சனி, அக்டோபர் 12, 2013

இக்கதையின் மூலம் சொல்லவரும் நீதி யாவது...

1) இந்தியாவின் கடைசிதீவிரவாதிகளை பிடித்தாயிற்று; இனி எல்லாரும் நிம்மதியாய் தூங்கப்போகலாம் என்பதாக இருக்கின்றது தமிழக அரசின் அவசர நடவடிக்கைகள். சில கேள்விகள் எழவே செய்கின்றன:

2) பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் தொடர்ந்து நான்கு நாட்கள் இதுவே முதன்மை செய்தி: சென்னையைத் தகர்த்திருப்பார்கள், மோடியை கொன்றிருப்பார்கள், திருப்பதி குடை ஊர்வலைத்தில் குண்டு வைத்திருப்பார்கள்... இப்படி எல்லாமே போலீஸ்துறை கொடுத்த தகவல்களை அப்படியே வாந்தி எடுத்தார்கள். காவல்நிலையத்தில் குற்றவாளிகள்/கைது செய்யப்பட்டவர்கள் கொடுக்கும் (உண்மையில் ’பெறப்படும்’ வாக்குமூலம்) வாக்குமூலம் சட்டப்படி செல்லாது, நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளாது என்று தெரிந்தும் நம் ஊடகங்களுக்கு இந்த ‘வாக்குமூலத்’தை அவசரகதியில் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

3) இந்த ஆபரேசனில் ஈடுபட்ட காவலர்கள் அனைவருக்கும் சிறப்பு பதவி உயர்வு, 15 லட்சம், 5 லட்சம் என மக்கள் பணம் பரிசு. இப்படியான யாரும் எதிர்பாராத பெரும் பதவி உயர்வு பணத்தொகை பரிசளிப்பின் மூலம் தமிழக அரசு மக்களுக்கு என்ன சொல்கின்றது? ‘இந்தியாவின் கடைசி தீவிரவாதிகள் இவர்கள்தான்; இனிமேல் எல்லாம் சுகமே!’ என்பதா? அதாவது கொடுக்கப்பட்ட பதவி உயர்வு,பணப்பரிசு ஆகியவை ஒரு சாமானிய தமிழனின், தினம் 100 ரூபாய் கூலி சம்பதிக்கின்ற ஒரு தமிழனின் பார்வையில் அளவில் மிகமிகப்பெரியவை என்பதில் ஐயமில்லை; இத்தகைய ஒரு பரிமாணத்தை மக்கள் முன் வைப்பதன் மூலம், கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் ஆகப்பெரும் தீவிரவாதிகள் இஸ்லாமியர்களே என்ற ஒற்றைப்பரிமாணத்தை தமிழக மக்கள் மனத்தில் விதைப்பதாகாதா? இவ்விசயத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் மவுனம் கள்ளத்தனமானது.

4) சரிதான். தர்மபுரியில் நத்தம் அண்ணாநகர் என தலித் மக்களின் வீடுகளை எரிக்க பெட்ரோல் மண்ணெண்ணெய் கேன்கள் சேகரிப்பு, கொள்ளை அடிக்கின்ற பொருட்களை அள்ளிச்செல்ல டெம்போ வேன் என நன்கு திட்டமிட்டு நிதானமாக பல மணி நேரங்கள் வன்னியர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியபோது கைகட்டி வேடிக்கை பார்த்த்து தமிழக காவல்துறைதான்; அத்தகைய திட்டமிடல் உளவுத்துறைக்கு தெரியாமல் போனது என்று சொல்ல முடியாது. தர்மபுரி காவல்துறைக்கு என்ன மாதிரியான பதவி உயர்வு, பணப்பரிசு கொடுக்கலாம்? அந்த சம்பவம் குறித்து வாய் திறக்கவே நம் முதல்வருக்கு சில நாட்கள் ஆயிற்று.

5) வாச்சாத்தி மலைவாழ் மக்கள் மீது கொடும் வன்முறையை ஏவிய தமிழக காவல்துறையை காப்பாற்ற திமுக அஇஅதிமுக என மாறி மாறி வந்த இரண்டு கட்சி ஆட்சிகளும் பெரும் பிரயத்தனங்கள் செய்தார்கள் என்பது வரலாறு. இறுதியாக இருபது வருடங்கள் கழித்து தீர்ப்பு வரும்போது இரண்டு கட்சிகளின் அய்யாவும் அம்மாவும் சிறு சலசலப்பும் குற்றமனப்பான்மையும் இன்றி எப்போதும் போலவே இருந்தார்கள் என்பதும் வரலாறு.

6) கோசங்கள் கோரிக்கைகள் தவிர வேறெந்த ஆயுதமும் இன்றி ஊர்வலம் வந்த 17 தமிழர்களின் உயிர் தாமிரபரணியின் நீரோடும் மணலோடும் என்றும் இரண்டறக் கலந்திருக்கும்; அன்றைய தினம் ஆறடி உயரக்கம்புகளோடும் துப்பாக்கிகளோடும் வெறியாட்டம் ஆடிய தமிழக போலீசுக்கும் அவர்களுக்கு வக்கீலாகவும் அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவருக்கு சாதிய வக்கீலாகவும் மாறி வாதாடிய அன்றைய முதல்வர் கருணாநிதிக்கும் மறந்திருக்கலாம், தமிழகமக்கள், குறிப்பாக திருநெல்வேலி மக்கள் அதை என்றும் மறக்க மாட்டார்கள்.

7) தேவர் குருபூசை என்றால் துப்பாக்கியோடு காவல் காப்பதும் இம்மானுவேல் சேகரன் குருபூசை என்றால் போஸ்டரை கிழிப்பதும் துப்பாக்கி சூடு நடத்துவதும்... இப்படியான நீண்ட நெடிய பெருமைக்குரிய சாதியப்பாரம்பரியம் தமிழக போலீசுக்கு உண்டு.

8)ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் இஸ்லாமியர்களுக்கு எதிராக திசைதிருப்ப ஆர் எஸ் எஸ்ஸின் கிளை அமைப்பான பிஜேபி பகிரங்கமாக வேலை செய்கின்றது; பிற கட்சிகளும் தமிழகத்தின் திராவிடக்கட்சிகளும் அந்த அஜெண்டாவை மறைமுகமாக ஏற்றுக்கொண்டு தாங்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அதை செவ்வனே நிறைவேற்றுகின்றார்கள்; இப்போது இந்த வேலையை முன் எப்போதையும் விட அதி வேகமாகவும் வீச்சாகவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். ‘நாங்கள் தொலைக்காட்சி வரலாற்றில் புதுமை செய்வோம், புதிய தலைமுறையை வளர்ப்போம்’ என்று பீற்றிக்கொண்டு வந்தவர்களை தமிழ் மக்கள் வரவேற்றார்கள்; திடீரென ஒரு நாள் இவர்களுக்கு நரமாமிச மோடியின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது என்ற கேள்வி எழும்போது மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கணங்களில் இந்த ஊடகங்கள் யார் பக்கம் நிற்பார்கள் என்பது தெளிவாகின்றது.

9) தனது வர்த்தக லாபங்களுக்காக உலகெங்குமுள்ளஇஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் உலகளாவிய அமெரிக்கபயங்கரவாதமும், தமது உள்ளூர் வர்த்தக லாபங்களுக்காக இந்திய இஸ்லாமிய மக்களை திட்டமிட்டே'தீவிரவாதி'களாக ஆக்கும் பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும், இந்தஅஜெண்டாவை செயல் படுத்தும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.+ காங்கிரஸ், பிறகட்சிகளின் கள்ளக்கூட்டணியும், இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு,எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன. இந்த பிரச்சார அரசியலின் ஒருபகுதியாக, ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் (அரைகுறை அம்மண டான்ஸ், பன்ச் டயலாக், அடிதடி எதுவும் இல்லாமல் கவனமாக ஆக்கப்பட்ட) உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை அக்டோபர் இரண்டு அன்று ஒளிபரப்பியதில் எந்த ஒரு உள்நோக்கமும் அரசியலும் இல்லை என்று நம்மை நம்பச்சொல்கின்றார்கள்.

10) தீவிரவாதிகள் எப்போதும் வெடிகுண்டுகளுடனும் துப்பாக்கிகளுடனும் திரிபவர்கள் என்ற ஒற்றைப்பிம்பத்தை நமது ஊடகங்கள் காலந்தோறும் பரப்பி வந்துள்ளன; அப்படி அல்ல; ஆயுதம் ஏதும் இன்றி, சுத்தமான சவரம் செய்யப்பட்ட முகத்துடன், வெள்ளை உடையுடன், சுத்தமான ஆங்கிலம் பேசி ரத யாத்திரை நடத்தி மதக்கலவரத்தை ஏற்படுத்தி பல்லாயிரம் உயிர்கள் பலியாக காரணமாய் இருப்பவர்களும், ;இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்ட அனுமதியுங்கள், கை கை கட்டி வேடிக்கை பாருங்கள்’ என தம் காவல்துறைக்கு ஆணையிடும் முதல்வர்களும்’ இவர்களோடு எப்படியும் உறவுகொண்டு நாடாளுமன்றத்தில் சில எம்.பி. சீட்டுக்களையோ மந்திரிகளையோ பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பல கட்சிகளுக்கும் கடிதம் எழுதும் கலை கைவரப்பெற்ற கலைஞர்களும்; இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ஐ.நா.சபை வரை பேசும் நீண்ட நாக்கு உள்ளவர்கள் ஆனால் தர்மபுரித்தமிழர்களை வன்னியன் தாழ்த்தப்பட்டவன் என கோடுபோட்டுப்பிரித்து 300 வீடுகளை எரித்து தலித்துக்களின் எதிர்காலத்தையே நாசம் செய்த பாட்டாளி கட்சியினரும் தீவிரவாதிகள் இல்லை எனில் அவர்களுக்கு வேறு என்ன பெயரிட்டு அழைக்கலாம்?

கருத்துகள் இல்லை: