1) எழுத்துடனும் புத்தகங்களுடன் ஆன உறவுக்காக எந்த ஒரு குழந்தையும் காத்திருப்பதில்லை.
பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படும் அந்த நாளுக்காகவோ ஆசிரியரால் அ...அம்மா... என்று
வாய்விட்டுச்சொல்லிப் பழக்கப்படுத்தப்படும், வானத்தில் மின்னல் வெட்டி
இடிஇடிக்கும் தெய்வாம்சம் பொருந்திய சுபகணத்திற்காகவோ காத்திருப்பதில்லை. கையில் அகப்படும் எந்த ஒரு தாளையும்
புத்தகத்தையும் தாறுமாறாகக் கிழிக்கும்போது எழும் சத்தத்தில் சந்தோசம் காணும்
நொடியிலேயே எழுத்துடனும் புத்தகங்களுடனும் ஆன உறவு ஒவ்வொரு குழந்தைக்கும் தொடங்கி
விடுகின்றது எனலாம். வளர்ந்தவர்கள் படிச்சுக்கிழிக்கிறார்கள் எனில் குழந்தைகள்
பல்வேறுதரப்பட்ட புத்தகங்களையும் படிக்காமலேயே கிழித்துவிடுகின்றார்கள்; ஆக
இருவருமே இறுதியில் கிழிக்கத்தான் போகின்றார்கள் எனும்போது வளர்ந்தவர்கள்
படிக்கிறேன் பேர்வழி என்று தேவையில்லாமல் நேரத்தை செலவு செய்து படித்ததெல்லாம் வீணோ
என்று தோன்றுகின்றது. வாசிக்கிறவர்கள் புத்தகத்தை கிழிக்கிறார்கள் எனில்
எழுதியவர்கள் விமர்சகர்களிடம் கிழிபட்டு நார்நாராக தொங்குகின்றார்கள் என்பது
தனிக்கதை. நிற்க.
2) நமது சமூக அமைப்பில் பொதுவாக ‘படிப்பது’ என்பது ஃபர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்து பொருளாதார ரீதியாக பாதுகாப்புத்தரும் ஒரு உத்தியோகத்தை அடையும் அல்லது அமெரிக்க விசா பெற்று ஸ்டேட்ஸில் செட்டில் ஆகும் ஒற்றை இலக்குக்கான ஒருவழிப்பாதையாக, வணிகம் சார்ந்த ஒரு சொல்லாடலாய் இருக்கின்றது. அவ்வாறெனில் அப்படியான ஒரு பாதுகாப்பான உத்தியோகத்தில் அமர்ந்த பின்னர், அதாவது இலக்கை எட்டிய பின்னர் ‘படிப்பது’ என்பது அவசியமற்ற ஒன்றாகிவிடுகின்றது. கடந்த 70 வருடங்களில் இதுகாறும் நம்மை ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கின்ற அரசுகள் நேரடியாக இல்லாவிடினும் ‘ஒரு பத்துப்பேராவது புரிஞ்சிக்கிடுவான்’ என்ற நப்பாசையில் பூடகமாவது பள்ளி+கல்லூரிப்பாடத்திட்டங்களில் சம்பாதிப்பதற்கான வழியைக்காட்டுவதற்கும் அப்பால் என்னத்தையாவது செருகி வைத்துள்ளனவா என்று தேடிப்பார்ப்பது மூடநம்பிக்கையில் சேரும். செருகி வைக்காவிட்டாலும் பரவாயில்லை, இருக்கின்ற வரலாற்றையாவது, அதாவது மிக எளிய முறையில் சொன்னால் ’குற்றம் நடந்தது என்ன?’ பாணியில் நடந்த கதையையாவது அப்படியே அச்சடிச்சு போடுகிறார்களா என்றால் அப்படியும் இல்லை.
2) நமது சமூக அமைப்பில் பொதுவாக ‘படிப்பது’ என்பது ஃபர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்து பொருளாதார ரீதியாக பாதுகாப்புத்தரும் ஒரு உத்தியோகத்தை அடையும் அல்லது அமெரிக்க விசா பெற்று ஸ்டேட்ஸில் செட்டில் ஆகும் ஒற்றை இலக்குக்கான ஒருவழிப்பாதையாக, வணிகம் சார்ந்த ஒரு சொல்லாடலாய் இருக்கின்றது. அவ்வாறெனில் அப்படியான ஒரு பாதுகாப்பான உத்தியோகத்தில் அமர்ந்த பின்னர், அதாவது இலக்கை எட்டிய பின்னர் ‘படிப்பது’ என்பது அவசியமற்ற ஒன்றாகிவிடுகின்றது. கடந்த 70 வருடங்களில் இதுகாறும் நம்மை ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கின்ற அரசுகள் நேரடியாக இல்லாவிடினும் ‘ஒரு பத்துப்பேராவது புரிஞ்சிக்கிடுவான்’ என்ற நப்பாசையில் பூடகமாவது பள்ளி+கல்லூரிப்பாடத்திட்டங்களில் சம்பாதிப்பதற்கான வழியைக்காட்டுவதற்கும் அப்பால் என்னத்தையாவது செருகி வைத்துள்ளனவா என்று தேடிப்பார்ப்பது மூடநம்பிக்கையில் சேரும். செருகி வைக்காவிட்டாலும் பரவாயில்லை, இருக்கின்ற வரலாற்றையாவது, அதாவது மிக எளிய முறையில் சொன்னால் ’குற்றம் நடந்தது என்ன?’ பாணியில் நடந்த கதையையாவது அப்படியே அச்சடிச்சு போடுகிறார்களா என்றால் அப்படியும் இல்லை.
3) தென்னாப்பிரிக்காவுக்கு 1893இல் வக்கீல் தொழில் செய்ய சென்ற காந்தியை
ரயில்பெட்டியில் வெள்ளை அதிகாரி கன்னத்தில் அடித்து பெட்டியை தூக்கி பிளாட்பாரத்தில்
எறிந்ததையும் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல் அவருக்கு புதிய சிந்தனைகளைத் தூண்டியதையும்
மீண்டும் அவர் 1914இல் இந்தியாவுக்கு
வந்து காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து நாட்டுவிடுதலையில் தலையாயப் பங்காற்றியதையும்
தேதி மாறாமல் அச்சிட்டு விநியோகிக்கும் நமது சர்க்கார், 1948 ஜனவரி 30 அன்று கொடியவன்
ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று படம் முடியும் முன்பே ரீல் அறுந்து ’வணக்கம்’ போட்ட திரைப்படம் மாதிரி திடீரென நம்மை
சப்ஜெக்ட்டில் இருந்து வெளியேற்றுகின்றது. இப்போதெல்லாம் 1948 ஜனவரி 30 அன்று
இறந்துபோனதாக சொல்கின்றார்கள்; செரிமானக்கோளாறு காரணமாகவோ காலில் தூதுவளைமுள் குத்தியதாலோ
காந்தி இறந்திருப்பார் என்று இப்போதே நம்
பிள்ளைகள் பேசிக்கொள்ளும் அளவிற்கு நமது ஆட்சியாளர்கள் பாடத்திட்டங்களை
திட்டமிட்டு துல்லியமாக தயாரிக்கின்றார்கள். உண்மையில் விடுதலைபெற்ற இந்தியாவின் எதிர்கால
சமூக அமைதியின் சீரழிவிற்கான அஸ்திவாரத்தையே நாதுராம் கோட்சேவின் துப்பாக்கியில்
இருந்து வெளிப்பட்ட தோட்டாக்களின் மூலம் அன்றைய தினம் வலதுசாரி இந்துதுவா தீவிரவாத
ஆர் எஸ் எஸ் இயக்கம் பலமாக போட்டதில் அவர்களுக்கேயான எதிர்கால இந்தியாவுக்கான
அஜெண்டா இருந்தது; இதனையும், நவீனகால இந்தியாவின் சமூக-பொருளாதார வரலாற்றின்
அடுத்த அத்தியாயத்தின் முதற்பக்கம் அன்றையதினம்தான் எழுதப்பட்டது என்பதையும் அம்பலப்படுத்தி
அன்றைய-இன்றைய-எதிர்கால இந்திய சமூகத்தின் மனத்தில் அழுத்தமாகப் பதிய வைத்திருக்க
வேண்டிய, காந்தியை தன் கட்சிக்காரராக மட்டுமே இந்தியமக்கள் சுருக்கிப்பார்க்க
வேண்டும் என்பதற்காகவே காலம் பூராவும் பெரும் பிரயாசையுடன் பாடுபட்ட, 1947க்குப்பின் பெரும்பான்மையான காலத்தில்
மையத்தில் ஆட்சியதிகாரம் செலுத்திய காங்கிரஸ் கட்சியும் அதனைச் செய்யாமல்
திட்டமிட்டு நழுவியதற்கும் தவறியதற்கும் காரணம் அவர்களுக்கான அஜெண்டா என்று ஒன்று
இருந்தது.
4) எதிரெதிர்முனைகளில் இருப்பதாகச் தோன்றும்
இந்த இரண்டு தரப்புக்களுக்கும் பொதுவான
ஒரு அஜெண்டா இருந்தது: விடுதலை பெற்ற இந்தியாவின் இயற்கை வளங்களையும், சாமானிய
உழைக்கும் மக்களின் கடந்த பல நூற்றாண்டுகால - எதிர்கால உழைப்பின் பயனாய் உயர்ந்து
நிற்கப்போகும் இத்தேசத்தின் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை அதே சாமானிய உழைக்கும்
மக்கள் அனுபவித்துவிடக்கூடாது, அந்த பலன்கள் யாவும் சில பத்திருபது
பெருமுதலாளிகளின் கல்லாக்களில் மட்டுமே நிரம்பி வழிய வேண்டும், இதன் பொருட்டு ஆட்சியதிகாரத்தை
கைப்பற்றுவதற்கான எல்லாவிதமான தகிடுதத்த மோசடிவேலைகளையும் தயக்கமின்றி செய்துகொண்டே
இருக்க வேண்டும். இதன்பொருட்டு 1947 ஆகஸ்ட்டுக்கு முன்பான இத்தேசத்தின் பல நூறு
வருடகால சாமானிய உழைக்கும் மக்களின்
குருதிதோய்ந்த போராட்ட வரலாற்றையும், அவர்தம் போராட்டங்களுக்கு தலைமையேற்றும்
அம்மக்களோடு பிணைந்து நின்றும் வழிநடத்திய தியாகச்செம்மல்களின் போராட்ட
வரலாற்றையும் மறைப்பது, திரிப்பது, பின்னர் பொய்களையே வரலாறென எழுதி
எதிர்காலச்சந்ததிகளை ஏமாற்றுவது. இந்த இலக்குகளை எட்டுவதற்கான பாதையில் குறுக்கே
வரும் எந்த ஒரு தடையையும் அதாவது உழைக்கும் மக்களின் எதிர்ப்பையும்
போராட்டங்களையும் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் ஏவி தயவுதாட்சண்யம் இன்றி ஒடுக்கி
நசுக்கிவிடுவது மிக முக்கியம், ஏனெனில் வரலாறு மிக மிக முக்கியம்.
சம்பாதிப்பதற்கான வழியைக்காட்டுவதற்கும் அப்பால் கடந்த 70 வருடங்களில் நமது பள்ளி+கல்லூரிப்
பாடத்திட்டங்களில் ஒரு மண்ணும் இல்லாமல் இருப்பது என்பது தற்செயலான ஒன்று அல்ல
என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஆகப்பெரும் பிரயத்தனம் எதுவும் தேவையில்லை.
5) அவ்வாறெனில் இத்தேசத்தின் வரலாற்றை மட்டுமின்றி பெருமுதலாளிகளின் நலன்
பொருட்டு மட்டுமே ஆட்சியதிகாரம் செலுத்தப்படும் எந்த ஒரு தேசத்தின் வரலாற்றையும் (தேசவரலாறு
என்பது உண்மையில் எந்த ஒரு தேசத்தினதும் உழைக்கும் மக்களின் போராட்ட வரலாறு அன்றி
வேறில்லை; சற்றே விரித்தால் ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான, தமது
நியாயமான உரிமைகளுக்கான போராட்ட வரலாறு என்பதே) பள்ளி+கல்லூரிப் பாடத்திட்டங்களில்
கண்டறிய முடியாது என்பதும் இவற்றுக்கு அப்பால் அதாவது பள்ளி+கல்லூரிகளின்
காம்பவுண்டு சுவர்களுக்கு வெளியே மட்டுமேதான் கண்டறிய முடியும் என்பதும் தெளிவு. அப்படியெனில்
‘படிப்பது’ ‘வாசிப்பது’ என்பதுதான்
என்ன? எதைப் படிப்பது? எவ்வாறு படிப்பது? காலத்தை செலவு செய்து எதற்காகப்
படிப்பது? படிப்பதற்கான சாத்தியங்கள் அனைவருக்கும் வாய்த்து விடுகின்றதா?
வாய்க்கின்றதெனில் ஒரே சம கன பரிமாணத்திலான வாய்ப்பே அனைவருக்கும் கிட்டுகின்றதா?
6) தொடக்கத்தில் சொன்னபடி எழுத்துடனும் புத்தகங்களுடன் ஆன உறவுக்காக எந்த
ஒரு குழந்தையும் காத்திருப்பதில்லை. அதே போல் எழுத்தும் புத்தகங்களும் எல்லாக் குழந்தைகளுக்காகவும்
காத்திருப்பதில்லை. தாயின் கர்ப்பத்தில்
இருக்கும்போதே கதைகேட்பதில் இருந்து குழந்தைகளின் கற்பனாசக்தி தொடங்குவதாகவும் விரிவடைவதாகவும் பொதுவாக சொல்லப்படுகின்றது. எல்லாத்
தாய்மார்களுக்கும் தமது குழந்தைகளுக்கு சொல்வதற்கான கதைகளை வேறெங்கோ கேட்டு பொத்திப்
பாதுகாக்கவும் அல்லது தனது சொந்தக் கற்பனையில் அத்தகு கதைகளை ‘எழுதி’ப்பார்த்திடவும், அப்படியான கதைகளை தத்தம் குழந்தைகளுக்கு சொல்வதற்கும் ஆன சாத்தியமும்
நேரமும் வாய்க்கின்றதா? ஊர் எழும்பும் முன் தான் எழுந்து தோள்களில் தன்
உயரத்தையும் விட அதிக உயரமான சாக்குப்பைகளை சுமந்தவாறே நேற்றைய இரவில் மதுஅருந்தியவர்கள் வீசிச்சென்ற
காலி புட்டிகளையும் ப்ளாஸ்டிக் தண்ணீர் கேன்களையும் சேகரிக்கும் பொருட்டு வழக்கமான
காலி மைதானங்களை தேடிச் செல்கின்ற குழந்தைகளுக்கும் தத்தமது தாயின் மடியில்
புதைந்து ஒற்றைக்கண் மந்திரவாதி தொடங்கி ஏழுகடல் ஏழுமலை தாண்டி ஒரு குகையில்
தவமிருக்கின்ற, தனது உயிரை ரகசியமாய் தொடையில்
மறைத்து வைத்திருக்கின்ற அரக்கன் வரையிலான கதைகளைக் கேட்பதற்கான சாத்தியமும் நேரமும்
வாய்த்திருக்கின்றதா? மேரியின் லிட்டில் லாம்ப் இவர்களைப் பொருத்தவரை சேகரித்த
சில்லரைகளை வீசியெறிந்தால் சாயங்காலவேளை சால்னா கடைகளில் ஒருவேளை சாத்தியப்படலாம்.
பிணவறையில் உடல்களைக்கூறு போடுகின்ற ஒரு தொழிலாளியின் குழந்தை, தனது விளையாட்டுக்
கருவிகளாக களிமண்ணால் ஆன பிணங்களின்
பொம்மைகளையும் கூறு போடுவதற்கான ஆயுதங்களையும் செய்து விளையாடுவதாக ஆதவன்
தீட்சண்யா எழுதியிருப்பார். நகரங்களின் பிளாட்பாரங்களில் வாழ்க்கையை தள்ளுகின்ற, அன்றாட
வயிற்றுப்பாட்டுக்கான பொழைப்பே பெரும்பாடாக இருக்கின்ற சாமானியர்களின் குழந்தைகளின்
கனவில் என்ன அல்லது யார் வரு(ம்)வார்? கொடூரமான மீசையுடன் பெருத்த தொந்தியுடன்
கையில் இருக்கின்ற லத்தியைக்கொண்டு ப்ளாட்பாரங்களில் தூங்குகின்ற பெண்களை
நடுஜாமத்தில் வந்து தட்டும் போலீஸ்காரன் இவர்களின் கனவில் வரலாம்; ஒரு கதை சொல்லு
என்றால் ‘ஒரு ஊர்ல ஒரு போலீஸ்காரன் இருந்தான்...’ என்று
இக்குழந்தைகள் ஆரம்பிக்கலாம். அல்லது ‘ஒருத்தன் ரோட்டை க்ராஸ் பண்ணானா, வேகமா ஒரு
பஸ் வந்துச்சா...’ என்று ஆரம்பிக்கலாம். ’உங்களுக்கெல்லாம் ’அந்த’ வேலைக்குன்னே பீச்சாங்கை இருக்கு; சோத்தாங்கையில அந்த வேலையை செய்ய
மாட்டீங்க; எங்களுக்கெல்லாம் ரெண்டு கையுமே பீ அள்ற கைதான், சோத்த நாங்க எந்தக்
கையில் சாப்பிடறது?’ என்ற துப்புரவுத்தொழிலாளியின் கேள்விக்கு இந்த
சமூகத்தில் இதுவரையிலும் பதில் இல்லாதது போலவே இது போன்ற குழந்தைகளுக்கான கதைகளுக்கும்
பதில் இல்லை. புத்தகக்கண்காட்சிகளில் பலவண்ணங்களுடன் வளவளப்பான தாள்களில்
அச்சிடப்பட்ட 100 ரூபாய்க்கும் அதிகமான குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்களுக்கு நல்ல
வரவேற்பு என்றும் அதிக அளவில் விற்பனையாகும் நூல்களில் இவையும் அடங்கும் என்றும்
சொல்கின்றார்கள். ப்ளாட்பாரவாசிகளின் குழந்தைகளுக்கும் கழிவுப்பொருட்களை
சேகரிக்கும் குழந்தைகளுக்கும் கல்வி என்பது எத்தனை தூரமோ அதே தூரம்தான்
இக்குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கான நூல்களுக்கும் இடையே.
(தொடரும்)
(தொடரும்)