குற்றமும்
தண்டனையும்
(Crime and
Punishment)
ஆர்.கே.நாராயண்
(தமிழில். மு.இக்பால் அகமது)
’பதினாறை மூணால் பெருக்கினா எத்தனை?’ ஆசிரியர் கேட்டார். பையன் விழிக்கின்றான்.
மீண்டும் மீண்டும் கேட்கவே பையன் பதில் சொன்னான்: ’இருபத்தினாலு’. இப்படிச் சொல்லும்போது அவன் வேண்டுமென்றே ஒரு கேலிச்சிரிப்புடன் சொல்வதாக
ஆசிரியருக்குத் தோன்றியது. அப்படியெனில்
வேண்டுமென்றே தப்பாகச் சொல்லி தன்னை முட்டாளாக்கப்பார்க்கின்றான்! ஆனாலும்
தவற்றைச் சுட்டிக்காட்டி மீண்டும் சொல்லச்சொன்னார்.. ம்ஹூம், அவன்
இருபத்தினாலிலேயே பிடிவாதமாக நின்றான்.
பையனின் பெற்றோரோ வகுப்புத்தேர்வில் அவன் ஐம்பது வாங்க வேண்டும், ஒரே வருடத்தில் இரண்டு வகுப்புத்தாண்டி முதலாம் ஃபாரத்துக்குப்போக வேண்டும் என பெரும் கனவுடன் காத்திருக்கின்றார்கள். எப்படி முடியும் இவனால்?
பையனின் பெற்றோரோ வகுப்புத்தேர்வில் அவன் ஐம்பது வாங்க வேண்டும், ஒரே வருடத்தில் இரண்டு வகுப்புத்தாண்டி முதலாம் ஃபாரத்துக்குப்போக வேண்டும் என பெரும் கனவுடன் காத்திருக்கின்றார்கள். எப்படி முடியும் இவனால்?
இருபத்தினாலு என்று காதில்விழும்போதே மொத்தரத்தமும் கிர்ரென
உச்சிமண்டைக்கு ஏறுகின்றதே! கட்டுப்படுத்திக்கொண்டு மீண்டும் கேட்டார்: ‘எத்தனை?’
இது கடைசி வாய்ப்பு. அவனோ மீண்டும் அதையே சொல்ல, தனது விரல்
துப்பாக்கியின் குதிரையை தட்டிவிட்டது போல் உணர்ந்தார். மேசையைத்தாண்டி கையை
நீட்டி குட்டிப்பையனின் கன்னத்தில் முழுப்பலத்துடன் ஓங்கி ஒரு அறை கொடுத்தார்.
எதிர்பாராத இந்த்த்தாக்குதலால் நிலைகுலைந்த பையன் அப்படியே திகைத்துப்போய் கண்ணீர்
சிந்தி அழத்தொடங்கினான்.
மீண்டும் தன்னுர்ணுவு பெற்ற ஆசிரியர் தான் செய்த தவற்றை உணர்ந்தவராக பையனிடம் கெஞ்சத்தொடங்கினார் ’டேய் குட்டி,
அழாதேடா, ம்ஹூம், செல்லம், அழக்கூடாதுல்ல...’
’நான் அப்பாஅம்மாட்ட சொல்லப்போறேன்’
’ஆங்...கூடாது,
கூடாது...’ கெஞ்சிக்கூத்தாடினார் இவர். ஜாக்கிரதையாக சுற்றிமுற்றிப்பார்த்தார்,
நல்லவேளை, இந்தப் படிப்பறை வீட்டிலிருந்து சற்றே தூரத்தில் இருந்தது.
’நான் அம்மாட்ட சொல்லுவேன்’
பையனின் பெற்றோருக்கோ இவன் ஒரு குட்டி தேவதை. சிவந்த கன்னங்களுடனும்
கொஞ்சும் சிரிப்புடனும் செல்லமாகவும்...இறக்கை மட்டும்தான் இல்லை. ஒரே பிள்ளை.
அளவற்ற செல்வமும் கரைகடந்த அன்பும். இவனுக்காகவே இந்த தோட்டப்படிப்பறையை
கட்டினார்கள். விலையுயர்ந்த பொம்மைகள், இவனுக்கு வசதியான குட்டி மேசை நாற்காலிகள்,
தோட்ட்த்தைச்சுற்றி வர சின்னதாக பெடல் கார். வனது அலமாரி நிறைய இனிப்புக்களும்
பிஸ்கட்டுக்களும் எல்லாமும் அவனுக்கே, அவனது விருப்பம் எதுவோ அதன் படியே
எல்லாமும். அவ்வாறுதான் இருக்க வேண்டும் என்றே விரும்பினார்கள்.
’முரட்டுத்தனம்,
அடங்காத்தனம் போன்ற எந்தக்கெட்ட எண்ணங்களுக்கும் அவன் மனசில் இடம் கொடுக்கக்கூடாது.
இது மாதிரி இருந்தா நீங்க அவன் வாழ்க்கையை கெடுக்குறீங்கன்னு அர்த்தம். நாங்களும்
கண்டிப்பானவங்கதான், ஆனாலும் என்ன, ஒரு நல்ல குடிமகனாக அவனை உருவாக்கணும்..’
’ஆமாம்’ ஆசிரியர் உடனடியாக ஒப்புக்கொண்டார். ஆனால் இவனை ஒரு
நல்லகுடிமகனாக உருவாக்குவதற்கான நல்ல மாதிரியான அணுகுமுறைகள் எதுவும் உதவாது
என்பது ஒவ்வொரு நாளும் உறுதியானது; ஒரு அணா பிரம்புதான் அதற்கு உதவும் என உறுதியாக
நம்பினார். ஆசிரியருக்கு இந்த வேலை மிகப்பெரும் அவஸ்தையாக ஒரு பிரசவ வலியைப்போல்
இருந்தது.
ஒரே ஒரு ஆறுதல் என்னவெனில் மாதம் முதல்
தேதியானால் வந்து விழுகின்ற அந்த முப்பது ரூபாய்தான். ஒவ்வொரு நாளும் மாலையில்
மூன்று மணி நேரம் இவனுக்காக. இதில் முதல் அரை மணி நேரம் பையனின் பெற்றோர் உபதேசிக்கும் ’குழந்தை மனவியல்’ பற்றிய சொற்பொழிவைக் கேட்பதில் முடியும். தந்தை எம்.ஏ. படிக்கின்றார்.
அதற்காக வர் எடுத்துக்கொண்ட பொருள் ‘குழந்தை மனவியல்’. தாயாரோ தனது
பி.ஏ. படிப்புக்காக அதே விசயத்தில் மூழ்கிக்கிடக்கின்றார்.
தினமும் இருவரின் சொற்பொழிவு தவறுவதே இல்லை.
இவர்களின் ஆழமான நீண்ட சொற்பொழிவைக்கேட்ட ஆசிரியர், இவர்களது குழந்தை மெல்லிய கண்ணாடியால்
செய்யப்பட்டிருப்பதாகவும் மிகக்கவனமாக அவனைக் கையாள வேண்டும் என்பதாக தனக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் உணரத்தொடங்கினார்.
அவர்களுக்கு முன்னால் ‘எல்லாம் சரிதான், மறுப்பே கிடையாது’ என்பதுபோல்
நடந்துகொள்வார். ஆனால் அவரைப்பொறுத்தவரை ஒரு குட்டி கொரில்லாவைப் பராமரிக்கும்
பொறுப்பில் இருப்பதாகவே உணர்கின்றார்.
விம்மிவிம்மி அழுகின்ற பையனை எப்படி
சமாதானப்படுத்துவது எனத்தெரியவில்லை. தர்மசங்கடத்தில் சிக்கிக்கொண்டார். ‘இந்தச்
சின்னவிசயத்துக்கெல்லாம் அழலாமா? நீ ஒரு போர் வீரனைப்போல்...’
’ஒரு போர்வீரனை அடிச்சா அவன் துப்பாக்கியை எடுத்து சுட்ருவான்’ என்று அவனிடமிருந்து பதில் வந்தது. இதை ஒரு பெரிய ஜோக் என்பதாக மதித்து
சிரிக்கத்தொடங்கினார். பையனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அப்பாடா...சூழ்நிலை
சகஜமானது.’போ..போய் முகத்தைக் கழுவிட்டு வா’ மிக அழகிய
பீங்கான் ஓடுகள் பதிக்கப்பட்ட பாத்ரூம் அங்கேயே இருந்தது. ஆனால் பையன் கட்டுப்பட
மறுத்ததுடன் கட்டளையும் பிறப்பித்தான். ‘இன்னிக்கு பாடத்தை முடிங்க’ ‘ம்ஹூம் முடியாது’ ஆசிரியர் அலறினார்.
‘அப்படீன்னா நான் எங்க அம்மாட்ட சொல்லுவேன்’ மிரட்டினான். நாற்காலியை பின்னால் தள்ளிவிட்டு எழுந்தான். விரைந்து வந்த
ஆசிரியர் அவனை உட்கார வைத்தார். ‘குட்டிப்பையா, இன்னும் ஒரு மணி நேரம் நான் இங்கே
இருபேன்’.
‘சரி, பரவாயில்லை, நான் இப்போ ரயில் ஓட்டப்போறேன், பார்த்துக்கிட்டே
இருங்க’
‘அப்பா திடீர்ன்னு வந்துட்டா?’ ஆசிரியர் கேட்டார்.
‘இது ரயில் இஞ்சின் பாடம்னு சொல்லுங்க’ என்றபடியே விசமத்தனமாகப் புன்னகைத்தான். தனது அலமாரிக்குச் சென்றான்,
திறந்தான், ரயில் செட்டை எடுத்தான், ரயில் தண்டவாளத்தை இணைக்கத்தொடங்கினான், எஞ்சினுக்கு
சாவி கொடுத்து முறுக்கி தண்டவாளத்தில் ஏற்றினான், ரயில் ஓடத்தொடங்கியது,
‘நீங்கதான் ஸ்டேசன் மாஸ்டர்’
‘ம்ஹூம், அதெல்லாம் முடியாது’ அலறினார். ‘நாளைக்கழிச்சு உனக்கு பரீட்சை
இருக்கு, தெரியுமா?’
ஆனால் பையன் ஒரு கம்பீரப்புன்னகையுடன் கேட்டான்:’நீங்க ஸ்டேசன்
மாஸ்டரா இருக்கப்போறீங்களா இல்லியா?’
எரிச்சலடைந்த ஆசிரியர் ’முடியவே முடியாது’ என்று மறுக்க,
‘ஓஹோ, முடியவே முடியாதா?’ என்றபடியே தனது கன்னத்தை மெதுவாகத்தடவினான். ‘ரொம்ப
வலிக்குது, நான் அம்மாட்ட போறேன்’. உலர்ந்துபோனவராக அவனையே பார்த்தார். அவன் கன்னம் சிவந்துதான்
இருந்தது. ‘யேய் போகாதே, இப்போ என்ன, ஸ்டேசன் மாஸ்டரா இருக்கணும், அவ்வளவுதானே?
நான் என்ன செய்யணும் சொல்லு..’
‘உங்க ஸ்டேசனுக்கு ரயில் வந்தவுடனேயே விசில் அடிச்சு ‘டிரைவர், நிறுத்துங்க!
இன்னிக்கு நிறையப்பேர் டிக்கெட் வாங்கியிருக்காங்க’ன்னு சொல்லணும்’
ஆசிரியர் ஒர் மூலையில் குனிந்து உட்கார்ந்தார். அவன் சொன்னபடி
செய்தார். அரைமணி நேரம் சென்றது. முதுகு வலித்தது. விளையாட்டும் சலித்தது.
அவனுக்கு இவரது போக்கு பிடிக்கவில்லை. இப்போது ஆசிரியருக்கு சாதகமாக எஞ்சின் நகர
மறுத்தது. பையன் எஞ்சினை அவர் கையில் கொடுத்துவிட்டு தனது நாற்காலியில் சென்று
அமர்ந்தான். ‘ரிப்பேர் பண்ணுங்க சார்!’ அவர் ஏதேதோ முயன்று பார்த்தார், ‘ம்ஹூம்,
இதைபத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது’ என்றார்.
‘ம்ஹூம் ரயில சரி பண்ணி ஓட்டுங்க’ என்று பிடிவாதம் பண்ணினான். தன் இயலாமையை உணர்ந்தார். மெக்கானிக் வேலைன்னா
என்னவென்று கேட்பவர் அவர். பையனோ கால்களை தரையில் தட்டிக்கொண்டே ஒரு கொடுங்கோலனைப்போல்
காத்துக்கொண்டிருக்கின்றான். ‘என்னால் முடியாது, எனக்குத்தெரியவும் தெரியாது’ என்று உறுதியுடன் கூறினார். உடனடியாக பையனிடம் இருந்து இன்னொரு உத்தரவு
வந்த்து. ‘ஒரு கதை சொல்லுங்க’.
‘ஒரு கணக்குக்கூடப்போடலை, இப்போ மணி எட்டரை’
‘கணக்கெல்லாம் வேண்டாம், கதை சொல்லுங்க’
‘முடியாது’
‘அப்பா...அப்பா!’
‘எதுக்கு இப்போ அப்பா அப்பான்னு அலர்றே?’
‘அப்பாட்ட ஒரு விசயம் சொல்லணும், ரொம்ப முக்கியமான விசயம்’
புரிந்தது. உடனடியாக புலி-காட்டெருமை கதையைத்
தொடங்கினார். பிறகு அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத
விளக்கும் போன்ற கதைகள் வந்தன. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பையன் கட்டளையிட்டான்:
‘எனக்கு காட்டெருமை கதையை மறுபடி சொல்லுங்க, நல்லாயிருக்கு’. பகலில் பள்ளிக்கூடத்தில்
ஆறு மணிநேரம் கத்திவிட்டு வந்திருக்கின்றார்,
மூச்சுவிடவும் முடியவில்லை. ‘நாளைக்குச்சொல்றேனே? இப்போ என்னால மூச்சுவிட்வும்
முடியலே’
‘அப்பிடியா, சரி சரி, அப்பவே போறேன், எல்லாத்தையும்...’ சத்தம்போட்டபடியே எழுந்தான், திடீரென வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
பின்னால் துரத்திக்கொண்டு ஆசிரியர் ஓடினார். பையன் காற்று மாதிரி வேகம் கொண்டு
ஓடுகின்றான், தோட்டத்தை மூன்று முறை சுற்றிவிட்டார்கள். பிடிக்கமுடியவில்லை,
தோற்றுப்போன முகத்துடன் அவனைப் பார்த்தார். பையனுக்கு இரக்கம் வந்த்து. ரோஜாச்செடிக்கு அருகே அவரைத்தடுத்து
நிறுத்தினான். ஆசிரியர் எட்டி அவனைப்பிடிக்க முயற்சித்தார். மிக அருகில் வந்த
நொடியில் அவன் மீண்டும் ஓட்டம் பிடித்தான். நிச்சயம் இதில் ஆசிரியர் வெற்றிபெற
முடியாது. ஆனால் பையன் இந்தப்போட்டியை மிகுந்த குதூகலத்துடன் ரசித்து
அனுபவித்தான். அவனது சிரிப்பு சவால்விடும் கொடூரமான சிரிப்பாக இருந்தது.
ஆசிரியரின் முகம் சிவந்தது, மூச்சுவிட சிரமப்பட்டார். தன்னைச்சுற்றிலும்
இருள்சூழ்வதாக உணர்ந்தார். அப்படியே வீட்டின் போர்ட்டிக்கோவில் சரிந்து
உட்கார்ந்தார்.
பையனின் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே
வந்தார்கள். ‘என்ன இங்கே?’ ஆசிரியர் எழுந்து நிற்கவே மிகுந்த சிரமப்பட்டார்.
இன்னும் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இருந்து விடுபடவில்லை.
பேசமுடியவில்லை. ஒரு முடிவுக்கு வந்தார் – சின்னப்பையனின் மிரட்டலுக்கு அடிபணிந்து
போவதைவிடவும் செய்ததை ஒப்புக்கொண்டு வருவதை எதிர்கொள்வது சாலச்சிறந்தது, நல்லதோ
கெட்ட்தோ பெரியவர்களின் முடிவு எதுவாயினும் சரிதான்.
பையனைப்பார்த்து ‘இந்த நேரத்தில் ஏன் தோட்டத்தைச்சுற்றி
ஓடிட்டு இருக்கே?’ என்றார்கள்.
பையன் கண்களில் குறும்பு தொனிக்க ஆசிரியரைப்
பார்த்தான். ஆசிரியர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ‘எல்லாம் நான் சொல்றேன்’ என்று ஆரம்பித்தார். அடுத்த வார்த்தையை தேடிக்கொண்டிக்கும்போது பையனின்
தந்தை ‘கணக்குப்பரீட்சைக்கு எப்படி படிச்சிருக்கான்?’ என்றார். பரீட்சை
என்ற சொல்லைக்கேட்டமட்டில் பையனின் முகம் இருண்டது. உடனேயே பெற்றோரின் பின்னால்
வந்து தன்னை மறைத்துக்கொண்டு பார்வையாலும் சைகையாலும் தன்னைக் காட்டிக்கொடுக்க
வேண்டாம் என்று ஆசிரியரை வேண்டினான். பரிதாபமாகவும் தைரியம் முற்றிலும்
வற்றியவனுமாக காட்சியளித்தான். ஆசிரியரின் குரல் ஒலித்த்து. ‘அதெல்லாம்
பரவாயில்லை...அந்த பதினாறாம் வாய்ப்பாட்டை மனப்பாடம் பண்ணினாப்போதும், நல்லா
செய்திடுவான்’
பையனின் முகத்தில் பெரும் நிம்மதி தெரிந்த்து. நன்றியுணர்வு வெளிப்பட்ட
பையனின் முகத்தை ஆசிரியர் கவனித்தார். தன்னைக் காட்டிக்கொடுக்க மாட்டான் என்று
இப்போது உறுதியாக நம்பினார். ‘குட் நைட் சார், இன்னிக்கு பாடம் சீக்கிரமாகவே
முடிஞ்சுது. நான்தான் கொஞ்ச நேரம் இவனோட விளையாடிட்டு இருந்தேன், கொஞ்சம் அவனை
குஷிப்படுத்தலாமேன்னுதான்... ஹஹ்ஹஹ்ஹ’.
(நன்றி: Frontline, ஜனவரி
9-22, 1988. மொழிபெயர்ப்பு 15.5.2005 தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளியானது)
(ஆர்.கே.நாராயண் அவர்கள் மறைந்த நாள் 13.5.2001)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக