(பிஜேபி அரசின் கார்பொரேட் ஆதரவு நிலையில் அவசரகதியில் இயற்றப்பட்ட மூன்று வேளாண்மை மறுசீரமைப்பு சட்டங்களுக்கு எதிராக ஒரு வருட காலம் நடந்த விவசாயிகள் போராட்டம், அந்த சட்டங்களை திரும்ப பெறுவதாக அரசு அறிவித்த நிலையில் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப் பட்டதாக விவசாயிகள் போராட்ட கூட்டமைப்பு அறிவித்தது. இந்த ஒரு வருட காலத்தில் ஏறத்தாழ 800 விவசாயிகள் போராட்டக்களத்தில் தம் உயிரை ஈந்தனர். இப்போராட்டத்தில் பெண்களின் பங்கு என்பதை பெண் விவசாயிகளின் பங்கு என்று தீர்மானமாக சொல்வதுதான் சரியாக இருக்கும். அது குறித்த ஒரு தொகுப்பு இது.)
விவசாயத்தொழிலில் பெண்களின் நிலை:இந்திய ஆண் தொழிலாளர்களில் ஆகப்பெரும்பாலோர் வேலைவாய்ப்புக்களை தேடி கிராமப்புறங்களில் இருந்து இடம்பெயர்ந்து நகரங்களுக்கு செல்கின்றார்கள். அதாவது கிராமப்புறத்தின் தலையாய தொழிலான விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களில் போதிய வருவாய் இல்லாததால் அல்லது விவசாயம் அழியும்போது வருவாய் ஈட்டும் பொருட்டு நகரங்களில் வேலை கிடைக்கும் என்று செல்கின்றார்கள்.
2020 செப்டம்பர் மாதம் வலதுசாரி பிஜேபி அரசால் இயற்றப்பட்ட வேளாண்மை மறுசீரமைப்பு சட்டங்களால் சிறுவிவசாயிகள்தான் மிக அதிகமாகவும் விரைவாகவும் பாதிக்கப்படுவோராக இருந்தார்கள். விவசாய சந்தையையும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விற்பனை விலையையும் அழிக்கத்தக்க அந்த சட்டங்கள், பெரும் கார்பொரேட் முதலாளிகளுடன் சிறு விவசாயிகளை போட்டியிடுமாறு தள்ளிவிடுபவை. எனில் இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அதனால் பாதிக்கப்பட்டிருக்க கூடியவர்கள் சிறுவிவசாயிகளிலும் ஆகப்பெரும்பான்மையாக இருக்கின்ற பெண்கள் சமூகமே.
2018 ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி பொருளாதாரத்தை ஈட்டுகின்ற பெண்களில் 80 விழுக்காட்டினர் விவசாயத்தொழிலில்தான் உள்ளனர், இவர்களில் 33 விழுக்காட்டினர் விவசாயக்கூலிகள், 47 விழுக்காட்டினர் சொந்தமாக விவசாயம் செய்பவர்கள். “விவசாயத்தின் மையமான வேலைகளைச் செய்பவர்கள் இவர்கள்தான் – விதைப்பது, நாற்று நடுவது, அறுவடை செய்வது, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட மேலும் பல வேலைகள்”. கிராமப்புறங்களில் உள்ள பெண்களில் 85 விழுக்காட்டினர் விவசாயத்தொழிலில் ஈடுபட்டுள்ளபோதிலும் இவர்களில் ஏறத்தாழ 13 விழுக்காட்டினர்தான் (தமது பெயரில்) நிலவுடைமையாளராக உள்ளார்கள். மூன்றில் ஒரு பங்கு விவசாயத்தொழிலாளர்களாக இருப்பவர்கள் யாரெனில், தமது பெற்றோர், கணவர்கள், கணவர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான விளைநிலங்களில் உழைக்கின்ற பெண்கள்தான்.
இந்தியாவின் விவசாயத்தில் முழுநேரத் தொழிலாளர்களாக ஈடுபடுபவர்களில் 75 விழுக்காடு பெண்களே என்று சர்வதேச மனிதநேய அமைப்பான ஆக்ஸ்பாம் சொல்கின்றது. தெற்காசிய நாடுகளின் உணவுப்பொருள் விளைச்சலின் 80 விழுக்காட்டில் 60 விழுக்காட்டை உற்பத்தி செய்வோர் பெண்களே.
நாட்டின் விவசாயிகளில் முக்கால் பங்கு பெண்களே எனில் அவர்களது பிரச்னை தேசியப்பிரச்னை ஆகும். “விவசாயத்தொழிலின் சிக்கல் பெண்ணியமயப்படுத்தப்பட்டுள்ளது” என்று ஆய்வாளர்கள் இதை சொல்கின்றார்கள்.
விவசாயத்துறையில் உழைக்கும் பெண்களின் மனக்குமுறல்கள் இவை:
“எங்கள் பெயரில் நிலம் சொந்தமாக இல்லை, எனவே விவசாயத்தொழிலில் சிக்கலை சந்திப்பவர்கள் பெண்களாகிய நாங்கள்தான். எங்களால் குடும்பத்தை சமாளிக்க முடியாதபோது பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றோம். எப்போதெல்லாம் விவசாயத்துறையில் சிக்கல் ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் முதலில் பாதிக்கப்படுபவர்களும் மோசமாகப் பாதிக்கப்படுபவர்களும் பெண்கள்தான்”.
“விவசாயத்தில் பெண்களின் பங்குபற்றிப் பேசும்போது, விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள பெண்களின் பிரச்னைகளைத்தான் பேசுகின்றோம். உண்மை நிலவரம் என்ன? வயலில் வேலை செய்கின்ற பெரிய உழைப்பாளிகள் கூட்டத்திற்கு வீட்டில் இருந்து உணவு சமைக்கும் பெண்களைப்பற்றி நாம் பேசுவது இல்லை”.
தேவி குமாரி (பஞ்சாப் கேட் மஜ்தூர் சபா): பஞ்சாபின் தொழிலாளர்களில் 35 விழுக்காட்டினர் தலித் மக்கள். இவர்களில் பெரும்பான்மையோர் விவசாயத்தொழிலாளர்கள், அதிலும் பெண்கள். இந்த மூன்று கறுப்புச்சட்டங்களும் விவசாயிகளின் மீது ஏற்படுத்தப்போகும் பாதிப்பைவிடவும் பெண்கள் மீது ஏற்படுத்தவுள்ள கடும் பாதிப்பே மிக அதிகம். கார்ப்பொரேட் முதலாளிகள் விவசாயத்துறையில் அனுமதிக்கப்படுவார்கள் எனில் இப்போது நாங்கள் பெறுகின்ற இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை, வீட்டுக்கு 400 யூனிட் மின்சாரம் இவை யாவும் காணாமற்போகும். இந்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது பெண்களாகிய எங்களின் நிலையை இந்த அரசு நினைத்துப்பார்க்கவே இல்லை, எங்களின் வாழ்வாதாரத்துக்கு மறுவழி என்ன என்று சொல்லவும் இல்லை. பெற்ற கடன்களை திருப்பிச்செலுத்த முடியாததால்தான் விவசாயக்கூலிகளில் மிகப்பலர் தற்கொலை முடிவை தேடுகின்றார்கள்.”
இந்திய விவசாயம் கடந்த பல பத்து வருடங்களாக சந்தித்து வருகின்ற நில இழப்பு, கடன் சுமை, தண்ணீர் பற்றாக்குறை, மண்வள இழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பெரும் அபாயத்தில் சிக்கி உள்ளது. கடந்த 25 வருடங்களில் கடன் சுமையால் மட்டுமே மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தேசிய குற்றப்பதிவு நிறுவனத்தின் (என் சி ஆர் பி) 2019 தகவல்படி, இந்தியாவில் நிகழும் தற்கொலைகளில் 7.9 விழுக்காடு விவசாயத்தொழிலில்தான் நிகழ்கின்றது. 17 மாநிலங்களில் விவசாயிகளைவிடவும் விவசாயக்கூலிகள்தான் அதிக தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.
விவசாய சமூகம் என்பது ஒருமைத்தன்மை உடையது அல்ல. பெரிய நிலக்கிழார்கள், நடுத்தர நிலவுடைமையாளர்கள், சிறு நிலவுடைமையாளர்கள், சிறு விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் எனப் பல முகங்கள் உடையது. இந்தியாவின் கிராமங்களுக்கு செல்லுங்கள். ஆண்கள் தம் ஓய்வு நேரங்களில் சீட்டு விளையாடுவதையும் வட்டமாக உட்கார்ந்துகொண்டு ஹுக்கா புகைப்பதையும் பார்ப்பீர்கள். ஆனால் கிடைக்கின்ற ‘ஓய்வு’ நேரத்திலும் பெண்கள் மாட்டுச்சாணம் தட்டிக்கொண்டு இருப்பார்கள். உதாரணமாக ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தின் கவிதா. இவரது எருமைகள்தான் இவரது வாழ்வாதாரம். விவசாயத்தில் ஈடுபடுவதுடன் மாடுகளைப் பராமரிப்பதுடன் இவரது அன்றாட வாழ்க்கை முடிவதில்லை, பிள்ளைகளை பராமரிக்க வேண்டும், குடும்பதுக்கு சமைக்க வேண்டும். ஆகப்பெரும்பான்மையாக இருக்கின்ற பெண்கள் சமூகம் தமது பெயரில் நிலம் ஏதும் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள், இவரும் அப்படியே. ஒரு நாளைக்கு 15 முதல் 17 மணி நேரம் உழைக்கின்றார். மாடுகளுக்கு தீவனம் இடுவது, பால் கறப்பது, தொழுவங்களை சுத்தம் செய்வது, சாணம் அள்ளுவது, கால்நடைகளை பராமரிப்பது – இவை காலைப்பணிகள். இவை முடிந்தவுடன் வயலுக்கு சென்று களை எடுப்பது, நாற்று நடுவது, அறுவடை செய்வது, புடைப்பது, உமி நீக்குவது என்று பகல்பொழுது போகும். இவை முடிந்தபின் சாணம் தட்டி எருவாக்கும் வேலை. இவை மட்டுமல்ல, ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் வயலில் உழைப்பவர்களுக்கும் சமைத்துப்போடுவதை மறக்க வேண்டாம்.
எந்த ஒரு பருவத்திலும், அது விதை விதைக்கும் பருவமோ அறுவடைக்காலமோ, பெண் விவசாயத்தொழிலாளர்கள்தான் 3,300 மணி நேரம் வேலை செய்கின்றார்கள்; ஆண்கள் 1,860 மணிநேரமே வேலை செய்கின்றார்கள்.
பெண்கள் அதிகாலை நான்கு மணிக்கு முன்பே எழுவார்கள். கால்நடைகளை சென்று பார்ப்பார்கள். வயலுக்கு செல்வார்கள். இவர்களின் வாழ்க்கை கால்நடைகளுடனும் வயல்களுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் முடிந்து விடுகின்றது. இவர்களில் பலருக்கு நகரம் என்பது எப்படி இருக்கும் என்பதே தெரியாது. பேறு காலங்களில் நகரத்தில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு ஒருவேளை வந்தால் ’நகரம் இப்படித்தான் இருக்கும்’ என்று பார்த்துக்கொள்வார்கள்.
தொன்றுதொட்ட ஆணாதிக்க விவசாய சமூகத்தில், பாலின சமத்துவம் அற்ற சமூகத்தில் குடும்பத்தின் அன்றாட நடவடிக்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரமோ கூட, சொத்தில் பங்கோ அல்லது குறைந்தபட்ச சம அதிகாரமோ கூட இல்லாத பெண்களின் நிலை, எப்போதெல்லாம் ஒரு பொருளாதார சிக்கலோ பண நெருக்கடியோ ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் இன்னும் மோசம் அடைகின்றது. அதாவது அப்போது ஆண்களின் நிலையில் சிக்கல் ஏற்படாதவாறு, அவர்களின் பொருளாதார நிலையில் வீழ்ச்சி ஏற்படாதவாறு உறுதி செய்யும் வண்ணம் பெண்கள் ஏற்கனவே அனுபவித்துக்கொண்டிருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகள் அல்லது சலுகைகளும் மடைமாற்றம் செய்யப்பட்டு ஆண்களுக்கு திருப்பிவிடப்படும்.
குறிப்பாக விவசாயத்தில் நட்டமோ வருமானத்தில் குறைவோ ஏற்படும் நேரங்களில் அதற்கு ஈடாக பலியிடப்படுவது பெண்களின் நலன்களே. இதுபோன்ற சூழலில் ஆண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் எனில் உயிருடன் இருக்கும் பெண்களின் நிலைபற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் தங்களையும் காத்துக்கொண்டு பிள்ளைகளையும் பாதுக்காக்க வேண்டும். ஏற்கனவே சொன்னபடி, தற்கொலை செய்துகொண்ட ஆணின் பெயரில் இருக்கின்ற சொத்தான நிலத்தின் உரிமை இந்தப் பெண்களின் பெயருக்கு மாற்றம் செய்யப்படாததால் (அதாவது குடும்பத்தின் வேறு ஒரு ஆணோ ஆண்களோ அந்த நிலத்தை தமது பெயரில் உடைமையாக்கி கொள்கின்றார்கள்) வறுமையிலும் வறுமை என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
பாரம்பரிய சொத்துரிமை சட்டத்தின் கீழ் இந்து, ஜைன, சீக்கிய, புத்த மதங்களை சேர்ந்த பெண்கள், பரம்பரை சொத்தில் சம பங்கை பெற முடியும், நடைமுறையில் இருக்கின்றதோ இல்லையோ.
உண்மை என்னவெனில் பெண்களின் பெயர்களில் சொத்துப்பத்திரங்களில் நிலவுரிமை இல்லாததால் தற்கொலை செய்துகொள்ளும் பெண் விவசாயிகளின் எண்ணிக்கை வெளியே தெரியவும் இல்லை, அரசின் புள்ளிவிவரங்களில் ஏறுவதும் இல்லை. உதாரணமாக, மராட்டிய மாநிலத்தில் உள்ளூர் அரசு நிர்வாகங்களின் பதிவுகளின்படியே ஒவ்வொரு மாதமும் ஒரு பெண் விவசாயி தற்கொலை செய்துகொள்கின்றார்.
நிலம் என்பது விவசாய உற்பத்திக்கு பயன்படுவது மட்டுமின்றி அரசு உதவிகள், கடன்கள், விவசாய உதவித்திட்டங்கள், பென்சன் போன்ற அனைத்துக்கும் ஆன உத்தரவாதமாகவும் இருக்கின்றது. உத்தரபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆக்ஸ்பாம் ஆய்வு ஒன்று சொல்கின்றது: பெண் விவசாயிகளில் நான்கு விழுக்காட்டினர் மட்டுமே இவைபோன்ற அரசு உதவி, கடன் திட்டங்களால் பயனடைய முடிகின்றது.
பெண் விவசாயிகளை பலி கொடுக்கும் மூன்று கருப்புச்சட்டங்கள்:
மூன்று கருப்புச்சட்டங்களும் பெண் விவசாயிகள் மீது பின்வரும் தாக்குதல்களை தொடுப்பனவாக இருந்தன. அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட தரகர் முறையை வேளாண் விற்பனையிலிருந்து ஒழிப்பது. இதன் பொருள் என்னவெனில், இப்போதுள்ள நடைமுறையில் அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை தரகர்களிடம், தமது வேளாண் உற்பத்திப்பொருட்களுக்கான விலையை பேரம் பேச முடியும், ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயிக்க முடியும். இச்சட்டங்களோ ஆண்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வேளாண் சந்தையில் பெண்களின் இருப்பை, தலையீட்டை முற்றாக ஒழிக்கின்றன.
கட்டுப்பாடற்ற சுதந்திரமான வேளாண் சந்தையில், விவசாயிகள் தமது பொருட்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம், வாங்கலாம், தங்களுக்குச் சாதகமான விலையை நிர்ணயிக்கலாம் என்று கருப்புச்சட்டம் சொன்னது. ஆனால் கட்டுப்பெட்டியான இந்திய சமூகம், பாலின சமத்துவம் அற்ற இந்திய சமூகம் இந்தியாவின் பெண்களை (விவசாயிகளை) சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதிப்பதில்லை, அதாவது பெண் விவசாயிகள் வேளாண் சந்தைக்குள் நுழைய முடியாது என்று பொருள்.
மஹிளா கிசான் அதிகார் மஞ்ச் என்னும் 120 பெண் விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சொல்கின்றது: “ஏற்கனவே இருக்கின்ற வேளாண் சட்டங்களில் பல குறைபாடுகள் இருப்பது உண்மைதான். ஆனால் அரசு நிர்ணயிக்கின்ற சந்தைவிலைக்கு ஏறத்தாழ நெருக்கமாக விவசாயிகள் தமது விளைபொருட்களை விற்க முடியும் என்ற குறைந்தபட்ச உத்தரவாதமாவது அதில் இருந்தது. ஆனால் 2020இன் கருப்புசட்டங்கள், கட்டுப்பாடற்ற சந்தையை அனுமதிப்பவை, அதாவது கார்பொரேட்டுக்களின் கட்டுப்பாட்டுக்குள் சந்தையை தள்ளுபவை. இதில் பெண் விவசாயிகளின் பங்கோ பேரம் பேசும் உரிமையோ அறவே இருக்காது, ஒழிக்கப்படும். மேலும், இந்த வேளாண்மை மறுசீரமைப்பு என்ற புதிய சட்டங்கள், விவசாயிகளுக்கும் வேளாண் பொருட்களை வாங்குகின்ற வணிகர்கள், பெரும் நிறுவனங்களுக்கும் இடையே எழுகின்ற தாவாக்களை புதிதாக உருவாக்கப்பட உத்தேசிக்கப்பட்ட வேளாண்மை வாரியத்துக்கு (அக்ரிகல்ச்சுரல் போர்ட்) மாற்ற வகை செய்கின்றன. இப்போது நீதிமன்றங்களை அணுகி தாவாக்களை தீர்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒரு பெரும் கார்பொரேட் நிறுவனம் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் உள்ள வேளாண்மை வாரியத்துக்கு உட்பட்ட எல்லையில் ஒரு வழக்கைத் தொடுக்குமாயின், வழக்கில் பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் விவசாயியாக இருந்தால் அவர் அத்தனை தொலைவுக்குப்பயணம் செய்யவோ அதற்கான பணத்தை செலவு செய்யவோ இயலாது எனில் வழக்கு எந்த திசையில் செல்லும் என்பதை புரிந்துகொள்வதில் சிரமம் இல்லை.
விவசாயத்தை கார்பொரேட்மயப்படுத்துவது விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்களை நேரடியாக பாதிக்கின்றதெனில், இந்திய கிராமங்களின் 70 விழுக்காடு பெண்களின் மூன்றில் இரண்டு பங்கு பெண் தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதார தொழில்களான விவசாயம், விவசாயக்கூலி, பால்பண்ணை, மீன்பிடித்தல், வனப்பொருட்களை சேகரித்தல், விற்பனை செய்வது உள்ளிட்ட பலவும் விவசாயத்தை சார்ந்தவை ஆகத்தான் இருக்கின்றன. இவை தவிர குடும்பத்தொழில்களான சுயதொழில்களில் ஈடுபடும் பெண்கள் உற்பத்தி செய்யும் கைவினைப்பொருட்கள், உணவுப்பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவை உள்ளூர் சார்ந்த வணிகத்தை நம்பி இருப்பவை. ஆனால் இந்த சுயமான சிறுவணிகத்தில் ஈடுபடும் குடும்பப்பெண்களுக்கு முறையான ‘ஊதியம்’ என்று எதுவும் வழங்கப்படுவது இல்லை என்பது மிக நுட்பமானது. ஆக இவர்கள் அனைவருமே அணிதிரட்டப்படாத தொழிலாளர்கள் என்னும் பெருந்திரளில் அடங்குவர்.
விவசாயத்துறையை கார்பொரேட்மயமாக்கி வணிகமயப்படுத்துவது என்பது விவசாயம் சார்ந்த பால்பொருட்கள், மீன்பிடித்தல், சில்லரை உணவு வணிகம் என பல்வேறு துறைகளையும் தொடர்கண்ணியாக பாதிக்கும். மொத்த வேளாண் உற்பத்தி சந்தை, சந்தைவரத்து ஆகியவற்றை, கடையில் இருந்து வயல் வரையிலும், சூப்பர் மார்க்கெட்டுகளின் கார்ப்பொரேட் வேளாண் முதலாளிகளின் கடும்கட்டுப்பாடு என்னும் கோரப்பிடிக்குள் தள்ளிவிடும். காரணம், அணிதிரட்டப்படாத துறைகளில் உள்ள சிறு உற்பத்தியாளர்களும் கார்ப்பொரேட்மயம் என்னும் வலைக்குள் சிக்கவைக்கப்படுவார்கள். இந்திய கிராமப்புற விவசாயம், விவசாயம் சாராத பிற துறைகள் ஆகிய இரண்டு தளங்களிலும் அந்நிய நாட்டு நேரடி மூலதனத்தை அனுமதித்து இத்துறைகளை முற்றாக சர்வதேச முதலாளிகளின் கட்டுப்பாட்டில் விடுவதே இச்சட்டங்களின் நோக்கம்.
ஆக விவசாயம் சார்ந்த பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை, அதாவது இந்த மூன்று கருப்புச்சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பெண்களின் எண்ணிக்கை மிக மிக பிரமிப்பு ஊட்டக்கூடியது.
முதலாவதாக, குடும்பத்தொழில்கள் எனப்படுபவை. 2018இல் இத்தொழில்களில் 47 லட்சம் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் எண்ணிக்கையில் இது 7.5 விழுக்காடு. கால்நடைகள் பராமரிப்பு, இனப்பெருக்கம், அறுவடைக்குப் பிந்திய தொழில்கள் ஆகியன இவற்றில் அடங்கும். இரண்டாவதாக, பால்பொருட்கள் உற்பத்தி, மீன்பிடித்தல்ஆகிய அணிதிரட்டப்படாத தொழில்களில் மட்டுமே பணிபுரியும் தொழிலாளர்களில் 70 விழுக்காட்டினர் பெண்கள். அரசின் புள்ளிவிவரங்களின் படியே 2016இல் ஒரு கோடியே எழுபது லட்சம் பால்பண்ணை விவசாயிகள் இருந்துள்ளார்கள், இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களே. 2018இல் சுமார் அறுபது லட்சம் பெண்கள், 90 முதல் 120 நாட்கள் பால்பண்ணைத் தொழில்களில் வேலை செய்துள்ளனர். சுமார் ஏழரைக்கோடி விவசாயக்குடும்பத்தின் பெண்கள் (ஒன்று அல்லது இரண்டு மாடு வைத்திருப்போர்) மொத்த பால் உற்பத்தித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 2016இல் சுமார் ஒரு கோடிப்பெண்கள் மீன்பிடித்தொழில், மீன் விற்பனை ஆகிய தொழில்களை செய்துள்ளனர். இவர்களில் 48 விழுக்காட்டினர், உள்ளூர் சந்தையில் சில்லரை மீன் விற்பனைத்தொழில் செய்துள்ளனர். மூன்றாவது தொழில் தெரு வியாபாரிகள், உணவு பதப்படுத்துதல், சில்லரை வணிகம். துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை எனினும் சுமார் பத்து லட்சம் பெண்கள் சில்லரை மளிகை வணிகத்திலும் கணிசமான அளவுக்கு உணவு பதப்படுத்துதல், சில்லரை வணிகம் ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். இதனுடன் 50 லட்சம் சில்லரை மீன் வணிகர்களும் உள்ளனர். ஆக தோராயமான கணக்குப்போட்டாலும் அணிதிரட்டப்படாத தொழில்களில் உள்ள இரண்டு கோடிப்பெண்கள் இந்த மூன்று கருப்புச்சட்டங்களால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
கருப்புச்சட்டங்களுக்கு எதிரான வீர்ஞ்செறிந்த விவசாயிகள் போராட்டம்:
இப்படியான பின்னணியில்தான் வலதுசாரி இந்துதுவா பிஜேபி அரசு கொண்டுவந்த வேளாண்மை மறுசீரமைப்பு சட்டங்களுக்கு இந்தியப் பொதுசமூகமும் விவசாய சமூகமும் உடனடியாகவே தமது கடும் எதிர்ப்பை தெரிவித்தன. மூன்று கருப்புசட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். இந்த மூன்று கார்பொரேட் ஆதரவு சட்டங்களும் இந்திய விவசாயத்தை எப்படியெல்லாம் அழித்து உணவுப்பொருளையும் விவசாயத்தையும் பணம் படைத்தோர்க்கு மட்டுமே உரியதாக்கும் என்று ஏற்கனவே இந்திய சமூகம் விரிவாகப் பேசிவிட்டது.
2020 நவம்பர் மாதம் டெல்லி, ஹரியானா, உ பி எல்லைகளிலும் இந்தியாவின் பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இந்த கருப்புசட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, அவை தொடர் போராட்டங்களாக மாறின. இந்த சட்டங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண் விவசாயிகளான, விவசாயத் தொழிலாளர்களான தங்களை பாதிக்க இருப்பதை உணர்ந்த பெண்கள் இப்போராட்டங்களில் பல ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பையும் இருப்பையும் பங்களிப்பையும் உறுதி செய்தார்கள்; பெண்களின் பங்களிப்பு இன்றி எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறாது, நிறைவடையாது என்பதை உணர்த்தினார்கள்.
மூன்று மாநில எல்லைகளில் திரண்டு வரலாற்றுச்சிறப்புமிக்க முழு வருடப்போராட்டம் நடத்திய விவசாயிகள் பெருந்திரளில் பெண்களின் எண்ணிக்கையும் பங்களிப்பும் மிக அதிக அளவில் இருந்ததில் வியப்பேதும் இல்லை. உண்மையில் இந்த விவசாயிகள் போராட்டம் விடுதலை பெற்ற இந்தியாவில் இதுவரையிலும் நடந்த மிகப்பல வெகுஜனப்போராட்டங்களில் இருந்தும் பல வகைகளிலும் மாறுபட்டது – குணாம்சம், போராட்ட வடிவம், ஒருங்கிணைப்பு, திட்டமிடல், ஆட்சியாளர்களின், அரசு நிர்வாகத்தின் சவால்களையும் அடக்குமுறைகளையும் சந்தித்தது, போரட்டத்தில் பங்கேற்ற பலதரப்பட்ட மக்கள் திரள், இந்திய மக்களின் ஆதரவை மட்டுமின்றி சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டியது என பல கோணங்களிலும்.
குறிப்பாக 2021 ஜனவரி 18 அன்று நாடு தழுவிய அளவில் கடைப்பிடிக்கப்பட்ட ‘பெண் விவசாயிகள் தின’த்தன்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், தேசிய இந்திய மாதர் சம்மேளனம், அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்க, ப்ரகதிஷீல் மஹிளா சங்காதன், அகில இந்திய அக்ரகாமி மஹிளா சமிதி, அகில இந்திய மஹிளா சன்ஸ்க்ருதிக் சங்காதன் ஆகிய மாதர் அமைப்புக்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவித்து போராட்டங்கள் நடத்தின.
குடும்பப்பொறுப்பும் விவசாயப்பணியும் ஆக இருபெரும் வேலைகளைக் காலங்காலமாக செய்து வந்தாலும் இந்திய கிராமப்புற பெண் விவசாயிகளை இந்திய (ஆண்) சமூகம் பெண்களாகத்தான் ஒதுக்கி வைத்திருந்தது, உழைப்பாளிகளாகவோ விவசாயிகளாகவோ இதுகாறும் அங்கீகரித்தது இல்லை. இப்போராட்டக்களம் அவர்களது உழைப்பாளி-விவசாயி என்ற அடையாளத்தை அங்கீகரித்ததில் பெருமிதம் அடைந்துள்ளார்கள். வீட்டைத்தாண்டி பொதுவெளியில் ஒரு போராளியாக தன்னால் களத்தில் சாதிக்க முடியும் என்பதை ஒவ்வொரு பெண்விவசாயியும் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
ஒருவருடப் போராட்டக்களம் ஒரு பக்கம் இருக்க, பஞ்சாபில் தமது வயல்களில் விவசாயம் தொடர்ந்து நடப்பதையும் பெண்கள் உறுதி செய்தே வந்தார்கள். போராளிகளுக்கான உணவு, உடைகள், கம்பளிப்போர்வைகள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தடையின்றிக் கிடைப்பதை பெண்களே உறுதி செய்தார்கள்.
ஆக பெண்கள் ஒரே நேரத்தில் மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். சொந்த கிராமத்தில் விவசாயத்தை தடையின்றி பராமரித்தார்கள், போராட்டக்களத்தில் போராளிகளாக நின்றார்கள், போராட்டக்களத்தில் இருந்தவர்களை பராமரிக்கவும் செய்தார்கள். டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேச எல்லைகளில் நடந்த ஓராண்டுப்போராட்டம் பெண்விவசாயிகளின் ஆதரவின்றி ஒரு மாதத்திற்கு மேல் நீடித்திருக்க முடியாது என்று உணரப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டுமே பஞ்சாபில் ஏறத்தாழ நூறு இடங்களில் தொடர்போராட்டங்களை நடத்தி சாதனை புரிந்துள்ளார்கள். பெண்கள், உழைப்பாளிகள், களப்போராளிகள் என்ற பாத்திரம் ஏற்கத்தக்கவர்கள், இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சீக்கிய சமூகத்தின் தனிப்பட்ட அம்சங்களான வேறுபாடில்லாத இலவச உணவு, சேவை மனப்பான்மை, உறுதிப்பாடு ஆகிய தனிப்பட்ட அடையாளங்களுடன் விவசாயிகள் போராட்டம் இறுதிவரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபில் தல்வாண்டியில் இருந்து திக்ரி எல்லைக்கு வந்திருந்தவர் கிரண்ஜித் கவுர். தனது மாமியார், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளிட்ட இருபது பேருடன் வந்திருந்தார். “பெண்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும், தமது பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது முக்கியம் என உணர்கின்றேன். இங்கே களத்தில் உள்ள பெண்களின் உணர்வைப்பார்த்து வலிமையுள்ளவர்களாக வளர வேண்டும் என்பதற்காகவே எனது இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்து வந்தேன்” என்றார்.
2020 நவம்பர் தொடங்கிய இப்போராட்டத்தின் போக்கில், 2021 ஜனவரி மாதம் அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போப்டே தெரிவித்த கருத்து போராட்டத்தீயில் எண்ணெய் வார்த்தது. “குடும்பத்தையும் சமையலையும் கவனிப்பதை தவிர பெண்களால் என்ன செய்ய முடியும்?” என்ற ஆணாதிக்கக்குரல் அவரது ஆலோசனையில் வெளிப்பட்டது. “பெண்களை போராட்டக்களத்தில் இருந்து வெளியேறி வீட்டுக்குப் போகச்சொல்லுங்கள்” என்று வழக்கறிஞர்கள் மூலம் போரட்டக்களத்துக்கு அவர் தூது அனுப்பினார். பஞ்சாப், ஹரியானா, உபியை சேர்ந்த பெண்விவசாயிகள் அப்போது ஆவேசம் அடைந்து முழக்கமிட்டார்கள். மேடையில் ஏறி ஒரே குரலில் “முடியாது” என்று கண்டனம் தெரிவித்தார்கள்.
ஹர்மித் கவுர் (56) சொல்வது முக்கியமானது. “சாதி, வகுப்பு, தலித், பெண், ஆண், சங்கங்கள், நிலம் உடையவர், இல்லாதவர், கல்லூரி மாணவர், இன்னும் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தத்தமது எல்லைகளைத் தாண்டி இப்போராட்டத்தில் ஒரு குவியமாக இணைந்தார்கள் – நிலமும் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆனதால்”. அவரது மூன்று நண்பர்கள் போராட்டக்களத்தில் இறந்து விட்டார்கள், நான்காவது நண்பரோ களத்தில் பலத்த காயமுற்றிருந்தார்.
அகில உலக மகளிர் தினமான 2021 மார்ச் 8 அன்று டெல்லியின் மூன்று எல்லைகளிலும் – சிங்கூ, திக்ரி, காசிப்பூர் – திரண்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைஉ தாண்டியது.
மஞ்சள் நிற துப்பட்டாக்களை அணிந்து பகத்சிங்கின் “மேரே ரங் தே பசந்தி சுனியான் மயே” என்ற புரட்சிகரப் பாடலைப் பாடியவாறே பஞ்சாப் பெண் விவசாயிகள் பல்லாயிரம் பேர் டெல்லி நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள்.
பஞ்சாபின் மான்சா மாவட்டத்துக்குள் சென்றபோது திக்ரி எல்லையில் அக்டோபர் 28,2021 அன்று விபத்தில் சிக்கி இறந்துவிட்ட மூன்று பெண்களின் புகைப்படத்துடன் கூடிய பதாகைகளைப் பார்க்க முடிந்தது. “இன்னும் எத்தனை பேர்களின் உயிரை நாங்கள் தியாகம் செய்ய வேண்டும்? தியாகிகள் விட்டுச்சென்ற கடமையை நாங்கள் முடித்து வைப்போம்” என்ற வாசகத்தை அங்கே காண முடிந்தது.
பாரதீய கிஷான் யூனியன் (யுக்ராஹன்) பெண்கள் பிரிவின் தலைவர்களில் ஒருவரான ஹரீந்தர் பிந்து படிண்டாவின் புச்சோ குர்த் கிராமத்தை சேர்ந்தவர். “ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஆன உறவில் ஏற்பட்டுள்ள மாற்றமே உண்மையில் நடந்துமுடிந்துள்ள இப்போராட்டத்தின் வெற்றியாகும். போராட்டத்தில் பெண்கள் நின்றபோது, வீட்டு வேலைகளை ஆண்கள் செய்தார்கள். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிப்பதும், ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதும்தான் நல்ல உறவுக்கு அடையாளம் என்று தெளிவாகின்றது. பெண் விவசாயிகளின் குரல் கேட்கப்படுகின்றது, அவர்களின் இருப்பு அங்கீகரிக்கப்படுகின்றது” என்றார் ஹரீந்தர்.
மேர்கு உபியின் ராம்பூர் கிராமத்தில் இருந்துவந்து களத்தில் இருந்தவர் 74 வயதான ஜஸ்பீர் கவுர். மூன்று மாதங்களாக களத்தில் இருந்தார். “பெண்களாகிய நாங்கள் போராட்டத்தில் இருந்து விலக வேண்டும் என்ற அரசாங்கத்தின் ஆலோசனை என்னையும் பிற பெண் விவசாயிகளையும் ஆவேசம் அடையவே செய்தது. நாங்கள் ஆண்களுக்கு நிகராக வயல்களில் உழைப்பவர்கள். சம பங்குதாரர்கள். இது ஆண்கள் போராட்டம் அல்ல, விவசாயிகள் போராட்டம். நாங்கள் பெண்கள் அல்லர், விவசாயிகள்” என்று தீர்க்கமாக தெரிவித்தார்.
போராட்டக்களத்தில் வித்தியாசமான காட்சிகளைக் காண முடிந்தது. வீட்டை விட்டு தெருவுக்கு வராத பெண்கள், பள்ளிக்கூட வசலை அறியாத பெண்கள், வயலும் வீடும் என்று வாழ்ந்த பெண்கள் என பல தரப்பினரும் இருந்தார்கள். முகத்தை மூடி முக்காடிட்டு வெளியே வருவதை கட்டாய வழக்கமாகக் கொண்டிருந்த பெண்கள், ஆயிரக்கணக்கான ஆண்கள் முன்னால் மேடையில் ஏறி ஒலிவாங்கியில் முழங்கினார்கள், பேசினார்கள்.”
பெண்கள் உரிமைக்குப் போராடுபவர் ஆன சுதேஷ் கோயத் என்பவர் திக்ரி எல்லை போராட்டக்களத்தில் இருந்தார். “போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்த ஒரே ஒரு பெண் நான் மட்டுமே. ஆனால் பெண்கள் வீட்டுக்குப்போகலாமே என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்த பின்னால்தான் அந்த அதிசயம் நடந்தது, தனியாகவும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பெண்கள் அணியணியாகத் திரண்டுவரத் தொடங்கினார்கள். இந்த மூன்று மாநிலங்களிலும் பாலின சமத்துவத்துக்காக நாங்கள் வெகுகாலமாகப் போராடி வருகின்றோம், பெரிய அளவில் முன்னேற்றம் இருந்ததில்லை. இப்போராட்டம் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது” என்றார் அவர்.
2021 மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம். அன்று டெல்லியின் சிங்கு, திக்ரி எல்லைகளில் சுமார் 50,000 பெண் விவசாயிகள் ஆண் விவசாயிகளுடன் போராட்டக்களத்தில் இணைந்தனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் நவ்ஷரண் கவுர் கூறினார்: இப்போராட்டக்களத்தில் பெண்களின் பங்கை நாம் கொண்டாட வேண்டும். உலகம் அவர்களைக் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றது. ‘டைம்’ பத்திரிக்கை தன் அட்டையில் பெண்விவசாயிகளைப் பதிப்பித்து மரியாதை செய்துள்ளது. பஞ்சாபில் இருந்து வந்துள்ள பெண்விவசாயிகளின் புரட்சிகர முழக்கங்கள் அவர்களுக்கே உரித்தானவை. ‘புரட்சிகர உலைக்களத்துக்கு எங்கள் குழந்தைகளைக் கொண்டு கனலை மூட்டுவோம்; விளைநிலத்துக்கு நாங்கள் பட்ட கடனைத் தீர்ப்போம்’ என்பதும் ஒரு முழக்கம்”.
ஆஷா கிஷான் ஸ்வராஜின் உறுப்பினர் கவிதா குருகண்டி கூறுகின்றார்: மகளிர் தினத்தைப்பற்றி நாம் பேசும்போது இந்திய பெண் உழைப்பாளர்களில் பெரும்பகுதியினர் வேளாண்மைத்துறையில்தான் உள்ளனர் என்பதை மறக்கக்கூடாது. சிங்கு, திக்ரி எல்லைகளில் போராடும் பெண்விவசாயிகள், பாலியல் தொந்தரவுகள், நிலமற்ற தலித் சமூகப்பெண்கள், கல்வியும் சுகாதாரமும் இன்னும் தமக்கு எட்டாத உயரத்தில் இருப்பது ஆகியன குறித்துப் பேசுகின்றார்கள்.”
நிலம், தண்ணீர், அரசுக்கடன், இன்சூரன்ஸ் ஆகியவை விவசாயிகளுக்குக் கிடைப்பது மட்டுமின்றி அவற்றைக் கட்டுப்படுத்தும் உரிமையும் விவசாயிகளுக்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சுவாமிநாதன் கமிசனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பெண் விவசாயிகள் வலியுறுத்துகின்றார்கள். இவையன்றி, மஹாராஷ்ட்ரா பீமா கோரெகான் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பெண் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்தையும் விவசாயிகள் எழுப்புகின்றார்கள்.
பஞ்சாபின் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரும் பழக்கம் இல்லாதவர்கள். இப்போராட்டம் அவர்களை வீட்டிலிருந்து வெளியே வர வைத்துள்ளது. டெல்லியின் சிங்கு, திக்ரி எல்லைகளில் அவர்கள் ஆண்களுடன் இணைந்துள்ளார்கள். மற்றவர்கள் தத்தமது கிராமங்களில் விவசாயத்தைக் கவனித்துக்கொண்டு பஞ்சாப் மாநிலமெங்கும் நடக்கும் தர்ணா உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களிலும் நேரடியாகப் பங்குபெற்று வருகின்றார்கள். போராட்டத்தின் தொடக்கத்தில் இவ்வாறு டெல்லி நோக்கி வந்த சில ஆயிரம் பெண்களில் 35 பேர் உயிரிழந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் மால்வா பகுதியை சேர்ந்தவர்கள்.
”இந்த வேளாண் மறுசீரமைப்பு சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டபோதே இது ஒரு நீண்டகாலப் போராட்டமாக இருக்கும் என்று கணித்தோம். பெண்கள் பங்கேற்பு இல்லாமல் அப்படி ஒரு போராட்டம் வெற்றி பெறாது என்பதையும் உணர்ந்து பெண்களைத் திரட்ட முடிவு செய்தோம், திட்டமிட்டோம், வெற்றி பெற்றோம். நூற்றுக்கணக்கில் பெண்கள் போராட்டக்களத்தில் குவிந்தார்கள்” என்று பாரதீய கிஷான் யூனியனின் (யுக்ரான்) தலைவர்களில் ஒருவரான ஹரீந்தர் பிந்து கூறினார்.
போராட்ட எல்லையைத் தாண்டிய புதிய வெளிச்சங்கள்:
பஞ்சாப் கிஷான் யூனியனின் மாநிலச்செயலாளர் குர்ணாம் சிங்: “இந்திய சமூகத்தில் பாலின அசமத்துவம் குறித்துப்பேசவும் விவாதிக்கவும் இப்போராட்டக்களம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. களத்தில் ஆண்கள் பெண்கள் என பல்வேறுபட்ட சமூகங்கள், பண்பாடுகள், சாதிகளை சேர்ந்தவர்கள் நெருக்கமாகவும் பல்வேறு சிரமங்களையும் சந்தித்து ஒற்றுமையுடனும் வாழ நேரிட்டது. இதை ஒரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்தி, பெண்ணுழைப்பின் மதிப்பையும் கிராமப்பொருளாதாரத்தில் அவர்களின் பங்கையும் உணர்த்தி அணிதிரட்ட களத்திலேயே அவ்வப்போது கலந்துரையாடல்கள், கூட்டங்களை நடத்தினார்கள். துபாயில் தகவல் தொழினுட்பத்துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஹர்ஷரண் கவுர் தனது வேலையைத் துறந்துவிட்டு போராட்டக்களத்தில் தன்னார்வலராகக் கலந்துகொண்டார். “இந்த இந்தியாவை நான் நேசிக்கின்றேன்” என்றார் அவர்.
மாதவிடாய். இதுபற்றிப் பேசுவதையும் கலந்துரையாடுவதையும் சமூகம் தவிர்த்தே வந்திருக்கின்றது. பெங்களூரில் இருந்து வந்திருந்த ரவ்னீத் கவுர் (29) காசிப்பூர் போராட்டக்களத்தில் இருந்தார். சட்டக்கல்வி மாணவர். பெண் போராளிகளின் உதவியுடன் மாதவிடாய் நாப்கின் கடை ஒன்றை களத்திலேயே திறந்தார் அவர். அனைவரும் பார்க்கும்விதமாக நாப்கின்களை வைத்திருந்தார். “இதன் பிறகு மாதவிடாய் பற்றியோ நாப்கின் பற்றியோ பேசுவதில் இருந்த தயக்கம் பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் உடைந்தது. இப்போது அன்றாட பேசுபொருட்களில் ஒன்றாக இந்த சப்ஜெக்ட் சாதாரணமாக மாறிவிட்டது” என்றார் அவர்.
இதுபோன்ற ஆண் பெண் பற்றிய காலங்காலமான கட்டுமானங்கள் உடைபடுவது இந்தப் போராட்டத்தையும் போராட்டக்களத்தையும் தாண்டி எதிர்காலத்திலும் செல்லுமா என்பது பேசப்பட வேண்டியதுதான்; ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: பெண் விவசாயிகள் குறித்த மரியாதை ஆண்களுக்கு ஏற்பட்டுள்ளது, அவர்களின் உணர்வுகளும் உழைப்பும் ஆண்களால் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்பது உண்மை. பஞ்சாபிலிருந்து வந்திருந்த இளம் விவசாயி சுக்தீப் சிங்கின் கருத்து இதை உறுதிப்படுத்துகின்றது. “நாங்கள் அவர்களை அம்மாக்களாக, சகோதரிகளாக, மனைவியராகத்தான் இதுவரை பார்த்து வந்துள்ளோம். இப்போது அவர்களை நாங்கள் வேறு கோணத்தில் பார்க்கின்றோம்”.
திக்ரியில் ஒரு வீதிநாடகம் நடந்து கொண்டு இருக்கின்றது. ஹரியானாவிலிருந்து வந்திருந்த சுதேஷ் கண்டேலா (55) இதற்கு முன் தன் வாழ்நாளில் ஒரு போராட்டத்திலும் கலந்துகொண்டது இல்லை, முக்கியமாக வீட்டுக்கு வெளியே தன் முகத்திரையை விலக்கியதே இல்லை. ”ஒரு பெண், ஒரு மனைவி, ஒரு தாய் என்பதை தாண்டி என்னிடம் என்ன திறமை இருக்கின்றது என்பதை இதற்கு முன் நான் உணர்ந்ததும் இல்லை, நினைத்துப் பார்த்ததும் இல்லை. இப்போது நான் போராட்டக்களத்தில் உள்ளேன். இனி யாரும் என்னை அடக்கவோ ஒடுக்கவோ முடியாது, என்னை விலைகொடுத்து வாங்கவும் முடியாது” என்றார் அவர்.
ஜமீன் ப்ராப்தி சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச்செயலாளர் பரம்ஜித் லோங்கோவால் கூறினார்: பெண்களின் பங்கேற்பு இறுதியில் கிராமப்புறங்களில் நிலவும் பாலினப்பாகுபாட்டை ஒழிப்பதில் முடியும். இந்தச் சட்டங்களினால் உடனடியாகப் பாதிக்கப்படப்போவது தலித்துக்களே. ஏனெனில் கிராமப்பொதுநிலத்தை கார்ப்பொரேட்டுக்கள் அபகரிக்க இந்த சட்டம் வழி செய்கின்றது என்பதை கிராமங்களில் பிரச்சாரம் செய்தோம். விளைவாக பல நூறு பெண்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி போராட்டக்களத்துக்கு வந்தார்கள்.
பஞ்சாப் கிஷான் யூனியனைச் சேர்ந்த பெண் தலைவர் ஜஸ்பீர் கவுர் நாட் கூறினார்: ஒவ்வொருவரும் இப்போராட்டத்தில் தமக்கான பங்கைச் செலுத்த வேண்டியிருந்தது. போராட்டக்களத்தில் பாலினப்பாகுபாடு இருந்ததில்லை. மதம், சாதி, பொருளாதார அந்தஸ்து, பாலினம் இவை அனைத்தையும் தாண்டி போராட்டக்களத்தில் நிலவிய வலிமையான ஒற்றுமைதான் அரசாங்கத்தின் பிடிவாதத்தை உலுக்கியது, மக்கள் முன் மண்டியிட வைத்தது.
72 வயதான ஜக்தீஷ் கவுர் என்ற பெண்மணியால் நடக்கவே முடியாது. 2021 ஜனவரி முதல் தேதி அன்று கிலா ராய்ப்பூரில் அதானி லாஜிஸ்டிக்ஸ் பார்க்கில் நடந்துகொண்டு இருந்த போராட்டக்களத்துக்கு வந்த அவர் சட்டங்களை அரசு திரும்பப்பெறும்வரை அங்கேயே இருந்தார். “என்னால் டெல்லிக்கு போக முடியாது. ஆனால் கிலா ராய்ப்பூரில் நடந்த போராட்டத்தில் ஒரு நாளைக் கூட நான் தவறவிட்டது இல்லை. என் நண்பர் மொஹிந்தர் கவுர் போராட்டக்களத்தில் உயிர் நீத்தார். இந்தச் சட்டங்களை அரசு திரும்பப் பெறும்வரை இங்கிருந்து நகர்வதில்லை என நான் உறுதி பூண்டேன். இதற்காக நாங்கள் மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளோம். ஆனால் எங்கள் எதிர்காலத்தலைமுறை இப்போராட்டத்தை நினைவில் நிறுத்தும், அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்று நம்புகின்றோம்” என்றார் ஜக்தீஷ் கவுர்.
அடக்குமுறையை உடைத்து நொறுக்கிய பெண் விவசாயிகள்:
குறிப்பாக குடியுரிமை திருத்தச்சட்டம், வேளாண் மறுசீரமைப்பு சட்டங்கள் ஆகியனதான் நாடளாவிய மக்கள் எழுச்சியை தூண்ட குறிப்பிடத்தக்க காரணமாய் இருந்தன. குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக டெல்லியின் ஷாஹீன்பாக்கிலும் நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த வலிமைமிக்க போராட்டங்களும் ஒரு வருட காலம் நீடித்து தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள விவசாயிகள் போராட்டமும் விடுதலை பெற்ற இந்தியாவின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை. பாரம்பரிய ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட இந்திய சமூகத்தில், பெண்ணடிமைத்தனம் என்ற பெருந்தீங்கால் தலைமுறை தலைமுறைகளாக பாதிக்கப்பட்டு இருக்கின்றோம் என்று தெரியாமலேயே வாழ்ந்து தேய்ந்து மடியும் பெண்கள் சமூகம் அடங்கிய இந்திய சமூகத்தில்தான் இந்த இரண்டு போராட்டங்களிலும் பெண்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு களத்தில் நின்று போராடினார்கள் என்பதை வரலாறு பதிவு செய்கின்றது. கார்பொரேட் பெருமுதலாளிகளுக்கு மட்டுமே நண்பனாக இருக்கின்ற வலதுசாரி இந்துதுவா பி ஜே பி அரசின் சர்வாதிகார அட்க்குமுறைகளை தனது முன்னுதாரணம் அற்ற ஒற்றுமைமிக்க வலிமைமிகு போராட்டத்தின் மூலம் இந்திய பெண் விவசாயிகள் உடைத்து நொறுக்கியுள்ளார்கள்.
“நாங்கள் பெண்கள் அல்லர், விவசாயிகள், போராளிகள்” என்ற உறுதியுடன் ஒரு வருடம் தொடர்ச்சியாக நடந்த வீரமிக்க போராட்டத்தில் பெண் விவசாயிகள் களத்தில் நின்று போராடியதை ஒட்டுமொத்த இந்திய சமூகமும் சர்வதேச சமூகமும் கண்டன. அவர்களில் இளம்பெண்கள் தொடங்கி வயதுமுதிர்ந்த பாட்டிகள் வரை இருந்தார்கள். பாலின அசமத்துவத்தை உடைத்தார்கள். போராட்டக்களம் ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானது, பெண்களால் போராடவோ தொடர்போராட்டக்களத்தில் நிற்கவோ முடியாது என்ற பிரம்மையை தகர்த்தார்கள். ஒரு முழு வருடத்தின் அனைத்து சாதகபாதகமான தட்பவெப்ப நிலைகளையும் இயற்கையின் இடர்ப்பாடுகளையும் மட்டுமின்றி பெண்பாலினத்துக்கே உரித்தான பல உடலியல் சார்ந்த தொந்தரவுகளையும் எதிர்கொண்டு சாதித்தார்கள். கடுங்குளிர், கொடும் வெயில், கொட்டும் பனி, நோய்கள், குறிப்பாக கொரொனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலை பல்லாயிரம் மக்களின் உயிர்களை பலிகொண்ட நாட்களில் அதனையும் அச்சமின்றி எதிர்கொண்டார்கள். இயற்கையால் உண்டானதும் அதிகார வர்க்கத்தால் உருவாக்கப்பட்டதும் ஆன அனைத்துவிதமான தடைகளையும் உடைத்து தம் வலிமையை போராளிகள் என்ற அடிப்படையில் களத்தில் நிரூபித்தார்கள்.
பெண்விவசாயிகள் களத்தில் நின்று முழக்கமிட்டார்கள், ஆவேசமிக்க உரைகளை நிகழ்த்தினார்கள், பேரணிகளை நடத்தினார்கள், பல் நூறு கிராமங்களுக்கு குழுவாகச் சென்று பிரச்சார செய்தார்கள், ஆண்களுடன் சேர்ந்து பொதுச்சமையலறைகளை நிறுவி நிர்வகித்தார்கள், களத்தில் உயிர்நீத்த சக பெண் தோழர்களின் இறுதி ஊர்வலங்களில் கலந்து கொண்டார்கள். “ஆண்களுடன் சமமாக வயல்களில் எங்களால் உழைக்க முடியும் எனில், ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் எங்களால் நிர்வாகம் செய்யமுடியும் எனில் போராட்டத்தில், போராட்டக்களத்தில் எங்களால் நிற்க முடியாதா? நாங்கள் பெண்கள் அல்ல, விவசாயிகள்” என்று திக்ரி எல்லையில் போராடிய ஹர்மாயிர் கவுர் (70) கூறினார்.
ஜனநாயக கோட்பாடுகளை மதிக்காதது, சர்வாதிகார மனப்போக்கு, மக்களிடமிருந்து வெகுதூரம் விலகி நிற்பது, பெரும் கார்பொரேட் முதலாளிகளுக்கு நெருக்கமாகவும் ஆதரவாகவும் இருப்பது – இவை மட்டுமே ஏழு வருட வலதுசாரி இந்துத்துவா பிஜேபி மோடி அரசின் சாதனைகளாக இருப்பவை. மக்கள் ஒற்றுமையாய் இருந்தால் அரசின் சர்வாதிகாரப்போக்கை, கருப்புச்சட்டங்களை உடைத்து எறிய முடியும், இதில் ஆண் பெண் என்ற பாலின வேற்றுமைக்கு இடமில்லை என்று ஆண்களும் பெண்களும் கைகோர்த்து நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் நிரூபித்துக்காட்டியுள்ளது.
********************
தகவல்கள் பல்வேறு செய்தித்தாட்கள், இணைய இதழ்களில் இருந்து திரட்டியவை.