ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

நாங்கள் மீண்டு வருவோம்!


நாங்கள் மீண்டு வருவோம்!
எங்களிடம் இருந்த எல்லாவற்றையும்
பறித்துக்கொண்டீர்கள்
வீடுபுகுந்து ஆடை களைந்து அம்மணமாக்கி
வன்முறையை ஏவி அனைத்தையும் பறித்துக்கொண்டீர்கள்
எங்கள் மூதாதையரின் குருதி ருசி கண்ட சூலாயுதங்களால்
எங்களயும் ரணமாக்கி வேடிக்கை பார்க்கின்றீர்கள்
எல்லாவற்றையும் பறித்துக்கொண்டபோதும்
நாங்கள் உயிருடன் இருப்பதும்
உயிர்ப்புடன் இயங்குவதும் கண்டு
நீங்கள் அஞ்சுகின்றீர்கள்
எங்களிடம் இருந்து பறித்துக்கொண்ட எல்லாவற்றிலும்
எமது சந்ததியினரின் குருதிப்பிரவாகம்
கொப்பளிப்பதை
எல்லாவற்றையும் மீறி
எம் குருதிவாசம் காற்றுவெளியெங்கும் வீசி்நிரப்புவதை
எதைக்கொண்டும்
உங்களால் தடுக்கமுடியவில்லை
எங்களது உயிர்ப்பின் மாயரகசியம் 
எதுவாய் இருக்கும் என கூட்டம்போட்டுப் பேசுகின்றீர்கள்
தீர்மானம் இயற்றினீர்கள்
தலையைக் கொய்தால் போதும் என்று 
எங்கள் தலையைக் கொய்தீர்கள்
அப்போதும் நாங்கள் உயிருடன் இருந்தோம்
கல்விச்சாலைகளில் இருந்து எங்களைத் துரத்தினீர்கள்
எங்கள் விரல்களையே எழுதுகோலாக்கி
இந்த மண்ணை அறிவுடையதாய்ப்
பண்படுத்தினோம்
எங்கள் குருதியால் இப்புவியெங்கும் 
எமது எழுத்துக்களை எழுதினோம்
தீர்மானம் இயற்றினீர்கள்
கட்டைவிரலைக் கொய்தால் போதும் என்று 
கட்டைவிரலைக் கொய்தீர்கள்
அப்போதும் நாங்கள் உழைத்துக்கொண்டே இருந்தோம்
வீடுகளில் இருந்து எங்களைத் துரத்தினீர்கள்
ஆதிமனிதர்களாகிய நாங்கள் கவலைப்படவில்லை
காடுகளின் மலைகளின் பிள்ளைகள் நாங்கள் 
வீதிகளையே வீடாக்கிக்கொள்ளும்
எங்கள் மாயவித்தை கண்டு அப்போதும் அஞ்சினீர்கள்
நீங்கள் நிர்வாணமாக ஆடுகளை மேய்த்துக்கொண்டு
திரிந்தபோதே
நாங்கள் ஆடையணிந்த மனிதர்களாக இருந்தோம்
நீங்கள் மாடுகளிடம் மட்டுமே பேசிக்கொண்டு திரிந்தபோதே
நாங்கள் பண்பட்ட இலக்கியம் படைத்திருந்தோம்
பச்சையாய் நீங்கள் தின்று திரிந்தபோதே
நாங்கள் சமைத்துப் பண்பட்டுப் புசித்துக்கொண்டிருந்தோம்
நீங்கள் திறந்தவெளிகளையே வாழிடமாக கொண்டிருந்தபோதே
நாங்கள் சுட்ட கற்களால் வீடுகளைக் கட்டியிருந்தோம்
எங்கள் நாகரிகத்தின் ரகசியம் எதுவென்று
எங்கள் அறிவுத்திமிரின் ரகசியம் எதுவென்று
ஆண்டுகள் பலவாய்க் கூட்டம்போட்டுப் பேசுகின்றீர்கள்
வரலாறு நெடுகிலும் ஒற்றைத்துளி வியர்வையும்
சிந்தாத நீங்கள்
எங்களின் ரத்தத்தின் ருசி மட்டுமே அறிந்த நீங்கள்
பேசிக்கொண்டே இருக்கின்றீர்கள் ஆனால்
வரலாறு அதை எங்களுக்கு சொல்லியிருக்கின்றது-
அந்தப் பெருரகசியத்தை 
ஒருபோதும் நீங்கள் அறியப்போவதில்லை
எங்கள் பேரறிவின் டி என் ஏ-வுக்குள்
எங்கள் மூதாதையரின் உழைப்பு
பிரிக்க இயலாப் பேரண்ட ரகசியமாய் 
இருந்ததும் இருக்கப்போவதும்
ஒருபோதும் நீங்கள் அறியப்போவதில்லை
ஏமாற்றும் நயவஞ்சகமும் மட்டுமே
வாழ்வின் மந்திரமாய்க் கொண்ட நீங்கள்
உழைப்பு என்ற ஒற்றைச்சொல் கண்டு
இடிகண்ட நாகமாய் நடுங்குகின்றீர்கள்
நாங்கள் மீண்டு வருவோம்
உங்களிடம் இல்லாத ஒன்று எங்களிடம் இருக்கின்றது
நீங்கள் கண்டு அஞ்சுகின்ற ஒன்று எங்களிடம் இருக்கின்றது
நாங்கள் மீண்டு வருவோம்!
உங்களிடம் உண்மை இல்லை
உங்களிடம் நேர்மை இல்லை
உங்களிடம் உழைப்பு இல்லை
எங்களிடம் எப்போதும் மிஞ்சியிருப்பதோ அது மட்டும்தான்

இந்த உலகம் எங்களுடையது
இந்த உலகம் நாங்கள் படைத்தது
நாங்கள் மீண்டு வருவோம்!