செவ்வாய், செப்டம்பர் 16, 2025

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்: நா.வே.அருள் அவர்களின் மதிப்புரை


பேசும்புதியசக்தி செப்டம்பர் 2025 இதழில் வெளிவந்துள்ள நா.வே.அருள் அவர்கள் எழுதியுள்ள நூல் மதிப்புரை இது.

...

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்

 யார் இந்த எம்.பி.சீனிவாசன்?

தமிழில் எட்டே எட்டுப் படங்களுக்கு மட்டும் இசையமைத்த அவர் யார்? அதற்கு முன்னும் அதன் பின்னும் அவர் வரலாறு என்ன? தமிழ்ச் சினிமா இசையில் அல்லது சினிமாத்துறையில் அவர் செய்த குறுக்கீடு என்ன? சினிமா இசையுடன் அவரது எல்லை முடிவுற்றதா? இந்த நூலுக்கு 'மக்களிசை மேதை' என்ற தலைப்பை நான் சூட்டக் காரணம் என்ன?“ என்கிற முன்னுரையுடன் தொடங்குகிறார் மு.இக்பால் அகமது.

 

குடும்ப, அரசியல், சமூகப் பின்னணி

முதல் இரண்டு அத்தியாயங்களில் விரிவான குடும்ப, அரசியல், சமூகப் பின்னணி ஆகியவை விவரிக்கப்படுகின்றன. காங்கிரஸ், சோசலிஸ்ட், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் இணைந்து பணியாற்றிய எம்.எஸ்.ஓ (சென்னை மாணவர் சங்கம்) என்கிற அமைப்பின் தலைவராக இருந்திருக்கிறார் எம்.பி.சீனிவாசன். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஏ.கே.கோபாலனின் அலுவலகச் செயலாளராகப் பணியாற்றியதில் கிடைத்த மாபெரும் அனுபவங்கள் இவரை ஒரு கம்யூனிஸ்டாக மாற்றியிருக்கிறது. “நடுவர்களாக இருந்த சங்கீத பண்டிட்டுகள் பாரதியை கர்நாடக இசை என்ற பெயரில் உயிரற்ற சவப்பெட்டியில் அடைத்துக் கொடுக்கும் கலைஞர்கள்” என்று ஒரு சாராரை விமர்சித்ததின் மூலம் இவரது கலை குறித்த தீர்க்கமான பார்வையை அறிய முடிகிறது. கலைப் பணிகளில் ஈடுபாடு கொண்டது மட்டுமன்றி,  இவர் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார்.

 

எம் பி எஸ் என்னும் இசை மேதைமை

1952 முதல் 1955 வரை கம்யூனிஸ்ட் கட்சிப்பணியிலிருந்தவர் அதன் பின் சென்னையில் முழுமூச்சுடன் இசையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அன்று மலையாள சினிமா உலகில் பிரபலமாகவிருந்த, இசையமைப்பாளர் ஆர்.கே.சேகர்தான் (.ஆர்.ரஹ்மானின் தந்தை) எம். பி.எஸ் அவர்களுக்கு உதவியாளராக இருந்திருக்கிறார்.

இந்திய இசை என்ற ஒற்றை அடையாளம் ஏதும் இல்லை என்பதையும், இந்தியாவின் பல மாநிலங்களில் இசை வடிவங்களும் மரபுகளும் அது அதற்கான தனித்தன்மையுடன் வேறுபட்டுச் செழுமையாக நிலவுவதையும் அவர் உணர்ந்தது என்பது எம்.பி.எஸ் இன் இசை மேதைமையைக் காட்டுகிறது. கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேற்கத்திய இசை ஆகிய வடிவங்களின் அடிப்படைகளை முழு மூச்சுடன் கற்றுத் தேர்ந்தது மட்டுமன்றி தமிழ் நாட்டின் மரபான நாட்டுப்புற இசையோடு இணைத்து, புதிய பரிமாணங்களை உருவாக்குவது என்பதை முயன்று சிந்தித்துத் தனது பரிசோதனை முயற்சியில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

 

சேர்ந்திசை என்னும் சிகர முயற்சி

...விடுதலை இயக்கத்தின் பகுதியாக உழைப்பாளி மக்களது வர்க்க உணர்வுகள் பெற்ற அமைப்புகள் தோன்ற ஆரம்பித்தன. அவற்றின் கலையுலகத் தோழனாகப் பிறந்ததுதான் இந்திய மக்கள் நாடக மன்றம் (Indian Peoples Theatre Association -IPTA). தமிழ்நாட்டின் துரதிருஷ்டம், இந்த இயக்கம் நமது மண்ணிலே வித்திடப்படவே இல்லை.

 

தனிநபராகத் தனது பாடும் திறமையை வெளிப்படுத்துவது ஒரு வகை என்றால், பலரையும் இணைத்துச்  சேர்ந்திசையை  வானொலியில்  அரங்கேற்ற முதல் முதலாக முயற்சி நடந்திருக்கிறது. இப்டாவின் செயற்பாடுகள் நின்றபிறகு, பாம்பே யூத் காயர், கல்கத்தா யூத் காயர் தொடங்கப்பட்டதைப் போல சென்னையில் எம்.பி.எஸ் மெட்ராஸ் யூத் காயர் தொடங்கியிருக்கிறார். இவருடைய பெயரில் திருவனந்தபுரம் எம்.பி.எஸ். இளைஞர் சேர்ந்திசைக்குழு ஒன்று இயங்கி வருகிறது. மதச்சார்பின்மையும் மக்கள் ஒற்றுமையும்

இக்குழுக்களின் மையச் சரடாக விளங்குவது பாராட்டுக்குரியது.

 

“இப்டா என்ற இயக்கம் சேர்ந்து பாடும் முறை என்ற வடிவத்தைத் தீவிரமாகப் பயன்படுத்திச் செழுமைப்படுத்தியது” என்று சொல்லும் எம். பி.எஸ் இன் கலைத்தாகம் இன்று பல சேர்ந்திசைக் குழுக்களாகப் பரிமளிக்க அஸ்திவாரம் இட்டுள்ளது.

 

அமைப்பாய்த் திரள வேண்டிய அவசியம்

ஒவ்வொரு நாள் காலையிலும் திரைப்பட நிர்வாகம் வீசியெறியும் டோக்கன்களைக் காயம் படாமல் விழுந்தடித்தோடி பொறுக்கி எடுத்த (அதுவும் கிடைக்காத உதிரிக் கலைஞர்கள் பரிதாபகரமாக வேடிக்கை பார்த்திட) உதிரி நடிக நடிகர்களையும் மற்றவர்களையும் ஒரு உத்தரவாதமுள்ள நிலைக்கு உயர்த்திடத்தென்னிந்திய திரைப்படவுலகில் தொழிற்சங்கத்திற்கு அஸ்திவாரம் இட்டவர்கள் எம்.பி.சீனிவாசன் மற்றும் நிமாய் கோஷ். 1960 வரையிலுமிருந்த இக்கொடுமையான நிலைமைகளுக்கு இவர்கள் இருவரும்தான் முற்றுப்புள்ளி வைத்தவர்கள்.

விபத்துக்குள்ளாகி இறந்துபோன ஸ்டன்ட் மற்றும் டூப் நடிகர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் பிணக் குவியல்களின் பட்டியல்களாக இருந்திருப்பதை உணர முடிகிறது. வெள்ளித்திரைக்குப் பின்னால் இருந்த இந்தக் கன்னங்கருத்த உலகத்தின் மீட்சிக்காகப் பாடுபட்டிருக்கிறார்கள். இப்படியான செயலூக்கமுள்ள எம்.பி.எஸ் என்கிற ஒரு மனிதரின் வாழ்க்கைச் சித்திரத்தைத்தான் பல்வேறு திரைச்சீலைகளில் பல வண்ண ஓவியங்களாகத் தீட்ட முயன்றிருக்கிறார் இக்பால். "உருகிடும் வேளையிலும் நல்ல ஒளி தரும் மெழுகுத்திரிகளாய் வாழ்ந்தவர்களின் படப்பிடிப்பை வெவ்வெறு தளங்களிலிருந்து நிகழ்த்தியிருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் இக்பால் அகமது. ஸ்டுடியோ வாசல்களில் உண்மையாகவே செங்கொடியை ஏற்றி தென்னிந்தியாவின் முதல் சினிமா தொழிலாளர் தொழிற்சங்கத்தை தொழிற்சங்கச்சட்டம்1926இன் கீழ் பதிவு செய்தவர்கள் இடதுசாரி கம்யுனிஸ்ட் ஆன எம் பி சீனிவாசன் மற்றும் அவருடன் துணை நின்ற நிமாய்கோஷ். திரை இசையமைப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்ட பின்னர்தான் மிகப்பல சங்கங்கள் தொடங்கப்பட்டன என்கிற உண்மையை அறிய முடிகிறது. எம்.பி.எஸ், நிமாய் இருவருமே இதன் காரணமாக பட வாய்ப்புக்களை இழந்தார்கள். பொருளாதாரத்தில் நலிந்தார்கள். ஆனால் அது பற்றி கவலைப்படாமல் சாகும்வரை தொழிலாளர்களுடன் நின்றார்கள் என்பதை எல்லாம் மிக விரிவாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இவற்றை எல்லாம் நாம் தெரிந்துகொள்ளவில்லை என்றால் வரலாறு வழிப்பறிக்குள்ளாகலாம்.

 

எம்.பி.எஸ்ஸின் பார்வைத் தீட்சண்யம்

திரைப்படம் ஓரு தொழில்லாபம், மேலும் லாபம் அடைவதே திரைப்படத் தொழிலின் ஒரே குறிக்கோள். திரைப்படத் தொழிலின் சமுதாயப்பொருளாதார அமைப்பே மாறிய பிறகுதான் சமுதாய மாற்றத்துக்குஉதவக்கூடிய திரைப்படங்கள் உருவாக முடியும்" என்றும், "தொழிற்சங்கம் என்றாலே சிவப்புத் துணியைக் கண்ட காளை மாடு போல சில தயாரிப்பாளர்கள் சீறுகிறார்கள். உலகெங்கும் தொழிற்சங்கங்கள் இயங்குவது மட்டுமல்ல, தொழில் துறைகளில், தொழில் மேலாண்மையில் அவை முக்கியப் பங்காற்றுகின்றனஎன்றும் தன்னுடைய பார்வைத் தீட்சண்யத்தை உலகத்தில் பிற நாடுகளின் அனுபவ மதிப்பீடு சார்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதிர்ச்சி தரும் சில விஷயங்கள்

1969 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் நாள் பாதை தெரியுது பார்' படப்பிடிப்பைத் தொடங்கி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்.ஆர். வெங்கட்ராமன்.  . ஜீவானந்தம் காமராவை இயக்கி ஒளிப்பதிவைத் தொடங்கி வைத்தார். அதே ஸ்டுடியோவில் அடுத்த தளத்தில் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், கம்யூனிஸ்டுகள் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். இவர்களை வளரவிடக்கூடாது" என்று பேசியிருக்கிறார்.

படத்தில் தொழிற்சங்க அலுவலகத்தில் தொங்கவிடப்பட்டிருந்த இலெனின் படம் காட்சிக்குப் பொருத்தமாயில்லை என்று அன்றைய தினமணி விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தப் படத்தின் வெளியீடு, விநியோகம் குறித்த பதிவில், எந்த அளவுக்கு அந்தக்காலத்தில் பொதுவுடைமை  எண்ணத்திற்கு எதிரானவர்கள் செயல்பட்டார்கள் என்கிற அரசியலை முழுமையாகத் தோலுரித்துக் காட்டுகிறார் நூலாசிரியர். இந்த  நூலை  உழைப்பாளிகளுடன் உறுதியாக நின்ற நிமாய் கோஷுக்கும், திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பொருத்தமாகவே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

இந்தக் கட்டுரையைத் தொடங்கியதைப் போலவே, முடிப்பதற்கும் நூலாசிரியரின் முன்னுரையிலிருந்தே மேற்கோள்  கொடுக்க விரும்புகிறேன்: "ஒரு பாடலையோ இசைத் துணுக்கையோ அல்லது ஒரு இசையமைப்பாளரின் திறனையோ மதிப்பிட வேண்டும் எனில் சிக மனநிலையைக் கடந்து செல்ல வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன். விருப்பு வெறுப்பற்ற மனநிலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.”  எப்படி எடைபோட்டுப் பார்த்தாலும் மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் தனது பன்முக ஆளுமையில் மாற்றுக் குறையாத தங்கமாகத்தான் மிளிர்கிறார்.

 

இசைமேதை எம்.பி.எஸ் பற்றி மட்டுமல்ல, அவர் காலத்தின் திரை இசை பற்றியும், திரையுலகின் அன்றைய போக்குகள் குறித்தும் விரிவாக அலசும் இந்தப் புத்தகத்திற்கான தலைப்பு “மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்: காலமும் களமும்” என்று இருந்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய காலப்பெட்டகம் இது.

*****