கேரளாவை நான்
என்றுமே நேசிப்பவனாக இருக்கின்றேன். பல
காரணங்கள். தேர்தல் முறை
வாயிலாக ஆட்சியதிகாரத்தில் கம்யூனிஸ்டுக்கள் அமர்ந்த முதல்
மாநிலம் என்பதால் மட்டுமல்ல, இந்தியாவில் வேறு
எவரையும் விடவும் அதிகமாய் எழுதிய
ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் அந்த
ஆட்சிக்குத்தலைமை தாங்கினார் என்பது
முக்கிய காரணம்.
80களின்
தொடக்கத்தில் மதுரை
தமுக்கம் அரங்கில் மிகப்பெரும் மாநாடு
ஒன்று
கூட்டப்பட்டது, காங்கிரஸ், அதிமுக
தவிர்த்து பிற
கட்சிகள் கலந்து
கொண்டதாய் நினைவு.
மாநாட்டு மேடையில் அமர்ந்தபடியே அன்றைய
கேரள
முதல்வர் ஈ.கே.நாயனார் பீடி
புகைத்த காட்சி
இப்போதும் நினைவில் பதிந்துள்ளது. பீடி
எளியமக்களின் ஊக்கி
என்பதும் அதை
ஒரு
மாநிலமுதல்வர் புகைக்கின்றார் என்பதும் பெரிய
பேச்சாக அரங்கில் பேசப்பட்டது. வைக்கம் போராட்டம், நாராயணகுரு, ஐயன்காளி.. தற்செயலாக அமைந்த
மாப்ளா
கிளர்ச்சி குறித்த ஆங்கில
நூலை
அலைகள்
பதிப்பகத்துக்காக தமிழில் மொழிபெயர்த்த நல்வாய்ப்பு.
எனது
ஊரான
தென்காசியில் இருந்து செங்கோட்டை, புனலூர் வழியே
கொல்லம் செல்லும் மலைரயில்பாதை! டார்ஜிலிங், ஊட்டி
மலைரயில்பாதைகளுக்கு சவால்
விடும்
அள்ளிக்கொள் என்று
அழகு
குவிந்துகிடக்கும் மலைப்பாதை! பகவதிபுரம் தாண்டியவுடன் கேரளாவுக்குள் நுழைந்துவிடுவோம். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி கண்ணிமைக்காமல் வெளியே
பார்த்துக்கொண்டு வந்தாலே போதும்,
ஜென்மம் கடைத்தேறும். அகலரயில்பாதையாக மாற்றுகின்றார்கள் மாற்றுகின்றார்கள் இன்னும் மாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்.
இவையன்றி கேரளா,
கேரள
மக்கள்
மீது
மிகப்பெரும் அன்பும் மரியாதையும் பெருக்கெடுக்க முக்கிய காரணமாக அமைந்தது நினைவுகள் அழிவதில்லை என்ற புதினம். நிரஞ்சனா என்ற கன்னட எழுத்தாளர் சிரஸ்மரணா என்ற தலைப்பில் எழுதிய அப்புதினத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் கேரளாவை தாயகமாக்க் கொண்ட
மறைந்த
அன்புத்தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன். அப்பு,
சிருகண்டன்... வாசிப்போரை கதறியழச்செய்யும் சிறைச்சந்திப்பு...
செம்மீன்...கருத்தம்ம... தகழி,
ஷீலா,
மது,
சத்யன்,
சலீல்
சௌத்ரி,
கே.ஜே.யேசுதாஸ், ஜி.தேவராஜன், வைக்கம் முகமது பஷீர், பொற்றேகாட், தோப்பில் பாஷி,
எம்.டி.வாசுதேவன் நாயர்,
அடூர்
கோபாலகிருஷ்ணன், எம்.பி.சீனிவாசன், ரவீந்திரன், எம்.ஜி.ஸ்ரீகுமார். ஏ.ஆர்.ரகுமானின் தந்தை
சேகர்
ஏறத்தாழ 60 மலையாளப்படங்களுக்கு இசையமைத்தவர்; யேசுதாசுக்கு முன்பே
நம்
ஏ.எம்.ராஜா மலையாளத்தில் நிறையவே பாடியுள்ளார்.
மதுரையின் செல்லூர் பகுதி
தமிழகத்தின் கைத்தறித்தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் நிரம்பிய பகுதியாக இருந்தது (இப்போது தொழிலே
இல்லை).
தொழில்
முடித்த மலையாளிகளுக்காகவே அரிசிப்புட்டு, கேழ்வரகுப்புட்டு, பயறு,
நல்லெண்ணெய், அப்பளம் சுடச்சுட சமைத்துப்போடும் சிறுகடைகள் இருந்தன. சத்துமிகு இவ்வுணவுகளுக்கு நானும்
பழகினேன். அப்போதெல்லாம் எனக்குத்தெரியாது, எதிர்காலத்தில் நானும்
கொச்சியில் பணிநிமித்தம் வாழ்க்கை நடத்தும் ஒரு
காலம்
வரும்
என்பது.
ஃபோர்ட் கொச்சி,
மட்டஞ்சேரி, டேவிட்
ஹால்,
அற்புதமான ஓவியக்கண்காட்சி ஒன்று
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அங்கே
நடந்த
ஒரு
மழை
நாளின்
மாலைப்பொழுதில் அதன்
கொல்லைப்புறத்தில் அமர்ந்தபடியே சூடான
கேக்கும் காப்பியும் பருகிய
யாருக்கும் வாய்க்காத பொறாமைப்படவைக்கும் அந்தப்பொழுது, ஆள்
அரவமற்ற செராய்
கடற்கரையின் ஓட்டல்களில் கூரைவேய்ந்த முதல்
தளத்தில் அலைமோதும் கடலைப்பார்த்து அமர்ந்தபடியே பியரும் பொரிச்சமீனும் மாட்டுக்கறியும் உண்டபடி இரண்டு
மணி
நேரப்பொழுதை ருசியாகக் களித்த
அற்புத
நேரங்கள்... பெரும்பாவூரின் அழகில்
மனசைப்பறிகொடுத்தேன்.
கொச்சியில் இருந்தபோது மீன்,
கோழி,
மாட்டுக்கறி இவற்றில் என்னென்ன வகையெல்லாம் விதவிதமாகச் சமைக்க
முடியுமோ அத்தனையும் ருசி
பார்த்து ஆயிற்று. அதிலும் அரபு
உணவான
சவர்மா!
வாரம்
மூன்று
முறையாவது சாப்பிடவில்லை எனில்
பைத்தியம் பிடிப்பது உறுதி
(சவர்மா
அப்போது தமிழகத்தில் அவ்வளவாக அறிமுகம் ஆக
வில்லை).
ஆட்டுக்கறியைத்தேடிப்பிடித்து ஒரு
ஓட்டலில் சாப்பிட்ட நாள்
எனக்கு
காய்ச்சல் வந்துவிட்டது. என்
மலையாளி நண்பர்கள் என்னைக் கிண்டல் அடித்தார்கள், இனிமேல் சாப்பிடாதே, மாட்டுக்கறி மட்டுமே சாப்பிடு என்று
அறிவுரை சொன்னார்கள். கொச்சியில் இருந்து சென்னைக்கு ரயிலேறும் முன்
மலபார்
ஹோட்டலில் மூன்று
சப்பாத்தியும் சூடானமாட்டுக்கறி செமி-கிரேவியும் வாங்கிக்கொண்டால்
எட்டு
மணிக்கு மேல்
பார்சலைப்பிரித்து ஆற
அமர
சாப்பிடும் அலாதி
சுகத்தை அனுபவித்தவர்கள் பாக்கியசாலிகள்.
ஆலப்புழை! ஆஹா!
சிறு
படகில்
மூன்று
மணி
நேரம்
பயணிக்க வேண்டும்; இடையில் கரை
ஒதுங்கி பழம்பொரியும் சூடான
கட்டஞ்சாயாவும் அடிக்க
வேண்டும்., மீண்டும் பயணத்தை தொடர
வேண்டும். மாலையில் கப்பக்கிழங்கும் மீன்கொழம்பும் பிசைந்து வயிறு
நிறையச் சாப்பிடவேண்டும். குடும்பத்துடன் ஒரு
நாள்
ஆலப்புழை சென்றிருந்தபோது தற்செயலாக ஒய்.எம்.சி.ஏ.
அரங்கில் கேரள்
உணவுத்திருவிழா நடப்பதை அறிந்து, அட!
சொல்லவும் வேண்டுமோ? திரும்பிய திசையெல்லாம் சேட்டன்களும் சேச்சிகளும் கூட்டம் கூட்டமாக மீன்,
கோழி,
மாட்டுக்கறி, கப்ப,
சப்பாத்தி, பரோட்டா, பிரியாணி என
அடிச்சு நொறுக்கிக்கொண்டிருந்தார்கள். நானும்
குடும்பத்துடன் சங்கமம் ஆனேன்,
ரிஷபஜோதியில் கலந்தேன்.
நான்
தங்கியிருந்த அறை
முதல்மாடியில் இருந்தது. அக்கட்டிடத்தின் முன்னே
பத்தடி
அகலத்துக்கு பத்தடி
ஆழத்துக்கு ஒரு
கால்வாய் ஓடும்.
பருவமழைக்காலத்தில் அறையின் வாசலில் நாற்காலியில் அமர்ந்தபடி ஆளரவமற்ற மாலைகளில் பெரும்
சத்தத்துடன் இடைவிடாது பெய்யெனப்பெய்யும் பருவமழையை வேடிக்கை பார்ப்பது.. எந்த
ஒரு
கைதேர்ந்த சித்திரக்காரன் வரையும் மழைக்காட்சியை விடவும் அது
அழகாக
இருந்தது என்பது
சத்தியம். அறையின் பின்
ஜன்னலைத்திறந்தால் கிறித்துவ கான்வெண்டுக்கு சொந்தமான மிகப்பெரும் தோட்டம், எப்போதும் பச்சையாக. சலிக்காத வாழ்க்கை அது.
மாவோ
தேர்வு
செய்யப்பட்ட படைப்புக்கள் மொத்தம் ஒன்பது.
ஐந்தாம் தொகுதியை சென்னையில் இருந்தபோதே மொழியாக்கம் செய்து
முடித்தேன். கொச்சிக்குச் செல்லுமுன் தோழர்
அலைகள்
சிவம்
அவர்கள் ஒன்பதாவது தொகுதியையும் நீங்களே செய்யவேண்டும் என்று
அன்புடன் கட்டளையிட்டார். ஃபோர்ட்கொச்சி, மட்டஞ்சேரி, செராய்
கடற்கரை, டேவிட்
ஹால்,
சவர்மா,
பொரிச்சமீன், கப்ப,
ஆலப்புழை... இவை
யாவினும் ருசியான மாட்டுக்கறியை தொடர்ந்தும் இடைவிடாமலும் உண்டு
மாவோ
தொகுதி
ஒன்பதை
(ஐந்தை
விடவும்) திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் செய்து
முடித்தேன்.
இறுதியாக: கேரளா
முதல்வர் தன்மானமிக்க முதல்வராக இருப்பது மட்டுமல்ல தன்
மக்களின் மானமுள்ள முதல்வராக இருப்பதும் எனக்கு
பிடித்துள்ளது.