இன்றைக்கு சரியாக
நூறு வருடங்களுக்கு முன் ஆசியாவின் மிகச்சிறந்த கதை சொல்லியான சாதத் ஹசன் மான்டோ இந்தியாவில்
பிறந்தார். 43 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து ஒரு நாலாயிரம் வருடங்கள் மானுட இனம்
வெட்கித்தலைகுனியத்தக்க யதார்த்தங்களை நம் முன் கதைகளாக விரித்துவைத்து விட்டு
பிளவுபட்ட இந்தியாவின் மேற்குப்பகுதியில் (பாகிஸ்தான் என்று சொல்கின்றார்கள்)
மறைந்தான். அவன் எழுத்தில் முஸ்லிம்களின் இந்துக்களின் சீக்கியர்களின் பார்சிகளின்
குருதி வழிந்து வாசிப்பவனின் மடியையும் கண்களையும் நனைக்கின்றது. தேசப்பிரிவினையின்போது நிகழ்ந்த கொடுமைகளை
நமக்கு பதிந்துகொடுத்து சென்ற மான்டோ, டெல்லி, பம்பாய்,கோவை,கோத்ரா...
நிகழ்வுகளின் போது அரூபமாக எட்ட நின்று நம்மைப்பார்த்து கைகொட்டி சிரிக்கின்றான்,
காறி உமிழ்கின்றான், அவன் கேலிச்சிரிப்பில் நாம் தோற்றுப்போகின்றோம். அவனது
சிலவரிக் கதைகளில் மூன்று இங்கே...
1.
முன்னேற்பாடாக...
முதல் சம்பவம் அங்கே சாலைத்தடுப்பு அருகே நிகழ்ந்த்து. உடனடியாக அங்கே ஒரு போலீஸ்காரன்
நிறுத்தப்பட்டான்.
அடுத்த நாளே பண்டகசாலை முன் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தது, உடனடியாக அந்த
போலீஸ்காரன் அங்கே நிறுத்தப்பட்டான்.
மூன்றாவது சம்பவம் நள்ளிரவில் துணிவெளுக்கும் கடை அருகே நடந்தது. இன்ஸ்பெக்டர் அதே போலீஸ்காரனை அங்கே காவலுக்கு
செல்லுமாறு உத்தரவிட்டான். அவனோ சில
நிமிடங்கள் யோசித்து இப்படி வேண்டினான்: “ஐயா, அடுத்த சம்பவம் எங்கே
நடக்கப்போகின்றதோ அங்கே என்னை அனுப்புங்களேன்”.
2.
சலுகை
”தயவுசெய்து என் இளம் மகளை
என் கண் முன் கொல்லாதீர்கள்”
“சரி, அவ்வாறே செய்வோம்! அவள் துணிகளை உருவிவிட்டு அவளை அந்தப்பக்கம்
தள்ளிவிடுவோம்”.
3.
பரிதாபம்
கத்தி தொப்புளுக்கு கீழே இறங்கி அப்படியே வயிற்றை கிழித்தது, பெல்ட் அறுந்தது.
குத்திக்கிழித்தவன் திடீரென கவலையுடன் கத்தினான், “ஐயோ! தப்புப்பண்ணிட்டேனே”.