1)தமிழருவி மணியன். தனது வளமான சிந்தனையாலும் வலிய
தமிழ்ப்பேச்சாற்றலாலும் தமிழ் மக்களின் அன்பைப் பெற்றவர். காந்திய மக்கள்
இயக்கத்தின் நிறுவனர். ஆம், காந்திய இயக்கம். இன்றைய தி ஹிந்து செய்தியேட்டின் முதல்
பக்க செய்தி: இந்திய மக்களின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் தீ
வைத்துக்கொளுத்துவதே தம் முக்கிய பணியாக சபதம் ஏற்றுள்ள
பிஜேபி தலைவர் ராஜ்னாத் சிங்கை மணியன் அவர்கள் சந்தித்ததாகவும் எதிர்வரும்
நாடாளுமன்றத்தேர்தலில் பிஜேபி அணியில் விஜயகாந்த் கட்சி, வைகோ, வன்னியர் ராம்தாசு கட்சிகளை
கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
2)இதற்கு இவர் சொல்லும் காரணம்: திமுக அதிமுக
இரண்டுக்கும் மாற்றாக பிஜேபி அணியாம்! இது நியாயமான காரணமா? நாடாளுமன்றத்துக்கான
தேர்தல் எனில் காங்கிரஸ், பிஜேபிக்கு மாற்று என்று யோசிப்பதுதானே சரியான
சிந்தனையாக இருக்கும்? பிஜேபி மதவாத அதிதீவிர இந்துத்துவா கட்சி என்பதும்
காங்கிரஸ் ஒரு மிதவாத இந்துத்துவா கட்சி என்பதும் மணியன் அவர்களுக்கு
சொல்லித்தெரிய வேண்டியதில்லை; ஆனால் தெருவில் இந்த இரண்டு கட்சிகளும் ஏதோ பரம்பரை
எதிர்களைப்போல் கட்டிப்புரண்டாலும் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும்
பிஜேபி ஆதரித்தே இன்று வரை வாக்களித்து வந்துள்ளது என்பதும், நாட்டின் பொருளாதார அஸ்திவாரத்தை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே அரித்து நாசம் செய்து வருகின்றன என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.
ஆக உண்மையில் காங்கிரஸ் பிஜேபிக்கு எதிரான ஒரு அணியைக்கட்ட வேண்டும், அதற்குத்தான்
மணியன் போன்ற காந்திய சிந்தனையாளர்கள் உதவி செய்ய வேண்டும்.
3)மேலும் தமிழகத்தில் மிகப்பெரும் சாதீய பிரிவினை
சக்தியாக, தலித் மக்களின் விரோதியாக உருவெடுத்துள்ள பாமகவையும் இந்த அணிக்கு அழைத்துள்ளதாகவும்
மணியன் அவர்கள் கூறியுள்ளார். இவை யாவும் உண்மை எனில் மணியன் அவர்கள் உண்மையில்
மக்கள் விரோத காங்கிரசுக்குத்தான் (குறைந்த பட்சம் தமிழக அளவில்) மறைமுகமாக உதவி
செய்கின்றார் என்பது பட்டவர்த்தனம்.
4)தன் வாழ்நாளெல்லாம் இந்து முஸ்லிம் மக்களின்
ஒற்றுமையை போதித்து வந்தவரும் அந்த காரணத்துக்காகவே (பிஜேபியின் தாய்க்கழகமான)
இந்து மகா சபையை சேர்ந்த கொடியவன் கோட்சேயால் கொல்லப்பட்டவருமான காந்தியடிகளின் பேராலான
இயக்கம் பிஜேபி அணிக்கு ஆள் திரட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று மணியன்
அவர்கள் விளக்க கடமைப்பட்டுள்ளார்; ஆசிய யூத இன மக்களை எதிரிகளாக பிரகடனம் செய்து
லட்சக்கணக்கான யூத மக்களை கொன்று குவித்த ஹிட்லரை தம் லட்சிய புருஷனாகவும் அவனது
கொள்கைகளை தம் லட்சியமாகவும் அவனது சின்னமான ஸ்வஸ்திக்கை தம் சின்னமாகவும்
ஏற்றுக்கொண்டுள்ள ஆர் எஸ் எஸ்சின் கிளையான பிஜேபி; ஹிட்லரின் மறுவடிவமான
நரேந்திரமோடி, அத்வானி வகையறா. காந்தியத்துக்கும் பிஜேபிக்கும் என்ன அய்யா தொடர்பு?
மணியன் அவர்களே, உண்மையில் நீங்கள் யாருக்கு உதவி செய்கின்றீர்கள் என்பது உங்கள்
மனதறியும்; ஆனால் தமிழகத்தில் காலூன்ற பிஜேபி கடந்த காலத்தில் திமுக அதிமுக கட்சிகளிள்
தோளில் சவாரி செய்த்தும் அந்த இரண்டு கட்சிகளும் மதச்சார்பற்ற சக்திகளின்
விமர்சனத்துக்கு ஆளானதும் தாங்கள் அறியாதது அல்ல; அதே விமர்சனத்துக்கு நீங்களும்
ஆளாகின்றீர்கள்; தமிழக வரலாற்றில் உங்களது இந்த வேலை கரும்புள்ளியாக காலத்துக்கும்
நிற்கும்.
5)ஒரு விசயம் இங்கே பொருத்தமாகப்படுகின்றது: தனது
குறிப்பிட்ட கால கட்ட திரைப்படங்களில் தொடர்ந்து இஸ்லாமிய மக்களை பாகிஸ்தானிய
உளவாளிகளாகவும் வெடிகுண்டு தீவிரவாதிகளாகவும் சித்தரித்து தமிழக மக்கள் மனத்தில்
இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் விஜயகாந்த்;
இது அப்பட்டமான ஆர் எஸ் எஸ்,பிஜேபி பிரச்சாரமே. இந்த கருத்தாக்கத்தை இன்று
வரையிலும் கூட பொதுவில் நியாயமாக சிந்திக்கின்ற இந்து சகோதரர்கள் மனத்தில் இருந்து
துடைக்க முடியவில்லை; வாஜ்பேயி அரசு இஸ்லாமிய மக்களை மனத்தில்கொண்டு வரைந்ததுதான்
பொடா; இந்த சட்டத்துக்கு ஆதரவாக மூச்சைப்பிடித்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் ஒரு
மணி நேரம் சங்கொலி செய்தவர் வைகோ; பொடாவின் முதல் பலியே அவர்தான் என்பது
வரலாற்றுப்பாடம்! பிஜேபியின் அதிதீவிர இந்துத்துவா சிந்தனை மனு தர்மத்தில் இருந்து
எழுவது; மனு தர்ம்ம் சாதீயத்தை கெட்டியாக பிடிக்கின்றது போதிக்கின்றது;
தமிழகத்தில் மனுவின் நவீன அவதாரம் மருத்துவர் ராமதாஸ். இந்த மூன்றுபேரும் பிஜேபி அணியில்
இருப்பது மிகவும் பொருத்தமானதே. அந்த வகையில் உங்கள் முயற்சி ஒரு அடையாளம்
காட்டும் முயற்சிதான்.
6) இறுதியாக: நரவேட்டை மோடி திருச்சியில் தன்
திருவாயால் ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் பாடலை (யாரோ எழுதித்தந்ததை) வாசித்ததாக செய்தி. நாமக்கல் கவிஞரின் மற்றுமொரு பாடலை மணியன் அவர்களுக்கு நாம்
நினைவூட்டுவோம்: ‘புத்தரையும் கர்த்தரையும் நபிகள் எனும் நாயகரையும் கற்றும் கேட்டும் அறிந்திட்டோம்; அப்படியொரு
உத்தமரை மகாத்மாவின் வடிவிலே கண்டுவிட்டோம்’. மணியன் அவர்களே, எந்த மாமனிதரின் பேரால் நீங்கள் இயக்கம்
நடத்துகின்றீர்களோ அந்த மனிதரை குண்டுகளால் துளைத்த ஆர் எஸ் எஸ்சின் கோட்சேவின்
இன்றைய வடிவமான நரவேட்டை மோடிக்கும் அப்பேர்வழியின் கட்சிக்கும் உங்கள் இயக்கமும்
சிந்தனையும் துணைபோகின்றது; இக்கட்சி மொழிவாரி மாநிலங்கள் என்ற கோட்பாட்டையும் பல்வேறு கலாச்சாரங்கள் என்ற உண்மையையும் பல்வேறு மதங்கள், வழிபாடுகள் என்ற உண்மையையும் நிராகரிக்கின்றது. ‘இந்து, இந்தி, அகண்டபாரதம்’ என்ற ஒற்றைவாதத்தை முன்வைக்கின்றது; இத்தகைய பிற்போக்கு சக்திக்கே உங்கள் இயக்கமும் சிந்தனையும் துணைபோகின்றது;தமிழக மக்கள் கடந்த காலத்தைப்போலவே நாளையும்
மதவாதசக்திகளோடு உங்கள் இயக்கத்தையும் சேர்த்தே புறக்கணிப்பார்கள்; நீங்கள் உணரும்போது காலம் கடந்திருக்கும்.