதிபதிகள் (அன்றைய உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி ஏ.என்.ரே, எம்.எச்.பெக், ஒய்.வி.சந்திரசூட், பி.என்.பகவதி, எச்.ஆர்.கன்னா) அடங்கிய அரசியல் சாசன அமர்வில் திரு.கன்னா தவிர மற்ற நால்வரும் “எமெர்ஜென்சி காலத்தில் அடிப்படை உரிமைகளான உயிர்வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமான வாழ்வுக்கான உரிமை ஆகியன மறுக்கப்படுகின்றனஎன தீர்ப்பளித்தனர், அதாவது இந்திராகாந்தியோடு உடன்பட்டனர். திரு.கன்னா மட்டுமே தனிமனிதன் உயிர்வாழ்வதற்கான உரிமையும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையும் ஒரு அரசு ஆணை மூலம் வெட்டிச்சுருக்கப்படுவதற்கான அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கவில்லைஎன மாறுபட்ட கருத்தை பதிவு செய்தார். ஆக நால்வர் பெரும்பான்மையுடன் இந்திராகாந்தியின் ஃபாசிச பேயாட்டத்துக்கு அனுமதி கிடைத்தது. இது ADM ஜபல்பூர் வழக்கு என வரலாற்றில் அறியப்படுகின்றது. இதன்பின் கன்னா அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்தவர் என்றாலும் அவரைப் புறக்கணித்து இளையவரான பெக்கை அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்தார் இந்திராகாந்தி. தொடர்ந்து கன்னா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1982ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் வேட்பாளரான ஜெய்ல்சிங்கிற்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கன்னா அவர்கள் நிறுத்தப்பட்டார் என்பது வரலாறு.

2) நேற்று வழங்கப்பட்ட தீர்ப்புக்குள் ஒரு விசித்திர முரண் அடங்கியுள்ளது, அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1977இல் மனித உரிமைகளுக்கு எதிராக தீர்ப்பளித்த நால்வரில் ஒருவரின் மகனான டி.ஒய்.சந்திரசூட் நேற்றைய தனது தீர்ப்பில் இப்படிக்கூறுகின்றார்: ‘தனிமனித அந்தரங்கம் என்பது மனிதகண்ணியத்தின் மையமான கரு. மனிதகண்ணியத்தை முழுமை பெறச்செய்வதே தனிமனித அந்தரங்க சுதந்திரம்தான்’.  40 வருடங்களுக்கு முன் தந்தை செய்த தவற்றை மகன் இப்போது நேர் செய்துள்ளதை பாராட்டியாக வேண்டும். மேலும் 1976இல் ADM ஜபல்பூர் வழக்கின் தீர்ப்பை இன்றைய தலைமைநீதிபதி நேற்றைய தீர்ப்பில் அதிகாரப்பூர்வமாக கண்டனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தீர்ப்பு 543 பக்கங்கள் கொண்டது. ஒன்பது நீதிபதிகளும் தனித்தனியே தமது ஆழமான கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளதை ஓரளவு வாசித்தேன். இந்த அமர்வின் மையமான விசயமே தனிமனிதர்களின் அந்தரங்க சுதந்திரம் பற்றியது, இது ஆதாரை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த்து என நீதிபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  நேற்றைய தீர்ப்பின் வெளிச்சத்தில் ஆதார் அடாவடிகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்பது தெளிவாகப்பேசப்படுகின்றது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.புட்டஸ்வாமி ஆதார் விசயத்தில் அரசியல் அமைப்புச்சட்டத்தின் சரத்து 23 மீறப்படுகின்றது என்று கூறி தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல தீர்ப்புக்களில் இறுதியாக வந்ததே நேற்றைய அரசியல்சாசன அமர்வின் மிக முக்கியமான தீர்ப்பு.

3) தனிமனிதர்களின் கைரேகை, கண்மணி ஆகியவற்றை அரசின் உதவித்திட்டங்களுக்கு மட்டுமின்றி இத்தேசத்தில் உயிர்வாழ்வதற்கும் செத்த பிறகு புதைப்பதற்கும் எரிப்பதற்கும் கூட அவசியமானதாக்கியுள்ளது ஆர் எஸ் எஸ் மோடியின் அரசு. இதனை தொடங்கிவைத்தது காங்கிரஸ் என்பதை எக்காலத்திலும் நாம் மறக்கக்கூடாது. நாடாளுமன்றத்தின் அனுமதி பெறாத UIDIA அமைப்பை ஒரு அரசு ஆணையின் மூலம் ஏற்படுத்தி இந்திய மக்களுக்கும் அரசுக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத முன்னாள் Infosys அதிகாரியான நந்தன்நீலகேணி என்ற நபருக்கு ஏகப்பட்ட அதிகாரங்களை வழங்கி UIDIA அமைப்பின் கீழ் அரசுக்கு எந்த வித்த்திலும் பதில்சொல்லக்கடமைப்பட்டிராத பல்லாயிரம் காண்ட்ராக்ட் தொழிலாளிகளை பணியில் அமர்த்தி இந்தியாவில் குடியிருக்கும் (இந்தியக்குடிமக்கள் அல்ல என்பதை வலியுறுத்துகின்றேன்) அனைவருடைய கைரேகை, கண்மணி ஆகியவற்றை பதிவுசெய்து எடுத்துக்கொண்டதன் மூலம் தனிமனிதர்களின் உடல்மீது தமது ஆட்சியதிகாரத்தை ஏவி சர்வாதிகரம் செய்ததிலும் செய்வதிலும் காங்கிரஸ் பிஜேபி இரண்டும் கெட்டியாக்க் கைகோர்த்துள்ளதை வரலாறு பதிவு செய்கின்றது.  பிஜேபி கட்சியைச்சேர்ந்த யஸ்வந்த் சின்கா தலைமையிலான நாடாளுமன்றக்குழுவே கூட ஆதார் போன்ற ஒரு அடையாள அட்டையை அறிமுகம் செய்வதற்கும் UIDIA போன்ற அமைப்பை நிறுவுவதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை மிக்கவனமாக ஊடகங்கள் மட்டுமின்றி காங்கிரசும் பிஜேபியும் கூட வெளியே பேசுவதில்லை. இந்த நந்தன்நீலகேணி பிற்பாடு கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்; இன்றைய செய்திப்படி மீண்டும் அவர் Infosys நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

4) நேற்றைய தீர்ப்புக்குப்பிறகு காங்கிரசும் பிஜேபியும் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளன. வடிவேலுவின் தங்கை மீது ஆசைப்பட்டு பெண்கேட்க வரும் கவுண்டமணியும் செந்திலும் தங்களது முடிச்சவிழ்க்கி மொள்ளமாரித்தனங்களை நடுவீதியில் மாறிமாறிப் பட்டியல் இடுவது போல் இச்சண்டை ஒரே நேரத்தில் சுவாரசியமாகவும் அருவருப்பாகவும் இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி ‘தனிமனிதர்களின் சுதந்திரங்களில் மூர்க்கத்தனமாக தலையிடும் இந்த (பிஜேபி) அரசாங்கத்திற்கு இத்தீர்ப்பு ஒரு அடியைக்கொடுத்துள்ளதுஎன்று சொல்ல, அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பில் –அதாவது அரசாங்க கூட்டத்தில்- பிஜேபி மந்த்ரி ரவிஷங்கர்ப்ரஷாத்  தனிமனித சுதந்திரத்தைப்பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் தெரியாதா? எமெர்ஜென்சி (காங்கிரஸ்) காலத்தில் அவர்களது அட்டர்னி-ஜென்ரல் ‘ஒரு மனிதன் ஜெயிலில் கொல்லப்பட்டால் என்ன செய்வது, கதை முடிந்தது, அவ்வளவுதான்என நீதிமன்றத்தில் வாதிட்டாரே, தெரியாதா?என்று கொட்டியுள்ளார்.

5) நேற்றைய தீர்ப்பினை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்; எமர்ஜென்சி புகழ் காங்கிரசும் வரவேற்றுள்ளது. எப்படி? பெருமுதலாளிகளின் ஏஜெண்டும் காங்கிரசின் ‘சிந்தனைச்சிற்பிகளில் ஒருத்தருமான ப.சிதம்பரம் ‘எங்கள் UPA சர்க்கார் கொண்டுவந்த ஆதார் திட்டம் தனிமனிதர்களின் அந்தரங்க சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கவில்லைஎன்று பீற்றுகின்றார். கூரையில் நாங்கள் கொள்ளியை வைக்கும்போது இத்தனை ஆபத்தாக இருக்கவில்லை என்று சிதம்பரம் சொல்கின்றார்.   

6) ஆறு வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மந்திரியாக இருந்த கபில்சிபல் “இணையதளங்கள், சமூக தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் மோசமான’ ‘பாலியல்’ சார்ந்த விசயங்களை ஏகப்பட்டபேர் எழுதுவதால் இந்திய சமூகம் கெட்டுகுட்டிச்சுவர் ஆகி விடுவதாககண்ணீர், மூக்கு போன்றவற்றை சிந்தி வருத்தப்பட்டிருந்தார் என்பதை நினைவு படுத்திப்பாருங்கள்.
அன்றைய தேதிகளில் டுனீசியாவில் தொடங்கி எகிப்து,சிரியா,லிபியா போன்ற கட்டுப்பெட்டியான அரபு தேசங்களிலும் மக்கள் எழுச்சி வீறுகொண்டு எழுந்து காலகாலமாக குடும்ப சர்வாதிகார ஆட்சி செய்த நபர்களை துரத்தியடித்த நிகழ்வானது சாதாரணமான ஒரு செய்தி அல்ல. இப்போராட்டம் அரபு பிராந்தியம் எங்கும் தீ போலப்பரவ சமூக இணையதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை மிகப்பெரும் பங்காற்றின என்பது அத்தளங்களின் சொந்தக்காரர்களுக்கும் கட்டுப்பாட்டாளர்களுக்கும் கூட எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு நிற்கவில்லை.

7) ஜனநாயகம் என்ற பெயரில் இந்தியாவில் குடும்ப ஆட்சியை ஸ்தாபித்து கருத்துரிமையை, பேச்சுரிமையை குழிதோண்டிப்புதைக்கும்போதும், அமெரிக்கா போன்ற நாடுகளின்,  பெரும் சர்வதேச+இந்திய கார்பொரேட் நலன்கருதியும் ஆதார் போன்ற மனிதமாண்புகளுக்கு அப்பாற்பட்ட அதிகார துஷ்பியோகங்களை நாட்டுமக்கள் மீது ஏவும்போதும் சாமான்யமக்களும் தமது கருத்துக்களைப் பதிவிடுகின்ற எதிர்ப்பை பதிவு செய்கின்ற ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றின் மீது கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று கபில்சிபல் போன்றோர் கடுப்பெடுத்துப் புலம்பியது ஏதோ போகின்ற போக்கில் புலம்புவது அல்ல! காங்கிரசின் அசிங்கமான வரலாறு ரத்தக்கறை படிந்தது என்ற பின்னணியில்தான் இதை பார்க்க வேண்டும்.  விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பெரும் ஊழலைத்தொடங்கிவைத்த பெருமை காங்கிரசியே சேரும். தேசம் விடுதலை பெற்ற அடுத்த வருடமே காஸ்மீரில் ராணுவத்தேவைகளுக்காக ஜீப் வாங்கியதில் ஊழலை தொடங்கி 2ஜி வரையிலும் சாதனை செய்தார்கள்.

8) இப்படியாக காங்கிரஸ் கட்சியின் ஊழல்களையும், கடந்த காலத்தில் பிஜேபி+ஆர் எஸ் எஸ் நட்த்திய குஜராத் கலவரங்கள் உள்ளிட்ட பலவற்றையும், கடந்த மூன்று வருடங்களில் உனா, தாத்ரி, முசாஃபர்நகர் கலவரங்கள், யமுனை ஆற்றை நாசப்படுத்திய ஆர் எஸ் எஸ் சாமியாரான ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு பசுமைத்தீர்ப்பாயம் தண்டனை விதித்தது, மத்யப்ரதேஷ் பிஜேபியின் வியாபம் ஊழல், உத்ரப்ரதேஷில் இப்போது 70க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு என பல கேடுகளையும் வெளிக்கொண்டு வந்ததில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.  இன்றைய பிஜேபி+ஆர் எஸ் எஸ் அரசும் ஊடகங்கள் மீது எத்தகைய அணுகுமுறையை கொண்டுள்ளது என்பதும் ஊரறிந்த ஒன்றே. ஊடகங்களையும் தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களையும் தன் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரவேண்டும் என்பது ஆர் எஸ் எஸ்-சின் தணியாத தாகம். அதற்கான முயற்சிகளை எடுக்கும்போதெல்லாம் உரத்தகுரலில் எதிர்ப்பு கிளம்புவதால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் பின் வாங்குகின்றது. பிஜேபி+ஆர் எஸ் எஸ்-சின் ஆர்ப்பாட்டமான அசிங்கமான ஊதுகுழலான அர்ணாப்கோஸ்வாமி
தொடக்கத்தில் பணியாற்றிய NDTV மீது 24 மணி நேர ஒளிபரப்பு தடைவிதித்தன் மூலம் கருத்துச்சுதந்திரத்தின் மீது தனக்குள்ள அக்கறையை அம்பலப்படுத்திக்கொண்டது பிஜேபி+ஆர் எஸ் எஸ். தேவைப்படும்போது மீண்டும் ஒரு 1975ஐ கொண்டுவரவும் பிஜேபி+ஆர் எஸ் எஸ் தயங்காது என்பதை அதன் ஒவ்வொரு அசைவும் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது.