புதன், நவம்பர் 02, 2022

நீங்களும் நாங்களும்

 

நீங்களும் நாங்களும்
 
 
நாங்கள்
பிணங்களால் உயிர்வாழும் அற்ப ஜீவிகள்
 
நீங்கள்
சூரியக்கதிர்களின் சுகமான வருடலில் கண் விழிப்பவர்கள்
நாங்கள்
இழவு வீடுகளின் இரங்கற்பாக்களில் இரவைக் கழிப்பவர்கள்
 
நீங்கள்
குடும்பங்களின் ஜீவிதம் நாடி கருவிகளைத் தீட்டுபவர்கள்
நாங்கள்
அமைதியின் ஆன்மாவை அழிக்க ஆயுதம் தீட்டுபவர்கள்
 
நீங்கள்
சகமனிதனின் சமாதானம் வேண்டி பாதை சமைப்பவர்கள்
நாங்கள்
மானுட அமைதியின் வீழ்ச்சிக்காக பள்ளம் பறிப்பவர்கள்
 
நீங்கள்
மத அடையாளங்களை மறந்து மனித இதயத்தைத் காண்பவர்கள்
நாங்கள்
மனித இதயங்களைப் பிளந்து மத அடையாளத்தை சந்தையில் விற்பவர்கள்
 
நீங்கள்
உங்கள் உணவை சகபயணியுடன் பகிர்ந்து அன்பை ருசிப்பவர்கள்
நாங்கள்
சேர்ந்து பயணிக்கும் உங்கள் அன்பு வாகனத்தின் அச்சை முறிப்பவர்கள்
 
நீங்கள்
ஆபத்துக் காலங்களில் அடையாளம் கேட்காமல் குருதியைக் கொடுப்பவர்கள்
நாங்கள்
எல்லாக் காலங்களிலும் உங்கள் குருதியை வீதியில் சிந்த விலை பேசுபவர்கள்
 
நீங்கள்
மதம் மொழி இனம் எல்லை என தடைகள் யாவற்றையும் உடைப்பவர்கள்
நாங்கள்
மனிதர்களைப் பிரிக்கும் புதிய புதிய வேலிகளை சிந்தித்துக் கட்டமைப்பவர்கள்
 
நாங்கள் பன்னெடுங்காலமாய் சிந்தையைக் கசக்கி
எங்கள் எஜமானர்களின் கஜானாக்களை நிரப்பத் திட்டமிட்டு
வீதிகளில் செயற்படுத்தும் ஒவ்வொரு ரத்தக்களறியையும்
ஒற்றுமை சமாதானம் என்னும் எளிய ஆயுதங்களால்
நீங்கள் எளிதில் முறியடித்துவிடுகின்றீர்கள்
ஒவ்வொரு முறையும் வென்றுவிடுகின்றீர்கள்
 
எனவே
எங்கள் அடுத்த திட்டமிடுதலின் மையம் இதுதான்:
அன்பு
சமாதானம்
அமைதி
இம் மூன்றையும் சட்டப்பூர்வமாகவே ஒழித்து விடுவது
 
நீங்கள் புன்னகைக்கின்றீர்கள்,
என்ன செய்ய, எரிச்சலாகத்தான் இருக்கின்றது
எங்களிடம் இல்லாத ஒன்றும்
வரலாறு எங்களிடம் இருந்து பறித்துக் கொண்டவற்றுள் முக்கியமானதும் அது
விரைவில் அஜெண்டாவை மாற்றி வைப்போம்,
ஒழிக்கப்பட வேண்டியவற்றின் பட்டியலில் புன்னகையை முதலில் சேர்ப்போம்.