1967. அன்றைய கேரள முதல்வராக இருந்தவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் அவர்கள். அவர் ஒரு கம்யூனிஸ்ட். மதிப்புமிகு மார்க்ஸிய அறிஞர்; இந்தியாவில் அதிகம் எழுதியவர் அவர்தான் என்பது இன்றளவும் சாதனை. 1957இல் இரண்டு வருடங்கள் முதல்வராக இருந்தார். உலக வரலாற்றில் தேர்தல் முறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசாகவும் அது இருந்தது; காங்கிரஸ் கட்சியும் அன்றைய மத நிறுவனங்களும் கைகோர்த்து அவரது அரசை 356ஆவது பிரிவை எய்து கலைத்தனர்; அவ்வாறு கலைக்கப்பட்ட முதல் அரசும் அதுவே. அன்று ‘ஆசியஜோதி’ பிரதமராக இருந்தார்.
1967 நவம்பர் 9 அன்று ஈ.எம்.எஸ் அவர்கள் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய
நீதித்துறை குறித்து இவ்வாறு விமர்சித்தார்: “...இந்திய நீதித்துறை ஒரு
ஒடுக்குமுறைக்கருவி (an instrument of oppression); நீதிபதிகள் வர்க்க துவேசம் கொண்டவர்கள். வர்க்க சார்பு
உள்ளவர்கள் (dominated by class hatred, class prejudices); அவர்கள் உள்ளுணர்வின் அடிப்படையிலேயே ஏழைமக்களுக்கு
எதிரானவர்கள், பணம்படைத்தவர்களுக்கு ஆதரவானவர்கள் (instinctively favouring
the rich against the poor); ஆளும்
வர்க்கங்களின் அங்கமாக இருக்கின்ற நீதித்துறை, தொழிலாளிகளுக்கு, விவசாயிகளுக்கு,
பாட்டாளிவர்க்கத்தின் பிற பகுதி மக்களுக்கு எதிராக வேலை செய்கின்றது, சட்டமும்
இந்த நீதித்துறை அமைப்பும் இயற்கையாகவே சுரண்டும் வர்க்கங்களுக்கு சேவை
செய்கின்றன. (as part of the
ruling classes, the judiciary works
against workers, peasants and other
sections of the working classes and the law and the system of judiciary
essentially served the exploiting classes).”
இதனைத் தொடர்ந்து ஈ.எம்.எஸ். அவர்கள் மீது
நீதிமன்றங்களை அவமதித்ததாக வழக்குத் தொடரப்பட்டது, நீதிமன்றம் அவருக்கு 1000 ரூபாய் தண்டம்
அல்லது ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு சொல்லியது; அவர் கேரள
உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். நீதிபதிகள் எம்.ஹிதாயத்துல்லா,
ஜி.கே.மிட்டர், ஏ.என்.ரே ஆகியோர் கொண்ட பென்ச் இவ்வாறு தீர்ப்பளித்த்து: “...அவர்
மார்க்ஸ் ஏன்கெல்ஸ் ஆகியோரது தத்துவங்களை தவறாகப் புரிந்து கொள்கின்றாரா அல்லது தெரிந்தே
அவற்றை திரித்துச்சொல்கின்றாரா என்பது இங்கே தேவையில்லை; அவர் கூறிய கருத்து எத்தகைய
விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்க்கவேண்டும், மக்களின் பார்வையில் அவரது
கருத்து நீதிபதிகள் நீதிமன்றங்களின் மரியாதையை தாழ்த்தியுள்ளது என்பது தெளிவு (…Whether he
misunderstood the teachings of Marx and Engels or deliberately distorted them
is not to much purpose. The likely effect of his words must be seen and they
have clearly the effect of lowering the prestige of judges and courts in the
eyes of the people…)....மார்க்ஸ்
ஏங்கெல்ஸ் ஆகியோரின் உண்மையான தத்துவங்களில் அவருக்கு இருந்த அறியாமையை இந்த
வழக்கு அம்பலப்படுத்துகின்றது, (மார்க்சிய தத்துவங்களின்பால் அவருக்குள்ள அறியாமையை மறைக்க அவர் அவர்களது தத்துவங்களின் பின்னே ஒளிந்து கொள்கின்றார்)... அவரது தண்டத்தொகையை 50 ரூபாயாக
குறைக்கின்றோம், தவறினால் ஒரு வாரம் சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்”