ஏறத்தாழ
180 கிலோமீட்டர் தூரம் அவர்கள் நடந்தார்கள்; அவர்களில் 80 வயதைத்தொடுகின்ற
முதியவர்கள், வயது முதிர்ந்த பெண்கள், வாலிபர்கள், குழந்தைகள் எனப் பலரும்
இருந்தார்கள். அனைவரும் விவசாயிகள், விவசாயக்குடும்பங்களை சேர்ந்தவர்கள். பாரதீய
ஜனதாக் கட்சி + சிவசேனா ஆளும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாசிக் நகரில் மார்ச் 7
அன்று சுமார் 10,000 விவசாயிகளுடன் தொடங்கியது இந்த நடைப்பயணம்.
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அரங்கமான அகில இந்திய விவசாயிகள் சபையால் (AIKS)
நடத்தப்பட்டதே இந்த நெடும்பயணம். தலைநகர் மும்பையில் உள்ள சட்டசபையை
முற்றுகையிடும் நோக்கில் நாசிக் நகரில் இப்போராட்டப்பயணம் தொடங்கப்பட்டபோது 10,000
விவசாயிகள் செம்பதாகைகளுடன் அணிதிரண்டார்கள் எனவும், பயணத்தின் வழியில் மேலும்
30,000 விவசாயிகள் இணைந்து கொண்டார்கள் எனவும் இணையத்திலும் வெகுசில ஆங்கில
நாளிதழ்களிலும் தகவல்கள் சொல்கின்றன.
இவர்களில்
பெரும்பாலோர் தமது கால்களில் செருப்புக்கூட அணியாமல் நடந்தார்கள்; வெயில் சில
நாட்களில் 38 டிகிரி செல்சியஸை தொட்டது. வழியில் தமக்கான எளிய உணவை தாமே சமைத்துக்கொண்டார்கள்.
இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாழும் பொருட்டு தம்மைத்தாமே வருத்திக்கொண்டு
தமது நியாயமான கோரிக்கைகளை முழக்கமாக எழுப்பிக்கொண்டு தங்களைத்தாங்களே
உற்சாகப்படுத்திக்கொண்டு நடந்தார்கள்.
இரவு நேரத்தில் பயணம் எங்கே முடிகின்றதோ அங்கேயே படுத்து உறங்கினார்கள்.
உழைப்பவன் தனது களைப்பை மறப்பதற்காக காலங்காலமாக பயின்று வரும் தமக்கான பாடல்களைப்
பாடியும் நடனம் ஆடியும் தமது அன்றையை களைப்பைப் போக்கிக்கொண்டார்கள். பொழுது புலரும்போது உறக்கம் கலைந்து மீண்டும்
நடந்தார்கள்.
இதுபோன்ற
போராட்டங்களை பொதுவாக வெறுப்புடன் நோக்குகின்ற நகரவாசிகள் இம்முறை தமது
அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்கள். தானே
மாவட்டத்தின் ஷாகாபூரில் பேரணி நுழைந்தபோது அந்த ஊர் மக்கள் விவசாயிகளை வரவேற்று
சிற்றுண்டியும் குடிநீரும் வழங்கினார்கள். மார்ச் 10 அன்று மும்பையின்
எல்லையைத்தொட்டபோது ஊர் மக்கள் வழிநெடுகிலும்
திரண்டு நின்று வரவேற்று
சிற்றுண்டியும் குடிநீரும் வழங்கியதோடு வேறு பல உதவிகளையும் செய்தார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. மார்ச் 11 அன்று விக்ரோலியை அடைந்தபோது ஊர் மக்கள்
விவசாயிகளின் பாதையில் மலர்தூவி வரவேற்று நீர் வழங்கி தமது ஆதரவைத்தெரிவித்தார்கள்.
அருகில் உள்ள சீக்கிய குருத்வாராவில் உள்ள சகோதரர்கள் தம்மால் இயன்ற உணவுவகைகளை
சமைத்து வழங்கினார்கள். ஊர்வலம் மார்ச் 12 அன்று மேக்சிமம் சிட்டியை
வந்தடைந்தபின்னும் மக்களின் ஆதரவு தொடர்ந்தது. குறிப்பாக மும்பையின் புகழ்பெற்ற
டப்பாவாலாக்கள் அணிதிரண்டு திட்டமிட்டு மும்பை மக்களிடம் இருந்து ரொட்டிகளைப்
பெற்று விவசாயிகளுக்கு வழங்கி அவர்களின் பசியாற்றினார்கள்.
எதன்
பொருட்டு இந்த 180 கி.மீ. பயணம்? விவசாயிகளின் தேசம் என்று சொல்லப்படும்
இத்தேசத்தில்தான் விவசாயிகள் விசம் அருந்தி காலங்காலமாகப் பாடுபட்ட தமது நிலத்திலேயே
மாய்ந்து உயிரை விடுகின்றார்கள். விவசாயம் செய்யும் பொருட்டு அரசிடம் கடன் பெறுவது
என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. அவ்வாறே கடன் பெற்றாலும் மழைபொய்த்துப்போன
பின்னால், கிணறுகள் வறண்டபின்னால் அக்கடனைக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாத நிலையில்,
வங்கி அதிகாரிகளின் ஏஜெண்டுகள் வீட்டுவாசலில் வந்து கேவலமாகப் பேசி கடனை
திரும்பக்கேட்டு மிரட்டும்போது அக்கடனையும் திருப்பிச்செலுத்தமுடியாத நிலையில் தற்கொலை
செய்துகொள்வது தேசமெங்கும் மிகச்சாதாரணமான அன்றாட நிகழ்வாகி உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள விதர்ப்பா மாவட்டமே
விவசாயிகளின் தற்கொலைக்கு தலைநகரமாக ‘ஒளிர்கின்றது’. இதன்றி கார்ப்பொரேட்டுக்களின் நலன்பொருட்டு விவசாய
நிலங்கள் அதிரடியாக கைப்பற்றப்பட்டு தங்கநாற்கரச்சாலை, ஆறுவழிச்சாலை, எக்ஸ்பிரஸ்
நெடுஞ்சாலை என்ற பெயர்களில் விவசாயமும் விவசாயியும் அழிக்கப்படுகின்றனர். சென்ற
ஆண்டில் மட்டும் பிஜேபி சிவசேனா கூட்டணி ஆளும் இம்மாநிலத்தில் 2,000க்கும் அதிகமான
விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.
கடும் வறட்சி அல்லது கடும்மழை, விளைபொருட்களுக்கான விலையை ஏஜெண்டுகளும்
பெருமுதலாளிகளும் நிர்ணயம் செய்யும் வித்தையால் இட்ட முதலையும் எடுக்க இயலாத கெடுநிலை,
அரசால் கைவிடப்பட்ட கையறுநிலை, வங்கிகளில் கடன்பெறுவதற்கு ஆயிரம் நிபந்தனைகள்,
கடன் பெற்றாலும் மேலே சொல்லப்பட்ட பல காரணங்களால் கடனைத் திருப்பிச்செலுத்த
முடியாத அவலம் என விவசாயிகள் இந்திய தேசமெங்கும் சந்திக்கின்ற பிரச்னைகள் தீரும்
நாள் அண்மையில் இல்லை.
சாமானிய
மக்களை ஒருசில லட்சங்கள் பெறுமானமான கல்விக்கடனுக்கும் விவசாயக்கடனுக்கும்
மிகக்கேவலமாக நடத்தும் அதிகார வர்க்கம், கேவலம் ஒரு ஆதார் கார்டு இல்லையேல்
மலத்தில் உழலும் புழுவுக்கும் கீழாக சாமானிய மக்களை கேவலமாக விரட்டியடிக்கும் அதிகாரவர்க்கம்,
பல்லாயிரம்கோடிகளை அதாவது மக்கள்பணத்தை விஜய்மல்லையா, நீரவ்மோடி போன்ற
பெருமுதலாளிகளுக்கு கடன் என்ற பெயரில் வாரிக்கொடுக்கின்றது; பின்னர் ஒருநாள்
இவர்கள் அரசாங்கத்தின் துணையுடன் வெளிநாடுகளுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்
படுகின்றார்கள் (ஊடகங்களில் இதை ’தப்பிச்செல்கின்றார்கள்’ என செய்திவாசித்து நம்மை
நம்பச்சொல்கின்றார்கள்).
தாங்கள்
வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன்
கமிட்டி பரிந்துரைகளைகளில் முக்கியமானதாக கருதப்படும் விளைபொருட்களுக்கான
குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price) (அதாவது உற்பத்திக்கான செலவு +
அதில் 50%) நிர்ணயிக்க வேண்டும், மழையாலும் பூச்சிகளாலும் விவசாயம்
பாதிக்கப்படும்போது ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 நட்டஈடு தர வேண்டும், விவசாய
நிலங்களையும், மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்திவரும் காடுகளையும் பறித்து விவசாயம்
அல்லாத பிற பயன்பாட்டுக்காக கார்பொரேட்டுக்களுக்கு வழங்குவதை தடுக்க வேண்டும்,
காடுகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அனுமதிக்க வேண்டும் ஆகிய பரிந்துரைகளை அரசு
உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவை
விவசாயிகள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளில் தலையாயன. இவற்றில் எதுவும் புதிதான கோரிக்கை அல்ல என்பதை
சொல்லவேண்டியதில்லை.
சியோனில்
இருந்து ஊர்வலமாகச்சென்று மாநிலசட்டமன்றத்தை மார்ச் 12 அன்று முற்றுகையிடுவதுதான்
திட்டம். ஆனால் பள்ளித்தேர்வுகள் நடப்பதை கணக்கில்கொண்டு பகலில் தங்கள்
போராட்டத்தை தள்ளிவைத்தார்கள், ஆனால் இரவில் ஊர்வலமாக சென்று ஆசாத் மைதானத்தில்
அமர்ந்தார்கள். விவசாயிகளின் இந்த அணுகுமுறையை மும்பை நகரமக்கள் பாராட்டினார்கள்.
விவசாயிகளின்
வாழ்க்கையையும் அவர்களது பிரச்னைகளையும் தொடர்ந்து கவனித்து எழுதிவரும்
பீ.சாய்நாத் கூறுவது: ‘தங்களது தொழிலை ஒருநாள் தியாகம் செய்தாலும் அதனால் விளையும்
நட்டம் மிகப்பெரியது என்பதை விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும் நன்கு
அறிவார்கள். அவ்வாறிருக்க ஏழு நாட்கள் இவர்கள் தமது தொழிலை தியாகம்
செய்துள்ளார்கள்; இவர்களையே நம்பியிருக்கின்ற நிலத்தை மட்டுமின்றி கால்நடைகளையும் ஒரு வாரம் கவனிக்காமல் விட்டு
நெடும்பயணத்தில் பங்குபெற்றுள்ளார்கள். இவர்கள் தத்தமது ஊர்களுக்கு
திரும்பிச்சென்றபின்னாலும் எதிர்வருகின்ற பல நாட்களுக்கு பட்டினிகிடக்க
வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் அவர்கள் இந்த நடைப்பயணத்தில் தங்களை
ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்கள். தேர்வு
எழுதச்செல்லும் மாணவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக மும்பை நகருக்குள்
தங்களது பயணத்தை பகலில் நடத்தாமல் இரவுவேளையில் நடத்தியுள்ளார்கள். தமிழக
விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 41 நாட்கள் நடத்திய போராட்டத்தை அரசு எப்படி
அணுகியது, ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொண்டன என்பது வருத்தத்திற்குரியது.”
இறுதியாக
தாங்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த விவசாயிகள், அரசு பல
கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தபோது எழுத்துவடிவில் அதனை
ஒப்பந்தமாக்கியுள்ளார்கள்.
இதேபோன்றதொரு
நெடும்பயணத்தை மீண்டும் இந்த மாதம் 19 அன்று தொடங்க உள்ளதாக அகில இந்திய
விவசாயிகள் சபை சொல்கின்றது. அதன் ஒரு கட்டமாக ஏப்ரல் 30 அன்று ’சிறையை நிரப்பும்’
போராட்டத்தையும் நடத்த உள்ளார்கள்.
மூணாறில்
பெண்கள் திரண்டு தலைமையேற்று நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க தேயிலைத்தோட்டத்தொழிலாளர் போராட்டம், தொழிலாளர்
வருங்காலவைப்பு நிதியை தொழிலாளர்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில்தான் மீட்டு
எடுத்துக் கொள்ளமுடியும் என்ற மோடி அரசின் உத்தரவுக்கு எதிராக பெங்களூருவில்
அன்றாடக் கூலித்தொழிலாளர்கள் தெருக்களில்
திரண்டு நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு நாட்கள் போராட்டம் ஆகிய செய்திகள்
தாங்கள் நடத்தும் டிவி சானல்களிலும்
செய்தித்தாட்களிலும் இடம்பெற்று விடாமல் பெருமுதலாளிகள் எப்படி திட்டமிட்டு
மறைத்தார்களோ அதேபோல் விவசாயிகள் நடத்திய வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த
நெடும்பயணத்தையும் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள். அநீதிக்கும் கொடுமைக்கும்
எதிரான சாமானிய மக்களின் எதிர்ப்புக்குரலும் போராட்டங்களும் பல நூற்றாண்டுகள் வயதானவை,
தொடர்ந்து உரமேறி கூர்மையடைந்து கொண்டே வருபவை என்பதை வரலாறு உரத்த குரலில்
எப்போதும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றது. சாமானிய மக்களின் போராட்டங்கள் டிவி
சானல்களையும் பத்திரிக்கைகளையும் நம்பி நடப்பதும் இல்லை, சாமானிய மக்களின்
போராட்டங்கள் ஏழு மணி சீரியல் நாடகங்களும் இல்லை.